அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 24 அக்டோபர், 2012

தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்பியவன் யார்?

உலகத் தமிழ் இனமே எண்ணிப் பார்... நீ உறங்கினால் வரலாற்றில் யார் உன்னை மன்னிப்பார் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சிப் பாடல் ஒன்று உள்ளது.

தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்பியவன் யார்? என்று எவரேனும் கேட்கின்ற பட்சத்தில் நம் எல்லோரும் சட்டென்று நமக்குப் பிடித்த தலைவர்களை சொல்லி விடுவோம்.

இன்று நேற்றல்ல, தமிழர் அரசியல் வரலாறெங்கும் இக்கேள்வி இருந்தே வந்திருக்கிறது.

தந்தை வெல்வநாயகம், ஜி. ஜி. பொன்னம்பலம் ஆகியோர் ஏட்டிக்கு போட்டியாக அரசியலில் கொடி கட்டி பறந்து கொண்டு இருந்த கால கட்டத்தில் அதாவது 1950 களில்கூட இக்கேள்வி பெரிய பரபரப்பாக கேட்கப்பட்டு வந்திருக்கின்றது.

இலங்கை அரசியல் வரலாற்றில் இருந்து கம்யூனிஸ் கார்த்திகேசன் மாஸ்ரர் என்ற மகத்தான மனிதரை யாரும் பிரித்து பார்க்க முடியாது.

இவர் வட்டுக்கோட்டையை சேர்ந்தவர். வட புலத்து இடதுசாரி தலைவர்களில் மூத்தவர். யாழ். இந்துக் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்தவர்.

நகைச்சுவை கலந்த நறுக்கான பேச்சு,.. சிந்திக்க வைக்கும் சுவாரஷியமான விமர்சனம்.,.. இவை கார்த்திகேசன் மாஸ்ரரின் பிறவிக் குணங்கள்.

கார்த்திகேசன் மாஸ்ரர் வகுப்பறைக்கு வருகிறார் என்றால் மாணவர்களுக்கு ஒரு தனிப் பிடிப்பு. யாழ். இந்துக் கல்லூரியில் பணி புரிந்து வந்த கார்த்திகேசன் மாஸ்ரர் அரசியல் ரீதியான கேள்விகளை மாணவர்களிடம் எழுப்புவார். எவரும் எதிர்பார்த்து இருக்க முடியாத சுவாரஷியமான பதில்களை சொல்வார்.

தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்பியவன் யார்?.... கார்த்திகேசன் மாஸ்ரர் மாணவர்களிடம் கேட்டு வந்திருக்கின்ற கேள்விகளில் ஒன்று.

உடனே சில மாணவர்கள் தந்தை செல்வநாயகம் என்பார்கள். இன்னும் சிலர் பொன்னம்பலம் என்பார்கள். இன்னும் சில தலைவர்களின் பெயர்களும் வரும். மாணவர்களின் பதில்களை கேட்டு விட்டு இவர்கள் எவருமே இல்லை என்று அறுத்து உறுத்து கார்த்திகேசன் மாஸ்ரர்.

தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்பியவன் அனுராதபுரத்து சிங்களவன் என்பது இவரின் அதிரடிப் பதிலாக இருக்கும்.

மாணவர்கள் ஆச்சரியத்தில் புருவங்களை உயர்த்துவார்கள். கார்த்திகேசன் மாஸ்ரர் சொல்லப் போகின்ற சுவாரஷிய விளக்கத்துக்கு காத்திருப்பார்கள்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி போகும் புகையிரதங்களில் யாழ்ப்பாண மக்களும் பயணம் செய்த காலம். முந்துகின்றவர்கள் ஆசனங்களில் அமர்ந்தும், பிந்துகின்றவர்கள் நின்றபடியும் பயணிப்பார்கள்.முந்திக் கொள்பகள் நல்ல வாட்ட சாட்டமானவர்களாக இருப்பார்கள். இத்தடியர்கள் இருவர் இருக்க முடிந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு, காலை நீட்டி, சொகுசாக அமர்ந்த பயணம் செய்வார்கள். தந்தை செல்வா, பொன்னம்பலம் ஆகியோரின் கட்சிகளைச் சார்ந்தவர்களும் இப்படித்தான் அடுத்தவர்களுக்கு இடம் கொடுக்காமல் பண்ணையார் பாணியில் பயணம் செய்வார்கள்.

நிறை மாத கர்ப்ப்பிணித் தமிழ் பெண் நின்று கொண்டே பயணிப்பாள். கைக்குழந்தையோடு வருகின்ற தமிழ்த் தாய் பிடித்து நிற்க இடமின்றி, சோர்ந்து விழுந்தடி பயணிப்பாள். தள்ளாடும் முதியோர்கள்கூட நின்று கொண்டே பயணிப்பார்கள்.

ஆசனங்களில் அமர்ந்து செல்கின்ற ஆசாமிகளோ இடம் கொடுக்கவே கூடாது என்கிற கேடு கெட்ட சுய நலப் புத்தி காரணமாக கள்ளத் தூக்கம் போட்டு குறட்டையும் விட்டுக் கொண்டிருப்பார்கள்.

வட பகுதி கழிந்து அனுராதபுரத்தில் புகையிரதம் போய் நின்றதும் சிங்கள மக்கள் சாரி சாரியாக ஏறிக் கொள்வார்கள்.
இளநீர், பீடா, வடை போன்றவற்றை கூவி விற்பவர்களும் ஏறுவார்கள்.

அடுத்தவர்களின் இடத்தையும் பிடித்து வைத்துக்கொண்டு குறட்டை விட்டு தூங்குகின்ற ஆசாமிகளை கண்டமையுடன் சிங்களவர்களுக்கு கெட்ட கோபம் வந்து விடும்.

நகிடின்ட.... நகிடின்ட... எழும்பு எழும்பு என்று சொல்லி தட்டி எழுப்புவார்கள்.

அதன் பின்னர்தான் நிறைமாத கர்ப்பணி தமிழ் பெண்ணும், கைக்குழந்தையோடு வந்த தமிழ் தாயும், முதியோரும் இருக்கையில் இருந்து கொண்டு பயணிக்க முடியும்.

இவ்விளக்கத்தை கார்த்திகேசன் மாஸ்ரர் மாணவர்களுக்கு கூறுவார். தூங்குகின்ற தமிழனை தட்டி எழுப்பியவன் அனுராதபுரத்து சிங்களவன் என்று ஒரு போடு போடுவார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக