அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 31 ஜனவரி, 2014

ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் சிக்கிய கதை - 49

விடுதலை புலிகளின் பெங்களூரூ ரகசிய மறைவிடம்: எப்படி நெருங்கியது சி.பி.ஐ. டீம்?

ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வில் தேடப்படும் நபராக டிக்சனின் பெயர் அறிவிக்கப்பட்டு, பத்திரிகைகளுக்கு அவரது போட்டோவை சி.பி.ஐ. கொடுத்து வெளியிட்டிருந்தது. அப்படியிருக்கையில், ட்ராபிக் போலீஸால் அழைத்துச் செல்லப்பட்ட விக்கி, ரகு ஆகிய இருவரும், போலீஸ் ஸ்டேஷனில் டிக்சனின் பெயரை ஏன் சொன்னார்கள்?



இது சாதாரண ட்ராபிக் கேஸ்தானே.. என்ன ஆகிவிட போகிறது என்று நினைத்திருக்கலாம். அல்லது, சென்னையில் டிக்சன் தேடப்படும் விபரம் பற்றி, கோவை கவுண்டர்பாளையத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தெரிந்திருக்காது என்ற அலட்சியம் காரணமாக இருக்கலாம். அதுவும் இல்லாவிட்டால், சி.பி.ஐ. கோவை வரை வந்துவிட்ட விபரம் தெரியாது இருந்திருக்கலாம்.

இவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில், டிக்சன் தங்கியிருந்த வீட்டை போலீஸ் கண்டுபிடித்து, டிக்சன் தற்கொலை செய்ததுடன் முடிந்து போகவில்லை விஷயம்.

விசாரணையின்போது விக்கியிடம் இருந்து மற்றொரு முக்கிய தகவலும் சி.பி.ஐ.க்கு கிடைத்தது.

தமிழகத்துக்கு வெளியே, திருச்சி சாந்தனின் ரகசிய மறைவிடத்தைப் பற்றிய ஒரு தகவலையும் விக்கி கூறினார். பெங்களூருவில் திருப்பச்சந்திரா என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் காயமடைந்த விடுதலைப்புலிகள் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விக்கியிடம் அந்த வீட்டின் முகவரி இல்லை என்றாலும், அந்த வீடு இருக்கும் இடம், செல்லும் வழி முதலியவற்றை விவரமாகக் கூறினார். அந்த வீட்டின் பொதுவான அம்சங்களையும் வர்ணித்தார்.

விக்கி கைது செய்யப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்தான், அந்த வீட்டுக்குச் சென்றிருந்தார். திருச்சி சாந்தனுக்காக ஒரு லட்சம் ரூபா பணத்தை கொண்டுபோய் கொடுக்கும் பணி அவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

சிவராசன் உட்பட தேடப்படும் நபர்களை தமிழகம் எங்கும் தேடியும் கிடைக்காத நிலையில், இத்தகைய தகவலைத்தான் சி.பி.ஐ. எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அதாவது, தமிழகத்துக்கு வெளியே, பிற மாநிலங்களில் உள்ள விடுதலைப் புலிகளின் மறைவிடங்கள்!

சிவராசன், சுபா, நேரு ஆகியோர், திருச்சி சாந்தன் குழுவைச் சேர்ந்த சுரேஷ் மாஸ்டரால் அழைத்துச் செல்லப்பட்டதாக சுதந்திர ராஜா மூலம் சி.பி.ஐ. அறிந்திருந்தது என்று முன்பே குறிப்பிட்டு இருந்தோம் அல்லவா?

இதனால், சிவராசனும், சுபாவும் சுரேஷ் மாஸ்டரால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைவிடம் ஒன்றில்தான் தங்கியிருக்க வேண்டும் என சி.பி.ஐ. நினைத்திருந்தது.

இப்போது, விக்கி கொடுத்த தகவலின்படி, காயமடைந்த விடுதலைப்புலிகள் பெங்களூருவில் ஒரு வீட்டில் தங்கியுள்ளனர். அதே நேரத்தில், இந்த சுரேஷ் மாஸ்டர்தான், காயமடைந்த விடுதலைப்புலிகளைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்தவர்.

இரண்டையும் இணைத்துப் பார்க்கும்போது ஏதோ ஒரு முடிச்சு அவிழ்வது போலத் தெரிந்தது.

தமிழகத்தில் சிவராசன் மற்றும் சுபாவின் போட்டோக்கள் வெளியிடப்பட்டு, அவர்களை வலைவீசி தேடிக்கொண்டு இருக்கும்போது, அவர்கள் பெங்களூரு செல்வதானால், அவர்களால் எப்படி தமிழகத்தில் இருந்து கர்நாடகா சென்றிருக்க முடியும்?
“திருச்சியில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினரிடம் ஏதாவது வாகனங்கள் இருந்தனவா?” என்ற கேள்வி விக்கியிடம் கேட்கப்பட்டது.

திருச்சி சாந்தன், நீலவண்ண பிரிமியர் பத்மினி பியட் காரை பயன்படுத்தி வருவதாகவும், அவரது குழுவிடம் பச்சை வண்ண மாருதி ஜிப்ஸி ஜீப்பும் இருப்பதாகவும் விக்கி தெரிவித்தார்.

இப்போது, பெங்களூருவில் திருப்பச்சந்திரா என்ற இடத்தில் விடுதலைப்புலிகள் ஒரு வீட்டில் தங்கியுள்ள விபரமும், புலிகளிடம் நீலவண்ண பிரிமியர் பத்மினி பியட் காரும், பச்சை வண்ண மாருதி ஜிப்ஸி ஜீப்பும் இருக்கும் விபரமும் தெரிந்துவிட்டது.

உடனே சி.பி.ஐ.யின் ஒரு டீம், பெங்களூரு புறப்பட்டு சென்றது.

இந்த விக்கி கூறும் தகவல்கள் எந்தளவுக்கு நிஜம் என தெரிந்துகொள்ள இரண்டாவது சி.பி.ஐ. டீம் நியமிக்கப்பட்டது.

விக்கியை விசாரித்தபோது அவர், திருச்சி அருகே முத்தரசநல்லூரில் ஒரு வீட்டையும், பண்ணையையும் வாங்குவதற்கு திருச்சி சாந்தன் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான ஒரு டாக்டருக்கு பணம் கொடுத்திருந்தார் என்று கூறியிருந்தார் என கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம். அந்த முத்தரசநல்லூர் பண்ணைதான், விடுதலைப் புலிகளின் ஸ்டோரேஜ் இடமாக இருந்தது எனவும் அவர் கூறியிருந்தார்.

அந்த தகவல் உண்மைதானா என அறிய கிளம்பிச் சென்றது, இந்த இரண்டாவது சி.பி.ஐ. டீம்.

இவர்கள், திருச்சி பொலீஸை தொடர்புகொண்டு, டாக்டர் ஒருவருக்கு சொந்தமான பண்ணை ஒன்று முத்தரசநல்லூரில் உள்ளதா என விசாரித்தனர். அப்படி ஒன்று இருப்பதாக தெரியவில்லை.

இந்த டாக்டர் நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும், விக்கி கூறியிருந்தார். முத்தரசநல்லூரில், நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான பண்ணை ஒன்று உள்ளதா என விசாரித்தார்கள்.

அப்படி ஒன்று இருந்தது.

நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்த நபர், ஒரு ஆயுர்வேத வைத்தியர் என்றும் தெரிந்தது. ஆகா.. இவரைத்தான் டாக்டர் என்று விக்கி குறிப்பிட்டார் என அந்த பண்ணையை சுற்றிவளைத்தது சி.பி.ஐ. டீம்.

பண்ணையை சோதனையிட்டபோது, விக்கி கூறிய தகவல் சரிதான் என்று தெரிந்தது. அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மருந்துகள், குண்டுகள், பேல் பேரிங்குகள், ஒயர்லெஸ் சாதனங்கள், வெடிபொருட்கள் ஆகியவை சிக்கின. வேதாரண்யம் வழியாக யாழ்ப்பாணத்துக்குக் கடத்துவதற்காக பொருட்களை சேமித்து வைக்கும் ஸ்டோரேஜ் இடம் அந்த பண்ணை என விக்கி கூறியிருந்தார் (கடந்த அத்தியாயம்).

விக்கி கொடுத்த இந்த தகவல் உண்மையாகி போனதில், அவர் விடுதலைப் புலிகளின் பெங்களூரு மறைவிடம் பற்றி கூறிய தகவலும் உண்மையாகதான் இருக்கும் என சி.பி.ஐ. ஊகித்துக் கொண்டது.

உடனே, ஏற்கனவே பெங்களூரு சென்றிருந்த சி.பி.ஐ. டீமுடன் இணைந்துகொள்ள மேலதிக டீம் ஒன்றையும் பெங்களூரு அனுப்டபி வைத்தார்கள்.

சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் இந்த டீம் ஜூலை 31-ம் திகதி மாலை பெங்களூருவை அடைந்தது.

விக்கி தெரிவித்த பாதை, மற்றும் அடையாளங்களை வைத்து, அந்த வீட்டை கண்டுபிடித்தார்கள். பெங்களூரூவின் சொகுசுக் குடியிருப்புப் பகுதியான இந்திரா நகரில் அந்த வீடு அமைந்திருந்தது.

சி.பி.ஐ. டீம், அந்த வீட்டை உடனடியாக அணுகவில்லை. வீட்டை கண்காணிக்க தொடங்கினார்கள்.

காரணம், ஏற்கனவே கோவை வீட்டை சுற்றிவளைத்ததில், டிக்சன் சயனைட்டு குப்பியை கடித்து தற்கொலை செய்திருந்தார். இந்த பெங்களூரூ வீட்டை நெருங்கி, அதில் எந்தவொரு சிறு தவறு ஏற்பட்டாலும் விடுதலைப்புலிகள் உஷாராகி, தப்பிச்செல்லவோ அல்லது சயனைடை மென்று உயிரிழக்கவோ வழி வகுத்துவிடும்.

இதனால், அந்த வீட்டை அணுகாமல், கண்காணிக்க தொடங்கினார்கள்.

அந்த வீட்டின் அனைத்துக் கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டிருந்தன. வெளியில் தெரியும்படியான எந்த நடமாட்டமும் இல்லை.

அந்த ஏரியாவில் உள்ள வீடுகளில், இந்த மூடப்பட்ட வீடு பற்றி ரகசியமாக விசாரித்தபோது, ஒரு முக்கிய துப்பு கிடைத்தது.

“அந்த வீட்டின்முன் பச்சை நிற மாருதி ஜீப்பும், நீலவண்ண பிரிமியர் பத்மினி பியட் காரும் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இன்று காணவில்லை” என்றார் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர்.

“இதுதான், நாம் தேடிவந்த மறைவிடம்” என உடனே உஷாரானது சி.பி.ஐ.

(தொடரும்)

விறுவிறுப்பு.காம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக