அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 8 நவம்பர், 2015

பரந்தன் – சிவபுரத்தின் உண்மைக் கதை என்ன?

விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த தமிழினியின் மரண நிகழ்வில் அரசியல் வியாபாரத்தைச் செய்ய முற்பட்ட தமிழ்த்தேசியவாதிகளுக்கு எதிர்பாராத ஒரு நெருக்கடியும் சங்கடமும் ஏற்பட்டுள்ளது. அந்த மரண நிகழ்வில் கலந்து கொண்டு தமிழினியையும் விடுதலைப்புலிகளையும் புகழ்ந்து மெச்சிய தமிழ்த்தேசியவாதிகளைப் பற்றி மரண நிகழ்வில் நின்றவர்கள் மட்டமாகக் கதைத்தனர். இதற்குக் காரணம் தாமே உச்சமான செல்வாக்கைப் பெற்றவர் என்ற மாதிரி நடந்து கொள்கிறவர்கள்இ கதைக்கிறவர்கள் பொது இடங்களில் உரையாற்றுகிறவர்கள் எல்லாம் பரந்தன் – சிவபுரத்தில் இருந்த தமிழினியின் வீட்டை அறியாமல்இ அந்த வீட்டுக்கு அதுவரையிலும் போகாமல் இருந்தது ஏன்? அந்தக் குடும்பத்துக்கோ அவர்களைப்போல மிகுந்த கஸ்ரங்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கோ உதவாமல் இருந்ததும் இருப்பதும் எதற்காக?



அப்படி பாராமுகமாக இருந்து விட்டு இப்பொழுது மரணச் சடங்கில் வந்து ஓசியில் அரசியல் வியாபாரம் செய்வதைக் கண்டவர்கள் குமுறினார்கள், கொதித்தார்கள், 'இதுவும் ஒரு காலம்தான்' என்று வாய்விட்டுச் சிரித்தார்கள். அதிலும் அங்கே பெருந்தொகையாகக் கூடியிருந்த முன்னாள் போராளிகள் இவர்களுடைய தேசிய வியாபாரத்தைக் கண்டு முகம் சுளித்தனர். தமிழினியின் குடும்பத்தினருக்கே இதெல்லாம் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியது. தமிழினியின் கணவர் திரு. ஜெயக்குமாரன் இதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாமல் விலகி நின்றதைப் பலரும் அவதானித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

'இவர்கள் தமிழ்த்தேசியத்துக்காக என்னமாதிரியான பங்களிப்பையெல்லாம் கடந்த காலத்தில் செய்திருக்கிறார்கள்? இதைப்பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்ன? எங்களை முட்டாள்கள் என்று கருதி விட்டார்களா? என்ன செய்வது எல்லாம் ஒரு காலம் தான்' என்று சொல்லிப் பெரு மூச்சு விட்டார் ஒரு மூத்த போராளி. ஆனால், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட எழுத்தாளரும் மூத்த போராளியும் தமிழினியின் மதிப்புக்கும் பாசத்துக்கும் உரியவருமான தமிழ்க்கவி இந்தப் புலுடாக்களை எல்லாம் பார்த்து விட்டு தக்க பதிலடியைக் கொடுக்க முற்பட்டார்.

ஆனால், அதற்கான சந்தர்ப்பம் அங்கே வாய்க்கவில்லை. நேரம் போதாமையும் மழையும் அதற்கான வாய்ப்பைக் கொடுக்கவில்லை. இருந்தாலும் அவர்இ தமிழினியின் வரலாற்றையும் இயல்பையும் மிக அழகாகச் சொன்னார். உண்மை எப்போதும் அழகுதான் என்பது அப்பொழுது பலருக்கும் புரிந்திருக்கும்.

மற்றவர்கள் தமிழினிக்கும் தங்களுக்குமிடையில் நெருக்கமும் உறவும் இருந்ததாகப் படம் காட்ட அந்தரப்பட்டனர். ஐங்கரநேசன் தமிழினிக்கும் தனக்கும் ஏதோ ஒரு அத்தியந்தமான நட்பும் புரிந்துணர்வும் இருந்தாகக் கட்டுவதற்காகப் பாடுபட்டார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் தமிழினியைப் பற்றிச் சொன்னவை கொஞ்சம் பரவாயில்லாமல் இருந்தது. பத்மினியை அரசியல் அரங்கிற்கு அழைத்து வந்தவர் தமிழினிதான்.

அப்போது பத்மினியின் மீது தமிழினிக்கு மதிப்பும் அன்பும் இருந்தது. அதைப்போல தமிழினியின் மீது பத்மினிக்கும் ஈடுபாடிருந்தது.

ஆனால் தமிழினி சிறையில் இருந்தபோதோ பின்னர் அவர் விடுதலையாகி திருமணவாழ்வில் இணைந்த பிறகோ தமிழினியைப் பற்றி பத்மினி பெரிதாகச் சிந்தித்ததாக இல்லை. இருந்தாலும் இறுதி நிகழ்வில் பத்மினி உருக்கமாக நின்றார். மற்றும்படி மாவை சேனாதிராஜா, வடக்குமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் ஆகியோர் தமிழினிக்குப் புகழ்மாலை சூடினார்கள்.

தமிழினி உயிரோடு இருந்தபோது, உதவிகள் தேவைப்பட்டபோது ஒரு சொல்லைக்கூட அவருக்காக உதிர்க்கத் தயாராக இல்லாதவர்கள், தமிழினியைப் பற்றி வாய்போன போக்கிற்கு அவதூறுகளும் வதந்திகளுமாகப் பேசியவர்கள் அப்படியே குத்துக் கரணம் அடித்துப் புகழ் பாடியதுதான் சகிக்க முடியதாக இருந்தது.

எப்படியோ எல்லாம் முடிந்து தமிழினியின் இறுதிப் பயணமும் நிறைவேறியது. அதற்குப் பிறகு இணையங்கள் தமிழினியின் குடும்பத்தின் நிலையையும் அவர்களுடைய வீட்டின் நிலையையும் பற்றிப் படங்களோடு செய்திகளையும் கட்டுரைகளையும் விமர்சனங்களையும் வெளியிடத் தொடங்கின.

கூடவே தமிழினி இவ்வளவு சிரமங்களின் மத்தியில் வாழ்ந்தபோது இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் எல்லாம் எங்கே போனார்கள்? என்ற கேள்விகளையும் எழுப்பின.

முகப்புத்தங்களிலும் பலரும் இந்தப் போலித்தேசியவாதிகளைக் குறித்த முகத்திரைகளைக் கிழித்தனர் பலர். தமிழினி மட்டுமல்ல, அவரைப்போல பல முன்னாள் போராளிகள் இப்படி சிரமங்களின் மத்தியில் வாழ்க்கையை நடத்த முடியாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான உதவிகளைச் செய்யாமல் தப்பித்துக்கொள்வதற்கான காரணம் என்ன? என்ற கேள்விகள் பரவலாக எழுப்பட்டன. அத்துடன் தமிழினி குடியிருந்த பரந்தன் – சிவபுரம் பகுதியில் மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் கிடைக்காமைக்கான காரணத்தையும் அதற்கு தடையாக இருப்பவர்களையும் அம்பலப்படுத்தி பல குறிப்புகள் எழுதப்பட்டன. அந்தக் குறிப்புகளும் தகவல்களும் தமிழ்த்தேசியவாதிகளையே தாக்கின. உண்மையான காரணமும் நிலையும் அதுதான். இதெல்லாம் தமிழ்த்தேசியத் தரப்பினருக்கு வெட்கத்தையும் அவமானத்தையும் அளித்தது. அவர்கள் பதிலளிக்க முடியாத கேள்விகளின் முன்னே நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

எனவே இதற்குப் பதிலளிக்கும் முகமாக அல்லது வழமையைப்போல தமக்கு எதிரான தரப்பினரைத் தாக்குவதற்காகப் பயன்படுத்தும் ஜே.வி.பி நியுஸ் என்ற இணையத்தளத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி, படுபொய்ப்பரப்புரையில் இறங்கியுள்ளனர் இவர்கள். 'ஜே.வி.பி நியுஸ்' என்ற இணையத்தளம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வெளிநாடுகளில் வசிக்கும் சசோதரர்களால் நடத்தப்படுவது. அவர்களால் நடத்தப்படும் 'லங்கா சிறி' இணையத்தளக் குழுமத்தினுடையது. அந்த இணையத்தளத்தைப் பயன்படுத்தி, சிவபுரத்தில் தமிழினியின் வீடு குடிசையாக இருந்ததற்குக் காரணம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் பாரபட்சமான நடவடிக்கையே காரணம் என்ற பொய்ப்பரப்புரையைக் கோயபல்ஸ் பாணியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

இப்படிப் பொய்ப்பரப்புரை செய்வதன் மூலம் தம்மை நோக்கி வந்த – வருகின்ற கண்டனங்களைத் திசை திருப்பி விடலாம். அத்துடன் தம்முடைய பொறுப்பையும் தட்டிக் கழித்து விடுவதற்கும் இது வாய்ப்பாகும் என்று கருதி சிவபுரம் பகுதி மாவீரர் – போராளி குடும்பங்களின் பிரதேசமாக இருந்த காரணத்தினாலேயே சந்திரகுமார் புறக்கணிப்பைச் செய்தார் என்ற கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளனர்.

ஆனால், இது முழுமையான பொய் என்பதையும் இந்தக் கட்டுக்கதையின் பின்னால் உள்ள உண்மைகளையும் மக்களும் அதிகாரிகளும் நன்றாக அறிவர். அதுமட்டுமல்ல இந்தக் குடியிருப்புக்கும் இது போன்ற இன்னும் சில குடியிருப்புகளுக்கும் முட்டுக்கட்டைகளாக இருப்பது இதே கும்பல்தான் என்பதும் மக்களுக்குத் தெரியும்.

சரி இந்த விடயங்களின் உண்மை நிலை என்ன?

உண்மை நிலை இதுதான்.

தமிழினி இறுதிப்போரில் சரணடைந்திருந்தபோது அதை விமர்சித்தவர்களில் அதிகமானவர்கள் தமிழ்த்தேசியம் கதைப்போரே. விடுதலைப்புலிகளின் மரபுப்படி தமிழினி ஏன் சயனைட் உட்கொள்ளவில்லை? எதற்காகப் படையினரிடம் சரணடைந்தார்? என்று பல கேள்விகளை அந்த நாட்களில் கேட்டார்கள். இது ஒரு மனிதாபிமானமற்ற கேள்வி என்பதைப் பற்றி இவர்கள் என்றும் சிந்தித்ததில்லை.

இது போதாதென்று பின்னாளில் அவர் சிறையில் இருந்தபோதோ, புனர்வாழ்வு பெற்று வீடுதிரும்பிய பின்னரோ, நோயுற்று உதவிகள் போதாமல் அவதிப்பட்டபோதோ அதைப் பாராமுகமாக இருந்தவர்களும் இவர்களே. ஆனால்இ தமிழினி மரணமாகி விட்டார் என்ற சேதி ஊடகங்களில் பரவலாக வெளிவரத் தொடங்க முண்டியடித்துக் கொண்டு அனுதாபம் தெரிவிக்க ஓடி வந்தார்கள். அப்படி வந்தவர்களில் பலருக்குத் தமிழினியின் வீடு எங்கே இருக்கிறது என்பதே தெரிந்திருக்கவில்லை.

இறுதியில் எப்படியோ பரந்தனில் உள்ள சிவபுரம் என்ற குடியிருப்புக்கு வந்தவர்கள் தமிழினியின் வீட்டைக்கண்டுபிடித்தார்கள். ஆனால், அது இருந்த நிலையையும் கிராமத்தின் நிலையையும் கண்டதும் அவர்களுக்கு ஆச்சரியமாகி விட்டது. தலைக்குனிவும் ஏற்பட்டது. ஆனாலும் தங்களுக்குள்ளே பெருகிய குற்றவுணர்ச்சியை மறைத்துக் கொண்டு வழமையைப்போல தங்களுடைய தமிழ்த்தேசியப் 'புலுடாக்கதைகளை' அவிழ்த்து விட்டு, அந்த மறைவில் தப்பித்துக்கொள்ள முயற்சித்தனர்.

பரந்தன் - சிவபுரம் குடியிருப்பின் கதையும் நிலையும்.

இந்தக்குடியிருப்பில் உள்ள காணிகள் 1970 களில் மத்திய வகுப்புத்திட்டத்தில் கீழ் 07 பேருக்கு வழங்கப்பட்டன. 'பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் வேலையற்ற மக்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்குவதற்காகவும்' என்ற அடிப்படையில் அரசாங்கத்தினால் தலா 10 ஏக்கர் வீதம் வழங்கப்பட்ட இந்தக் காணிகளைப் பெற்றவர்கள் இவற்றை அபிவிருத்தி செய்யவில்லை. அதற்கான காலச்சூழலும் அமையவில்லை. காணிகளைப் பெற்றவர்கள் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் செற்றிலாகி விட்டனர். இதனால், இந்தக் காணிகள் புறம்போக்கு நிலமாக இருந்தன. போரின் காரணமாக இடம்பெயர்ந்தவர்களும் காணியற்ற மக்களும் இந்தக் காணிகளில் குடியேறினார்கள். மீதமாக இருந்த காணிகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவைப்பெற்ற காணியற்ற மக்களுக்கு சில காணிகளை புலிகள் வழங்கினார்கள். ஆகவே இது ஒரு முற்றுமுழுதான மாவீரர் குடும்பங்களின் குடியிருப்பாகவோ போராளி குடும்பங்களின் குடியிருப்பாகவோ அமையவில்லை.

இறுதிப்போரின் பின்னர் இங்கேயிருந்த மக்கள் மீண்டும் வந்து இந்தப் பகுதிகளிலே குடியேறினார்கள் 240 குடும்பங்கள் மீள்குடியேற்றத்தின் பின்னர் இங்கே குடியேறியுள்ளன. அப்படி வந்து குடியேறிய மக்களுக்கு உடனடியாக தற்காலிக வீடுகள் உடனடி வேலைத்திட்டத்தின் மூலம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. குடிநீர் விநியோகமும் சில உதவிகளும் வழங்கப்பட்டன. அது மட்டுமல்ல, இவர்களுக்கான மின்சாரமும் வழங்கப்பட்டது. இதை விசேடமாகச் செய்து கொடுத்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார். 'நாட்டிலுள்ள அனைவருக்கும் மின்சாரம்' என்ற அரசாங்கத்தின் திட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்திஇ காணிக்கான உரிமம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மின்சாரத்தை நாம் வழங்குவோம் என்று முயற்சி எடுத்து மின்விநியோகம் செய்யப்பட்டது.

ஆனால்இ மீள்குடியேற்றத்தின் பின்னர் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிரந்தர வீட்டுத்திட்டத்தை இவர்கள் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதற்குக் காரணம் இந்தக் காணிகள் இவர்களுக்குரியவை அல்ல. அதற்கான ஆவணத்தை இவர்களுக்கு வழங்கப்பட முடியாதிருந்தது. ஏற்கனவே மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகளை உரியவர்களிடம் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்ளாமல் தற்போது குடியிருப்போருக்கு வழங்க முடியாது. எனவேஇ இந்தக் காணிகளை அதில் குடியிருக்கும் இந்த மக்களுக்கு வழங்க வேண்டுமாக இருந்தால் இந்தக் காணிகளை ஏற்கனவே பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து திரும்பப்பெறுவதற்கான ஏற்பாட்டைச் சட்டமூலமாகச் செய்யவேண்டும். ஆகவே அதற்கான முயற்சிகளில் முருகேசு சந்திரகுமார் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.


இதேவேளை இந்தக் கிராமத்தில் இருக்கும் தங்களை முன்பகுதியில் இருப்போர் பாரபட்சமாக நடத்துகிறார்கள் என்று சிவபுரம் குடியிருப்பாளர்கள் சந்திரகுமாரிடமும் பிரதேச செயலரிடமும் தெரிவித்தனர். இதனையடுத்துஇ இரண்டு கிராம அபிவிருத்திச் சங்கங்களாகத் தனித்தனியாகப் பிரித்து விடும் நடவடிக்கையை பிரதேச செயலரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மேற்கொண்டனர். இது தொடர்பாக பிரதேச செயலர் மக்களின் கருத்துகளைக் கேட்டறியும் நடவடிக்கையில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரின் மூலமாக ஈடுபட்டார்.

சிவபுரம் குடியிருப்பைப்போல கண்டாவளை மற்றும் கரைச்சிப் பிரதேசங்களில் மத்திய வகுப்புத்திட்டங்களில் மேலும் பல வறிய நிலைக்குடும்பங்கள் குடியிருக்கின்றன. ஆகவே இவர்கள் அனைவருடைய பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைக் காணும் முகமாக உரிய விவரங்கள் பிரதேச செயலகத்தின் மூலமாகத் திரட்டப்பட்டுஇ வடமாகாணக் காணி ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக மத்திய அரசின் காணி ஆணையாளர் நாயகத்திடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ஆட்சியுரிமைச் சட்டமூலம் என்ற சட்டத்திருத்தத்தை செய்வதற்கு அப்பொழுது நீதியமைச்சராக இருந்த ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் 07.08.2014 இல் கொண்டு வந்தார். இந்தச் சட்;டத்திருத்தத்துக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஆதரவை வழங்கினார். இதனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதிக்குழுக்களின் தலைவருமாக இருந்த மு. சந்திரகுமார் கடுமையாக எதிர்த்தார். அது மட்டுமல்ல, பாராளுமன்றத்துக்கு வெளியே பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களிடம் இந்தச் சட்டத்தினால் வறிய நிலையிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும் என்ற நிலையை எடுத்து விளக்கினார். இதனையடுத்து சட்டத்திருத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்தப் பிரச்சினை பாராளுமன்றத்தில் மட்டுமல்லஇ அதற்கு வெளியிலும் சூடாகப் பேசப்பட்டது. இதனால் வீரகேசரிப் பத்திரிகை இது தொடர்பாக அப்பொழுது சுமந்திரனை 10.08.2014 திகதியும் சந்திரகுமாரை 17.08.2014 திகதியும் அடுத்தடுத்துப் பேட்டி கண்டு இந்த நிலைமை தொடர்பாக எழுதியது. அதில் சுமந்திரன், முப்பதாண்டுகளாக நாட்டு நிலைமை சீராக இல்லாத காரணத்தினாலேயே இந்தக் காணிகளை உரியவர்கள் பராமரிக்க முடியாமற் போனதாகத் தெரிவித்திருந்தார். ஆகவே இப்பொழுது காணிகளின் உரித்தாளர்களுக்குக் கால எல்லை விதிக்கப்படக்கூடாது. அப்பொழுதுதான் அவர்கள் மீண்டும் வந்து தமக்கான காணிகளைப் பராமரிக்க முடியும் என்றார்.

இதை மறுத்த முருகேசு சந்திரகுமார், இந்தக் காணிகள் தொழில்வாய்ப்பை மக்களுக்கு வழங்குவதற்காகவும் பிரதேச அபிவிருத்திக்காகவும் அரசாங்கத்தினால் மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டவை. இவ்வாறான காணிகளில் இன்று 40000 க்கு மேற்பட்டவர்கள் வன்னி மாவட்டங்களில் குடியிருக்கிறார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் சிவபுரம் நாதன் திட்டம்இ உழவனூர், புன்னைநீராவி போன்ற இடங்களில் ஆயிரத்து முன்னூறுவரையான குடும்பங்கள்; இவ்வாறுள்ளன. இந்த ஆட்சியுரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் நிச்சயமாக இந்த மக்கள் நடுத்தெருவுக்கு வரவேண்டியிருக்கும். ஆகவே போர்க்காலப் பாதிப்புகள் உள்ளிட்ட அத்தனை நெருக்கடிகளையும் சந்தித்த மக்களை மீண்டும் ஒரு அவல நிலைக்குத் தள்ளக்கூடாது. அப்படியான ஒரு நிலையை யாரும் அனுமதிக்க வேண்டாம். எனவே இந்த மக்களுக்கு இந்தக் காணிகளை வழங்கக் கூடியவகையில் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து புதிய ஆட்சியின் பிறகு காணி ஆணையாளர் நாயகம் சீ.ஏ.ராஜபக்ஷ கடந்த 23.03.2015 அன்று கிளிநொச்சிக்கு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வுக்கு வந்திருந்தபோது சிவபுரம் பகுதிக்கு விஜயம் செய்யுமாறு சந்திரகுமாரினால் கேட்டுக்கொண்டதற்கிணங்கஇ அவர் அந்தப் பகுதிக்கு கண்டாவளைப் பிரதேச செயலர் த. முகுந்தனுடன் விஜயம் செய்தார். சிவபுரம் பகுதியில் குடியிருக்கும் மக்களையும் அவர்களுடைய நிலைமையையும் நேரில் காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர், ஏற்கனவே தனக்கு பிரதேச செயலாளர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஏற்கனவே வழங்கப்பட்டவர்களிடமிருந்து மீளப்பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் முகமான ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறிச்சென்றார்.

பின்னர் காணி ஆணையாளர் நாயகத்தின் அறிவித்தல் பிரதேச செயலருக்கு கிடைக்கப்பெற்றது. அதன்படி உரிய காணிகளை மீளப்பெறுவதற்கான பொது அறிவித்தலை விடுக்கப்பட்டது. இந்த அறிவித்தல் பகிரங்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது குடியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கு காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையின்படி அடுத்து வரும் மாதங்களில் காணிகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்படும். அதைத்தொடர்ந்து குடியிருப்பாளர்களுக்கான வீட்டுத்திட்டங்களும் பிரதேசத்துக்கான அபிவிருத்தித்திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான களப்பணிகளில் கண்டாவளைப் பிரதேச செயலரும் செயலகமும் மிகக் கடுமையான பணிகளை அர்ப்பணிப்போடு செய்திருக்கின்றன.

இவை எதைப்பற்றியும் தெரியாமல் தமது கற்பனைக்கெட்டியவரையில் பொறுப்பற்ற தனமாக மக்களுக்குப் பொய்யுரைத்துள்ளனர் இந்த அரசியப் பிரமுகர்கள். இது மக்களை விட்டு மிகத் தொலைவில் இவர்கள் இருப்பதற்கு சான்றாகும்.

ஆகவே தன்னுடைய இறப்பிற்கூடாக தமிழ்மக்களின் அகவிழியைத் திறக்க முற்பட்டிருக்கும் தமிழினிஇ தான் ஒரு போராளிதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். தான் துயருற்றாலும் தான் சார்ந்த மக்களுக்கு ஒளியாக அவர் மாறியிருக்கிறார்.

-சி. இலங்கேஸ்வரன்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக