அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 4 டிசம்பர், 2013

காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா- பாக். இடையே 4வது யுத்தம்: நவாஸ் ஷெரீப்

முசாபர்பாத்: காஷ்மீரை மையமாகக் கொண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே 4வது யுத்தத்துக்கு வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரான "ஆசாத் ஜம்மு காஷ்மீரின்" பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்று நவாஸ் ஷெரீப் பேசியதாவது:

காஷ்மீர் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபை உட்பட அத்தனை சர்வதேச தளங்களிலும் நாம் எழுப்பிக் கொண்டிருக்கிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்குட்பட்டு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணாத வரை அமைதி நிலவப் போவதில்லை.

காஷ்மீரை மையமாக வைத்துத்தான் அணுஆயுத நாடுளான இந்தியா- பாகிஸ்தான் இடையே 4வது யுத்தம் நடைபெறக் கூடும். அதனால் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அண்மையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பேசும்போது கூட காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினேன்.

என்னைப் பொறுத்தவரை நாட்டின் இதர பகுதிகளைவிட காஷ்மீர்தான் எனக்கு மிகவும் முக்கியமானது. காஷ்மீரத்தின் வளர்ச்சிதான் எனது தேசியக் கடமை. இந்த பிராந்தியத்தின் அனைத்து வளர்ச்சிக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.

காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைக்காக போராடி உயிர்நீத்த அனைவருக்கும் எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர மக்களுடன் எப்போதும் பாகிஸ்தான் அரசும் பாகிஸ்தான் மக்களும் துணை நிற்பார்கள் என்றார்.

காஷ்மீர் விடுதலை பற்றி பேசினாரா?

இதனிடையே தமது வாழ்நாள் கனவே காஷ்மீர விடுதலைதான் என்று நவாஸ் ஷெரீப் பேசியதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. இருப்பினும் நவாஸ் ஷெரீப் அலுவலக செய்திக் குறிப்பில் அத்தகைய வாசகங்கள் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக