அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 30 டிசம்பர், 2014

கர்ப்பப்பை வாசலில் கட்டுப்போட்டு காப்பாற்றப்படும் சிசுக்களும் பூர்த்தியாக்கப்படும் பிரசவங்களும்

கர்ப்பம் தரித்த சில மாதங்களில் கருக்கள் இயற்கையாக கலைந்து வெளியேறுதல் பல பெண்களின் வாழ்க்கையில் தொடர்ந்தும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி கர்ப்பம் தரித்த கருவை இழந்த ஒரு பெண்ணினது மன நிலையை நினைத்தால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல அந்தக் குடும்பத்துக்குமே ஒரு பெரிய ஏமாற்றமாகத்தான் இருக்கும். இப்படி இயற்கையில் வந்து கைதவறிப்போகும் தமது வாரிசை நினைத்து நினைத்து உருகிக் கொண்டிருக்கும் பலரது சோகங்களை கேட்க மனம் வேதனையாகத்தான் இருக்கிறது.


இப்படி எந்தத் தவறும் விடாமல் தமது வயிற்றில் இருந்து சிசுவை இழக்க எந்தத் தாயும் விரும்பமாட்டாள். அதனை காப்பாற்றி ஒரு நிறை மாதக் குழந்தையாக பெற்றெடுக்க என்ன தவம் செய்ய வேண்டும் என்றுதான் கேட்பாள். அதாவது இதனை காப்பாற்ற அல்லது இதுபோல் இனிமேலும் நடக்காமல் இருந்து தமது கர்ப்ப காலத்தை தொடர சிகிச்சைகள் எதுவும் இல்லையா என்று கேட்கிறார்கள். இவ்வாறு கர்ப்பம் தரித்து பாதியிலேயே தமது சிசுக்களை இழந்த சில பெண்களின் சோகங்களை தீர்க்க மீண்டும் கர்ப்பம் தரிக்கும் போது இவ்வாறு இடை நடுவில் தமது சிசுவை இழக்காது இறுதிவரை சென்று நிறை மாதக் குழந்தையை பெற்றெடுக்க என்ன தீர்வு? இதற்கு நான் அண்மையில் எனது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒரு தம்பதியரது உதாரணம் மூலம் விளக்கம் தரலாம் என நினைக்கிறேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 32 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவருடன் என்னிடம் ஆலோசனை கேட்பதற்கு வைத்தியசாலைக்கு வந்திருந்தனர். அவர் மிகவும் சோகமான கதையை கூறினார்கள். அதாவது தான் ஏற்கனவே இரு தடவைகள் கர்ப்பம் தரித்து எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் ஐந்து மாதங்கள் வரை தமது கர்ப்பகாலம் தொடர்ந்தது. தாங்களும் பல கனவுகளுடனும் ஆசைகளுடனும் பிறக்கப்போகும் தமது குழந்தையை பற்றி எதிர்பார்த்திருந்தனர்.ஆனால் ஐந்து மாத முடிவில் திடீரென ஒரு சிறிய வயிற்று வலி ஏற்பட்டு பன்னீர்குடமும் உடைந்து சிசு குறை மாதமாகவே பிறந்து இறந்து விட்டது. ஏமாற்றத்துடனும் விரக்தியுடனும் இருந்த எங்களுக்கு இரண்டாம் தடவை கர்ப்பம் தரித்த போதும் இவ்வாறான ஏமாற்றம் தான். ஐந்து மாத கர்ப்ப காலத்தில் கிடைத்தது. இவ்வாறு எமது சிசுக்களை இரு தடவையும் ஐந்து மாதத்திலேயே பறி கொடுத்து எமது நம்பிக்கைகளையெல்லாம் இழந்து விட்டோம். எந்த தவறும் செய்யாமல் எங்களுக்கு இந்த நிலை ஏன் ஏற்படுகின்றது என்று கூறி அழுதார்கள். மீண்டும் கர்ப்பம் தரிக்கக்கூட பயமாக உள்ளது. இவ்வாறு ஒரு தடவை மீண்டும் நடந்தால் எம்மால் அதனை தாங்கும் சக்தி இல்லை என்று கூறினார்கள். இதற்கான பரிகாரம் என்ன என்று வினவினார்கள்.

இவ்வாறு 5 அல்லது 6 மாத கர்ப்ப காலத்தில் வயிற்று வலி எடுத்து பன்னீர்குடம் உடைந்து கலைந்து போகும் கர்ப்பத்துக்குரிய சரியான காரணம் என்ன ? அதுதான் பலவீனமான கர்ப்பப்பை வாசல் அல்லது கர்ப்பப்பை கழுத்து சேர்விக்ஸ் என்று அழைக்கப்படும். இந்த கர்ப்பப்பை கழுத்து சிறிதாகவோ அல்லது வாய் திறந்ததாகவோ இருக்கும்போது கர்ப்பத்தில் வளரும் சிசுவின் பாரத்தினால் கர்ப்பப்பையிலிருந்து சிசுவானது வெளியேறி விடுகின்றது. இதன் மூலம் கர்ப்பம் கலைந்து போகின்றது. இதனை சம்பந்தப்பட்ட தம்பதிகளுக்கு விளங்க வைத்து இதற்கான தீர்வு என்னவென்பதனையும் கூற வேண்டியிருந்தது. அதாவது இவ்வாறான பெண் மீண்டும் கர்ப்பம் தரிக்கும் போது மூன்று மாத கால கர்ப்பத்தில் ஸ்கான் பரிசோதனை செய்து சிசுவின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும். சிசுவானது ஆரோக்கியமாக இருந்தால் மூன்று மாத முடிவில் கர்ப்பப்பை கழுத்தை சுற்றி கட்டுப்போட வேண்டும். இவ்வாறு போடப்படும் கட்டு இழையினால் கர்ப்பப்பை வாசலானது பலமாக்கப்பட்டு முன் ஏற்பட்டது போன்ற சிசு இழப்பை தவிர்க்க முடியும். எனவே நீங்கள் பயப்படாமல் மீண்டும் கர்ப்பம் தரித்து வாருங்கள். இதுபோன்ற சிகிச்சையினால் உங்கள் சிசுவை காப்பாற்றி நிறை மாதக் குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்று கூறினோம்.

இதன்படி அந்தத்தம்பதிகளுக்கு அடுத்தடுத்த மாத காலத்தில் கர்ப்பமாகி வந்தார்கள். எனினும் அவர்கள் மனதில் பயம் இருக்கத்தான் செய்தது. நாம் திட்டமிட்ட படி 3 மாத காலம் முடியும் போது ஸ்கான் பரிசோதனையில் சிசுவின் ஆரோக்கியத்தை உறுதி செய்தோம். அத்துடன் கர்ப்பப்பை வாசலின் நீளத்தை பார்த்தால் அது மிகவும் குறுகியதாகத்தான் இருந்தது. எனவே நாம் சொன்னது போன்று கர்ப்பப்பை வாசலுக்கு கட்டுப்போட்டோம். இது பெண்ணை மயக்கித்தான் செய்யப்பட்டது. இதனால் பெண்ணுக்கு எந்தவித வலியும் தெரியாமல் செய்யப்பட்டது. இதற்காக நாம் அந்தப் பெண்ணை ஒரு நாள் எமது வைத்தியசாலையில் தங்க வைத்து பராமரித்தோம். பின்னர் அவரது ஆரோக்கியத்தை உறுதி செய்து வீடு செல்ல அனுமதித்தோம். பின்னர் ஒழுங்காக கிளினிக்கில் 3 வாரங்களுக்கு ஒரு தடவை தாயினதும் சிசுவினதும் ஆரோக்கியத்தை உறுதி செய்து கர்ப்ப காலத்தை தொடர்ந்தோம். பின்னர் கர்ப்ப காலம் வெற்றிகரமாக 37 வாரங்கள் வரை சென்று முடிவடைந்த பின்னர் தாம் போட்டு விட்ட கர்ப்ப வாசல் கட்டை கழற்றி விட்டோம். இதன்பின்னர் அவரது பிரசவமானது சாதாரண சுகப்பிரசவமாக முயற்சி செய்ய திட்டமிட்டோம்.

இதன்படி தம்பதிகளுக்கு கூறினோம் பிரசவ வலி ஆரம்பித்தாலோ பன்னீர்குடம் உடைந்தாலோ உடனடியாக வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி கூறினோம். இந்தப் பெண்ணுக்கு கட்டை கழற்றி விட்டு சில தினங்களில் பிரசவ வலி ஆரம்பிக்கத் தொடங்கியது. அவர்களும் கூறியதுபடி வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்.

பிரசவ வலி தொடர்ந்ததால் அதற்கான சரியான பராமரிப்பை மேற்கொண்டு சாதாரண சுகப்பிரசவம் மூலம் அழகிய குழந்தையை பெற்றெடுத்தோம். இதன் மூலம் அந்தத் தம்பதிகளின் முகங்கள் மலர்ந்தன. ஏற்கனவே இரண்டு சிசுக்களை குறை மாதத்தில் பறிகொடுத்த இவர்கள் இந்த மாதிரியான கர்ப்பப்பை வாசல் கட்டு போட்டதன் மூலம் ஒரு நிறை மாதக் குழந்தையை பெற்றெடுத்தார்கள். எனவே பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகள் வழங்கும் போது குழந்தைப் பார்க்கியத்தை வென்றெடுக்க முடிகின்றது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக