இத்தினத்தை ஆங்கிலத்தில் "வெலன்டைன்ஸ்டே' என்றும் அழைப்பர். இத்தினத்தில் காதலர்கள் தங்களது அன்பின் நிமித்தம் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக் கொள்வர்.
"வெலன்டைன்ஸ் டே' என அழைக்கப்படும் இத்தினம், "காதலர் தினம்' என அழைக்கப்படுவதன் காரணம் என்னவென்றும், காதலர்கள் இத்தினத்தில் தங்களுக்கிடையில் பரிசுப் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் எவ்வாறு உருவானது என்பதையும் முதலில் பார்ப்போம்.
பழங்காலத்து சரித்திரப் பின்னணியில் இதற்கு ஏதாவதொரு சம்பவம் அல்லது பல சம்பவங்களுடன் தொடர்பு உண்டாவெனப் பார்ப்போம்.
இந்த "வெலன்டைன்ஸ் தினம்' மெல்ல மெல்ல எவ்வாறு காதலர் தினமாயிற்று என்பது தொடர்பான சுவாரஸ்யமான சம்பவங்களும் பாரம்பரிய கதைகளுமுண்டு.
கிறிஸ்துவுக்குப் பின், மூன்றாம் நூற்றாண்டில் இதற்கான ஆரம்ப செயற்பாடுகள் நிகழ்ந்தேறின எனக் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் இத்தினத்திற்கும் "வெலன்டைன்ஸ்' எனப்படும் உரோமாபுரியைச் சேர்ந்த மதகுரு ஒருவரின் பெயருக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டென்பது எல்லா சரித்திரவியலாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மையாகும்.
கி.பி. 270 ஆம் நூற்றாண்டில் உரோமாபுரியை இரண்டாம் குளோடியஸ் (Claudius II) எனும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். மண் மீது பேராசை கொண்ட அவன், தனது இராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களைப் போர் வீரர்களாக சேர்த்துக் கொள்ள விரும்பினான். எனவே, திருமணம் முடிக்கவிருக்கும் இளைஞர்கள் படையில் சேர்வதை விரும்பாத அரசன், விநோதமான கட்டளையொன்றைப் பிறப்பித்தான். ""தனது ஆட்சியின் கீழ்வரும் இளைஞர்கள் யாவரும் திருமணம் செய்யக் கூடாது'' என்பதே அக்கட்டளையாகும்.
இளைஞர்கள் இக்கட்டளையை மிகக் கொடூரமானது எனக் கருதினர்.
இக் கால கட்டத்தில்தான், உரோமைச் சேர்ந்த வெலன்டைன்ஸ் எனும் கிறிஸ்தவ மதகுருவானவர், அரசனது கட்டளைக்கு எதிராக இளைஞர்களுக்கு மிக இரகசியமான முறையில் திருமணங்களை நடத்தி வந்தார். சிறிய அறையொன்றில் மணமகனையும் மணமகளையும் தனியாக வைத்தே இந்த திருமணச் சடங்குகளை இவர் நடத்தி வந்தார். மிக இரகசியமாக அச் சடங்கிற்குரிய செபங்கள் யாவும் மிகத் தாழ்ந்த குரலிலேயே உச்சரிக்கப்பட்டன. அத்துடன் போர் வீரர்களின் காலடி ஓசை ஏதாவது கேட்கிறதா என அச்சம் கலந்த விழிப்புடனேயே வெலன்டைன்ஸ் இந்தத் திருமணங்களை நடத்தி வந்தார்.
இவ்வாறு இரகசியமாக திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு நாள், திடீரென அவரின் அறைக்கு வெளியே காலடி ஓசை கேட்டது. அவ்வேளையில் அறையினுள் இருந்த புதுமணத் தம்பதியினரும் வெலன்டைன்ஸும் பயத்தால் பீடித்துப் போயினர். பல சிரமங்களுக்கு மத்தியில் புதுமண ஜோடிகள் ஒருவாறு தப்பித்து விட்டன.
ஆனால், வெலன்டைன்ஸ் மாட்டிக் கொண்டார்.
அவரை சிறையில் அடைத்தார்கள். விசாரணையின் பின், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின் நடந்தவைதான் சுவாரஸ்யமானது. சிறையில் இருந்த போது அவரைப் பார்ப்பதற்காக பல இளைஞர்கள் சிறைச்சாலைக்குச் சென்றனர். அவ்வாறு சென்றவர்களில் பலர் பூக்களையும் வாழ்த்துக்களுடன் வாசகங்கள் எழுதப்பட்ட சீட்டுக்களையும் அவர் அடைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் ஊடாக உள்ளே போட்டார்கள். அந்த இளைஞர்கள் காதலால் அவ்வளவு தூரம் கவரப்பட்டவர்களாயிருந்தனர்.
அவ்விதம் பூக்களை எறிந்தவர்களில் வெலன்டைன்ஸ் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையின் அதிகாரியின் மகளும் ஒருவராவார். சிறைக்குள் சென்று வெலன்டைன்ஸைச் சந்திப்பதற்கு தனது மகளுக்கும் சிறைச்சாலை அதிகாரி அனுமதியளித்திருந்தார். இதனால் பல சந்தர்ப்பங்களில் மணித்தியாலக் கணக்கில் இருவரும் ஒன்றாக அமர்ந்து உரையாடியுமுள்ளனர். மதகுருவினது மனநிலையை ஊக்குவிக்குமுகமாக அவள் பல கதைகளை அவருக்குக் கூறியும் இருக்கிறாள். அரசனின் கட்டளையையும் மீறி, அவர் நடத்தி வைத்திருந்த திருமணங்களை அவள் நியாயமானது என்று ஏற்றுக் கொண்டு அவரைப் பாராட்டியுமுள்ளாள்.
இவ்வாறிருக்கையில் ஒருநாள் அவர் தூக்கிலிடப்படவே, அந்நாளன்று அவர் இருந்த சிறைச்சாலை அறையினுள், அவளுக்காக ஒரு சிறு குறிப்பையும் விட்டுச் சென்றிருந்தார். அதில், ""காதல் உனது வெலன்டைன்ஸிடமிருந்து'' என எழுதப்பட்டிருந்தது. அவருடைய மரணம் நிகழ்ந்தது பெப்ரவரி 14 ஆம் திகதி ஆகும்.
இந்தக் காதலர் தினத்திற்கு இச் சம்பவம் மட்டும் தான் காரணம் என்பதற்கில்லை. இன்னும் பல காரணங்களும் இத்தினத்தை விழாவாகக் கொண்டாட பங்களிப்புச் செய்கின்றன.
ஆதியில் உரோமாபுரியில் பெப்ரவரி 15 ஆம் திகதியன்று "லூப்பகெலியா' எனும் ஒரு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். ஏனென்றால் உரோமாபுரியில் பெப்ரவரி மாதமே வசந்த காலத்தின் தொடக்கமாகும். அத்துடன் அதைத் தூய்மைப்படுத்துவதற்கான காலமாகவும் பண்டைய உரோமர்கள் எண்ணினார்கள். அத்துடன் "லூப்பகெலியா' திருவிழாவானது உரோமர்களின் விவசாயக் கடவுளான பாவுனசையும் உரோமபுரி அரசை உருவாக்கிய மன்னர்களான "ரொமுயுலஸ்' மற்றும் "ரெமுயுஸ்' ஆகியோரையும் வாழ்த்திப் போற்றும் வகையில் கொண்டாடப்பட்டது.
இந்த "லூப்பகெலியா' விழாவை ஆரம்பிக்கும் முகமாக, உரோமத் திருச்சபையைச் சேர்ந்த குருவானவர்கள் பலர், குகையொன்றில் கூடுவார்கள். அக் குகை பரிசுத்த குகை என அழைக்கப்பட்டது. ஏனெனில் அதில்தான் உரோமாபுரியை ஸ்தாபித்த "ரொமுயுலஸ்'சும், "ரெமுயுஸ்'சும் குழந்தைகளாக இருந்த போது, "லூப்ப' எனும் பெண் ஓநாய் ஒன்று அவ்விருவரையும் பாதுகாத்து வந்ததாக நம்பப்பட்டது.
அங்கு கூடும் மதகுருவானவர்கள், நாட்டின் வளங்களைக் குறித்து ஓர் ஆட்டையும், தூய்மையைக் குறித்து ஒரு நாயையும் அங்கு பலியிடுவார்கள். பின்னர் அங்குள்ள இளைஞர்கள் பலியிடப்பட்ட ஆட்டின் இறைச்சியை அதனது இரத்தத்தில் ஊற வைத்து, வீதி வழியாக எடுத்துச் சென்று, அவ் வழியே வரும் பெண்களின் உடலிலும் வயலில் விளைந்திருக்கும் பயிர்களிலும் தடவுவார்கள். இவ்வாறு செய்தால் நாட்டின் வளம் எதிர்காலத்தில் மேலும் பெருகுமென அவர்கள் நம்பினார்கள்.
அன்றைய தினத்தில் மாலை நேரத்தில் இளம் கன்னிப் பெண்கள், தங்களது பெயர்களை ஒரு சீட்டில் எழுதி, பெரிய பாத்திரமொன்றில் போடுவார்கள். பின்னர் பிரம்மச்சாரிகளான இளம் ஆண்கள் அப்பாத்திரத்திலிருந்து ஒவ்வொரு சீட்டாக தேர்ந்தெடுப்பர். தங்களுக்குக் கிடைத்த சீட்டிலுள்ள பெயருள்ள பெண்ணை, அந்த வருடத்தின் துணையாக அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
அநேகமாக இந்தத் துணைதான் இறுதியில் திருமண லம் அவர்களது மனைவியாக மாற வாய்ப்பாகவும் இருந்தது.
கி.பி. 498 ஆம் ஆண்டில் "பாப்பரசர் ஜெலசியஸ்' என்பவர் பெப்ரவரி 14 ஆம் திகதியை வெலன்டைன்ஸ் தினம் எனப் பிரகடனப்படுத்தினார். ஆயினும் சீட்டுக் குலுக்கல் மூலம் ஜோடிகளைத் தெரிவு செய்வது கிறிஸ்துவத்திற்கு எதிரானது. சட்டத்திற்கும் புறம்பானது எனவும் அந்நாட்களில் கூறப்பட்டது. பின்னர் கி.பி. 1000 1450 ஆம் ஆண்டளவில் பிரான்ஸிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்தவர்கள், பெப்ரவரி 14ஆம் திகதியே பறவைகள் தமது இனச் சேர்க்கையில் ஈடுபடுவதற்கான ஆரம்ப தினம் எனப் பரவலாக நம்பினார்கள். எனவே பெப்ரவரி 14ஆம் திகதி வெலன்டைன்ஸ் தினத்தையே காதலர்கள் தினமாக மாற்ற வேண்டுமெனத் தீர்மானித்தார்கள்.
இக்கால கட்டத்தில்தான் காதலர் தின வாழ்த்துக்களும் தோன்றின. மிகப் பழைமை வாய்ந்த வெலன்டைன்ஸ் வாழ்த்து என இன்றும் கூறப்படுவது சார்ல்ஸ் எனப்படும் கோமகனால் யுத்தமொன்றின் போது கைது செய்யப்பட்ட நிலையில் சிறையிலிருந்து அவரால் அவரது மனைவிக்கு எழுதப்பட்ட கவிதையாகும். அவரின் கைப்பட 1415ஆம் ஆண்டு எழுதப்பட்ட வாழ்த்துக் கவிதை இன்றும் லண்டனில் பிரித்தானிய வாசிகசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பல ஆண்டுகளின் பின்னர் 5 ஆம் ஹென்றி மன்னன் தனது மனைவி கத்தரினுக்கு வெலன்டைன்ஸ் குறிப்பு எழுதுவதற்காக ஜோன் எனும் ஓர் எழுத்தாளரை சம்பளத்திற்கு நியமித்திருந்தான்.
18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சகத்தின் எல்லாத் தரத்திலு·ள்ள காதலர்களும் நண்பர்களும் தமது கைகளால் எழுதப்பட்ட சிறு குறிப்புகளுடன் பரிசுப் பொருட்களையும் இத்தினத்தில் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தனர்.
அச்சுத் தொழிலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கைகளால் எழுதப்பட்ட வாழ்த்துகளுக்குப் பதிலாக அச்சடிக்கப்பட்ட வாழ்த்து மடல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இதில் காதலர்கள் தங்களது எண்ணங்களை வெளியிட மிக இலகுவாகவும் இருந்தது. தபாலில் அனுப்பப்படுவதனால் செலவு குறைவாக காணப்பட்டதனால் வெலன்டைன்ஸ் வாழ்த்து மடல் அனுப்புதல் வெகு பிரபல்யமானது. கிறிஸ்மஸின் அடுத்தபடியாக உலகமெங்கிலும் வருடத்திற்கு 100 கோடி வரை வெலன்டைன்ஸ் வாழ்த்து மடல்கள் விற்பனையாகின்றன என்று வாழ்த்து மடல்களை அச்சிடும் நிறுவனங்களின் சபை அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தது.
அத்தோடு உலகிலுள்ள அச்சிடும் நிறுவனங்களும் இந்த "வெலன்டைன்ஸ்' தினம் பிரபல்யம் பெறுவதில் முக்கிய பங்காற்றி தங்களது வர்த்தகத்தைப் பெருக்கிக் கொண்டதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இதுவே காதலர் தின வரலாறும், காதலர் தின மடலின் வரலாறுமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக