அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

தனிமையில் தவிக்கும் பெற்றோர்...

குழந்தைகளுக்காக வாழ்ந்துட்டோம். அவங்க போயிட்டாங்க, இனிமே நாம என்னத்த பண்ண என தம்பதியராய் சேர்ந்து புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த சிக்கல் இருக்கக் கூடும் !

இந்தச் சிக்கலைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது, இந்தச் சிக்கல் எல்லோருக்கும் வந்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. சில பெற்றோர் குழந்தைகளை தனியே நிற்கப் பழக்குவார்கள். அவர்கள் பழகிவிட்டால் சந்தோசப் படுவார்கள்.

“அப்பாடா மகனை ஒரு மாதிரி ஒரு கரை யேத்திட்டேன்”, “அப்பாடா… பெண்ணை வழி அனுப்பி வெச்சுட்டேன்.. இனிமே நிம்மதி” என தங்கள் விருப்பமான வேலைகளைப் பார்க்க உற்சாகமாய்க் கிளம்பி விடும் பெற்றோரும் உண்டு. அவர்கள் ஒரு வகையில் பாக்கியவான்கள். அவர்கள் கீழே உள்ளதைப் படிக்காமல் தாவி விடலாம்.

இந்த தனிமைச் சிக்கலில் சிக்கிக் கொண்டவர்களை என்ன செய்வது? அவர்களுக்குத் தான் இந்த ஆலோசனைகள்.

1. ஆனந்தம், சோகம், அருகாமை, பிரிவு எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை எனும் உண்மையை மனதில் ஆழமாக எழுதிக் கொள்ளுங்கள். இனிமேல் பிள்ளைகள் நம்மை முழுமையாய் சார்ந்து இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.

2. இனிமேல் வரும் வாழ்க்கை வித்தியாசமானது என்பது மட்டும் தான் உண்மை. ஆனால் அது அழகானது அல்ல என்பது நீங்களாக உருவாக்கிக் கொள்ளும் கற்பனை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை எப்போதுமே அழகானது தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கே உரிய சுவாரஸ்யங்கள் நிரம்பியிருக்கும்.

3. பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் போதே, ஒரு நாள் இவர்களெல்லாம் தனியே வாழக் கிளம்பி விடுவார்கள் எனும் எண்ணம் மனதில் இருக்கட்டும். அது தான் வாழ்க்கையின் நியதி என்பதை உங்கள் கடந்த கால வாழ்க்கையே சொல்லியிருக்கக் கூடும்.

4. இன்றைய உலகம் ஹை டெக் உலகம். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் நீங்கள் உங்கள் பிரியத்துக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். எனவே இ-மெயில், பேஸ் புக் , வெப் கேம் இப்படி எல்லா டெக்னோலஜி விஷயங்களையும் உங்கள் தனிமைக்குத் துணையாய் அழையுங்கள்.

5. உங்கள் பழைய .ெஹாபி ஏதேனும் ஒன்றைத் தூசு தட்டி எடுங்கள். சிலருக்கு எழுதுவது, சிலருக்கு இசை கேட்பது, சிலருக்கு வாசிப்பது, தோட்டம் வைப்பது இப்படி ஏதோ ஒன்று சிந்தனைகளின் பரணில் இருக்கும். அதைத் திரும்ப எடுங்கள். உங்கள் சுவாரஸ்யமான செயல்களைச் செய்யத் தான் இந்த தனிமை தரப்பட்டிருக்கிறது என பொசிடிவ் ஆக நினையுங்கள்.

6. உங்கள் உதவி இல்லாமலேயே உங்கள் பிள்ளையால் தனியே வாழமுடியும், சமாளிக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நிலைக்கு உங்கள் பிள்ளைகளை திறமை சாலிகளாக வளர்த்ததில் பெருமிதமும் கொள்ளுங்கள்.

7. உங்களைப் பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கும் வருத்தம் இருக்கக் கூடும். அவர்களை உங்கள் கவலை நிம்மதியிழக்கச் செய்யலாம். எனவே முதலில் உங்கள் கவலைகளைத் தூர எறியுங்கள்.

8. சேர்ந்து வாழும் காலத்திலேயே உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் எவ்வளவு தூரம் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள். அது உங்களுடைய குற்ற உணர்வுகள் பலவற்றைத் துடைத்து விடக் கூடும்.

9. இன்டர்நெட்டில் விருப்பம் இருப்பவர்கள் ஒரு புௌாக் ஆரம்பித்து தங்கள் அனுபவங்களை எழுதுங்கள். உலகத் தொடர்பும் கிட்டும், தனிமை வாட்டுதலும் நிற்கும்.

10. உங்கள் பழங்கால நண்பர்கள், உங்கள் நலன் விரும்பிகள், உறவினர்கள் இப்படி யாருடனாவது உங்கள் உரையாடல் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். ஆத்மார்த்தமான நட்பும், பேச்சும் கிடைத்தால் வெற்றிடம் நிரம்பிவிடும்.

11. மன அழுத்தமாக உணர்கிறீர்கள். வெளியே வர எவ்வளவு முயன்றும் முடியவில்லை எனில் ஒரு கவுன்ஸிலிங் வழங்கும் நபரைப் பாருங்கள். அதில் வெட்கப்பட ஏதும் இல்லை.

12. விளையாட்டில் ஈடுபாடு உண்டென்றால் ரொம்ப நல்லது. உங்கள் விருப்பத்துக்குரிய விளையாட்டை ஆரம்பிக்கலாம். பலர் கேரம் போன்ற விளையாட்டுகளில் மூழ்கி விட்டால் அவர்களுடைய வெறுமை எல்லாம் பசுமை ஆகிவிடும்.

13. சில திட்டங்கள் வைத்திருங்கள். அடுத்த மாதம் அவரைச் சந்திக்க வேண்டும். அதற்கு அடுத்த மாதம் அங்கே போகவேண்டும் .. இப்படி. இவையெல்லாம் உங்களை அந்த முடிவுகளை நோக்கி சிந்திக்க வைக்கும். உங்கள் வெறுமையை நிரப்பி விடும்.

14. பிரியமான பார்ட் டைம்,, ஃபுல் டைம் வேலைகள் ஏதேனும் இருந்தால் தேர்ந்தெடுங்கள். பேபி சிட்டிங் போன்ற வேலைகள் இப்போது நம்பிக்கையான, அன்பான நபர்களுக்காய் காத்திருக்கின்றன.

15. கணவன்– மனைவி தனியாய் இருந்தால் ரொம்ப நல்லது. முதுமையின் தனிமையை காதலுடன் அனுபவியுங்கள். காலாற வோக்கிங் போவது முதல், காதல் வாழ்க்கையை அசை போடுவது வரை இது உங்களுக்கான வாய்ப்பு என்பதை உணருங்கள்.

16. உங்கள் வாழ்நாள் சாதனைகளை நினைத்து மகிழுங்கள். உங்கள் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுத்தது ஒரு வாழ்நாள் சாதனை என்பது நினைவில் இருக்கட்டும்

17. அவ்வப்போது தனிமையை நினைத்து சோகமாய் இருப்பதோ, அழுவதோ தப்பில்லை. உணர்வுகள் வெளிப்படுத்துவதற்கானவையே. எனவே நீங்கள் உங்கள் மனசைத் திறப்பதைத் தவறு என கருத வேண்டாம்.

18. தியானம், பயணம், ஆன்மிக ஈடுபாடு போன்றவற்றில் விருப்பம் உள்ளவர்களுக்கு தனிமை வரப்பிரசாதம். இந்தத் தனிமையை நீங்கள் கொண்டாடலாம்.

19. பிள்ளைகளுடன் போனில் பேசுங்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இருவருக்கும் உடன்பாடான இடைவெளியில் பேசுங்கள். உங்கள் பிள்ளை தினமும் பேச விரும்பினால் தினமும் பேசுங்கள், வாரம் ஒரு முறையெனில் அதையே பின்பற்றுங்கள்.

20. ஓய்வு எடுங்கள். வாழ்க்கையில் ஓடியாடி உழைத்தாகி விட்டது. ஓய்வாய் அமர்ந்து ஒரு படம் பார்ப்பது, இசை கேட்பது, டின்னர் சாப்பிடுவது என வாழ்க்கையை அனுபவியுங்கள்.

21. உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி உடலில் எண்டோர்பின்களைச் சுரக்கச் செய்யும். அது மனதை ஆனந்தமாக வைத்திருக்கும். ஆரோக்கியத்தையும் கூட்டி வரும். எனவே உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

22. மாற்றங்களுக்கு எப்போதும் தயாராக இருங்கள். இறுக்கமான மனநிலை இல்லாமல் இயல்பாய் இருங்கள்.

23. குற்ற உணர்ச்சிகளை விட்டு விடுங்கள். ஐயோ, குழந்தையை நல்லா கொஞ்சலையே, நிறைய நேரம் செலவிடலையே என்றெல்லாம் புலம்பித் திரியாதீர்கள். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, என மனதை இயல்பாக்குங்கள்.

24. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்பிய, ஆனால் செய்ய முடியாமல் போல விஷயங்களை, விருப்பங்களைப் பட்டியலிடுங்கள். இப்போது அதில் எதையாவது செய்ய முடியுமா என யோசியுங்கள்.

25. ரொம்ப பிஸியா இருக்க என்னென்ன செய்யலாம் என யோசியுங்கள். கணவன் – மனைவியாக இருந்தால் இதை எதிர்கொண்டு வெளியே வருவது ரொம்பவே சுலபம். இல்லாவிட்டாலும் கவலையில்லை, வெளியே வருவது எளிது தான்.

இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டால் தனிமையின் வெறுமை என்பது சாபமல்ல, வரம் என்பதை உணர்வீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே !
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக