வியாழன், 7 ஏப்ரல், 2016

இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்-பகுதி-1

 புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி நாள்!! :

2009 மே 19, காலை. பனிப்படலம் நீங்குகிறது. இன்னமும் சூடாகவேயிருக்கும் யுத்தபூமி. வீரர் ஒருவர் குனிந்து குப்புற விழுந்து கிடந்த உடலை, முகத்தைப் பார்க்க வேண்டுமென்பதற்காகத் திருப்புகிறார்.

அது ஒரு சதுப்பு நிலம். உடல்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். எனவே தோள்களைச் சற்று இறுக்கமாகப் பிடித்துத்தான் திருப்ப வேண்டும்.



சதுப்பு நிலமாகவும் மணற்பாங்காகவும் இருந்த அப்பகுதி முழுவதும் உயிரற்ற உடல்கள்தாம்.

நூற்றுக்கணக்கான வீரர்கள் அங்கே ஒரு முகத்தைத் தேடித்தான் உடல்களைப் புரட்டியவண்ணம் இருந்தனர். தான் எந்த உடலைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று அந்த வீரருக்கும் தெரியும்.

ltte-pirapa புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி நாள்!! : (இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்-பகுதி-1) ltte pirapaஇருப்பினும் நூற்றுக்கணக்கான உடல்களிலிருந்து மாறுபட்ட அந்தப் பருத்த உடலைப் பார்க்கும்போது திடுக்கிட்டிருப்பார்.

அவரைத் திரும்பி வெறித்த அந்த முகம் – கொழுகொழு சற்றே விரிந்த உதடுகள் . . . நெற்றி வழியே புகுந்த துப்பாக்கிக் குண்டு மண்டையோட்டை உடைத்திருந்தது.

மற்றபடி முகத்திலோ உடலிலோ சேதம் எதுவும் இல்லை. கொல்லப்பட்டுச் சில மணிநேரங்களாய் அங்கேயே கிடந்திருக்கிறது விடுதலைப்புலிகள் இயக்கத்தை உருவாக்கியவரின் உடல்.

மாநிற முகத்திலிருந்து ரத்தமெல்லாம் வடிந்துவிட்டதைப் போன்று தோன்றியது. ஒரு திருஉருவாகயிருந்தவர். உயிரற்ற மெழுகுபொம்மை போல், லைஃப் இதழிலிருந்து பிய்த்தெடுக்கப்பட்ட ஒரு பக்கம்போல், விசித்திரம்தான், மண்ணில் கிடந்தார்.

புழுதி இருந்தபோதும் அவரது சீருடை எவ்விதச் சேதாரமுமில்லாமல் இருந்தது – தனது மரணத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ள கடைசி நிமிடத்தில் பதுங்குக்குழியிலிருந்து வெளியேறியதுபோல இருந்தது.

அவரது இடுப்பில் ஒரு துப்பாக்கியும் ரவைகள் அடங்கிய சிறிய கைப்பைகள் ஆறும் இருந்தன. மார்பில் அடையாள அட்டை. அதில் அவர் பெயருடன் எண் 001 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கை கழுவும் லோஷன் பாட்டில் ஒன்றும் அவரது கிட் பேக்கில் கிடந்தது. சிங்கப்பூரிலிருந்து தருவிக்கப்பட்ட திராட்சை வாசனை கொண்ட லோஷன்.

இந்தச் சம்மந்தமில்லாத தகவலை பின்னர் கொழும்பு பத்திரிகைகள் பிடித்துக்கொண்டு யோகிபோல வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட அவருக்கு களங்கம் ஏற்படுத்த பயன்படுத்திக்கொண்டன.

ஒரு ஆயுதப் போராட்டத்தை நடத்திய வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது விடுதலைப்புலிகள் இயக்கத்தை 1975இல் நிறுவியபோது நந்திக்கடல் கடலேரியின் ஓரத்தில் அவரது உயிரற்ற உடலைப் புரட்டிப்பார்த்த சிங்கள ராணுவ வீரர் பிறந்திருக்கக்கூட மாட்டார்.

இயக்கத்தை உருவாக்கியபோது பிரபாகரனுக்கு வயது இருபத்தொன்றுதான். அப்போதே அவர் துணிச்சலானவர் என்றும் கொலைசெய்யத் தயங்காதவர் என்றும் பெயரெடுத்திருந்தார்.

துரையப்பா

யாழ்ப்பாண மேயர் ஆல்ஃப்ரெட் துரையப்பா ஒரு இந்துக் கோயிலில் நுழைந்து தொழவிருந்த நேரம் பிரபாகரன் அங்கே வந்து ஒரே குண்டில் அவரைச் சுட்டுக் கொன்றார்.

சுற்றுலாப் பயணிகளுக்கான, பளபள கையேடுகள். இலங்கையை இதமான காற்று வீசும் கடற்கரைகள், உயர்ந்த வெள்ளை நிறப் புத்த வழிபாட்டுத் தலங்கள், பரந்து விரிந்த மலைகள், தேயிலைத் தோட்டங்கள், கனிவான மக்கள்கொண்ட நாடாகச் சிலாகிக்கும்.

ஆனால் ஆல்ஃப்ரெட் துரையப்பாவின் கொலைதான் இன, சாதி, மத வர்க்கப்போர்களைத் தொடர்ந்து சந்தித்து வந்திருக்கும் அத்தீவின் சரியான குறியீடு எனலாம்.

பிரபாகரனின் உடலைப் புரட்டிய அச்சிங்கள வீரர் வளர்ந்த கால கட்டத்தில் பல அரசியல்வாதிகள் விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றித் தொடர்ந்து ப தெரிவித்திருப்பார்கள்.

ராணுவமும் போலீசாரும் அவரை வலைவீசித் தேடிவந்தன. சதுரவடிவத் தாடை, சில நேரங்களில் புருவங்களைச் சுருக்கியும் வேறு சில நேரங்களில் புன்னகையுடனும் விடுதலைப்புலிகளின் சீருடையுடனும் காணப்பட்ட பிரபாகரனின் புகைப்படங்கள் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் தோன்றாத நாட்கள் குறைவாகத்தான் இருந்திருக்கும்.

விடுதலைப்புலிகளின் அட்டூழியங்கள் விரிவான செய்திகளாக வெளியாகும். அச்செய்திகளும் புகைப்படங்களும் இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியைப் பிரித்துத் தருமாறு தமிழ்த் தேசிய வாதிகள் கோருகின்றனர் என்பதை நினைவூட்டும்.

சிங்களர்கள் மனங்களில் தமிழர்களைப் பற்றிய அச்சத்தையும் வளர்க்கும்.




கெரில்லாப் படையினருக்கு பிரபாகரன் பிறப்பித்த ஆணைகள் அவரது கூச்ச சுபாவத்துக்கும் மெல்லிய குரலுக்கும் பொருத்தமற்றவை.

அவரது ஆணைப்படி கப்பல்கள் கவிழ்க்கப்பட்டிருக்கின்றன. நாட்டுத் தலைவர்கள், கைதிகள், புத்த பிக்குக்கான பயிற்சிபெற்றுவந்த சிங்களச் சிறுவர்கள் எனப் பல தரப்பினர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

சிறுவர்களும் பெண்களும் பயணித்த பேருந்துகள் குண்டுகளால் தகர்க்கப்பட்டிருக்கின்றன. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று பிரபாகரனின் படையினரும் ஆதரவாளர்களும் தொடர்ந்து முழங்கிவந்தனர்.

விடுதலைப்புலிகளின் அர்ப்பணிப்பும் வெறியும் பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் செயல்பாடுகளை ஒத்திருந்தன. இரு அமைப்புகளுமே விடுதலை என்னும் பெயரால் அடாத செயல்கள் பலவற்றைச் செய்தன.

ஆனால் அத்தகைய கொடுமைகளுக்குப் பின்னால் இருந்த ஒரு தேசிய இனத்தின் உணர்வுகளையும் உலகம் புரிந்துகொண்டது.

தங்கள் இயக்கத்திற்காகத் தங்கள் உயிரைத் தியாகம்செய்யத் தயார் என்பதை உலகிற்குச் சொல்லும் விதமாக விடுதலைப்புலிகள் எப்போதுமே சயனைட் குப்பிகளைத் தங்கள் கழுத்துகளில் தொங்கவிட்டுக்கொண்டிருப்பார்கள்.

பிரபாகரனை அடையாளம் கண்டவுடன் தனது மேலதிகாரிக்கு வயர்லெஸ் மூலம் தகவல் சொன்னார் அந்தச் சிங்கள வீரர். அந்த அதிகாரி 58ஆவது படைப்பிரிவுத் தலைவருக்குத் தகவலைச் சொன்னார்.

58ஆவது பிரிவுதான் இறுதிக்கட்டங்களில் கடலேரியின் ஓரமாக விடுதலைப்புலிகளுடன் மோதி அவர்களை அழித்தது.

உடனே உடலைப் பார்க்கப் புறப்பட்டார் பிரிகேடியர். அவரது ஜீப் சென்ற வழிநெடுகிலும் கிழிந்துபோன நிலையில் பிளாஸ்டிக் கூரைகளாலான கூடாரங்கள், உயிரற்ற உடல்கள், எரிக்கப்பட்ட வாகனங்கள்.

பிப்ரவரி மாதத்திலிருந்து ஏறத்தாழ 3,30,000 மக்கள் அந்தக் கூடார நகரத்தில்தான் வாழ்ந்துவந்தனர்.

எஞ்சியிருந்த விடுதலைப்புலிகளும் அங்கே நிலைகொண்டிருந்ததால், பொதுமக்கள் கொல்லப்படுவது சற்றும் கவலைப்படாமல், அக்கூடார நகர்மீது குண்டுமாரி பொழிந்தது இலங்கை ராணுவம்.

விடுதலைப்புலிகள் மேலும் மேலும் பலவீனமடைய, அவர்களுக்கும் ராணுவத்திற்குமிடையே இருந்த கடலேரியைக் கடந்து, பொதுமக்கள் கூட்டங் கூட்டமாகவோ சிறு குழுக்களாகவோ அரசப்படைப் பகுதிக்குத் தப்பினர்.

இறந்துபோனவர்களை முறையாகப் புதைக்காமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்றனர். காயமுற்றவர்களையும் வயதானவர்களையும் சிறு குழந்தைகளையும் சுமந்துதான் அவர்கள் தப்பிச் சென்றனர்.

இடையறாத க்ரெனேட் மற்றும் துப்பாக்கிக் குண்டுத் தாக்குதலுக்கிடையேதான் அவர்கள் தப்பவேண்டியிருந்தது. அவ்வாறு ஓடும்போது, ராணுவத்தின் குண்டுகளால் தாக்கப்பட்டவர்களையோ அல்லது நடக்க முடியாமல் வழியிலேயே விழுந்தவர்களையோ காப்பாற்றுவதற்கு அவர்களுக்குத் திராணியில்லை.

மேலே நகர்ந்தார்கள். அவ்வாறு தப்பாமல் பின்தங்கியவர்கள், குழிகளில் பதுங்கியவர்கள் எல்லோரும் இலங்கை ராணுவத்தின் கரங்களால் மடிந்தனர்.

போர்க்களம் இப்போது அமைதியாக இருந்தது.

காயமடைந்தவர்களின், இறந்துகொண்டிருந்தவர்களின் முனகலும் ஓய்ந்திருந்தது. ஜீப்பிலிருந்து இறங்கிய பிரிகேடியர், சில நூறு மீட்டர்கள் நீர்த் தேங்கியிருந்த நிலத்தின் ஊடாக நடந்துசென்றுதான் உடல் வீழ்ந்துகிடந்த இடத்தை அடைய முடிந்தது.

அப்போதும் அவரைச் சுற்றி மெய்க்காவலர்கள். வீழ்ந்திருந்த புலி யாராவது சுட்டுவிட்டால்? பிரபாகரனின் முகத்தை நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு, அவர் அணிந்திருந்த சிறப்பு அடையாளச் சின்னங்கள், கைத்துப்பாக்கி, கிட்பேக்கில் இருந்தவை ஆகிய எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அடையாள அட்டையையும் சரிபார்த்த பிறகு தன்னைச் சுற்றி நின்றவர்களிடம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய உடல் தான் எனத் தெரிவித்தார்.

பிறகு ரேடியோ தொலைபேசியை வரவழைத்துக் கொழும்பிலிருந்த பாதுகாப்புத் துறையின் தலைமையகத்திலிருந்த மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்குச் செய்தியைச் சொன்னார்.

தொடரும்….

-தொகுப்பு கி.பாஸ்கரன்- சுவிஸ்-

(மூலம். இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளராகப் பணியாற்றிய கார்டன் வைஸ் எழுதிய “இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்” எனும் நூலில் இருந்து..)

கார்டன் வைஸ் (Gordon Weiss)

யுத்த காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளான 2007இலிருந்து 2009வரை இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளராகப் பணியாற்றியவர் கார்டன் வைஸ்.

யுத்தத்தின்போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் குற்றசாட்டுகளுக்கான ஆதாரங்களை செயற்கைக்கோள் புகைப்படங்கள் வாயிலாகவும் இதர வழிமுறைகள் வாயிலாகவும் திரட்டிய நான்கு முக்கிய நபர்களில் ஒருவராகவும் வைஸ் இருந்தார்.

சாதாரண மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதை உலகின் முன் அம்பலபடுத்திய பின், வைஸ் இலங்கை பத்திரிகைகளாலும் உயர் அரசாங்கப் பிரதிநிதிகளாலும் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டார்.

அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சிட்னி பல்கலைக்கழகத்தின் அமைதி மற்றும் முரண்பாட்டு ஆய்வு மையத்தின் பகுதி நேர அறிவுரைஞராக இருக்கும் வைஸ், தற்போது ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறையில் பணிபுரிகிறார்.

வைஸ் மெல்போர்னில் உள்ள டீக்கின் பல்கலைகழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் (பயங்கரவாதம் மற்றும் மானுட சட்டங்களில் சிறப்பு தேர்ச்சியுடன்) எம்.ஏ. பட்டம் பெற்றவர்.

போஸ்னியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், டார்பூர், காங்கோ, வடக்கு உகாண்டா, காசா, ஹைடி போன்ற உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் வைஸ் பணி புரிந்திருக்கிறார்.

ரேடியோ பிரான்ஸ் சர்வதேசம், ஏபிசி, ரேடியோ ஆஸ்திரேலியா, தி ஆஸ்திரேலியன் மற்றும் சலோன்.காம் போன்ற பல இடங்களில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அதன்பின் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் உடன்பாடுக்கான அமைப்பில் பணியாற்றினார். பிறகு ஐக்கிய நாடுகள் சபையில் சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக பணியாற்றியிருக்கிறார்.

“குட்டைகளிலிருந்தும், மணற்குன்றுகளிலிருந்து இழுத்துவரப்பட்ட விடுதலைப்புலிகளின் உடல்கள்!! (இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்- பாகம் -2)

“குட்டைகளிலிருந்தும், மணற்குன்றுகளிலிருந்து இழுத்துவரப்பட்ட விடுதலைப்புலிகளின் உடல்கள்!! (இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்- பாகம் -3)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல