அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கொரிய தீபகற்பம் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைவு

வடகொரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு தயார் நிலையில் இருப்பதற்காக கொரிய தீபகற்பம் நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைகின்றன.

வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்
வடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து 11–வது ஆண்டாக அணு ஆயுத சோதனையிலும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது.



உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், சர்வதேச உடன்படிக்கைகளையும் உதறித்தள்ளிவிட்டு, கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 4 முறை அணுகுண்டு சோதனையிலும் கடந்த ஆண்டு ஜனவரி 6–ந் தேதி அணுகுண்டை விட பல மடங்கு சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையிலும் அந்த நாடு ஈடுபட்டு, உலக அரங்கை அதிர வைத்தது.

கடந்த மாதம் அடுத்தடுத்து 4 ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உலக அரங்குக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த ஏவுகணைகள் ஜப்பான் கடலில் போய் விழுந்தன.

கடந்த 6–ந் தேதி மீண்டும் நடுத்தர ரக ஏவுகணை ஒன்றை கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள சின்போ நகரில் ஏவி சோதித்தது. இப்படி அந்த நாடு அடுக்கடுக்காக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மேலும் ஒரு அணுகுண்டு சோதனை
இந்த நிலையில், வடகொரியா மேலும் ஒரு அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி, அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

அது மட்டுமின்றி அமெரிக்காவை தாக்குவதற்கு ஏற்ற வகையில் ஒரு சக்தி வாய்ந்த அணுகுண்டினை தயாரிக்கும் முயற்சியில் வடகொரியா ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

டிரம்ப் அதிரடி
எனவே இனியும் பொறுத்துப்போவதில் பலன் இல்லை என்ற முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வந்துள்ளார். இதுபற்றி அவர் கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவிக்கையில், வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலை தனி நபராக கையாள்வதற்கு அமெரிக்கா தயாராகி வருகிறது என அவர் கூறினார்.

மேலும், வடகொரியாவுக்கு மிகவும் நெருக்கமான சீன அதிபர் ஜின்பிங்குடனும் வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி சமீபத்தில் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்த நிலையில் அதிரடியாக கொரிய தீபகற்பம் நோக்கி ‘தி கார்ல் வின்சன்’’ என்ற தாக்குதல் குழுவை நகரும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

விமானம் தாங்கி போர்க்கப்பல்
இந்த கார்ல் வின்சன் தாக்குதல் குழுவில் ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலும் பிற கப்பல்களும் அடங்கி உள்ளன. விமானம்தாங்கி போர்க்கப்பலை பொறுத்தமட்டில் அது நிமிட்ஜ் ரகத்தை சேர்ந்த யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த போர்க்கப்பல் தொகுதியில் ஏவுகணை போர்க்கப்பல் ஒன்றும், ஏவுகணை வழிநடத்தும் 2 நாசகார கப்பல்களும் அடங்கும்.

இது பற்றி யு.எஸ். பசிபிக் பிரிவு செய்தி தொடர்பாளர் டேவ் பென்ஹாம் கூறும்போது, ‘‘இந்த பிராந்தியத்தில் நம்பர்.1 அச்சுறுத்தல் என்றால் அது வடகொரியாதான். அதன் பொறுப்பற்றதும், நிலையற்ற தன்மையை உருவாக்குவதுமான ஏவுகணை சோதனைகளும், அணு ஆயுத திறன்களும்தான் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன’’ என்று குறிப்பிட்டார்.

இந்த போர்க்கப்பல் தொகுதி, ஆஸ்திரேலியா செல்ல வேண்டியது, இப்போது சிங்கப்பூர் வழியாக மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கொரிய தீபகற்ப பகுதிக்கு திருப்பி விடப்பட்டு விரைகின்றன. அங்கு தான் சமீபத்தில் தென்கொரியாவுடன் அவை கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டது நினைவுகூரத்தக்கது.

தயார் நிலை
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை பற்றி யு.எஸ். பசிபிக் பிரிவு குறிப்பிடும்போது, ‘‘அமெரிக்காவின் தி கார்ல் வின்சன் தாக்குதல் குழு கொரிய தீபகற்ப பகுதிக்கு விரைவது, அந்த பிராந்தியத்தில் எதையும் சந்திப்பதற்கு தயார் நிலையில் வைத்திருப்பதற்குத்தான்’’ என கூறியது.

எனவே சிரியா மீது அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அடுத்ததாக வடகொரியா மீதும் அமெரிக்கா அதிரடி தாக்குதலுக்கு தயாராகி வருவதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக