அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 26 ஏப்ரல், 2017

11மாதக் குழந்தையை தூக்கிலிட்டு தானும் தற்கொலைசெய்துகொண்ட தந்தை!!: (வீடியோ)

தன் 11 மாதக் குழந்தையைக் கொன்ற ஒரு நபர் தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட காட்சியை , அவர் ஃபேஸ்புக் நேரலையில் ஒளிப்பரப்பிய சம்பவம் தாய்லாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



கடந்த திங்கள்கிழமையன்று, புக்கெட் தீவில் அரைவாசி கட்டி முடிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில், 21 வயதான இந்த நபர், தன் மனைவியுடன் தனக்கிருந்த கடும் பிரச்சனைகள் அடங்கிய உறவின் பின்னணியில், தன் சிறுவயது மகளை தூக்கிலிட்டு கொன்று பின்னர் தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த பயங்கரமான சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தனது அனுதாபங்களை அனுப்பியுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், இந்த நேரலை காணொளி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த மாதத்தில் ஒரு அமெரிக்க நபர் கொல்லப்பட்ட காட்சி ஃபேஸ்புக் வலைதளத்தில் பல மணி நேரங்கள் நீடித்த சம்பவத்துக்கு பிறகு தனது வலைதள பதிப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வர ஃபேஸ்புக் நிறுவனம் உறுதி பூண்டது.

மேற்கூறிய இந்த தாய்லாந்து நபர் பதிவு செய்த நேரலை கொலை மற்றும் தற்கொலை காட்சிகள் காணொளிகள் பகிரப்படும் வலைதளமான யு டியூப்பிலும் வெளியாகியுள்ளது.

ஆனால், இது குறித்து அந்நிறுவனத்தின் கவனத்துக்கு பிபிசி கொண்டு சென்றவுடன் அதனை யு டியூப் நிறுவனம் நீக்கிவிட்டது.

கவலையேற்படுத்தக்கூடிய இந்த காட்சியை கண்ட இறந்த தாய்லாந்து நபரான உட்டிசன் ஓங்டலாயின் உறவினர்கள் உடனடியாக போலீசாரிடம் இது குறித்து எச்சரித்துள்ளனர்.

ஆனால், சம்பவ இடத்துக்கு மிகவும் தாமதமாக அதிகாரிகள் வந்ததால் இறந்த தந்தை மற்றும் மகளை காப்பாற்ற இயலவில்லை.

”இது ஒரு பயங்கரமான சம்பவம். மேலும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு எங்களின் நெஞ்சார்ந்த அனுதாபங்கள். இது போன்ற காட்சிகள் மற்றும் பதிவுகளுக்கு ஃபேஸ்புக் வலைதளத்தில் இடமில்லை. தற்போது, இது நீக்கப்பட்டுள்ளது” என்று இந்த சம்பவம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று பிற்பகலில், இந்த காணொளிகளை நீக்குவது தொடர்பாக தாங்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தை கேட்டுக் கொண்டதாக தாய்லாந்தின் டிஜிட்டல் பொருளாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தால் பெரிதும் நிலைகுலைந்த இறந்த குழந்தையின் தாய் உள்ளிட்ட உறவினர்கள், இறந்த மகள் மற்றும் தந்தையின் உடல்களை செவ்வாய்க்கிழமையன்று மருத்துவமனையில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

அமெரிக்காவின் க்ளீவ்லாண்ட் பகுதியில் 74 வயதான நபரை தான் கொலை செய்தது குறித்த காணொளியை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு, அது குறித்து ஃபேஸ்புக் நேரலையில் ஒரு நபர் நேரலையாக பேசிக்கொண்டிருந்த சம்பவம் நடந்த 15 நாட்களுக்குள், இந்த அண்மைய அட்டூழிய நேரலை காட்சி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளதென ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான பணியாளர்களை கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், இவ்வாறான பதிவுகள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க பதிவுகள் குறித்து பரீசீலனை செய்யும் தனது குழு மூலம் முயற்சி செய்து வருகிறது.

மற்றவர்கள் இது குறித்து தங்களுக்கு எச்சரிக்கை செய்வதற்கு முன்பு, இது போன்ற காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்ய முடியாத வண்ணம் செயற்கை நுண்ணறிவு மூலம் அபாய எச்சரிக்கை கொடி ஒன்றை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.

ஆனால், ஒட்டுமொத்தமாக ஃபேஸ்புக் நேரலையை நீக்கிவிடுவது என்ற அம்சம் ஆலோசிக்கப்படவில்லை. டிவிட்டர் மற்றும் யு டியூப் ஆகிய வலைத்தளங்கள் நேரலை வசதிகளை அளிக்கும் போது, அதனை நிறுத்துவது ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு நஷ்டத்தையே உருவாக்கும்.

தனது வலைதளத்தில் செய்யப்படும் ஓவ்வொரு பதிவு மற்றும் நேரலை குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தால் கண்காணிக்க முடியாது என்பதால், மிகவும் பிரபலமாக உள்ள ஃபேஸ்புக் நேரலை தொடர்பாக இது போன்ற சீற்றங்கள் மற்றும் விமர்சங்கள் வெளிவந்தாலும், பேஸ்புக்கின் ஒவ்வொரு நேரலையையும், மனிதக் கண்களால் கண்காணிப்பது சாத்தியமில்லை.






Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக