என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை.
நாளை விடிந்தால் கிறிஸ்மஸ். தங்கச்சியின் மகன் இறந்து ஒரு வருஷம் ஆகவில்லை என்பதால் இந்த வருஷம் கிறிஸ்மஸ் கொண்டாட முடியாது என அம்மா சொன்னது ஞாபகமிருக்கிறது.
நல்ல நாளும் பெருநாளுமாக சேர்ச்சுக்குப் புது உடுப்புப் போட்டுப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் புதுத் துணிமணியோடு வீட்டுக்குள் நுழைந்தேன்.
உடுப்பு பேக்கைக் கண்டால் அம்மா ஏசுவாரோ என்ற பயத்துடன் நுழைந்த எனக்கு இன்ப அதிர்ச்சி.
மகனின் ஞானஸ்தானத்திற்கு கடைசியாக வந்திருந்தனர் ஆரோக்கியம் தம்பதியினர்.
ஆறு வருஷமும் முடிந்துவிட்டது.
ஆறு வருஷம் பிரிந்திருந்த தம்பதி மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கின்றது.
அவர்களின் ஒரே பையன் எங்கள் முதலாமவனோடு விளையாடிக் கொண்டிருக்கின்றான். அம்மா - அப்பாவின் சண்டை குடும்ப பிளவில் முடிந்ததில் அப்பா முகத்தை ஆறு வருஷமாகக் காணாது துவண்டு போயிருந்த அவனது முகம் கொஞ்சம் களைகட்டி இருந்தது.
ஆரோக்கியம் தம்பதியினர் எனது மனைவியோடு சுவாரஷ்யமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
நான் துணிமணி பேக்கை டீப்போ மீது போட்டுவிட்டு களைப்பில் செட்டியில் சாய்ந்து கொண்டேன். கடந்தகால ஞாபகங்கள் விரிந்தன.
ஆறு வருஷத்திற்கு முன்னால் லூர்து அழகாயிருந்தாள். எனக்கிருந்த நண்பிகளில் குறிப்பிடக் கூடியவள் அவள்.
ஆரோக்கியம் லூர்து கல்யாணம் சிறப்பாகத்தான் நடந்தது. கலியாணத்துக்கு வந்திருந்தவர்கள் கூட அவளின் அழகைப் பார்த்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கூறியது ஞாபகம் வருகிறது.
ஆரோக்கியமும் சுமாரான அழகுள்ளவன். ஆரோக்கியத்துக்கு லூர்தை பேசிக்கொடுப்பதில் மினக்கெட்டவர்களில் நானும் ஒருவன்.
கல்யாணம் முடிந்து மகன் பிறக்கும்வரை அவர்கள் நன்றாகத்தான் வாழ்ந்தார்கள். ஆராக்கியம் மாதம் தவறினாலும் மஸ்கெலியாவிலுள்ள அவனது வீட்டிற்கு தன் அழகிய மனைவி லூர்தை அழைத்துச் செல்லத் தவறமாட்டான்.
கல்யாணம் முடித்த புதிதில் ஹனிமூன் போவதைப் போல அவர்கள் இருவரும் பயணம் போவதும் வருவதுமாக இருப்பதை அந்த ஊரே கண்ணிமைக்காமல் பார்க்கும்.
ஊர்க்கண் பட்டதோ யார் கண் பட்டதோ சந்தோசமாக வாழ்ந்த குடும்பம் துயரத்தில் மூழ்கியது....
அந்த நினைவுகள் எனக்கு நிழ்ற்படமாகத் தெரிகிறது.
நான் அப்போது பத்திரிகைக் கந்தோர் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தேன். நான் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில்தான் அவர்கள் வீடு இருந்தது.
கல்யாணம் முடித்து தனிக் குடித்தனம் பண்ணுவதற்காக கூலிக்கு சிறிய வீடொன்றை வாங்கி அதில் அவர்கள் வாழ்ந்தார்கள்.
எங்கள் வீட்டுக்குப் போகும் வழியில் உள்ள சிறுவர் பூங்காவிற்குக் கிழக்குப் பக்கத்தில் அந்த வீடு அமைந்திருந்தது.
அழகான சூழல் அதற்கு ஏற்மாதிரி அழகான குடும்பம் அது. லூர்து அழகை ரசிப்பவள். அந்த ரசனைக்கு அவர்களின் முற்றத்துப் பூந்தோட்டம் சாட்சியாயிருந்தது.
ஒரு வெள்ளிக்கிழமை நான் வேலை முடிந்து குழந்தை யேசு கோவிலுக்குப் போய்விட்டு வீட்டுக்குப் போகிறேன்.
வழமையாக லூர்து வீட்டு வெளிச்சம் நான் கடந்து போகின்ற குறுக்குப் பாதையை நிரப்பிக்கொண்டிருக்கும்.
சில நேரம் நான் திரும்பிப் பார்த்தால் அந்த ஒளி என் கண்ணுக்கடித்து கூசச் செய்யும்.
அன்று அந்த பல்ப் வெளிச்சம் இல்லை. திரும்பிப் பார்த்தேன் வீட்டுக்குள்ளும் வெளிச்சமில்லை. வீடு இருண்டு கிடந்தது.
நான் இரண்டடி பின்னே எடுத்துவைத்து அவர்களின் வீட்டை நோக்கிப் போக முற்படுகையில் லூர்து விசும்பும் சத்தம் சாடையாகக்கேட்டது.
எனக்குள் பலவாறான யோசனைகள். வீட்டில் சண்டையோ! போய்ப் பார்ப்போம் என்று உள்மனது சொன்னது. அப்படியே எது நடந்திருந்தாலும் அது அவர்கள் குடும்பப் பிரச்சினை. புருஷன் பெண்டாட்டி அடித்துப் கொள்வார்கள் நாளை அணைத்துக் கொள்வார்கள் என்று யோசித்துவிட்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். என்றாலும் என் மனதில் கவலைதான். விட்டுக்குள் நுழைந்தேன். மகனுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் என் அருமை மனைவி.
நான் வந்ததைக் கண்டுவிட்டு லூர்து வீட்டுப் பக்கம் போனீர்களா என்றாள், என் பக்கம் பார்த்து. அவள் முகமும் விடியவில்லை. ஏதோ எங்கள் வீட்டில் பிரச்சினை நடந்துவிட்டது போல் அவள் முகம் தோற்றமளித்தது.
அம்மா ஏதோ சொல்ல முற்பட்டார். ஏதோ லூர்து வீட்டு விவகாரமாய்தான் இருக்கும் என நினைத்தேன் நான்.
அதில்லை. இது வேறு பிரச்சினை. மூன்று நாளாக குப்பை லொறி வராமல் குசினிப் பக்கம் வாளியில் குப்பை நிறைந்திருந்ததைப் பற்றி அவர் கூற வெளிக்கிட்டார்.
நீங்கள் கவனமாப் பாடத்தைப் படிங்க நான் அப்பாவுக்கு டீ குடுத்துட்டு வாரன் என்று சொல்லிவிட்டு என் மனைவி குசினிப் பக்கம் போனாள்.
நானும் அவள் பின்னே தொடர்ந்தேன். மனைவி லூர்து வீட்டு கதையைத்தான் ஆரம்பித்தாள்.
ஆரோக்கியம் ஒரு சந்தேகப் பேர்வழி. ஆனால் அவன் பொண்டாட்டி மீதும் அவன் இந்தளவு சந்தேகம் கொண்டிருந்தான் என்பது என் மனைவியின் பேச்சில்தான் எனக்குப் புலப்பட்டது.
லூர்து கலகலவென்று எல்லோருடனும் பேசுவாள். ஆனால் மனசில் சூது வஞ்சகமில்லாதவள்.
ஆரோக்கியம் அவளைச் சந்தேகப்பட்டான் என்று என் மனைவி கூறியபோது எனக்கு அவன் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
நான் டீயைக் குடித்துக் கொண்டே எனது மனைவியின் கதைக்குக் காதை கொடுத்தேன்.
அன்று மத்தியானம் லூர்தின் மாமன் மகன், தூரத்துச் சொந்தக்காரன், அவர்கள் விட்டிற்கு வந்திருக்கிறான்.
அவன் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருப்பவன்.
லூர்தை விடவும் மூன்று நான்கு வயது இளமையானவன். அழகானவன்.
அந்த நேரம் பார்த்து எங்கோ ‘டெலிவரி’க்குப் போன வழியில் வீட்டுக்கு வந்தேன் என்று சொல்லிக் கொண்டு ஆரோக்கியம் வீட்டுக்கு வந்திருக்கிறான். அவன் வந்த நேரம் லூர்து மாமா மகனுக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்திருக்கிறாள்.
அவன் வந்து போவதை சுத்தமாக விரும்பாத ஆரோக்கியம், தற்செயலாக அவனை வீட்டில் கண்டதும் ஆத்திரமடைந்துவிட்டான்.
சில சூழ்நிலைகள் நல்ல மனிதர்களையும் தவறாகப் பார்க்க வைத்துவிடும். அங்கேயும் அதுதான் நடந்தது.
வீட்டிற்கு வந்த ஆரோக்கியம் எதுவும் பேசவில்லை. அப்படியே திரும்பிவிட்டான். ஆனால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்திருக்கிறான்.
¡மாவின் மகன் அங்கிருக்கவில்லை. போய்விட்டான்.
அவன் என்ன அடிக்கடி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருக்கிறான்? என்று அவன் கேட்க அவர்களுக்குள் வாய்த்தர்க்கம் உருவாகி அது சண்டையில் முடிந்தது.
ஏதேதோ முந்தின சம்பவங்கள் இந்தச் சண்டைக்குள் புகுந்து கொள்ள வீடு இரண்டாகிவிட்டது.
லூர்து புருஷனை அப்படி எதிர்பார்க்கவில்லை. அவன் தன்மீது இப்படியொரு தப்பான அபிப்பிராயத்தை வைத்துக்கொண்டுதான் அன்பானவன் போல் நடித்திருக்கிறான் என்பதை நினைக்க அவளுக்கு ஆத்திரத்தில் நெஞ்சு வெடிப்பது போலிருந்தது.
என்னென்னவோ நடந்துவிட்டது. அவன் அவளை விட்டுத் தூரப் போய்விட்டான். கனவுகள் சிதைந்து எதிர்காலம் சூன்யமாகத் தெரிந்தது அவளுக்கு. என் நினைவுகள் மீள என் மனைவி தேநீர்க் கோப்பையுடன் முன்னே நின்றாள்.
வாழ்க்கையை வெறும் நுகர்ச்சிகாக மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல ஜோடிகளை நான் பார்த்திருக்கிறேன்.
ஒரு ஆண் மகனோடு சேர்ந்து வாழ்கிற வாழ்க்கை பெண்களுக்கு துன்பச் சிறைதான் என்ற ‘கரிக்கோடுகள்’ கருத்தை வன்மையாக எதிர்க்கின்றவன் நான். அதைப்பற்றி கடுமையாக யோசித்தேன். மீண்டும் மனைவிதான் ஆரோக்கியம் – லூர்தும் சேர்ந்து கொண்ட கதையைச் சொன்னாள். அதுவும் சுவாரஷ்யமாகத்தான் இருந்தது.
ஆரோக்கியம் லூர்து மேரியை ஒதுக்கிவிட்டுப் போய் அவரது தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து வேலைக்குப் போய்க்கொண்டிருந்தார்.
ஆரோக்கியத்தின் தாய்தகப்பன் ஏழைகள் என்றாலும் மானஸ்தர்கள். அவர்களின் குடும்பங்களுக்குள் இவ்வாறான பிரச்சினைகள் வந்ததில்லை.
குடும்பத்தை துண்டாகப் பிரிந்து வருமளவிற்கு பிரச்சினைகளை வளர்த்துக் கொள்வதுமில்லை.
மனைவியையும் பிள்ளைகளையும் விட்டுப்பிரிந்து வந்த விட்டதை அவர்கள் அறிந்தால் அத பெரிய பிரச்சினையாகிவிடும் என்பதை அவன் அறிந்திருந்தான்.
இதனால் அதுபற்றி அவர்களுக்கு அவன் தெரிவிக்கவோ எவ்வகையிலும் காட்டிக்கொள்ளவோ இல்லை.
லூர்து கணவனைப் பிரிந்திருந்தாலும் அவனை அவள் மறந்துவிடவில்லை. அவனை அவள் மனசார நேசித்தவள் அவ்வப்போது அவனை வரவழைக்க எல்லா வகையிலும் முயற்சி செய்து கொண்டே இருந்தாள்.
ஆரோக்கியம் தனது உறவினர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த ஒரு வயதான தம்பதியோடு நல்ல நட்பு வைத்திருந்தான்.
இந்த வீட்டு வயதான மனிதர் உலகத்தைப்பற்றி நன்கறிந்தவர் படித்தவர்.
அவருடன் பேசிக் கொண்டிருப்பது அவரது அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ள ஆரோக்கியத்திற்கு விருப்பமாயிருந்தது.
ஓய்வாக இருக்கும் போது அந்த வீட்டில்தான் அவனைப் பார்க்க முடியும்.
அந்த வயதான தம்பதியினருடன் ஆரோக்கியத்தின் உறவினர்களும் நல்ல நட்பைக் கொண்டிருந்தனர்.
அவரிடம் பேசும் போதும் பழகும் போதும் அவர் தனது வாழ்க்கையின் அனுபவங்களையும் ஏற்ற இறக்கங்களையும் அவனுடன் பகிர்ந்து கொள்வார்.
அவருக்கும் அவரது மனைவிக்குமிடையில் அளவுகடந்த பாசம் இருந்ததை மட்டும் அவன் அறந்திருந்தான்.
ஆனால் அவர்களது வாழ்க்கையில் நடந்துமுடிந்தவை பற்றி அவன் அறிந்திருக்கவில்லை. அதனை அப்படி விரும்பவும் இல்லை.
ஒரு பெண் கணவனைப் பிரிந்து எவ்வளவு காலம்தான் வாழ முடியும்.
இன்றுள்ள சமுதாயத்தில் அதுவும் ஒரு கபூரிய பெண் தனது பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் எப்படி உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்?
இந்தக் கேள்விகள் லூர்துவின் மனதைக் குதறிக்கொண்டே இருந்தன. வாழ்க்கை என்பது அவளுக்குப் பொய்யாகத் தோன்றியது.
தான் தனது கணவனுக்குத் தவறிழைக்காமலே ஒரு களங்கத்தைச் சுமக்க நேரிட்டதை அவள் நினைத்து நெஞ்சுக்குள்ளேயே குமுறுவாள். எனினும் அவள் நம்பிக்கை இழக்கவில்லை. தனது கணவன் தன்னோடு சேர்ந்து வாழ ஒருநாள் வருவான் என்ற அசையாத நம்பிக்கை மட்டும் அவள் மனதில் உறுதியாக இருந்தது.
அதற்காக அவள் பொறுமையாகக் காத்திருந்தாள். அவள் எதிர்பார்ப்பு ஒருநாள் நிறைவேறியது.
அடுத்த வீட்டு வயதான தம்பதியினர் ஒரு பயணம் செய்வதற்காக ஆரோக்கியத்தைத் துணைக்கு அழைத்தனர்.
அவனும் அதற்கு ஒத்துக்கொண்டான். அவர்களின் மகள் தூரத்து ஊரில் வாழ்க்கைப்பட்டிருந்தாள். அங்கே செல்வதற்காகத்தான் ஆரோக்கியத்தை அழைத்திருந்தார்கள். அந்தக் குடும்பத்திலும் குடும்பப் பிரச்சினையொன்று முளைத்திருந்ததால் கணவன்- மனைவி விரிசலை சரி செய்யவே அவர்கள் புறப்பட்டிருந்தனர்.
அங்கே சென்று பிரச்சினையை புரிந்து கொண்டார்கள். அவர்களின் மகள் குழந்தையையும் தூக்கிக்கொண்ட வாழ்க்கையில் போடும் எதிர்நீச்சலை அவன் நேரிலேயே கண்டான்.
உடனே தனது மனைவி குழந்தை பற்றிய நினைவு அவனுக்குள் வந்தது. அவர்களும் இப்படித்தானே வாழ்வார்கள் என்று எண்ணிப் பார்த்த போது அவன் உடல் ஒரு முறை குலுங்கி அடங்கியது.
அது அழகிய கிராமம். அந்த வீடு சிறிய அழகிய தோட்டமொன்றின் நடுவே அமைந்திருந்தது.
அன்றுமாலை அந்த முதியவர் அவனோடு பேசினார். அவரது மகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பை அவர் குறிப்பிட்டார். அவர் தன் மருமகனைத் தவறாகப் பேசவில்லை. அதே நேரம் தன் மகள் பக்க நியாயங்களையும் அவர் எடுத்துக் கூறினார்.
ஆண்கள் பெண்களை எடுத்த எடுப்பிலேயே தவறாகப் பார்த்துவிடக் கூடாது. எந்த ஒரு சிறு சம்பவத்திற்கும் எதையும் ஆராயாமல் பெண்களைத் தவறாகப் புரிந்து கொள்வதும் கடுமையான தண்டனை வழங்குவதும் ஆண்கள் மிக இலேகாகச் செய்யும் காரியம்.
ஆனால் பெண்கள் அதனால் படும் கஷ்டம் எவ்வளவு கொடுமையானது! அவள் எத்தனை கேள்விகளுக்குப் பதில் செல்ல வேண்டியிருக்கிறது. அந்த முதியவர் தன் மகளின் கதையை இரண்டு நாள் தங்கியிருந்து பிரச்சினையைத் தீர்த்து வைத்துவிட்டு மூவரும் திரும்பி வந்தனர். சரி செய்யக் கூடிய காரியம் என்பதால்தானே சரி செய்ய முடிந்தது. நான் மட்டும் எனது பிரச்சினை தீர்க்கப்படவே முடியாது என்று நம்பிக் கொண்டிருந்தால் எப்படி? இந்தப் பிரச்சினையும் தனக்கக் கிடைத்த அனுபவமும் தன் கண்களைத் திறந்துவிட்ட தாகவே ஆரோக்கியம் நம்பினார். அவருக்குத் தன் மனைவியை உடனடியாகப் பார்க்க வேண்டும் போலிருந்தது. தீர்க்கமான ஒரு முடிவோடு மறு சனிக்கிழமையே லூர்தைத் தேடிச் சென்றார். லூர்துவுக்கு அவனைக் கண்டதில் சந்தோஷம். முகத்தில் பூரிப்பும் அழுகையுமாகப் பொங்கியது. உணர்ச்சிப் பிழம்புகளாக இருவருத் அணைத்துக் கொண்ட போது அங்கே கோபதாபங்கள் பஸ்பமாகிப் போயின.
என் மனைவி இந்தக் கதையைக் கூறி முடித்த போது எனக்கு நிம்மதியாக இருந்தது.
கதவில் காயவிடப்பட்டிருந்த டவலை உதறித் தோளில் போட்டுக்கொண்டு பாத்துரூமிற்குள் புகுந்தேன். அப்போதே என் மனதில், அவர்களை நத்தாருக்கு அழைக்க வேண்டும் என்ற தீர்மானம் எழுந்தது. அழைத்தால் என்ன என்று மனைவியிடம் சொன்னபோது என் தோளில் தன் கன்னத்தை ஒரு விநாடி ஒற்றிக் கொண்டாள் மனைவி.
லோரன்ஸ் செல்வநாயகம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக