அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 28 நவம்பர், 2013

அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடையும் இந்திய அணு விஞ்ஞானிகள்.. ஏன்?

பெங்களூர்: இந்திய அணு விஞ்ஞானிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். ஆனால் இதுகுறித்து மத்திய அரசு கிஞ்சித்தும் கவலைப்பட்டது போலத் தெரியவில்லை.பல அணு விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக மரணமடைந்துள்ளனர். இவற்றை போலீஸார் காரணம் தெரியாத மர்ம மரணம் அல்லது தற்கொலை என்று கூறுகிறார்கள்.

இப்படி பெருமளவிலான விஞ்ஞானிகள் மரணமடைந்துள்ள போதிலும் ஏன் இப்படி நடக்கிறது என்பது குறித்து மத்திய அரசு கொஞ்சம் கூட அக்கறை காட்டுவது போலத் தெரியவில்லை. அதை விட கொடுமையாக, இத்தகையக மரணங்கள் குறித்து பத்திரிக்கைகளும், இதர மீடியாக்களும் பெரும் முக்கியத்துவம் கொடுத்து செய்தி போடுவதில்லை என்பதுதான்.

இந்தியாவின் மிக முக்கியமான அணு விஞ்ஞானிகளில் சிலரான கே.கே.ஜோஷ் மற்றும் அபீஷ் சிவன் ஆகியோர் ரயில்வே டிராக்கில் பிணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இருவரும் ரயில் மோதி இறக்கவில்லை. எப்படி தண்டவாளத்தில் அவர்களது பிணம் வந்து கிடந்தது என்பதும் இதுவரை விளக்கப்படவில்லை. இருவரும் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டதாகவும், பிணத்தை இங்கு வந்து போட்டுள்ளனர் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த இரு விஞ்ஞானிகளும், இந்தியாவின் முதலாவது அணு நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிஹாந்த்தில் பணியாற்றி வந்தவர்கள் ஆவர்.

2009ம் ஆண்டு இப்படித்தான் அணு விஞ்ஞானி லோகநான் மகாலிங்கம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதைத் தற்கொலை என்று பின்னர் கூறினார்கள்.

இதேபோல அணு விஞ்ஞானிகளை கடத்த முயற்சிக்கும் செயல்களும் அவ்வப்போது நடக்கின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணு சக்தி கழகத்தைச் சேர்ந்த ஒருவரைக் கடத்த முயன்னர். ஆனால் அவர் தப்பி விட்டார்.

2011ம் ஆண்டு உமா ராவ் என்ற அணு விஞ்ஞானி மர்மமான முறையில் இறந்தார். அதை தற்கொலை என்று போலீஸ் கூறியது.

ஆனால் பெரும்பாலான அணு விஞ்ஞானிகளின் மரணம் அல்லது தற்கொலைக்கு என்ன காரணம் என்பதே இதுவரை தெரியவில்லை. அவர்கள் இத்தனைக்கும் தற்கொலைக் குறிப்பு எதையும் எழுதியும் வைத்து விட்டுப் போகவில்லை. உடலில் இருந்த விஷத்தை வைத்து தற்கொலை என்று போலீஸ் கூறுகிறது. அது கொலையாகக் கூட இருக்கலாம் என்ற கோணத்தில் இதுவரை விசாரணை நடந்ததாகவே தெரியவில்லை.

அதேபோல எம். அய்யர் என்ற அணு விஞ்ஞானி தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் பிணமாகக் கிடந்தார். அவரது தலை பலமாக அடிக்கப்பட்டிருந்தது. மண்டை ஓடும் உடைந்திருந்தது. இதுவும் என்ன காரணத்திற்காக என்பது இதுவரை தெரியவே இல்லை.

இந்தக் கொலைகள், தற்கொலைகள், மர்ம மரணங்கள் குறி்த்து இதுவரை இந்திய அரசோ, இந்திய புலனாய்வு அமைப்புகளோ தீவிரமான ஒரு விசாரணையை மேற்கொண்டதாகவோ, ஏன் இந்த மரணங்கள் என்று அக்கறை காட்டியதாகவோ தெரியவி்ல்லை.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக