ஞாயிறு, 5 ஜூலை, 2015

வெளிநாட்டு பயங்கரவாதிகளாக பட்டியல் இடப்பட்டுள்ள சில தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குதல் - பாகம் -3

பாகம் - 3

உலகத் தமிழர் பேரவை

பிரதானமாக பிதா.இமானுவலின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதல் காரணமாக உலகத் தமிழர் பேரவை பெரிய அளவிலான அங்கீகாரம் மற்றும் செல்வாக்கு என்பனவற்றை பல மேற்கத்தைய நாடுகளுக்கிடையில் பெற்றிருந்தது. உலகத் தமிழர் பேரவை, பல மேற்கு நாடுகளின் அரசாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற அங்கத்தவர்கள், உயர் மட்ட நிருவாகத்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றவர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளது. ஏற்றுக் கொள்ளத்தக்க அரசியல் தீர்வை காண்பதற்காக கொழும்பு அரசாங்கத்தின் மீது சர்வதேச அழுத்தங்களை பிரயோகிக்க உதவுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை, ஸ்ரீலங்காவில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் யுத்தக் குற்றங்களுக்கு ராஜபக்ஸ ஆட்சியினரை பொறுப்பு கூற வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் சர்வதேச முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது.



பிதா இமானுவல் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் அங்கீகரிக்கப்பட்ட பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் ஆகியோர் றொபேட் ஓ பிளேக், தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவிச் செயலாளராக இருந்தபோது, வாஷிங்டனில் வைத்து அவரைச் சந்தித்துள்ளார்கள், அதுபற்றிய புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ஸ்ரீலங்காவின் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் (ரி.என்.ஏ) உலகத் தமிழர் பேரவை மிகவும் சுமுக உறவை பேணி வருகிறது மற்றும் அதனுடன் இணைந்து தென்னாபிரிக்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்த துணை செய்து வருகிறது. ரி.என்.ஏ மற்றும் ஜி.ரி.எப் ஆகிய இரண்டும் சேர்ந்து ஜெனிவாவில் உள்ள ஐநா சபையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. கடந்த வருடம் கூட்டுச் சேரா நாடுகளின் தலைவர்களின் மாநாடு ஸ்ரீலங்காவில் நடந்தபோது, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஸ்ரீலங்காவுக்கு வருகை தருவதற்கு முன்பு உலகத் தமிழர் பேரவை அவரை ஆறுமுறை சந்தித்துள்ளது. கொழும்பினை நோக்கி கமரூன் ஒரு பகைமையான நிலைப்பாட்டை எடுப்பதற்காக அவரை மாற்றவதற்கு உலகத் தமிழர் பேரவை ஒரு பெரிய கருவியாக இருநதுள்ளது.

ஒரு கட்டத்தில் உலகத் தமிழர் பேரவை மீதான நல்லெண்ணம் மிகவும் உயர்வாக இருந்தது அந்த அமைப்பின் மீதான தனது நிலைப்பாட்டை இந்தியா கூட தணித்துக் கொண்டது. பிதா.இமானுவலுக்கு இந்தியாவுக்கு பலதடவை வருகை தருவதற்காக பல் நுழைவு விசா கூட வழங்கப்பட்டிருந்தது. பிதா.இமானுவல் இந்தியாவுக்கு சென்று அங்கு தொடர்ச்சியாக பல கூட்டங்களை நடத்தினார். இவற்றில் சில கூட்டங்கள் தமிழ் நாட்டில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ சார்பு சக்திகளுடன் இடம்பெற்றது, இது இந்திய அதிகாரிகளுக்கு சந்தேகத்தையும் மற்றும் கடுங் கோபத்தையும் கிளப்பியது. இரண்டாவது முறை பிதா.இமானுவல் இந்தியா சென்றபோது சென்னையிலுள்ள மீனம்பாக்கம் விமானநிலையம் வழியாக தமிழ் நாட்டுக்குள் நுழைய அவர் அனுமதிக்கப் படவில்லை. அவர் திரும்பிச் செல்லும்படி கட்டாயப் படுத்தப்பட்டார், அதுமுதல் அவர் இந்தியாவுக்குச் சென்றதில்லை. புதுதில்லி உலகத் தமிழர் பேரவையை ஒரு பசுத்தோல் போர்த்திய புலியாகவே கருதுகிறது.

நெடியவன் வலையமைப்பு

ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பு வலிமைமிக்க எதிரிகளாகக் கருதும் நான்கு முக்கிய நபர்களுள் மூன்றாவதும் விவாதிக்கத் தக்க வகையில் மிகவும் முக்கியமானவராகவும் கருதப்படுபவர் நெடியவன் அல்லது நெடியோன் ஆவார். இவரது வலையமைப்பு பிரதானமாக ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ யின் கிளைகளையும் மற்றும் முன்னணி அமைப்புகளையும் கொண்டிருந்த காரணத்தால், இது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை என்பனவற்றிலிருந்து ஒருவகையில் வித்தியாசமானது. எல்.ரீ.ரீ.ஈ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்பட்டதால், பெரும்பாலான மேற்கத்தைய நாடுகளில் அடையாளம் தெரிந்த பல புலிக் கிளைகளும் ஒன்று இயங்காமல் உறைநிலையில் இருந்தன அல்லது புதிய அமைப்புகளாக மாற்றம் பெற்றன. புதிய முன்னணிகளும் நிறுவப்பட்டன.

உருத்திரகுமாரனனின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நாடுகள் தழுவிய அடிப்படைக்கு ஒரளவு எதிராக நெடியவனின் குழுவும் வௌ;வெறு நாடுகளில் வாழும் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நிறுவன வலையமைப்பு ஒன்றை நிறுவியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலுமுள்ள இந்த அமைப்பு மக்கள் பேரவை அல்லது தேசியப் பேரவை என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்புகள் ஒரு மட்டத்தில் தங்களை ஜனநாயக அரசியல் செயற்பாட்டாளர்கள் என காட்டிக்கொள்ள முயன்றாலும் மற்றைய மட்டத்தில் அவர்கள் நிழலான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். இது எதனாலென்றால் இந்த அமைப்புகள் அடிப்படையில் எல்.ரீ.ரீ.ஈ கிளைகள் சட்டபூர்வமான அரசியல் அமைப்புகளைப் போல பாசாங்கு செய்கின்றன.

இதன்படி அதன் பாசாங்குத் தன்மையை தவிர நெடியவன் வலையமைப்பு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை என்பனவற்றுடன் ஒப்பிடுகையில் முரண்பாடாக வெளிப்படையானதோ அல்லது பொறுப்பானதோ அல்ல. அதன் ஜனநாயக நல்லெண்ணம் பெரிய அளவு நம்பிக்கையளிக்கவில்லை. நெடியவனின் பின் தொடர்பாளர்களில் அநேகர் அகிம்சையை கடைப்பிடிப்பதில்லை. அதற்கு மேலும் நெடியவன் வலையமைப்பின் பல செயற்பாடுகள் நிழலான சர்ச்சைக்குரிய கடந்தகால செயற்பாடுகளைக் கொண்டிருப்பதால் அது தெளிவின்மையால் மறைக்கப்பட்டுள்ளது. பல்வேறுநாடுகளிலுமுள்ள அதன் முக்கிய அலுவலக பொறுப்பாளர்கள் எல்.ரீ.ரீ.ஈயின் முன்னாள் அங்கத்தவர்கள் மற்றும் ஆயுதப் பயிற்சி மற்றும் போர்க்கள அனுபவம் உடையவர்கள்.

பேரின்பநாயகம் சிவபரன்

39 வயதான பேரின்பநாயகம் சிவபரன் யாழ்ப்பாணம் வலிகாமம்மேற்கு வட்டுக்கோட்டை சித்தங்கேணியை சோந்தவர். இவரது இயக்கப் பெயர் நெடியவன். தனக்கு 18 வயதாக இருக்கும்போது 1994ல் நெடியவன் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்தார். இவர் எல்.ரீ.ரீ.ஈயினால் உயர்கல்வி மேற்கொள்ள ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு அரசியல் விஞ்ஞான கற்கையை மேற்கொண்டிருந்தபோதும் சிவபரன் மாஸ்கோவில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை.

நெடியவன் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பிரிவில் கடமையாற்றியதுடன் எல்.ரீ.ரீ.ஈயின் அரசியல் பொறுப்பாளர் சுப்பையா பரமு தமிழ்செல்வனுடன் இணைந்து 2002 – 2003ல் நடந்த சில சுற்று சமாதான பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டிருந்தார். பின்னர் இவர் வீரகத்தி மணிவண்ணன் என்கிற கஸ்ட்ரோவின் கீழுள்ள வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ நிருவாகப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். நெடியவன் கஸ்ட்ரோவின் பொதுசனத் தொடர்பு பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார் மற்றும் சமாதான நடவடிக்கை சமயத்தில் வன்னிக்கு விஜயம் மேற்கொண்ட அநேக வெளிநாட்டு செயற்பாட்டாளர்களுக்கு இணைப்பாளராகவும் பணியாற்றினார்.

அப்போதுதான் நெடியவன் என்கிற சிவபரன் தனது எதிர்கால மனைவியாகிய சிவகொளரி சாந்தமோகன் என்பவரைச் சந்தித்தார். அவர் ஒரு நோர்வே பிரஜை. அவரது தந்தையின் சகோதரர் ரஞ்சன் லாலா என்கிற ஞ}னேந்திரமோகன், எல்.ரீ.ரீ.ஈயின் முன்னோடி உறுப்பினரும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவரும் ஆவார். ரஞ்சன் லாலா ஒரு உந்துருளியில் பயணிக்கும்போது யாழ்ப்பாணத்தில் வைத்து இராணுவத்தால் சுடப்பட்டார். சிவபரனும் சிவகௌரியும் காதல் வயப்பட்டனர். ரஞ்சன் லாலா மீது மிகவும் பிரியம் கொண்டிருந்த பிரபாகரன் இந்த இணைப்புக்கு உதவினார்.

இருவரும் திருமணம் செய்த பின்னர் சிவபரன் 2006ல் நோர்வேக்குச் சென்றார். இந்த வருடங்களில் சில எண்ணிக்கையான செயற்பாட்டாளர்களை எல்.ரீ.ரீ.ஈ வெளிநாடுகளுக்கு அனுப்பியது. இந்த அங்கத்தவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், புதிய நாடுகளில் புலிகளின் செயற்பாட்டாளர்களாக இவர்கள் செயற்பட ஆரம்பித்தார்கள். இந்த அங்கத்தவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் மற்றும் புலனாய்வுப் பிரிவைச் சோந்தவர்கள்.

நெடியவன் நோர்வேயில் தனது வீட்டை அமைத்துக் கொண்டார். சிவகௌரி உடனான திருமண பந்தம் எல்.ரீ.ரீ.ஈயில் நெடியவனின் செல்வாக்கை மேலும் அதிகரித்தது. வெளிநாட்டில் உள்ள செயற்பாட்டாளர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்வதற்காக கஸ்ட்ரோ அவரைப் பயன்படுத்தினார். யுத்தம் விரிவடைந்ததால் வன்னிக்கும் மற்றும் வெளிநாட்டிலுள்ள புலிகளுக்கும் இடையிலான தொடர்புகள் சிரமத்துக்குள்ளாகி இருந்தது. எனவே தனது சார்பாக நெடியவனை கஸ்ட்ரோ எல்.ரீ.ரீ.ஈயின் சர்வதேச பிரதிநிதியாக நியமித்தார். எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டு கிளைகள் அனைத்துக்கும் ஒட்டுமொத்த பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் நெடியவனைத் தவிர வேறு யாருமில்லை.

சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி

மே 2009ல் இராணுவத் தோல்வியினால் எல்.ரீ.ரீ.ஈ பாதிப்படைந்த பின்னரும்கூட, நெடியவன் எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டுக் கிளைகளின் நிருவாகத்துக்கு பொறுப்பாக இருந்தார். செல்வராசா பத்மநாதன் என்கிற கேபி, மலேசியாவில் கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்காவுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ கட்டமைப்புகள் அனைத்திலும் தனது தனி அதிகாரத்தை நெடியவன் மீள் வலியுறுத்திக் கொண்டார். ஆனால் விரைவிலேயே அதற்கு ஒரு புதிய போட்டியாளர் முளைத்தார். அது விநாயகம் என்கிற சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி, எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவின் மூத்த அங்கத்தவர். ஸ்ரீலங்கா அதிகாரிகள் அவரை உலகத் தமிழ் புலம்பெயர்ந்தவர்களில் உள்ள நாலாவது முக்கிய எதிரியாகக் கருதுகிறார்கள்.

50 வயதான விநாயகம் என்கிற சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி, 1964 நவம்பர் 10ல் பிறந்தவர். அவரது குடும்பம் தென்மராட்சி பிரிவு, வரணிப் பகுதியின் இடைக்குறிச்சியை சேர்ந்தது. எனினும் அந்தக் குடும்பம் சில வருடங்களாக சாவகச்சேரியிலேயே வாழ்ந்து வந்தது. விநாயகமூர்த்தி எல்.ரீ.ரீ.ஈ யில் முறைப்படி இணைந்தது. 1985ல் தனது 20 ம் வயதில். முன்னர் அவர் பள்ளி மாணவனாக இருந்தபொழுது எல்.ரீ.ரீ.ஈயில் உதவியாளனாக இருந்துள்ளார். புலிகள் அமைப்பின் பாதுகாப்பு புலனாய்வு சேவை என்கிற (ரி.ஓ.எஸ்.ஐ.எஸ்) என்று அழைக்கப்படும் பொட்டு அம்மான் தலமையிலான எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவுக்குள் விநாயகமூர்த்தி உள்வாங்கப்பட்டார். பின்னர் அது தேசிய புலனாய்வு பிரிவு என பெயர்மாற்றம் பெற்றது.

ஒஸ்லோ அனுசரணையுடனான யுத்தநிறுத்தம் 2002ல் உருவானபோது எல்.ரீ.ரீ.ஈ யின் புலனாய்வு பிரிவு ,வன்னிக்கு வெளியில் ஸ்ரீலங்காவின் பல்வேறு பகுதிகளிலும் அதேபோல ஸ்ரீலங்காவுக்கு வெளியிலும் மற்றும் வெளிநாட்டிலும் செயற்படுபவர்கள் தொடர்பான வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்க ஒரு விசேட பிரிவினை நிறுவியது. இந்த விசேட புலனாய்வு பிரிவு “வெளியக மற்றும் உள்ளக புலனாய்வு விவகாரப் பிரிவு” என அழைக்கப்பட்டது.

விநாயகமூர்த்தி இந்த விசேட பிரிவுக்கு தலைவராக 2002ல் நியமிக்கப்பட்டார். மே 2009ல் எல்.ரீ.ரீ.ஈ தோல்வி அடைவதற்கு சில மாதங்கள் முன்பாக அவர் இந்தியாவுக்கு போனார். அங்கிருந்து அவர் 2009 ஒக்ரோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐரோப்பாவுக்குச் சென்றார். அவர் பரிசில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார்.

ஐரோப்பாவில் இருந்தபோது பல்வேறு புலிகள் புலனாய்வு பிரிவு செயற்பாட்டாளர்களையும் விநாயகம் நெருக்கமாக ஒன்றிணைத்துப் பின்னி அதன் முழுப்பொறுப்பையும் தான் ஏற்றுக்கொண்டார். ஒரு குறுகிய காலம் நெடியவன் மற்றும் விநாயகம் இடையே ஒரு வேலை உறவுமுறை இருந்தது, இருவரும் ஒரு மூலோபாய பங்காளிகளாக வர முயன்றனர். எனினும் இது நீண்டகாலம் நிலைக்கவில்லை மற்றும் விரைவிலேயே இருவரும் ஒருவருக்கொருவர் முட்டுக்கட்டை போட முயன்றனர். நெடியவன் தனது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத அதேவேளை விநாயகம் அதிகாரத்தை கைப்பற்ற விரும்பினார். இந்த அதிகாரப் போராட்டத்தின் இதயமாக இருந்தது பணம்.

முரண்பாடான அறிக்கைகள்

இரண்டு பிரிவினரும் தாங்கள்தான் உண்மையான எல்.ரீ.ரீ.ஈ என முக்கியமான சந்தர்ப்பங்களில் முரண்பாடான அறிக்கைகளை தமிழில் வெளியிட்டார்கள். நெடியவன் குழுவினரது அறிக்கைகள் தன்னை அனைத்துலக செயலகம் என அழைத்துக்கொள்ளும் எல்.ரீ.ரீ.ஈ காரியாலயத்தால் வெளியிடப்பட்டது. விநாயகம் பிரிவினர் தலைமைச் செயலகம் என அழைக்கப்படும் அதன் அலுவலகத்தில் இருந்து அறிக்கைகளை வெளியிட்டனர். இரு பிரிவினருக்கும் இடையே வன்முறைகளும் ஏற்பட்டன. உடல் தாக்குதல்கள் மட்டுமன்றி ஒரு கொலையும் கூட இடம்பெற்றது.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா அதிகாரிகள் நெடியவனை தங்களிடம் ஒப்படைக்கும்படி நோர்வேயிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். ஒஸ்லோ அதற்கு உடன்படவில்லை ஆனால் நோர்வே அதிகாரிகள் நெடியவனிடம் விசாரணை செய்து நோர்வே மண்ணில் வசிக்கும் காலத்தில் வன்முறைகளில் ஈடுபடவோ அல்லது அதை முன்னேற்றவோ கூடாது என நெடியவனை எச்சரிக்கை செய்தார்கள். அதன் பின் நெடியவன் ஒஸ்லோவில் இருந்து 150 மைல் தொலைவில் உள்ள வேறு இடத்துக்கு குடியெர்ந்தார். அவர் தன்னைப் பற்றிய சுயவிபரங்கள் வெளிவருவதை குறைத்துக் கொண்டார் மற்றும் பொதுவாக அவரை தொடர்பு கொள்ள முடியாது. எனினும் நம்பிக்கையான காவிகள் மூலமாக அவர் தொடர்ந்தும் தனது முக்கிய உதவியாளர்களுடன் வாய்மொழி மூலமாக தொடர்பாடல்களைப் பேணி வருவதாக நம்பப்படுகிறது.

பரிசில் குடியிருக்கும் விநாயகமும் கூட சமீப காலமாக தன்னைப்பற்றி குறைந்த சுயவிபரத்தையே வெளிப்படுத்தி வருகிறார். விநாயகத்தின் மந்தமான செயல்பாட்டிற்கான காரணம் ஸ்ரீலங்காவின் வேண்டுகோளின்படி இன்ரர்போல் அவருக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்திருப்பதுதான். அதையும்விட மிகவும் முக்கியமான காரணம் பரிசில் எல்.ரீ.ரீ.ஈ தலைவராக இருந்த நடராஜா மதீந்திரன் என்கிற பரிதி அல்லது றீகனின் கொலையும் ஆகும். இந்தக் கொலைக்காக விநாயகம் பிரிவினர், சந்தேகிக்கப் படுகிறார்கள் ஏனென்றால் பரிதி, நெடியவன் குழுவை சேர்ந்தவர். இதற்காக விநாயகத்தையே தடுத்து வைத்து விசாரணை செய்தபின் விடுவித்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தின் பின் விநாயகம் அமைதியாகி விட்டார்.

2009ல் எல்.ரீ.ரீ.ஈ வீழ்ச்சியடைந்த பின்னர் நெடியவன் மற்றும் விநாயகம் ஆகிய இருவரது குழுக்களும் ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வன்முறை ஏற்படுத்த முயன்றுள்ளன. அவர்களது நோக்கம் எல்.ரீ.ரீ.ஈயின் ஒரு புத்துயிர்ப்பை தாய் மண்ணில் கொண்டு வருவதுதான். இந்த முயற்சிகள் யாவும் புலனாய்வு பிரிவினர், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரின் விழிப்புணர்வான எச்சரிக்கை காரணமாக முறியடிக்கப் பட்டுள்ளன. இது தொடர்பான மிகப்பெரிய அச்சுறுத்தல் எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு முயற்சி தீவகன் - கோபி – அப்பன் மூவரணியினால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்டு நசுக்கப்பட்டது. சுவராஸ்யமாக நெடியவன் மற்றும் விநாயகம் ஆகிய இரு பிரிவினருமே ஒருவருக்கொருவர் கூட்டாக ஒத்துழைத்து இந்த மூவரினால் மேற்கொள்ளப்பட்ட புத்துயிர் முயற்சிக்கு நிதி மற்றும் ஏனைய உதவிகளைச் செய்துள்ளார்கள்.

இரண்டு பிரிவுகளுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அல்லது தேவைப்பட்டால் அந்தக் கூட்டணியை துண்டாட முயற்சிக்கின்றன. இதற்காக சில ரி.என்.ஏ தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இரகசியத் தொடர்புகளைப் பேணி வருகின்றன. இரண்டு குழுக்களுமே தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக வருவதை விரும்புகின்றன. இந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரனின் தலைமயில் இயங்கி வருகிறது.

மேற்கத்தைய நகரங்களில் இந்த சக்திகளால் புலம்பெயர் வட்டாரங்களில் உள்ளக தமிழ் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதற்கான தனித்துவமான வாய்ப்பு உள்ளது, அதன் காரணமாக ஸ்ரீலங்காவுடன் பாலம் அமைக்க முயற்சிக்கும் தமிழ் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் துரோகிகள் அல்லது கூட்டுச் சதிகாரர்களாக இலக்கு வைக்கப் படலாம்.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் மார்ச் 2014ல் உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய இரண்டையும் எல்.ரீ.ரீ.ஈ யின் நெடியவன் மற்றும் விநாயகம் குழுவினருடன் சேர்ந்து வெளிநாட்டு பங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது. அனைத்து நாலு குழுக்களும் சோந்து அந்த நேரம் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தன. உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய இரண்டும் எல்.ரீ.ரீ.ஈ சார்பான மற்றும் பிரிவினைவாத போக்குடையவை - உலகத் தமிழர் பேரவை பெடரல் அமைப்பு தனக்கு சம்மதம் என்று சொன்னாலும் - ஆனால் அது விவாதத்துக்கு உரியது, அவர்களது அந்த சார்பு நிலை அவர்களை பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதத்தை மேற்கொள்பவர்கள் என்று கருதுவதற்கு போதுமானதா என்பதுதான் விவாதத்துக்குரிய விடயம். புரவலர் நாடுகளான பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அல்லது கனடா போன்றவை உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய இரண்டுக்கும் மற்றம் வேறு சில நாடு சார்ந்த சமூக அமைப்புகளுக்கும் எதிராக பயங்கரவாத எதிர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாயின், ஸ்ரீலங்கா அதிகாரிகள் நம்பிக்கையான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எந்த அமைப்பாவது ஸ்ரீலங்காவில் பிரிவினைவாதத்தை ஏற்றுக் கொள்கிறதோ அல்லது பிரிவினைவாதத்தை நிராகரிக்கவில்லையோ, என்கிற நிலைப்பாட்டை பின்பற்றும்போது பயங்கரவாத சித்தாந்தத்தை ஆதரிப்பது என்பது ஒரு பெறுமதி மிக்க வாதமாகத் தோன்றவில்லை. பிரிவினைவாதத்துக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் ஸ்ரீலங்காவில் உள்ளன. அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம், பிரிவினைவாதிகளுக்கு எதிரானது, அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டம் பயங்கரவதிகளுக்கு எதிரானது. ஒரு பிரிவினைவாதி பயங்கரவாதியாக மாறுவது, பிரிவினைவாதத்தை பின்பற்றும் அவனோ அல்லது அவளோ பயங்கரவாதியாக விளக்கப்படும் நடவடிக்கையில் ஈடுபடும்போதுதான். எல்.ரீ.ரீ.ஈயானது ஒரு தனிநாடு மற்றும் ஆயுதப் போராட்டம் ஆகிய இரண்டையும் ஆதரித்தது. எல்.ரீ.ரீ.ஈயின் ஆயுதப் போராட்டம் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான பயங்கரவாதம். “ஒரு மனிதனால் பயங்கரவாதியாக கருதப்படுபவன் இன்னொரு மனிதனுக்கு விடுதலைப் போராளியாக கருதப்படுகிறான்” என்று ஒரு பிரபலமான சொல்வழக்கு உள்ளது. வன்முறைகளில் ஈடுபடாமல் பிரிவினைவாதம் பற்றி வாதிடுவதை பயங்கரவாதமாகக் கருதுவது பயங்கரவாதி தொடர்பான வாதத்துக்கு பொருத்தமற்றது. இந்த முக்கிய கருத்து மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பல்வேறு வகையான 16 அமைப்புக்களை பயங்கரவாதிகள் என்கிற முத்திரையின் கீழ் ஒன்றாகத் தடை செய்தபோது அதன் பார்வையில் படவில்லை.

தற்சமயம் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் அதன் முன்னோடிகளை விட வித்தியாசமான அணுகுமுறைகளை பின்பற்றி வருகிறது. தடை செய்யப்பட்ட அமைப்புகளின் மத்தியில் உள்ள தனித்துவமான வித்தியாசங்களை அது அளவெடுத்து வருகிறது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பட்டியலிடப்பட்டுள்ள உலகத் தமிழர் பேரவையின் முக்கிய செயற்பாட்டாளர்கள் ஆகிய பிதா. இமானுவல் மற்றும் சுரேந்திரன் போன்ற பிரதிநிதிகளுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு வருகிறார். உலகத் தமிழர் பேரவையும் கூட கொழும்பினால் பட்டியலில் இருந்து அகற்றப்படுவதற்கு உகந்த வகையில் பொருத்தமாக குரலெழுப்பி வருகிறது. மேடையானது உலகத் தமிழர் பேரவைக்கு ஏற்றதாகவும் மற்றும் அதன் செயற்பாட்டாளர்கள் எதிர்காலத்தில் பட்டியலில் இருந்து அகற்றப் படுவார்கள் போலவும் தோன்றுகிறது. ருத்ராவின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலிகளுடனான அதன் வெளிப்டையான அடையாளம் தமிழ் ஈழத்துக்கான அதன் வெளிப்படையான ஆதரவு என்பன காரணமாக தவிர்த்து ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.

தடை நீக்கத்துக்கான நகர்வுகள்

எதிர்பார்க்கும் இந்த முன்னேற்றங்களின் விளைவாக ஏனைய தமிழ் புலம்பெயர் அமைப்புகளில் இருந்து ஒரு பின்னடைவு தோன்றலாம். உலகத் தமிழர் பேரவை தன்னை விற்றுவிட்டது என்று ஒரு பெரிய விமர்சனத்துக்கும் ஆளாகலாம். வெப்பம் அதிகரிப்பதால் உலகத் தமிழர் பேரவை தொடர்ந்தும் சமையலறைக்குள்ளேயே தங்கிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மறுபுறத்தில் மங்கள சமரவீர தலைமையேற்றுள்ள இந்த தடை நீக்க முயற்சியானது, மகிந்தவை மீண்டும் கொண்டு வருவதற்காக கூக்குரலிடும் சக்திகளுக்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குற்றம் சாட்டுவதற்கு ஏற்ற ஒரு ஆயுதமாகவும் மாறலாம். இந்த விடயங்கள் யாவும் எதிர்காலத்தில் வரக்கூடிய கட்டுரைகளில் மேலும் ஆய்வு செய்யப்படுவது அவசியம்.

 -  டி.பி.எஸ்.ஜெயராஜ்

 மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

பாகம் -1
பாகம் -2
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல