அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

இசைஞானி இளையராஜா ‘சினிமா 100’ விழாவில் அவமானப் படுத்தப்பட்டது ஏன்?

செல்வி ஜெ ஜெயலலிதா, தமிழக முதல்வர்
தமிழக அரசு
தலைமை செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை
சென்னை, தமிழ்நாடு

மற்றும்

திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தலைமை செயலாளர்
தமிழக அரசு

சினிமா 100 விழாவில் மாஸ்ட்ரோ இசை ஞானி இளையராஜா நடத்தப்பட்ட விதம் அநாகரிக செயல்; இளையராஜா ரசிகர்கள் சார்பில் கண்டனம்; அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சி.எம். மேடத்துக்கு

உலகம் முழுதும் பரவியுள்ள மாஸ்ட்ரோ இளையராஜா சார் அவர்களின் ரசிகர்களின் சார்பில் பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

நிறைவேறிய சினிமா 100 விழா குறித்து தமிழக பத்திரிகைகளில் மற்றும் இணையதளங்களில் விமர்சன கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன. எங்கள் அபிமான இசைஞானி இளையராஜா சார் அவர்கள் அவமானபடுத்தப்பட்ட விதம் குறித்தும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

சினிமா 100 காணொளியை முழுதும் பார்த்து விட்டு, இந்த செய்திகளில் அடிப்படை ஆதாரங்கள் உள்ளதை உறுதி செய்து கொண்டோம்.

தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி கூட இதுகுறித்து ஒரு அறிக்கை விட்டுள்ளார். கலைஞர் மு கருணாநிதியின் அறிக்கை அரசியல் நோக்கம் உள்ளது என்றால் கூட, பல்வேறு நடுநிலை பத்திரிகைகள், இணையதளத்தில் சினிமா 100 நடத்தப்பட்டவிதம் குறித்து தமிழ் பண்பாட்டுக்கு உகந்தது இல்லை என தங்கள் கருத்துக்களை சொல்லியுள்ளனர்.

இந்த செய்திகளை கண்ட இந்திய திருநாட்டில், மற்றும் உலகம் முழுவதும் பரவியுள்ள இசைஞானி இளையராஜா சார் அவர்களின் ரசிகர்கள் தங்கள் கண்டனத்தை இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

100 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த விழாவில் மூத்த கலைஞர்கள் நடத்தப்பட்ட விதம் ரசிகர்களை கொதிக்க செய்து விட்டது, குறிப்பாக எந்த அரசியல் கருத்துக்கள் பேசாத, தானுண்டு தன் வேலையுண்டு என்று இசையில் கவனம் செலுத்தும் எங்கள் இசைஞானி சார் அவமானப்படுத்தப்பட்ட விதம் எங்களால் சகிக்க முடியவில்லை. பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

1974-ம் ஆண்டு அன்னக்கிளியில் தொடங்கி பட்டி தொட்டிகளில் தன் முத்திரையை ஆழமாக பதித்து, தேவாரத்துக்கு இசை அமைத்து தெய்வீக பணிகளை செய்து உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். உலக அளவில் தன் முத்திரையை பதித்தவர். கடந்த 40 ஆண்டுகளாக தமிழ சினிமாவில் ஒரு முக்கிய பங்கு வகித்த ஒருவரை சினிமா 100 விழாவில் அவமானப்படுத்தபட்ட விதம் மிகவும் கண்டனத்துக்குரியது.

இசைஞானி இளையராஜா தவிர தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகித்த பாலு மகேந்திரா, போன்றவர்களுக்கு அழைப்பு கூட கொடுக்காமலும், மூத்த கலைஞர்கள் கமல் ஹாசன் போன்றவர்கள் அவமானப்படுத்தப்பட்ட விதம், அதுவும் சினிமாத்துறையில் இருந்து வந்த தங்கள் முன்னிலையில் நடந்தது மிகவும் துரதிருஷ்டமாகும்.

ஆஸ்கர் அவார்ட் வாங்கிய ஏ.ஆர். ரஹ்மான் கூட அவமானப்படுத்தபட்டார் என்று கேள்விப்படும்போது உலகம் முழுதும் உள்ள தமிழ் இசை ரசிகர்கள் மிக்க வேதனை அடைந்தனர். இந்த நிகழ்ச்சி எந்த கட்சி சார்பும் இல்லாமல் நடுநிலை லட்சகணக்கான ரசிகர்கள் மனதை புண்படுத்தி விட்டது.

பல்வேறு செய்திகள் மூலம் அறிந்து கொண்ட வகையில், இது வேறு சில மூத்த கலைஞர்களை குறி வைத்து செய்யப்பட்ட திட்டமிட்ட நிகழ்ச்சி, அதில் ராஜா சார் எதேச்சையாக மாட்டி கொண்டார் எனவும், முதல்வர் அம்மாவுக்கு ராஜா சார் போன்ற கிராமப்புற இசை மேதைகள் பிடிக்காது, எனவே புறக்கணிக்கப்பட்டார் எனவும், முதல்வர் அருகில் உள்ள கீழ்த்தர புத்தி உள்ள விழா ஒருங்கிணைப்பாளர்கள், அதிகாரிகள், ஆலோசகர்கள் அம்மாவிடம் நல்ல பெயர் வாங்க இப்படி செய்தார்கள் என்றும் பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.

காரணங்களை யூகிக்க முடியாத நிலையில் அரசியல் சார்பற்று, உலகம் முழுதும் பரவியுள்ள ரசிகர்கள் இசைஞானி ராஜா சார் நடத்தப்பட்ட விதம் குறித்து தமிழக அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த அவமதிப்பு உள்நோக்கத்துடன் நடைபெறவில்லை எனில் மாண்புமிகு தமிழக முதல்வர் அரசு சார்பில் செயல்பட்ட விழா ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ்நாடு செய்தி மற்றும் சினிமா துறையை கவனித்து வரும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கை, புண்பட்ட ரசிகர்கள் மனதை பூரணமாக குணப்படுத்தாவிட்டலும், குறைந்தபட்சம் இது முதல்வர் சம்மதத்துடன் நடைபெறவில்லை என்று புரிந்து கொண்டு மனதில் ஏற்பட்ட வழியை குறைக்க உதவும்.

உலகம் முழுதும் பரவியுள்ள இசைஞானி ராஜா ரசிகர்கள் சார்பில்,

மோகன் முத்து (லண்டன், யு.கே)
ஹேமா ரவி (சென்னை, தமிழ்நாடு)
வரதராஜன் ஐயங்கார் (சென்னை, தமிழ்நாடு)
கே. சவுந்தர் (மதுரை, தமிழ்நாடு)

விறுவிறுப்பு இணையம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக