அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

வேர்டில் டெக்ஸ்ட் செலக்ஷன்

வேர்ட் டாகுமெண்ட்களை எடிட் செய்கையில், நாம் மேற்கொள்ளும் முதல் திருத்தம், டெக்ஸ்ட்களை பார்மட் செய்வது வும் மற்றும் அவை அமைந்துள்ள இடத்தினை இன்னொரு இடத்தில் மாற்றி அமைப்பதும் தான். இதற்கு, டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியை, அல்லது முழுவதையும் அடிக்கடி தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. எனவே தான், இதற்கு வேர்ட் புரோகிராம், பல்வேறு வழிகளை நமக்குத் தருகிறது. அவற்றை இங்கு காணலாம்.

1. டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க, கிளிக் செய்து மவுஸால் இழுப்பது (Click+Drag): பொதுவாக எல்லாரும் மேற்கொள்ளும் வழி இதுவே. கர்சரை தேவைப்பட்ட இடத்தில் நிறுத்தி, அப்படியே நான்கு திசைகளில் ஏதேனும் ஒன்றில், நம் தேவைக்கேற்ப இழுப்பது. வேர்ட் 2007 தொகுப்பில், சில ஆப்ஷன்களும் தரப்படுகின்றன..

2. ஷிப்ட் + அம்புக்குறி (Shift+Arrow): இந்த கீகளின் பயன்பாட்டில், ஒரு கேரக்டர் அல்லது ஒரு வரி, ஒரு நேரத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, தேவைப்படும் அம்புக்குறி கீயினைத் தேர்ந்தெடுத்து அழுத்தினால், டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்படும்.

3. ஷிப்ட் + ஹோம்/எண்ட் (Shift+Home/End): இங்கு இரு வழிகளைப் பயன்படுத்தலாம். ஷிப்ட்+ஹோம் கீகளை அழுத்தினால், கர்சர் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து, அந்த வரியின் தொடக்கம் வரை தேர்ந்தெடுக்கப்படும். ஹோம் கீக்குப் பதிலாக, எண்ட் கீ அழுத்தினால், வலது முனை இறுதி கேரக்டர் வரை தேர்ந்தெடுக்கப்படும்.

4. டபுள் கிளிக் (Click+Click): கர்சர் இருக்கும் அப்போதைய சொல்லை மட்டும் தேர்ந்தெடுக்க, டபுள் கிளிக் செய்திடவும். வேர்ட் அந்த சொல்லின் இடது முனையிலிருந்து வலது முனை வரை, ஒரு ஸ்பேஸ் தென்படும் வரை தேர்ந்தெடுக்கும்.

5. மூன்று முறை கிளிக் (Click+Click+Click): மூன்று முறை கிளிக் செய்தால், கர்சர் உள்ள பாரா முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.

6. மார்ஜின் + கிளிக் (Margin+Click): ஒரு வரி முழுவதும் தேர்ந்தெடுக்க, கர்சரை இடது மார்ஜின் கொண்டு செல்லவும். கர்சர், ஆரோ பாய்ண்ட்டராக மாறும் வரை கர்சரை, மார்ஜின் கோட்டில் சற்று நகர்த்தவும். அவ்வாறு மாறியவுடன், கிளிக் செய்திடவும். இதே வேலையை, ஹோம் + ஷிப்ட்+எண்ட் கீகளை அழுத்தி மேற்கொள்ளலாம். ஆனால் இந்த கீகள் கீ போர்டில் இருக்கும் இடங்கள், நமக்குச் சற்று சிரமத்தை அளிக்கும்.

7. மார்ஜின் + கிளிக் + இழுத்தல் (Margin+Click+ Drag): இது மேலே தரப்பட்டுள்ள வழியின் அடுத்த நிலை. மார்ஜின் கோட்டில் கர்சரை வைத்து, கிளிக் செய்தவாறே இழுத்தால், வேர்ட் பல வரிகளை, ஏன் பாராக்களை தேர்ந்தெடுக்கும். இழுப்பதை நிறுத்தும் வரை, இழுக்கும் இடத்தில் உள்ள டெக்ஸ்ட் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.

8. கண்ட்ரோல் + ஏ (Ctrl+A): வேர்ட் டாகுமெண்ட் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.

9. கண்ட்ரோல் + கிளிக் (Ctrl+Click): ஒரு வாக்கியம் முழுவதும், வரி மட்டும் இல்லாமல், தேர்ந்தெடுக்க, கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, வாக்கியத்தின் எந்த இடத்திலும் கிளிக் செய்திடலாம்.

10. கிளிக் + ஷிப்ட் + கிளிக் (Click+Shift+ Click): டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்க, அந்த பகுதியின் தொடக்கத்தில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்து நிறுத்தவும். அதன் பின்னர், ஷிப்ட் கீயை அழுத்திக் கொள்ள வேண்டும். பின்னர், டெக்ஸ்ட்டின் எதிர் முனையில், அப்பகுதி முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திட வேண்டும்.

11. ஆல்ட் + டிராக் (Alt+Drag): நெட்டு வாக்கில் டெக்ஸ்ட்டில் ஒரு பகுதியை வேர்ட் டாகுமெண்ட்டில் தேர்ந்தெடுக்கலாம். ஆல்ட் கீயை அழுத்தியவாறு, தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட் பகுதியின் மீது மேல் கீழாகவும், வலது இடதாகவும் செல்லலாம். இந்த வேலையைத் தொடங்கும் முன்னரே, ஆல்ட் கீயை அழுத்திக் கொள்ள வேண்டும்.

12. செலக்ட் + கண்ட்ரோல் + செலக்ட் (Select+Ctrl+ Select): டாகுமெண்ட்டில் தொடர்பற்ற நிலையில், சில டெக்ஸ்ட் தொகுதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், முதலில் ஒரு டெக்ஸ்ட் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அடுத்த பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, தொடர்பற்ற டெக்ஸ்ட் பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் அவற்றை கட், காப்பி, பேஸ்ட் போன்ற வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்.

13. கண்ட்ரோல்+ஷிப்ட்+இடது/வலது அம்புக்குறி (Ctrl+Shift+Left/Right Arrow): ஒரு சொல்லின் வலது அல்லது இடது பகுதியை மட்டும் தேர்ந்தெடுக்க, கர்சரை சொல்லில், நாம் தேர்ந்தெடுக்க விரும்பும் இடத்தில் வைத்து, கண்ட்ரோல்+ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, நம் விருப்பதிற்கேற்ப, வலது அல்லது இடது கீயை அழுத்த வேண்டும். ஸ்பேஸ் உள்ள இடத்தில் கர்சரை வைத்து, மேலே சொல்லியபடி அழுத்தினால், சொல் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.

14. கண்ட்ரோல்+ஷிப்ட்+மேல்/கீழ் அம்புக்குறி (Ctrl+Shift+Left/Right Arrow): மேலே குறிப்பிட்டபடி, ஒரு பாராவில், மேல் அல்லது கீழ் பகுதிகளைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், கர்சரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய இடத்தில் வைத்து, கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்தியவாறே, மேல் அல்லது கீழ் அம்புக் குறி கீயினை அழுத்த வேண்டும்.

15.ஆல்ட் + கண்ட்ரோல் + ஷிப்ட் + பேஜ் அப்/பேஜ் டவுண் (Alt+Ctrl+Shift+Page Up/Page Down): இது சற்று குழப்பமான கீ இணைப்பு. கர்சர் இருக்கும் இடத்தில் இருந்து, திரையில் காட்டப்படும் டெக்ஸ்ட் பகுதியின் தொடக்க நிலை வரை தேர்ந்தெடுக்கவும் அல்லது இறுதி நிலை வரை தேர்ந்தெடுக்கவும், இந்த கீகளைப் பயன்படுத்த வேண்டும். இது சற்றுக் குழப்பமாகத் தெரிந்தால், கர்சரைத் தொடக்க நிலையிலோ அல்லது முடிவான நிலையிலோ கொண்டு சென்று, ஷிப்ட் கீயை அழுத்தியவாறு, கர்சரை நகர்த்தியும் தேர்ந்தெடுக்கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக