அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 9 மே, 2016

விண்டோஸ் 10 வண்ண ஓடுகளை நீக்க முடியுமா?

பலர் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிய நிலையில், தங்கள் விருப்பப்படி சிலவற்றை மாற்ற முடியுமா என்று கேட்டு கடிதங்களை அனுப்புகின்றனர். அவற்றில் ஒன்று, விண்டோஸ் 10 தன் ஸ்டார்ட் மெனுவில் காட்டும் புரோகிராம்களுக்கான வண்ண ஓடுகள். ஆனால், பலர் இந்த ஓடுகள் வரிசை தங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று கூறுகின்றனர். எப்போதும் தகவல்களைத் தந்து கொண்டிருக்கும் (சீதோஷ்ண நிலை, செய்தி தலைப்புகள் போன்றவை) டைல்கள் இவர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.



சரி, இந்த டைல்களை வேண்டாம் என விரும்புவோருக்கு எப்படி அதற்கான வழிகளைக் காட்டலாம் என்று தேடியபோது, இவற்றை நீக்கிவிட்டால், ஸ்டார்ட் மெனுவில் நாமாகக் கட்டுப்படுத்தும் அல்லது செயல்படுத்தும் வேலைகள் எதுவும் இருக்காதே. இந்த பயனுள்ள டைல்களை இழக்க வேண்டுமா என்று ஒரு பக்கம் மனது கேட்டுக் கொண்டே இருக்கிறது. இருப்பினும், இது குறித்த இரு பக்க சிந்தனைகளைக் காணலாம்.

நீக்குவது மிக எளிது. முதலில் இந்த டைல்ஸ்களை நீக்குவது குறித்து காணலாம். ஸ்டார்ட் மெனு திறந்து, டைல் ஒன்றின் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Unpin from Start என்பதில் கிளிக் செய்திடலாம். ஸ்டார்ட் மெனுவின் வலது பக்கம் உள்ள அனைத்து டைல்ஸ்களுக்கும் இதனை மேற்கொள்ளவும். அனைத்தும் நீக்கப்படும் வரை இந்த செயல்பாட்டினை மேற்கொள்ளவும். அனைத்தும் நீக்கப்பட்டவுடன், டெஸ்க் டாப்பில் இன்னொரு இடத்தில் கிளிக் செய்து ஸ்டார்ட் மெனுவினை மூடவும். பின்னர், மீண்டும் ஸ்டார்ட் மெனுவினைத் திறக்கவும். அருகில் உள்ள படத்தில் உள்ளபடி திரை காட்சி அளிக்கும். இது விண்டோஸ் 95/98 சிஸ்டம் ஸ்டார்ட் மெனு போல காட்சி அளிப்பதைக் காணலாம். இந்தத் திரையின் வண்ணத்தினை மாற்றவும் செய்திடலாம். ஸ்டார்ட் மெனு திரையில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் காண்டெக்ஸ்ட் மெனுவில், Personalize என்பதைத் தேர்ந்தெடுத்து வண்ணத்தினை மாற்றலாம்.

டைல்ஸ் இல்லாத ஸ்டார்ட் மெனு பார்ப்பதற்கு மிக எளிமையாகத் திரையின் ஓரத்தில் உள்ளது. ஆனால், இதன் இடது பக்கத்தினை மேலும் மாற்றி அமைக்க முடியாது. ஏற்கனவே இருந்தவற்றில் Most used என்ற பிரிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அது இப்போது கிடைப்பதில்லை. இருப்பினும், நான் பயன்படுத்தும் அனைத்து புரோகிராம்களும், ஸ்டார்ட் மெனுவில் இடம் பெற்றுள்ளன. மேலும், All apps என்ற பிரிவின் மூலம் நமக்குத் தேவையானதை, முன்பு விண்டோஸ் 7 சிஸ்டம் ஸ்டார்ட் மெனுவில் பெற்றது போல, பெற்றுக் கொள்ளலாம்.

மீண்டும் டைல்களை அமைக்க : அனைத்து டைல்களையும் நீக்கிய பின்னர், அவை மீண்டும் தேவைப்பட்டால், அவற்றை எளிதாக மீட்டுக் கொண்டு வரலாம். All Apps பிரிவு சென்று, நமக்குத் தேவையான அப்ளிகேஷனில், ரைட் கிளிக் செய்து, Pin to Start என்பதில் கிளிக் செய்தால், டைல் கிடைக்கும். நாம் விரும்பும் புரோகிராம்களை ஒவ்வொன்றாக எடுத்து இது போல இணைக்கலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக