மாமி! இப்பொழுது உங்கள் மகன் ஆஸ்பத்திரியில்!
பூமிக்கோர் பாரமெனப் பிறந்தாரோ? இவர்...
சேமித்த தெல்லாம் சோகங்கள்! கடன்கள்தான்!
“தாயை அழவைத்தோர் நிம்மதியாய் வாழ்ந்ததில்லை!”
நோய்நொடி நொம்பலங்கள்! நூறுவகைப் பிரச்சினைகள்!
வாய்விட்டுக் கதறுகின்றார்! இவர் மன நோயாளியாகி விட்டார்!
இந்தச்
சேய்நினைப்பு உங்களுக்குத் துளியேனும் வரவேண்டாம்!
இவர் செய்த தப்புக்கு இறைவன் தந்த தண்டனைதான்!
எவரைத்தான் விட்டு வைத்தார்? இதயங்களைச் சுட்டு வை(த்)தார்!
நல்லவராய் எல்லோரும்! ‘நடைப்பிணமாய்’ இவர் மட்டும்!
செல்லாத காசாகித் தெருவெல்லாஞ் சீரழிந்தார்!
பொல்லாத பழிபேச்சு! படுபாவி யாய்க் கெட்டார்!
இல்லாத காரணத்தால் இவர்பாவி யாகி விட்டார்!
வெறுங்கையால் முழம்போட்டார்! வேறென்ன இவர் செய்தார்?
“தருங்கையால்” வாழுகின்றார்! தனை நினைந்து வாடுகின்றார்!
ஒதுக்கி வைத்த காரணத்தால் ஒதுங்கி இவர் வாழுகின்றார்!
எதுக்கிங்கே இவர் பிறந்தார்? எதனாலே இவர் சிறந்தார்?
உடன்பிறப்பு எல்லாமே உயர் கல்வி கற்பதற்காய்
கடன் கேட்டுத் தெருத்தெருவாய்க் கால்தேய நடந்தவர்தான்!
முடமான மனசோடு... இன்று மூலையிலே முடங்கி விட்டார்!
திடமான உளத்துக்குத் “தீ” வைத்தோர் யார் மாமி?
இப்போது எல்லோரும் இமயத்தின் உயரத்தில்!
தப்பான மகனாகி.. “என் புருஷன்” துயரத்தில்!
எப்போதும் எனக்கிவர்தான்! “புல்” என்றொதுக்கி விடமாட்டேன்!
மாமி!
அப்பாவி என் கணவர்! “அவருக்கு நான் இருக்கேன்!”
பிந்தான் நோனா பானு
மாபோலை, வத்தளை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக