அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

விமானம் மூலம் தமிழகத்தை தாக்க திட்டமிட்ட பாகிஸ்தான் உளவாளி- 'திடுக்' தகவல்கள்

இலங்கை வழியாக தீவிரவாதிகளை ஊடுருவச் தமிழகத்தை தாக்க பல்வேறு நாசவேலைகளை செய்ய திட்டமிட்டு இருந்ததாக சென்னையில் சிக்கிய பாகிஸ்தான் உளவாளி திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளான்.
2012-ம் ஆண்டு திருச்சியில் தமீம்அன்சாரி என்ற பாகிஸ்தான் உளவாளியை தேசிய புலனாய்வு படையினர் கைது செய்தனர். அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி அன்று சென்னையில் ஜாகீர் உசேன் என்ற மற்றொரு உளவாளி தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டான்.


அவனது கூட்டாளிகளான சிவபாலன், சலீம், ரபீக் ஆகியோரும் அடுத்தடுத்து சென்னையில் கைதாகினர். இவர்களோடு தொடர்புடைய உளவாளி முகமது உசேன் மலேசியாவில் சிக்கினான். அவனை சென்னை கொண்டுவர தேசிய புலனாய்வு படை போலீசார் சர்வதேச போலீஸ் உதவியை நாடி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னை சாலிகிராமம் முத்தமிழ் நகரில் 7-வதாக ஒரு முக்கிய பாகிஸ்தான் உளவாளியை தேசிய பாதுகாப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர். அந்த உளவாளியின் பெயர் அருண் செல்வராசன். இவனும் இலங்கையைச் சேர்ந்தவனே.

இவன் கடந்த 2011-ம் ஆண்டு சென்னைக்கு வந்துள்ளார். சாலிகிராமம் முத்தமிழ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் மாதம் ரூ.7 ஆயிரம் கொடுத்து தங்கி இருந்துள்ளார்.

அருகில் உள்ள இன்னொரு கட்டிடத்தில், ஐஸ்ஈவென்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தான். அந்த நிறுவனம், கமிஷன் தொகை வசூலித்துக்கொண்டு, மாநாட்டு நிகழ்ச்சிகள், திருமணவரவேற்பு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்திக்கொடுக்கும் பணியை செய்யும்.

இந்த நிறுவனத்தை நடத்திக்கொண்டே, உளவாளி அருண் சென்னை நகர் முழுவதும் சுற்றி வந்து தென் பிராந்திய ராணுவ அலுவலகம் போன்ற முக்கிய ராணுவ அலுவலகத்தின் படங்கள், அமெரிக்க தூதரக படம், தலைமைச்செயலகம் செயல்படும் கோட்டை படம், கல்பாக்கம் அணுமின்நிலையம் படம் போன்ற படங்களை எடுத்து, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வேலை பார்க்கும், சாந்தே என்பவருக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளான்.

அவனிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தை தகர்க்க பல்வேறு நாசவேலைகளை செய்ய, சதித்திட்டம் தீட்டி இருந்ததாக, திடுக்கிடும் தகவல்களை வாக்கு மூலமாக தெரிவித்துள்ளான். மேலும் அவன் விமானம் ஓட்ட, சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளன.

அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களை விமானத்தை மோதவிட்டு தகர்த்துபோல, அருண்செல்வராசன் மூலம் சென்னையில் முக்கிய அரசு கட்டிடத்தில் விமானத்தை மோதவிட்டு, தகர்க்க திட்டமிட்டு இருக்கலாம் என்ற அதிரடி தகவலும் வெளியாகி உள்ளது.

மும்பையில் கடல்வழியே தீவிரவாதிகளை ஊடுருவி தாக்குதல் நடத்தியது போல் இலங்கையில் இருந்து கடல் வழியே தமிழகத்துக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்து தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த உளவுப் பணிக்காக ரூ2 கோடியை கூலியாகவும் அருண் செல்வராசன் பெற்றதும் தெரியவந்துள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக