அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 21 ஏப்ரல், 2010

யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளைகளை தடுக்க பாதுகாப்புத் தரப்பினர் முன்வரவேண்டும்

யாழ்ப்பாணம் சகஜ நிலைக்கு திரும்பியது தொடக்கம் அங்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோன்று சந்தைச் செயற்பாடுகளும் களைகட்டியுள்ளன. மக்கள் தமது பொ ருட்களை இலகுவாக விற்பனை செய்யவும் கொள்வனவு செய்யவும் கூடிய சூழல் நிலவுகின்றது. இந்நிலைமை மிகுந்த நிம்மதியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை.

எவ்வாறு இருந்த போதிலும், வடபகுதியில் களவுகள், கொள்ளைகள், போன்ற செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டிருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் விசனத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
பெரும்பாலும், தனிமையில் இருப்போரின் வீடுகளுக்குள் நுழையும் இனந்தெயாத கும்பல்கள் எந்தவிதமான ஈவிரக்கமின்றி வீடுகளில் தனித்திருப்போரை தாக்கியும் படுகொலை செய்து விட்டும் பொருட்களை சூறையாடிச் செல்கின்றனர்.

யுத்தம் நீடித்த சூழ்நிலையிலும் இவ்வாறான சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம் பெறவே செய்தன. பின்னர் பொலிஸார் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை அடுத்து அவை ஓரளவு கட்டுக்கடங்கின. எனினும் மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் தலைதூக்கியுள்ளதை காணமுடிகின்றது. இதனால் தனித்து இருப்போர் சதா அச்சத்திற்கு மத்தியிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் இடம் பெற்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை மேலும் இரட்டிப்பாக்கியுள்ளது.

சம்பவதினம் இரவு தனிமையில் வீட்டிலிருந்த இளம் யுவதியை கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்தி படுகாயப்படுத்திவிட்டு சுமார் 35 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தில் 23 வயதான பெண்ணே உயிரிழந்தவராவார்.

யுவதியின் பெற்றோர் அயலில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்றிருந்த சமயம் அங்கு வந்த கொள்ளையர்கள் சிலர் வீட்டில் தனிமையிலிருந்த யுவதியை கூரான ஆயுத மொன்றினால் தலையில் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் மயக்கமுற்று இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் வீட்டை ழுவதும் சல்லடைப் போட்டு தேடி அங்கிருந்த சுமார் 35 பவுண் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த பெற்றோர் படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த மகளை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியாமல் போனது. இந்தளவு தூரம் எந்தவிதமான ஈவிரக்கமின்றி படுபாதகச் செயலை செய்யும் அளவிற்கு கொள்ளையர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளமை மக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

இதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொக்குவில் பகுதியில் வயோதிபர் ஒருவரிடம் அறிமுகம் அற்ற இருவர் வந்து குடிதண்ணீர் கேட்ட போது குறித்த வயோதிபர் அவர்களுக்கு குடிநீரை வழங்க வந்த போது அவரை தாக்கி விரலை வெட்டி மோதிரத்தை அபகரித்து சென்ற சம்பவத்தை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

அதேபோன்று கோண்டாவில் பகுதியில் தங்கள் வீட்டை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளம் தம்பதியினரை கோடரியால் வெட்டிக் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையிட்டுச் சென்றனர். இவ்விரு சம்பவங்களும் அன்று யாழ்ப்பாணமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. அதனைத் தொடர்ந்து இரவு வேளைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

இதனால் ஓரளவு இவ்வாறான கொள்ளைகள், படுகொலைகள் என்பன சற்று தணிந்திருந்தது.
எனினும். மீண்டும் அவை தலைதூக்கியிருப்பதுடன் மக்கள் இரவு வேளைகளில் உறக்கமின்றி பொழுதை கழிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

அது மாத்திரமன்றி வயோதிபர்கள் கூட வீடுகளில் தனித்திருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளதாக வடபகுதி மக்கள் மிகுந்த விசனம் தெவிக்கின்றனர்.

ஒருபுறம் யுத்தத்திலிருந்தும் மீண்டு சற்று நிம்மதியாக வாழ மக்கள் முற்படுகையில் கொள்ளையர்களின் அட்டகாசம் மக்களை தொடர்ந்தும் அச்சத்திற்கும் பீதிக்கும் மத்தியில் வாழும் நிலைமையை தோற்றுவித்துள்ளது.

வடபகுதியைப் பொறுத்தமட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க தளர்வு போக்குகள் எதுவும் இல்லாத நிலைமையில் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் அதிகத்திருப்பது பாது காப்பிற்கு பெரும் சவாலாக உள்ளதையே எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

எனவே பொலிஸாரும் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்களும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் கொள்ளை, படுகொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை இனங் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்கவும், சாத்தியமான நடவடிக் கைககளில் ஈடுபடவேண்டும்.

இன்றேல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவதுடன் மீண்டும் ஒருவித அச்சத்திற்கும் பதற்றத்திற்கும் மத்தியிலேயே மக்கள் வாழ வேண்டிய நிலைமையும் ஏற்படுத்துவதாக இருக்கும்.

இதனை கருத்தில் கொண்டு வடபகுதியில் தொடரும் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட பாதுகாப்புத் தரப்பினர் துரித நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக