அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 4 டிசம்பர், 2013

முதுகுவலியா? மூட்டுவலியா? கவலை வேண்டாம்... குணமளிக்கும் அதிநவீன சிகிச்சைகள் !

 டாக்டர் ஜி.எம்.பரத் குமார் M.B., M.S.Ortho., DNB., MNAMS, F.ICOE (Swiss)., ஆர்த்ரோஸ்கோபி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்

நாற்பது வயதைக் கடந்த பலரும் முதுகுவலி மற்றும் மூட்டுவலியால் அவதிப்படுகின்றனர். இதற்கு எவ்வா றான சிகிச்சை முறைகள் உள்ளன என்ப தைத் தெரிந்துகொள்ள, பல வாசகர்கள் ஆர்வத்துடன் இருப்பர். இது பற்றி, மதுரையில் அமைந்துள்ள ஈஸ்வரா மருத் துவமனையின் இயக்குநரும், பிரபல ஆர்த்ரோஸ்கோபி மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை நிபுணருமான டொக்டர்.ஜி.எம்.பரத் குமார் அளிக்கும் விளக்கங்கள் உங் களுக்காக!

முதுகுவலிக்கான காரணங்கள்



முதுகுவலிக்கான காரணங்களை வயது முதிர்வின் அடிப்படையிலேயே பார்க்க வேண் டும். குழந்தைப் பருவத்தில் சிறு பராயத்தில் வரும் முதுகுவலிகள் பெரும்பாலும் பிறவிக் குறைபாடுகளினாலேயே ஏற்படுகின்றன. இன் றைய பதின்பருவத்திலுள்ள பெண்களுக்கு வரும் முதுகுவலிக்குக் காரணம், அதிக நேரத் தைக் கணினி முன் செலவிடுவதே. கணினி முன்னால் அமர்ந்திருக்கையில், கால நேரம் பார்க்காது, தாம் அமர்ந்திருக்கும் முறையைப் பற்றி யோசிக்காது, நீண்ட நேரம் கணினியுடன் ஒன்றிவிடுகின்றனர். இதனால் இவர்கள் டிஸ்க் ப்ரொலாப்ஸ் எனப்படும் ‘முதுகுச் சவ்வு வில கல்’ நோய்க்கு ஆளாகிறார்கள்.

இது முதலில், முதுகுத் தண்டில் ஒரு தசை வலி போலவே ஆரம்பிக்கும். இதன் பின் சில விநாடிகளிலேயோ அல்லது சில நாட்களிலேயோ கூட, இந்த வலி, முதுகி லிருந்து கால் வரை பரவுவதை நீங்கள் உணர லாம். இது முதுகுத்தண்டின் எந்தவொரு மூட் டுப் பகுதியிலும் ஏற்படலாம் என்றாலும், இடுப்புக்கு மேற்பட்ட மூட்டுக்களிலேயே பெரும்பாலாக இது தோன்றும். இதன் போது, ஒரு கடதாசித் துண்டு காலில் ஒட்டிக் கொண்டிருப்பது போலவோ, பஞ்சின் மீது நடப்பது போலவோ ஒரு உணர்வு ஏற்படும்.

நோய றியும் செயற்பாட்டில், இவர்களைப் படுக்க வைத்து, காலை மட்டும் தூக்கச் சொன்னால், பாதிக்கப்பட்டுள்ள மூட்டுப் பகுதியில் அதீத வலியை உணர்வார்கள். இவர்களை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரி சோதனைக்கு உட்படுத்துவதன் மூலம், குறிப்பிட்ட சவ்வு எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்ப தைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இதன்வாயிலாக, அவர்களுக்கு எம்மாதிரியான சிகிச்சையை வழங்கவேண்டும் என்பதையும் முடிவு செய்ய முடியும்.

பாதிப்பு குறைவாக இருக்கும் பட்சத் தில், இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக படுக்கையில் ஓய்வெடுக்க வேண்டும். இதன்போது, பிஸியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவ சிகிச்சைகள் சில வழங்கப்படும். அத்துடன், பாதிக்கப்பட்ட நரம்புகளில் வலி தோன்றாதிருக்கச் சில மாத்திரைகளும் வழங்கப்படும். இந்த இரண்டு நாட்களின் பின், சுமார் இரண்டு வாரங்களுக்கு இவர்கள் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்காதிருக்கவேண்டும். அத்துடன் மலச்சிக்கல், தும்மல், இருமல் போன்ற, வயிற்றுப் பகுதியில் அதிக அழுத் தத்தைத் தரும் விடயங்களை முற்றிலுமாக விலக்கிக்கொள்ள வேண்டும். இவர்கள் படுக் கும் மெத்தை மிக மென்மையானதாகவோ அல்லது மிகக் கடினமானதாகவோ அன்றி, சாதாரண மெத்தையாக இருக்க வேண்டும்.

பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், சத்திர சிகிச்சை செய்ய வேண்டி ஏற்படும். சத்திர சிகிச்சை என்பது, உடலை அறுத்துச் செய்வதல்ல. ‘மைக்ரோஸ்கோப்பி’ மூலமாக, முதுகின் பின் புறமாக உள்ளே சென்று, பாதிக்கப்பட்ட சவ்வை அகற்றி விடலாம்.

தற்போது இதற்கெனப் பிரத்தியேகமாக ‘லேசர் டிஸ்க்டெக்டமி’ எனும் ஒரு அதிநவீன சிகிச்சை முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. இந்த சிகிச்சையில் ‘சி ஆர்ம்’ எனப்படும் அதிநவீன ‘எக்ஸ்ரே’ கருவியின் மூலமாக, குறிப்பிட்ட பகுதியில் ஒரு துளையிட்டு, அதன் வழியாக லேசர் கதிர்களை அனுப்புவோம். ஒரு பிளாஸ்ரிக் பையை தீயின் அருகே கொண்டு செல்லும்போது எவ்வாறு சுருங்குமோ, அதேபோல், இந்தக் கதிர்கள், பாதிக்கப்பட்ட சவ்வை நெருங்கும்போது, அந்தச் சவ்வும் சுருங்கிவிடும். இவ்வாறு சுருங்கிவிடுவதால், அங்கு, வலியேற்படுத்தும் நரம்பின் மீதான அழுத்தம் குறைவதால் வலி பறந்துவிடும்.

பெண்களுக்கான சிகிச்சை

முப்பது முதல் நாற்பத்தைந்து வயது வரையான பெண்கள், உடலில் பல மூட்டுக்க ளிலும் குறிப்பாக முதுகுத் தண்டிலும் வலியை உணர்வார்கள். இதை ‘ஃபொலி அன்ஸ்ட்ராஜியா’ என்று சொல்வோம்.

பிரசவத்திற்குப் பின் ஒரு பெண், உடல் ரீதியான பல மாற்றங்களுக்கு முகங் கொடுக்கிறார். பல்வேறு சுரப்பிகளின் சீரற்ற செயற்பாடுகளும் பிரசவத்தின் பின்பே ஆரம் பிக்கின்றன. மேலும் ஒவ்வாமை தொடர்பான அனைத்துக் காரணிகளும், பிரசவத்திற்குப் பின்பே ஒரு பெண்ணிடம் தலைகாட்டுகின்றன. இவ்வாறான ஒரு ஒவ்வாமை, குறிப்பிட்ட எலும்பு மூட்டுப் பகுதியில் ஏற்படும். அதை நாம் ‘ஃபைப்ரோ மயாஜியா’ என்று கூறுவோம்.

இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், காலையில் படுக்கை விட்டு எழுந்திருக்கச் சிர மப்படுவார்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மூட்டில் வலி ஏற்படும். ஒரு நாள் முதுகுவலி என்பார்கள். மறுநாள் கழுத்து வலி என்பார்கள். அடுத்த நாள் கைவிரல்களில் வலி என்பார்கள். இவ் வாறாக, ஒரே இடத்தில் அல்லாமல், உடல் முழுதும் இந்த வலி பயணப்படும். இந்த வலியால், இவர்கள் மனச்சோர்வுக்கும் ஆளாவார்கள். இவர்களது உடல் வலியை மற்றவர்களால் அடையாளம் காணக்கூட முடியாது. அந்தளவுக்கு இவர்க ளது உடல் மிக இயல்பாகவே இருக்கும்.

இந்த நோய்க்குப் பாரிய சிகிச்சைகள் தேவையில்லை. மருந்து மாத்திரைகள், யோகா மற்றும் உடற்பயிற்சிகள் மற்றும் உடல் உழைப்பு, உணவில் கட்டுப்பாடு, உணவில் புளியைக் குறைத்துக்கொள்ளல் என்பன மூலம் இலகுவாக நிவாரணம் அடையலாம்.

நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட பெண்கள் - குறிப்பாகச் சொல்வதானால், மாத விடாய் சுழற்சி செயலற்றுப் போன பெண்கள் - ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்ட்ரோன் எனும் சுரப்பிகள் சுரக்காததால், அந்தச் சுரப்புக்கள் மூலம் பலம் பெற்றுத் திகழ்ந்த எலும்புகள் வலுவிழக்கத் தொடங்கும். இத னால், முதுகில் குடைச்சல் வலி, முதுகு கூன் விழுதல் போன்றன உண்டாகும். இதை ‘ஒஸ்ரியோபொரோசிஸ்’ என்பார்கள். வீட்டை விட்டு வெளியே பெரும்பாலும் செல்லாத சகோதரிகளுக்கு, சூரிய ஒளியில் இருக்கும் விற்றமின் டி கிடைக்காததால், மற் றைய பெண்களைவிட இவர்களுக்கு வெகு விரைவிலேயே இந்நோய் தோன்றலாம். இதே நோய், நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட, புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஆண்களுக்கும் உண்டாகலாம்.

இதில் ஒரு முக்கியமான அம்சம் என்ன வென்றால், இந்த நோயை எக்ஸ்ரே மூலமோ, இரத்தப் பரிசோதனைகள் மூலமோ கண்டறிய முடியாது. போன் என்சிடோமெட்ரி’ எனப் படும் ஒரு ஸ்கேன் பரிசோதனை மூலமே இதைக் கண்டறியலாம்.

இந்த நோய் உள்ளவர்கள், சாதாரணமாகத் தடுக்கி விழுந்தாலோ அல்லது பலமாக உட் கார்ந்து எழுந்தாலோ, முதுகுத் தண்டில் உள்ள எலும்புகளில் ஏதோ ஒரு எலும்பு ஒத்து ழைக்காமல் போகலாம். இதற்கு ‘என்டீரியர் வெட்ஜ் கம்ப்ரெஷர் ப்ரெக்சர்’ என்று பெயர்.

இதற்கான சிகிச்சை மருந்துகளை எடுத் துக்கொள்வதே. ‘எலன் ட்ரொனேட்ஸ்’ எனப்ப டும் ஒரு மருந்துத் தொகுதியை மாதத்திற்கு ஒரு முறையோ, வருடத்திற்கு ஒரு முறையோ எடுத்துக்கொள்வதால், ஒரே வாரத்தில், அவர்க ளுக்குக் கிடைக்க வேண்டிய கனிமச் சத்துக்கள் கிடைக்க ஆரம்பிக்கும். இதனால், நம் கண் முன்பாகவே அவர்களது உடல் வலுவடையத் தொடங்கும். வலியும் ஓடிப் போய்விடும்.

இந்நோய் சுமார் ஐம்பது சதவீதம் தாக்கி யவர்களுக்கு, ‘ஹைஃபோ பிளாஸ்ரி’ எனப் படும் சிகிச்சையே உகந்தது. இதன்போது, முது குத் தண்டில் நசுங்கிய எலும்பை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து, அந்த எலும்பிற்குள் ஒருவித சீமெந்தைச் செலுத்துவோம். இதன்மூலம், முதுகுத் தண்டின் பாதிக்கப்பட்ட சீரமைப்பு ஒழுங்குபடுத்தப்படும்.

மூட்டு நோய்கள் உருவாகக் காரணங்கள்

பிறவிக் குறைபாடு அல்லது மரபணுத் தாக் கம், கட்டுப்பாடற்ற, தெரிந்தெடுத்து உண்ணாத, தவறான உணவுப் பழக்கத்தால் உண்டாகும் உடல் பருமன், போதிய உடற்பயிற்சி இன்மை என்பனவற்றைக் காரணங்களாகச் சொல்ல லாம். மேலும், சிலருக்கு மூட்டுக்களைப் பயன்படுத்தத் தெரியாது. உதாரணமாக, சிலர் மாடிப்படிகளில் வேகமாக இறங்குவார்கள். அப்படிவேகமாக இறங்கும்போதே ‘சட்’டெனத் திரும்புவார்கள். இதனால், மூட்டுக்கு இடையே உள்ள குருத்தெலும்பு மற்றும் மூட்டின் அதிர்வுகளைத் தாங்கும் ‘மினிஸ்கஸ்’ எனப்படும் பகுதி என்பன நசிந்துவிடலாம். அவ்வாறு நசிந்துவிட்டால், உங்கள் மூட்டுக்களின் செயற்பாடு சிறப்பாக இருக்காது.

வாதநீர் பிரச்சினைகளும் மூட்டுத் தேய்மானத்துடன் தொடர்புடையதே. இது பெரும்பாலும் பெண்களைத் தாக்கக்கூடிய நோய் என்று சொல்லலாம். 35 முதல் 50 வயதுக்கு உட்பட்ட அனேக பெண்களிடம் இந்தப் பாதிப்பு இருக்கிறது. இந்தப் பாதிப்பு உள்ள பெண்கள், காலையில் படுக்கையி லிருந்து எழுந்து நிற்கவே மிகவும் சிரமப் படுவார்கள். சிறு சிறு மூட்டெலும்புகளில் ஒருவித இறுக்கம் தோன்றும். மிகுந்த சோர் வாக உணர்வார்கள். இந்தப் பண்புகள் சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின் சீராகலாம் என்றாலும், அவர்களது வழமையான இயக்கம் இதனால் பாதிக்கப்படும். அத்துடன், சிறு சிறு வேலைகள் செய்தாலும் மிகுந்த சோர்வாக உணர்வார்கள்.

சிலர், ‘வோர்ம் அப்’ எனப்படும், விளை யாட்டுக்களுக்கு முன்னதாக உடலைத் தயார் செய்யும் செயற்பாடுகள் எதனையும் மேற்கொள்ளாது, திடீரென விளையாடத் தொடங்குவர். இவ்வாறு திடீரென உடலை வருத்துவதால், ‘என்டீரியர் க்ரூஷியல் லிக மன்ட் எனப்படும் மூட்டுகளின் அச்சாணியான உறுப்பு முறிந்துவிட வாய்ப்புகள் உள்ளன.

அடுத்து விபத்துக்கள். விபத்தின்போது, மூட்டுச் சவ்வோ அல்லது மூட்டு எலும்போ பலமாகத் தாக்கப்பட்டால், அதன் சரியான கோணம் பிசகிவிடும். அதன்பின்னர், அதை முழுவதுமாக இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடியாது.

வயது போகப் போக, மூட்டுக்களின் உள்ளே பளபளப்பாகக் காணப்படும் குருத்தெலும்பு, தன்னுடைய நீர்த் தன்மையைப் படிப்படியாக இழக்கத் தொடங்கும். ஒரு இறுக்கத் தன்மை ஏற்படும். புகைபிடிப்பதனாலும் இந்த நீர்த் தன்மை விரைவாக அற்றுப்போகலாம் என்ப தால், அவர்களுக்கு வேகமாகவே இந்தப் பிரச் சினை ஏற்படலாம்.

வெடிக்கத் தொடங்கிய குருத்தெலும்புகள் முழுதாகத் தேய்ந்துபோனதும், குருத்தெலும் புகளுக்குப் பதில், எலும்புகளே ஒன்றுட னொன்று உராய ஆரம்பிக்கும்போது, மூட் டுக்களை மடக்கி நீட்டும் சந்தர்ப்பத்தில் பயங்கர வலி ஏற்படும். இது ஆரம்பகட்டத் தேய்மானத்தின் அறிகுறி.

பொதுவில் மூட்டுத் தேய்மானத்தின் மூன்று நிலைகள்

சவ்வுப் பகுதி மட்டும் கிழிந்துபோய், குருத்தெலும்பு மற்றும் மூட்டுக்கள் நன்றாக இருக்கும் நிலையை முதல் நிலை என்று சொல்லலாம். இதன்போது, நான் ஏற்கெனவே கூறியதுபோல், மூட்டினுள் நீர் சுரத்தல், நீட்டிய காலை மடக்க முடியாதது, மடக்கிய காலை நீட்ட முடியாதது, உட்கார்ந்திருந்துவிட்டு எழுந்திருக்கும்போது மூட்டில் கடும் வலி ஏற்படுவது என்பன ஏற்படும். இந்நிலை யில் எக்ஸ்ரே பரிசோதனை செய்து பார்த்தால், இரண்டு மூட்டுக்களுக்கு இடை யில் இயற் கையாக இருக்கவேண்டிய மூன்று அல்லது நான்கு மில்லிமீற்றர் இடைவெளியானது குறைந்திருக்கும். இதன்மூலம் சவ்வுப் பகுதி கிழிந்திருக்கிறது என்பதையும், அதில் உள்ள நீர்த்தன்மை குறைந்திருப்பதையும் அறிந்துகொள்ளலாம்.

இந்நிலையில் நோய் கண்டுபிடிக்கப் பட்டால், அவர்களுக்கு சாவித்துளை மூல மான ‘ஆர்த்ரோஸ்கோப்பி இன் ஏசியல் ரீகன்ஸ்ட்ரக்சன்’ எனும் சிகிச்சையை அளிக்க லாம்.

இச்சிகிச்சையின் செயற்பாடுகள்

இந்த சிகிச்சையின்போது, குருத்தெலும் புக்கு அருகில் இருக்கக்கூடிய இரண்டு தசை நார்களை, மூட்டு எலும்புகளுக்கு ஊடாகச் செலுத்தி, பின்பக்கமாக இழுத்து இறுக்கமாகப் பொருத்தி, ஒருவித பட்டன்களைப் பொருத்திவிடுவோம். இவ்வாறு நாம் பொருத்தும் தசைநார்கள், இயற்கையான தசைநார்களைவிட, சுமார் நாற்பது சதவீதம் உறுதியானதாக இருக்கும். இதனால், அவர்கள் மீண்டும் தமது பழைய, இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பலாம்.

இரண்டாம் நிலையில், ஒருபக்கச் சவ்வு முற்றிலுமாகத் தேய்ந்துபோய்விடுவதால், எலும்புகள் ஒருபக்கமாகச் சாய்ந்துவிடும். இந்த நோய்க்கு ‘மீடியல் கம்பார்ட்மென்ட் ஆர்த்ரைட்டிஸ்’ என்று பெயர்.

இவ்வாறு ஒருபுறமாகவே சாய்ந்திருப்ப தால், நீங்கள் நடக்கும்போதும், நிற்கும்போதும், உங்களது உடல் சுமையை, பாதிக்கப்பட்ட மூட்டின் ஒரு பக்கமே தாங்குவதால், மேலும் மேலும் அந்தப் பகுதியே தேய்மானமடைந்து, இறுதியில் குருத்தெலும்பும் தேய்மானமடை யும். இவ்வாறானவர்களுக்கு ‘ஹைட்டீரியல் ஒஸ்டியாக்டமி’ என்று சொல்லக்கூடிய சிகிச் சையை அளிக்கலாம். இதன்மூலம், எட்டு முதல் பத்து வருடங்கள் வரை, எதுவித பிரச்சி னையும் உருவாகாது.

இதைக் கவனிக்காது போனால், அவர் கள் மூன்றாம் நிலையை அடைவார்கள். இதன்போது, கால்கள் வளைந்து, நிற் கவோ, நடக்கவோ முடியாது போய்விடும். நித்திரையில் கூட அவர்கள் வலியை உணர் வார்கள். இந்த நிலையில் உள்ளவர்களுக்கு ஒரே தீர்வு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே.

மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின்போது, மேல் மற்றும் கீழ் எலும்புகளை ரம்பத்தால் சற்று வெட்டியெடுத்துச் சரிசெய்து, நடுவிலுள்ள சவ்வுப் பகுதிகள் அனைத்தையும் வெளி யெடுத்துவிடுவோம். இரண்டு எலும்புகளின் முனைப் பகுதியிலும் ‘கோபால்ட் குரோமியம்’ கொண்ட உலோகத்தாலான செயற்கை மூட்டைப் பொறுத்துவோம். இவ்விரு செயற்கை மூட்டுகளுக்கு நடுவிலும் ‘ஹைலி ட்ரான்சிலின்ட் பாலி எத்திலீன்’ என்ற ஒரு வஸ்துவை வைப்போம். இது, சவ்வுகளின் வேலையைச் செய்யும்.

இந்த சிகிச்சையின் பின், ஒருவர் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப லாம்.

தற்போது, கால்களை மடித்து சம்ம ணம் போட்டு அமரும் வசதியைத் தரும் செயற்கை மூட்டுக்கள்கூட வந்துள்ளன. அத்துடன், சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாகப் பயன்படுத்தக்கூடிய ‘ஒக்ஸீனியம்’ வகையிலான மூட்டுக்களும் வந்துள் ளன.

இந்தச் சந்திப்பின் மூலம், நான் உங்களுக்கு சொல்லக்கூடிய ஆலோசனை என்னவென்றால், நீங்கள் இயங்குவதற்கு உதவும் மூட்டுக்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ளுங்கள். கூடிய வரையில் பிரச்சினைகளை முதல் நிலையி லேயே அடையாளம் கண்டுகொண்டு, அதற் குத் தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். இதன்மூலம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வரை செல்லவேண்டிய தேவையிராது.

- சந்திப்பு ஏ.எஸ்.தேவராஜன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக