அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

கச்சதீவும் புறம்போக்கு நிலமும்

கச்சநீதிமன்றம் சென்று உச்சத்தீவை மீட்பதாகச் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

என்ன உளறலாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? கேட்பது உளறல் என்றால் சொல்வதும் உளறல்தானே.

அருப்புக்கோட்டைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதா உச்சநீதிமன்றம் மூலம் கச்சத்தீவை மீட்பேன் என்று சொன்னார். இதை இப்போது சொல்வானேன்?



ஆட்சியில் இருந்தபோதே செய்திருக்க வேண்டியதுதானே. தான் சம்பந்தப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் எப்போது தாமதம் தேவையோ அப்போது தாமதப்படுத்தவோ, எப்போது விரைவான விசாரணை வேண்டுமோ அப்போது விரைவுபடுத்தவோ முடிந்த ஜெயலலிதாவால் உச்சநீதிமன்றத்தில் தான் தொடர்ந்த வழக்கை முடித்து கச்சத்தீவைத் திரும்பப் பெற்று ராமேஸ் வரம் மக்களுக்கு ஆளுக்கு அரை சதுர அடிநிலம் கொடுத்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை?

ராமேஸ்வரத்தில் இருந்து படகில் செல்லும் தொலைவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர். இந்திய மீன்பிடிப் படகுகள் இந்த வழியாகச் செல்கின்றன. ஆதியில் இது ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமானது. இலங்கையையும் இந்தியாவையும் பிரிட்டிஷ் அரசாங்கமே ஆண்டதால் அப்போது பிரச்சினை இல்லை. சுதந்திரத்திற்குப் பின் கச்சத்தீவு, தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்தாலும் இலங்கை மக்களும் வந்து செல்கிறார்கள். அங்கே உள்ள அந்தோணியார் கோயிலுக்கு இரு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் செல்வது வழக்கம்.

நடைபாதைக் கடைகளில் இருநாட்டுப் பொருட்களும் மூன்று நாட்களுக்கு விற்கப்படும். சுங்கக் கெடுபிடிகள் அதிகம் இருந்ததில்லை. இதெல்லாம் 1960-1975 காலகட்டம் வரை. சுய நலத்திற்காக யார் வீட்டுச் சொத்தையோ யாருக்கோ எடுத்துக் கொடுப்பதுபோல் அப்போ தைய சர்வாதிகாரி பிரதமரான இந்திராகாந்தி 1974-1976 வருட ஒப்பந்தங்கள் மூலம் கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்துவிட்டார். ஏன் அப்படிச் செய்தார் என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது. இதை, அப்போதே தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் எதிர்த்திருக்க வேண்டும். இந்திரா காந்திக்குப் பிறகுவந்த ஜனதா கட்சி ஆட்சியில் ஏதாவது செய்திருக்க முடியும். காலம் கடந்த பிறகு இப்போது கத்திப் பயனில்லை.

"நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல் பிரதமர் நம் நாட்டின் ஒரு பகுதியை இலங்கைக்கு அளித்துவிட்டார். அந்த ஒப்பந்தம் செல்லாது' என்று உச்சநீதிமன்றம் அறிவித்துவிட்டால் தீவு நம் வசம் என்று நினைக்கிறார் ஜெயலலிதா.

Possession is nine points of law என்ற மரபு இலங்கைக்கே சாதகமாகலாம். தும்பை விட்டு வாலைப் பிடிப்பதால் பயனில்லை. தன்னாலும் பிறராலும் செய்ய முடியாததைச் செய்வேன் என்று சொல்வது தேர்தல் பிரச்சார உத்தியாக இருக்கும். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராது.

இதற்கு பதில் தன் கட்சிக்காரர்கள் வளைத் துப் போட்டதாகச் சொல்லப் படும் புறம்போக்கு நிலங்களை மீட்டு அரசின் வசமாக்குவேன் என்று சொன்னால் அதில் நேர்மை இருக்கிறது என்று நம்பலாம். அது நடக்கக் கூடியதே. அது ஆட்சிக்கு நல்லது. ஆட்சிக்கு நல்லதெல்லாம் கட்சிக்கு நல்லதல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொண்டுள்ள ஜெயலலிதா அதைச் சொல்ல வில்லை. சொல்லமாட்டார். ஒரு சென்ட் புறம்போக்கு நிலம்கூட இவர் சம்பந்தப்பட்டவர்களுக்குச் செல்லவில்லை என்பதை இவர் உறுதியாகச் சொல்ல முடியுமானால், அப்படிச் சென்றதை மீட்டிருக்க முடியுமானால் இவர் கச்சத்தீவு பற்றிப் பேசலாம். முதலில் அதைச் செய்வாரா?

நக்கீரன்





Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக