Juergen Todenhoefer was the first Westerner given access to Mosul since Islamic State took over (image:BBC)
மேற்குலக நாடுகள் நினைப்பதை விட ஐ.எஸ். போராளிகள் மிகவும் பலமானவர்களாகவும் அபாயகரமானவர்களாகவும் உள்ளதாக ஜேர்மனிய ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜுயர்கென் தொடென்ஹோபர் என்ற மேற்படி ஊடகவியலாளர் ஈராக்கில் மொசூல் நகரில் ஐ.எஸ். போராளிகளுடன் 6 நாட்களை செலவிட்டிருந்தார்.
ஐ.எஸ். போராளி குழுவை பின்பற்றுபவர்கள் பெரிதும் தூண்டப்பட்டவர்களா கவும் அந்தப் போராளி குழுவின் கொடூரமான தாக்குதல்களுக்கு ஆதரவளிப்பவர்களாகவும் உள்ளதாக தொடென்ஹோபர் தெரிவித்தார்.
போராளிகள் பரந்து காணப்படுவதால் அவர்களை வான் தாக்குதல்களுக்கு இலக்கு வைப்பது கடினமாகவுள்ளதாக அவர் கூறினார்.
மொசூல் நகரானது கடந்த ஜூன் மாதம் ஐ.எஸ். போராளிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.
ஐ.எஸ். போராளிகளின் பிராந்தியத்துக்குள் ஆழமாக ஊடுருவிச் சென்ற பின் உயிருடன் திரும்பி வந்த வெளிநாட்டவராக முன்னாள் ஜேர்மனிய அரசியல்வாதியான தொடென் ஹோபர் விளங்குகிறார்.
அந்தப் பிராந்தியத்துக்கு சென்ற பல மேற்குலக நாட்டவர்கள் ஐ.எஸ். போராளிகளால் அண்மையில் தலையை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்கள் எவ்வாறு சரியான முறையில் பிரார்த்தனை முதலான கடமைகளை செய்ய வேண்டும் என்றும் பெண்கள் எவ்வாறு தமது உடலை முழுமையாக மூடி ஆடை அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தும் வழி காட்டல் குறிப்புக்களை உள்ளடக்கிய சுவரொட்டிகளை மேற்படி போராளிகள் நகரெங்கும் ஒட்டி வைத்துள்ளதாக தொடென் ஹோபர் கூறினார்.
மத நம்பிக்கையற்ற பெண்கள் அல்லது ஆண்களால் அணியப்படும் ஆடைகளை அணியக்கூடாது என அந்த சுவரொட்டிகள் அறிவுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
புத்தக கடையொன்றில் அடிமைகளை எவ்வாறு நடத்துவது என்பது உள்ளடங்கலான மத சட்டங்கள் தொடர்பான குறிப்புக்களும் புத்தகங்களும் காணப்பட்டதாக அவர் கூறினார்.
ஐ.எஸ். போராளிகளின் இலட்சியமாக மத சுத்திகரிப்பும் தமது பிராந்தியத்தை விரிவுபடுத்துவதும் உள்ளதாக கூறிய அவர், இதற்கு முன் எந்தவொரு போர் வலயத்திலும் தான் காணாத உற்சாகம் அங்கு காணப்பட்டதாக தெரிவித்தார்.
"அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார்கள். அவர்கள் தம்மை பற்றிய நிச்சய தன்மையுடன் உள்ளனர். இந்த வருட ஆரம்பத்தில் ஒரு சில மக்களே ஐ.எஸ். போராளிகள் தொடர்பில் அறிந்திருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் பிரித்தானியா அளவான பிரதேசத்தை கைப்பற்றியுள்ளனர். அவர்கள் ஒரு அணு குண்டு அல்லது சுனாமி பேரலைபோன்ற சக்தியுடன் நகர்ந்து வருகின்றனர்" என தொடென் ஹோபர் கூறினார்.
தமது இஸ்லாமிய தேசம் செயற்படுவதை ஐ.எஸ். போராளிகள் காண்பிக்க வேண்டும் என அவர்கள் மனதில் பாதிப்பொன்றை தான் ஏற்படுத்தியிருந்ததாக கூறிய அவர், தமது உயிர்ப் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை பெற்ற பின் தனது மகன் அங்குள்ள காட்சிகளை படமாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
மொசூல் நகரிலுள்ள கிறிஸ்தவர்களும் ஷியா இனத்தவர்களும் அச்சம் காரணமாக வெளியேறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஐ.எஸ். போராளிகள் தமது சொந்த நீதி முறைமையை கொண்டுள்ளார்கள். நீதிமன்றங்களில் ஐ.எஸ் போராளிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன எனக் கூறினார்.
தற்போது மொசூல் நகரில் ஆயிரக்கணக்கான போராளிகள் உள்ளனர். அவர்கள் தம்மை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுவதை கடினமாக்கும் வகையில் நகரெங்கும் பரந்து காணப்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.
ஐ.எஸ். போராளிகள் சிரியாவை விடவும் ஈராக்கிய பிரதேசங்களில் பலம் பெற்று விளங்குவதாக தான் நம்புவதாக அவர் கூறினார்.
மேற்படி போராளிகள் தனது வாழ்வில் தான் கண்டவர்களிலேயே மிகவும் கொடூரமான அபாயகரமான எதிரிகளாக உள்ளதாக தெரிவித்தார்.
"ஐ.எஸ். போராளிகளை தடுத்து நிறுத்தக்கூடியவர்கள் எவரையும் நான் காணவில்லை. அரபு நாடுகள் மட்டுமே அவர்களை தடுத்து நிறுத்த முடியும்" எனத் தெரிவித்த அவர், ஜேர்மனை சேர்ந்த ஜிஹாதியொருவர் மூலமாக அந்த பிராந்தியத்துக்கு சென்றதாகவும் இஸ்லாமிய தேசத்தின் அனுமதியை பெற பல மாதங்கள் காத்திருந்ததாகவும் கூறினார்.
தனக்கு பல தருணங்களில் பாதுகாப்பு வழங்கிய ஐ.எஸ். போராளிகள் எத்தருணத்திலும் மனதை மாற்றிக் கொள்ளலாம் என தான் அச்சமடைந்திருந்தாக அவர் தெரிவித்தார்.
தான் எதிர்பார்த்தது போன்று இறுதியில் ஐ.எஸ். போராளிகள் தன்னையும் தனது மகனையும் பணயக்கைதிகளாக பிடித்து வைக்க தீர்மானம் எடுத்ததாகவும் இதனையடுத்து தானும் தனது மகனும் தமது பொருட்களை எடுத்துக்கொண்டு சுமார் அரை மைல் தூரம் ஓடி எல்லையைக் கடந்து துருக்கிக்குள் பிரவேசித்ததாகவும் தொடென்ஹோபர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக