“ மஹிந்தவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அவரை பிணையில் விடுவித்து தாயாரின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளச் செய்வதற்கான தங்கள் சட்டவாதங்களை நீதிமன்றத்தில் நிகழ்த்திக்கொண்டிருந்தனர். முல்கிரிகல இடைத்தேர்தலின் போது இருவரை மரணிக்கச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ஹேவகே என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததையும், சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்
தான் தற்காப்புக்காகவே இவ்விதம் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக ஹேவகே தரப்பில் மேற்கொள்ளப்பட்ட வாதத்தை ஏற்று நீதிபதி ஹேவகேயை விடுதலை செய்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷ தனது டபிள்கப் வாகனத்தில் இருந்து இறங்கவே இல்லை என்று சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் சாட்சியமளித்தார். அடுத்து, மஹிந்தவுக்கு எதிராக வேண்டும் என்றே தாங்கள் பொய்ச் சாட்சியங்களை அளித்ததாக மூவர் நீதிமன்றத்தில் உண்மையை ஏற்றுக்கொண்டார்கள்.
இதனையடுத்து நீதிபதி மகாநாம திலகரட்ண மஹிந்தவை பிணையில் விடுவித்தார். திருமதி டீ.ஏ.ராஜபக்ஷ தமது சொந்தக் கிராமத்து மக்களின் பேரன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த காரணத்தினால், அம்மக்கள் அவருக்கு கதறி அழுதபடி இறுதி பிரியாவிடையும் அளித்தனர்.
விஜயகுமாரதுங்க
திருமதி சந்திரிகா குமாரதுங்கவின் கணவரான விஜயகுமாரதுங்க, மஹிந்தவின் ஒரு நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் பல தடவைகள் சிறைச்சாலைக்குச் சென்று மஹிந்தவைச் சந்தித்து, அவருக்கு தைரியமும் ஊட்டியிருக்கிறார். 9 பிள்ளைகளின் தாயாரான திருமதி ராஜபக்ஷவின் இறுதிக்கிரியையில் கலந்துகொண்ட விஜே குமாரதுங்க, அங்கு இரங்கல் உரையும் நிகழ்த்தினார்.
மஹிந்தவின் தாயார்
மஹிந்தவின் தாயார் தங்கள் பிள்ளைகள் அனைவரையும் அன்போடும், அவர்களிடையே ஒற்றுமை உணர்வை வலுவூட்டக்கூடிய வகையில் நடந்துகொண்ட, தாய்க்குலத்துக்கே முன்மாதிரியாக விளங்கிய ஒரு பெண்மணி என்று அவர் வேதனை கலந்த குரலில் பாராட்டும் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ கொழும்புக்கு வந்து, பொலிஸாரிடம் சரணடைந்ததை அடுத்து, அவர் வெலிக்கட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அப்போது, ஷிரந்தி அம்மையார் தனது இரண்டாவது பிள்ளையான நாமல் ராஜபக்ஷவை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார்.
இன்று, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறைத்தண்டனையை அனுபவிக்கும் தனக்கு, கட்டில், நாற்காலி, மின்விசிறி, தொலைக்காட்சி பெட்டி, எல்லாம் வேண்டும் என்று கேட்டு பிடிவாதம் பிடித்து, சிறை அதிகாரிகளுக்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி, இறுதியில் மற்ற சிறைக் கைதிகளுக்கு இல்லாத இந்த வசதிகளைப் பெற்றுக் கொண்ட பின்னரும் அரசாங்கத்தைச் சாடிக்கொண்டே இருக்கிறார்.
மஹிந்தவுக்கும் வேண்டுமானால், தன்னுடைய செல்வாக்கு வாய்ந்த நண்பர்களின் உதவியுடன் இந்த வசதிகளை அதிக கஷ்டமின்றி சிறையில் பெற்றிருக்கலாம். ஆனால், மக்கள் தொண்டனான மஹிந்த ராஜபக்ஷ, தான் கிராமத்து மண்வாசனை கொண்ட ஒரு மனிதன் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் சிறைச்சாலையில் எல்லோரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தும் முகமாகவும், தனக்கு சிறைக் கூண்டில் கொடுக்கப்பட்ட கிழிந்த பாயில் படுத்து, மற்ற கைதிகளைப் போன்று துன்பத்தை அனுபவித்தார்.
சிறையில் இருந்த கணவனுக்கு, திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ கர்ப்பிணியாக இருந்த போதிலும் தன் கையால் சமைத்த உணவை ரிபன் கரியரில் நாளாந்தம் ஒரு நண்பர் மூலம் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தார்.
அரசன் அன்று கேட்பான், தெய்வம் நின்று கேட்கும் என்பதற்கமைய, மஹிந்த ராஜபக்ஷ நிரபராதி என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர் சிறையில் இருந்து சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்று ஆளுநர் அல்ஹாஜ் அலவி மெளலானா தெரிவித்தார்.
உள்ளூர் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, பலஸ்தீன மக்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் கைப்பொம்மைகளான இஸ்ரேலைச் சேர்ந்த யெஹுதி தீவிரவாதிகள் இழைக்கும் கொடுமைகளைப் பார்த்து, மனம் வருந்தினார். அந்த அப்பாவி பலஸ்தீனிய மக்களை, தங்கள் தாயகத்தில் இருந்து விரட்டி அடித்து, அவர்களின் பூமியை இஸ்ரேலிய ஏகாதிபத்தியவாதிகள் கைப்பற்றி கொடுமை புரிகிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்காக சர்வதேச அரங்கில் குரல் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.
அதனால், 1980ஆம் ஆண்டில், பலஸ்தீனிய ஒருமைப்பாட்டின் அமைப்பின் இலங்கைக்குழுவின் தலைமைப் பொறுப்பை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டார். அன்றிலிருந்து இன்று வரை பலஸ்தீனிய மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
2010 செப்டெம்பர் 23ஆம் திகதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பலஸ்தீனியம் இன்று, ஒரு தனி நாடாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கின்றது. எனவே, நான் அடுத்த வருடம் இங்கு வந்து பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றும் போது, பலஸ்தீனியம் ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு அங்கத்துவ நாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை உலக நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விடுத்தார்.
உலகில் உள்ள 7 கோடி தமிழ் மக்களில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஒரு தமிழர்கூட இதுவரை தமிழில் உரையாற்றவில்லை. தமிழில் உரையற்றிய பெருமையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே பெற்றுள்ளார்.
இதே கருத்தை அன்றைய தினம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவும் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றிய ஒவ்வொரு தடவையும் பலஸ்தீனிய மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க தவறுவதே இல்லை.
இதனால்தான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான உறவு இன்று வலுப்பெற்று விளங்குகிறது. இது இலங்கைக்கு இஸ்லாமிய நாடுகளின் பொருளாதார உதவியை பெறுவதற்கும், ஒரு பெரும் வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது.
பிரதம மந்திரி மஹிந்த சிறுமியொருத்தியுடன் அன்புடன் அளவளாவுகின்றார்
இந்த சந்தர்ப்பத்தில், நாம் ஜனாதிபதியின் இந்த பலஸ்தீனிய மக்களுக்கான போராட்டத்தில் இன்றைய பாராளுமன்ற அங்கத்தவரும், முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களின் பங்களிப்பை மறந்து விட முடியாது.
இவ்விதம் சுமார் 30 ஆண்டு காலமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் அல்ஹாஜ் அஸ்வர் நெருங்கிய நல்லுறவை கொண்டிருந்தார். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது கூட, இவ்விருவருக்கிடையிலான நெருக்கத்திற்கும், நட்புக்கும் என்றுமே பாதிப்பு ஏற்படவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான தனது நட்புறவு பற்றி கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் இவ்வாறு தெரிவித்தார். “நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எத்தனையோ தடவைகள் ஒன்றாக வெளிநாடு சென்று உள்ளேன். ஜனாதிபதி அவர்கள் முஸ்லிம் நாடுகளுடன் ஏற்படுத்தியிருந்த நட்புறவு காரணமாகவே, இலங்கைக்கு இன்று, முஸ்லிம் நாடுகள் பல வழிகளில் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றன.
ஈரான், இலங்கைக்கு குறைந்த விலையில் மசகு எண்ணெயை விற்பனை செய்கின்றது, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை புனரமைப்பு செய்வதற்கு நிதியுதவி வழங்குகிறது. ஜனாதிபதி அவர்கள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் முஸ்லிம் உலகை ஆதரிக்கக்கூடிய முறையிலான கொள்கைகளை தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதை பார்த்தே முஸ்லிம் உலகம் ஜனாதிபதி அவர்களின் அதியுன்னத கொள்கைகளை அவதானித்து, இன்று அவர்மீது பெரும் மதிப்பு வைத்துள்ளது.
நான், ஒரு தடவை ஈரானின் ஆன்மீக தலைவரான அயத்துல்லாஹா அல் கமய்னி அவர்களை சந்தித்தபோது, அவர், எங்கள் ஜனாதிபதியை பாராட்டிப் பேசினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிங்களவராக இருந்தாலும் கூட, முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தோனேஷியா, மலேசியா போன்ற கிழக்கு ஆசியா நாடுகளை விட, அல்லல்படும் பலஸ்தீனிய மக்களுக்காக சுமார் 30 ஆண்டு காலத்திற்கும் கூடுதலாக ஏகாதிபத்தியவாத கொள்கைகளை கடைப்பிடிக்கும் வல்லரசுகளின் எதிர்ப்பையும், பொருட்படுத்தாமல் பகிரங்கமாக பலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவை நல்கி வருவது உண்மையிலேயே பாராட்டுக்குரிய ஒரு விடயம் என்று கூறினார்.
இன்னுமொரு தடவை நான் ஜனாதிபதி அவர்களுடன் துருக்கியின் ஸ்தான்புல் நகரில் உள்ள அருங்காட்சிசாலைக்கு சென்ற போது, ஜனாதிபதி அவர்கள் அந்த அருங் காட்சிசாலை யின் பணிப்பாளரை சந்தித்து உரையாடினார். அவரிடம் ஜனாதிபதி அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவரது மகள் பாத்திமா நாயகியும் அணிந்த தாக கூறப்படும் ஆடைகள் அந்த அருங்காட்சி சாலையில் வைக்கப்பட்டி ருந்ததை நாங்கள் பார்த்தோம்.
தனது வாழ் நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவரது மகள் பாத்திமா நாயகியும் எந்த நிற உடையை அணிந்தார் என்று ஜனாதிபதி அருங்காட்சி சாலைப் பணிப்பாளரிடம் கேட்டார். இஸ்லாமிய கல்வி மேதையான அந்த பணிப்பாளர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவரது மகள் பாத்திமா நாயகியும் கறுப்பு நிற ஆடையையே அணிந்தார்கள் என்று சொன்னார்.
அந்த பதிலைக் கேட்ட ஜனாதிபதி அவர்கள், சிரித்த முகத்துடன் என்னை திரும்பிப் பார்த்து, ஏன், இலங்கையில் மாத்திரம் முஸ்லிம்கள் கறுப்பு உடைக்கு அந்தளவுக்கு மதிப்பு அளிக்காமல், பச்சை நிறத்தை ஆதரிக்கிறார்கள் என்று கிண்டல் செய்தார். இனிமேலாவது நீங்கள் பச்சை நிறத்தை மறந்துவிட வேண்டும்” என்றும் ஜனாதிபதி எனது தோளைத் தட்டிக் கொண்டு சொன்னார்.” இவ்வாறு அல்ஹாஜ் அஸ்வர் புன்முறுவலுடன் தெரிவித்தார்.
1989ஆம் ஆண்டில், விகிதாசார முறையில் நடத்தப்பட்ட பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டார்.
இவ்விதம் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மஹிந்த காலப்போக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடனான தன்னுடைய இணைப்பை வலுப்படுத்திக் கொண்டார்.
இதனால், அவர் 1990இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டார். பின்னர், அவர் கட்சியை சீரமைக்கும் பணிகளையும் முன்னின்று மேற்கொள்ள ஆரம்பித்தார்........”

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக