நாடு முன்னேற வறுமையினையும், அறியாமையினையும் போக்க வேண்டும். இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாகச் சொல்ல முடியாது என்பது வறிய மக்களுக்காக வாழ்ந்த மனித நேயமிக்க மகான் பெருந்தலைவர் காமராஜரின் கருத்தாகும். போர் நடைபெற்ற நாடுகளில் வறுமை என்பது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகக் கொள்ளப்படுகின்றது. அதிலும் ஒரு குறைவிருத்தி நாட்டில் தொடர்ச்சியாக முப்பது வருடம் யுத்தம் நடைபெற்றால் எவ்வாறு வறுமை அதிகரிக்காமல் இருக்க முடியும்? அதிலும் போர் நடைபெற்ற காலத்தில் மக்களுக்கான வாழ்வாதாரத்துக்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் மக்களின் வறுமையினை உடனடியாகக் குறைத்துவிட முடியாது. அந்த அடிப்படையில்தான் போர் ஓய்ந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 2009 மற்றும் 2010இல் வறுமையில் முதலிடத்தினை மட்டக்களப்பு மாவட்டம் கொண்டிருந்தது.
இக்காலப்பகுதியில் இலங்கையில் முழுமையான யுத்தம் ஓயும் நிலை காணப்பட்ட போதிலும் வன்னிப்பெருநிலப்பகுதியில் உள்ள மாவட்டங்களான மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநெச்சி மாவட்டத்துக்கான சரியான புள்ளிவிபரத்தினைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. இதன் காரணத்தினாலோ என்னவோ மட்டக்களப்பு முதலிடம் பெறும் நிலைக்கு இட்டுச் சென்றது.
ஆனால் 2012, -2013இல் பெறப்பட்ட புள்ளிவிபரத்தின்படி முல்லைத்தீவு மாவட்டம் 28.8 வீதத்தினைப் பெற்று முதலிடத்தினையும், மொனராகலை மாவட்டம் 20.8 வீதத்தினைப்பெற்று இரண்டாம் இடத்தினையும், மன்னார் மாவட்டம் 20.1 வீதத்தினைப்பெற்று மூன்றாம் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டம் 19.4 வீதத்தினைப்பெற்று நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையினைத் தணித்துள்ளோம் எனக் கூறுவார்களாயின் அது தவறான கருத்தாகும்.
இறுதிப் போர் ஆரம்பிக்கப்பட்டது மட்டக்களப்பு மாவட்டத்திலாகும் அதுபோல் போருக்கான முழுமையான ஓய்வு கொடுக்கப்பட்டு மக்களின் சாதாரண வாழ்க்கைக்கு இடமளிக்கப்பட்டதும் மட்டக்களப்பு மாவட்டமாகும். இதன் காரணத்தினால்தான் 2008இல் ஏற்பட்ட உலக பொருளாதார சிக்கலில் இலங்கை எதிர்நோக்கிய மக்களுக்கான அரிசி பற்றாக்குறையினை ஈடுசெய்வதற்கான பாரிய பங்களிப்பினை மட்டக்களப்பு மாவட்டம் வழங்கியது.
யாழ்.மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்தாலும் இன்னும் அவர்களின் நிலம் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையிலும் இம் மாவட்டத்தின் பங்களிப்பு பாரிய அளவில் அதிகரித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் 2009/2010இல் வறுமை நிலை 16.1 ஆக இருந்து 2012/2013இல் 8.3 ஆக குறைவடைந்துள்ளது.
இம் மாவட்டம் 48 வீத வறுமைத் தணிப்பாக உள்ளமை ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். வறுமைத் தணிப்பில் கொழும்பு மாவட்டம் முதலிடம் பெறுகின்ற போதும் அடுத்துள்ள மாவட்டமாக , புத்தள மாவட்டம் அமைந்துள்ளது. எனவே, இலங்கையில் வறுமைத் தனிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள மாவட்டம் யாழ். மாவட்டமாகும் இது ஒரு விசேட அம்சமாகும்.
இலங்கையில் வறுமை கணிப்பீட்டுப் புள்ளியானது மூன்று வருடத்துக்கு ஒரு முறை அரசாங்கத்தினால் எடுக்கப்படு கின்றது. அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை 2009/2010 இல் 20.3 வீதத்தினைப் பெற்று முதலிடத்தினை வகித்து 2012/2013ல் இவ் வீதம் 19.4 வீதத்தினைப் பெற்று 4.4 வீத வறுமைத் தணிப்பினை மேற்கொண்டுள்ளது.
2013இல் மேற்கொள்ளப்பட்ட 25 மாவட்டத்தின் புள்ளிவிபரத்துடன் 2010 புள்ளிவிபரத்தினை ஒப்பிட்டு நோக்குகின்ற போது இலங்கையில் வறுமையினைத் தனித்த 20 மாவட்டங்களில் ஆகக் குறைவான நிலையில் உள்ள மாவட்டமான இரத்தினபுரிக்கு அடுத்தபடியாக உள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளமை ஒரு துர்பாக்கிய நிலையாகும்.
கிழக்கு மாகாண வறுமை நிலை
2012/2013இல் எடுக்கப்பட்ட புள்ளிவிபரத்தின்படி கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களான மட்டக்களப்பில் வறுமை 20.3 வீதமும், அம்பாறையில் 11.8 வீதமும், திருகோணமலையில் இவ்வீதம் 11.7 வீதமாகக் காணப்பட்டது. இவ் வறுமை வீதம் மூன்று வருட காலத்தில் பின்னர் 2012/2013ல் மேற்கொள்ளப்பட்ட போது இவ்வீதம் மட்டக்களப்பின் வறுமை 19.4 வீதமும், அம்பாறையில் 5.4 வீதமும், திருகோணமலையில் இவ்வீதம் 9.0 வீதமாகக் காணப்படுகின்றது. எனவே கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடுதலான வறுமையினை கடந்த மூன்று வருடகாலத்தில் குறைத்த மாவட்டமாக அம்பாறை காணப்படுகின்றது. எனவே கிழக்கு மாகாணத்தின் வறுமை நிலையானது 2009/2010இல் 14.6இல் இருந்து 2012/2013இல் 11.27 ஆகக் குறைவடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண வறுமை நிலை
கடந்த யுத்தம் காரணமாக 2009/2010இல் வன்னிப் பெரு நிலப்பிரதேசத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கான புள்ளி விபரங்கள் எடுக்கப்படாத நிலையில் 2012/2013இல் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரத்தின்படி வடக்கின் வறுமை 14.66 விழுக்காட்டினைக் காட்டுகின்றது.இதில் முல்லைத் தீவில் 28.8 வீதத்தினையும் மன்னாரில் 20.1 வீதத்தினையும், கிளிநொச்சியில் 12.7 வீதத்தினையும், வவுனியாவில் 3.4 வீதத்தினையும் யாழ்ப்பாணத்தில் 8.3 வீதத்தினையும் காட்டுகின்றது. இதில் வவுனியா மாவட்டத்தில் கடந்த காலத்தினைவிட தற்போது வறுமை அதிகரித்துள்ளதனைக் காணலாம்.
வாழ்வாதாரத்தினை மீள
கட்டியமைத்துள்ள வடக்கு
கடந்த முற்பது வருட யுத்தம்காரணமாக தங்கள் உற்பத்திப் பொருட்களை பெருவாரியாக மேற்கொள்ளப்படாத நிலையிலும் இன்னும் இம் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாத நிலையிலும் வடக்கு மக்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 25 வீதத்துக்கு மேற்பட்ட பங்களிப்பினை வழங்கி வருகின்றார்கள்.
திராட்சைப்பழ உற்பத்தியும் மரக்கறி, சின்னவெங்காய உற்பத்தியும்
வடக்கின் பெயர் சொல்லும் உற்பத்திகளில் திராட்சைப்பழ உற்பத்தியும் ஒன்றாகும். இன்று நாட்டில் திராட்சைப்பழம் விலை குறைவாகக் கிடைக்கின்றது. என்றால் அதற்கு பிரதான காரணம் யாழ்.மாவட்ட உற்பத்தியாகும். இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் திராட்சைப்பழத்தின் விலை குறைவடைந்துள்ளமையினைக் காணலாம். அது போலவே தற்போது நாட்டில் சின்னவெங்காயத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதனைக் காணலாம். ஒரு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சின்னவெங்காயத்தின் உற்பத்தி காரணமாக ஒட்டு மொத்தமாக நாட்டில் இந்த சின்னவெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளமைக்கு இம் மாவட்டமே காரணமாகும். அதைப்போல் உருளைக்கிழங்கின் விலையும் நாட்டில் குறைவடைவதற்குக் காரணம், வடக்கின் உற்பத்தி இன்று நாட்டின் விலையினைத் தீர்மானிக்கின்ற முக்கிய காரணியாகக் கொள்ளப்படுகின்றது. இதனால் விவசாயிகள் பாரிய நட்டத்தினை எதிர்நோக்குகின்றார்கள் என்பதனையும் நாம் குறிப்பிட வேண்டும். இதனை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் கடந்த முப்பது வருடத்துக்கு முன்னர் எவ்வாறு யாழ். மக்கள் தங்கள் செயல்பாடுகளை மேற்கொண்டார்களோ அந்த நிலைக்கு தங்களை தயார்படுத்தியுள்ளார்கள் என்பதற்கான குறிகாட்டிகளே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மட்டக்களப்பின் அபிவிருத்தி
போருக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் கூடுதலான பாலங்கள் கட்டப்பட்டுள்ள மாவட்டம் மட்டக்களப்பாகும். அத்தோடு மாத்திமல்ல உட்கட்டுமான அபிவிருத்தி, மின்சார அபிவிருத்தி. நீர்பாசன அபிவிருத்தி,குடிநீர்திட்டம் என பாரிய முதலீட்டினைக் மேற்கொண்டு நீண்டகாலத் நோக்கின் அடிப்படையில் பாரிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருடாந்தம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஆறு ஆயிரம் மில்லியனுக்கு மேற்பட்ட நிதி செலவிடப்படுகின்றது.அத்தோடு இதற்கு மேலான நிதியும் செலவிடப்படுகின்றது.
இவை போக வாழ்வாதாரத்துக்கான பல திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான நிலையில் இம் மாவட்டத்தின் வறுமை தனிப்பு போதுமானதாக காணப்படாமை வருத்தம் தரும் விடயமாகும்.இதற்கு இலங்கையில் அதிகப்படியான சமுர்த்தி பயனாளிகளை இங்க கொண்டிருப்பதும் ஒரு காரணமாக அமையலாம்.
–ச.தியாகராசா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக