அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 27 செப்டம்பர், 2014

சபதத்துடன் தொடங்கிய ஜெயலலிதாவின் அரசியல் பயணம் ஜெயிலில் போய் முடிந்த கதை

இந்திய அரசியல் வரலாற்றில் முதல்வர் பதவியில் இருக்கும் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து பதவியை பறிகொடுத்த முதல் அரசியல்வாதி ஜெயலலிதான்.


தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெண் அதுவும் அரசியலில் காலடி எடுத்த காலம் முதல் முதல்வராக பதவியேற்கும் வரை இத்தனை பிரச்சனைகளை எதிர்கொண்டது இல்லை.. அப்படி எதிர்நீச்சல் போட்டு முதலமைச்சர் பதவியில் அமர்ந்த ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்துக்கு முடிவு கட்டிவிட்டது சொத்துக் குவிப்பு வழக்கின் இன்றைய தீர்ப்பு.
1982ஆம் ஆண்டில் இருந்து ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டார் ஜெயலலிதா.

1983ஆம் ஆண்டு அதிரடியாக அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலர் பதவியில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். நியமித்தார். அப்போதே அதிமுகவில் ஆர்.எம். வீரப்பன் தலைமையிலான குழு சலசலப்பை எழுப்பத் தொடங்கிவிட்டது.

ஆங்கிலப் புலமை கொண்டவர் என்பதால் 1984ஆம் ஆண்டு ஜெயலலிதாவை ராஜ்யசபா எம்.பி.யாக்கினார் எம்.ஜி.ஆர். அந்த ஆண்டு எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி மூலம் முதல்வராக முயற்சித்து சர்ச்சை அரசியலில் உச்சத்துக்கு சென்றார்

1986ஆம் ஆண்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அனைத்துலக எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாட்டில் வெள்ளி செங்கோலை எம்.ஜி.ஆருக்கு வழங்கி "அரசியல் வாரிசு"தானே என்பதை அடையாளப்படுத்திக் கொண்டார்.

1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடல்நலக் குறைவால் காலமானார். அப்போது எம்.ஜி.ஆர். உடலை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனத்தில் ஏற முயன்று அவரை கீழே பிடித்துத் தள்ள பெரும் சர்ச்சை வெடித்தது.

இதனைத் தொடர்ந்து அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது. எம்.ஜி.ஆர். துணைவியார் ஜானகி அம்மாள் தலைமையில் ஒரு அணியும் ஜெயலலிதா தலைமையில் ஒரு அணியுமாக அதிமுக (ஜெ), அதிமுக (ஜா) என்றானது. இதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

1989ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக (ஜெ) அணி 27 இடங்களைக் கைப்பற்றியது. போடிநாயக்கனூர் சட்டசபை தொகுதியில் இருந்து வெற்றி பெற்று முதல் முறையாக ஜெயலலிதா எம்.எல்.ஏவானார். அத்துடன் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்வானார். இதன் பின்னர் 1989 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச்செயலரானார் ஜெயலலிதா. பின்னர் இரட்டை இலை சின்னமும் மீட்கப்பட்டது.

அதே 1989ஆம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி தமிழக சட்டசபை வரலாறு காணாத கலவரத்தை எதிர்கொண்டது. அப்போதைய முதல்வர் கருணாநிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது அமளி ஏற்பட்டு பின்னர் மோதலாக வெடித்தது. மைக்குள் பறந்தன..

இந்த களேபரத்தின் போதுதான் திமுகவினர் தன்னை தாக்க முயன்றதாக தலைவரி கோலத்துடன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் ஜெயலலிதா. அத்துடன் அப்போது, நான் முதல்வராகத்தான் இந்த சட்டசபைக்கு திரும்புவேன்.. அதுவரை சபை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவது இல்லை என்று சபதம் எடுத்தார்.

1991ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது ராஜிவ் கொல்லப்பட அந்த அனுதாப அலையில் மொத்தம் 234 தொகுதிகளில் 225ஐ அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அள்ளியது. 40 லோக்சபா தொகுதிகளையும் அள்ள அதிமுகவும் ஜெயலலிதாவும் தமிழக அரசியலில் அசைக்க முடியாத இடத்துக்கு உயர்ந்தனர்.

1991ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்று மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தார். அந்த 1991-96ஆம் ஆண்டு கால ஆட்சியில் தமக்கு மாத வருமானம் ரூ1 ஒன்று போதும் என்று அறிவித்தார்

அப்படியானால் 5 ஆண்டுகாலத்தில் மொத்தம் அவர் ஊதியமாக பெற்றது ரூ60தான். ஆனால் இந்த ஆட்சிக் காலத்தில்தான் ரூ66 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்ற வழக்கு பதிவானது

கடந்த 18 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில்தான் இன்று ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ எதிர்நீச்சல்கள் போட்டு அரசியலில் முன்னேறிய 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை அனுபவிப்பதுடன் 10 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் அவரே தேடிக் கொண்டது.. அவரே தனது அரசியல் பயணத்துக்கு பெரும் முற்றுப்புள்ளியும் வைத்துக் கொண்டார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக