“என்ன சோர்ந்துபோய் இருக்கிறாய்”, முகத்தில் ஈ ஆடவில்லை”, “முகம் காய்ஞ்சு போய் இருக்கு” “முன்புபோல் உஷாராக இல்லை”, இதுபோன்ற வசனங்களை நாம் அன்றாட வாழ்வில் எமது உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் போன்றோரை காணும் போது பயன்படுத்துகிறோம். முகம் அதன் தோற்றம் எமது மனதின் பல்வேறு விம்பங்களை எடுத்துக்காட்டுகின்றது. முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் எமது சிந்தனை, செயல், நடத்தைகளில் வெளிக்காட்டப் படுகின்றன. மேலே குறிப்பிட்ட வசனங்களை உங்களிற்கு நன்றாக தெரிந்த ஒருவரில் பிரயோகிக்க வேண்டி ஏற்பட்டால், இவரிற்கு “உளச்சோர்வு” நோய் இருக்குமோ? என்ற அடுத்த சந்தேகத்தை தீர்க்க உங்களிற்கு இக்கட்டுரை உதவி செய்யும்.
மனச்சோர்வு நோயின் இன்றைய நிலை:-
உலகம் முழுவதும் 350 மில்லியன் மக்கள் மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நோய்பரம்பலில் மூன்றாவது இடத்தில் உள்ள மனச்சோர்வு 2030ஆம் ஆண்டளவில் முதலாவதாக வந்துவிடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. வருடாந்தம் ஒரு மில்லியன் மக்கள் மனச்சோர்வு ஏற்படுத்திய தற்கொலைகளால் இறக்கின்றனர். அதாவது 3000 பேர் நாளாந்தம் என்ற ஒழுங்கில் இது இடம்பெறுகின்றது. இலங்கையர்கள் உலகளவில் தற்கொலை செய்வதில் முன்னிலை வகிக்கிறார்கள். நான்கில் ஒருவர், மூன்றில் ஒருவர் என்ற அளவில் மனச்சோர்வு நோய் பரம்பல் இலங்கையில் காணப்படுகின்றது. எனவே வருமுன் காத்தல் வேண்டும்.
கடுமையான மனச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டவர்களை நீங்கள் கண்டிருப்பீர்கள். மனச்சோர்வு மிகப் பரவலாக காணப்படும் ஒரு முக்கிய உளநோய் ஆகும். இது சில வேளை தற்கொலைக்கும் இட்டுச்செல்லும். மனச்சோர்வின் குணங்குறிகள் பொதுவாகப் பல்வேறுவிதமான இயலாமைகளாய் வெளிப்படுத்தப்படுகின்றன.
அன்புக்குரிய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவரின் இழப்பு வீடு, சொத்து, வியாபாரம் என்பவற்றில் இழப்புக்கள், கடும் வறுமை, வேதனை தருகின்ற அல்லது ஆயுட்காலத்தை குறைக்கின்ற நாட்பட்ட மோசமான நோய்கள், எதிர்பார்ப்புகள் நிறைவேறாமை, கடன் பிரச்சினைகள் போன்றன மனச்சோர்வுக்குரிய மிகப் பொதுவான காரணங்களாகும்.
இதை விட ஒருவர் தனது சொந்த சமுதாயத்திலேயே மதிப்பிழக்கக்கூடிய அல்லது மற்றவர்களால் கீழ்நிலையில் பார்க்கப்படக்கூடிய நிலைமைகளான வேண்டத்தகாத கர்ப்பம், குடும்பப் பிரிவு அல்லது விவாகரத்து, வேறு ஒருவருடன் வாழுதல், வேலையை இழத்தல், வேலையால் நிறுத்தப்படல் போன்றனவும் மனச்சோர்வுக்கு காரணமாகலாம். இவற்றை விட பயத்தையும், உளப்பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளான கற்பழிப்பு, கொள்ளை, ஆட்கடத்தல் போன்றனவும் மனச்சோர்வை ஏற்படுத்தும்.
இருந்தபோதும், சில மனச் சோர்வு நோயாளிகளில் அதை ஏற்படுத்தியிருக்கக் கூடிய எந்த விதமான காரணங்களையும் கண்டுபிடிக்க இயலாது இருக்கும். இவர்களில் மனச்சோர்வு நோயானது ஒருவிதமான புறக்காரணிகளுமின்றி தானாகவே ஏற்பட்டிருக்கும். சாதாரணமாக ஒருவருக்கு ஏதாவது ஓர் இழப்பு ஏற்பட்டால் அவர் சிறிது காலம் கவலைப்பட்டு விட்டு, பின்பு தானாகவே அதிலிருந்து மீண்டு விடுவார். அவர் மனச் சோர்வு நோயால் பாதிப்புறுவதில்லை. ஆனால் மனச் சோர்வு நோய் ஏற்பட்ட ஒருவர் கிழமைக்கணக்காக, மாதக்கணக்காக மிகவும் கவலையாக இருப்பார். வாழ்க்கையில் எதுவுமே உதவப்போவதில்லை என்ற விரக்தியில் இருப்பார். பொதுவாக அவர் தனக்கு தேவைப்படும் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கமாட்டார். எதுவுமே தனது நிைலமையை மாற்றப்போவதில்லை என்றோ, தான் இவற்றுக்கெல்லாம் “லாயக்கில்லைஎன்றோ” அவர் எண்ணுவார்.
மனச் சோர்வின் பொதுவான குணங்குறிகள்:-
கவலையில் மூழ்கியிருத்தல், சோகத்தில் ஆழ்ந்திருத்தல், இலகுவில் அழுதல் (ஆண்கள் அழுவது மிகமுக்கியமானது), அடிக்கடி அழ வேண்டும் போலத் தோன்றுதல், தொடர்ச்சியாக யோசித்தபடி இருத்தல் (யோசனை), எதிர்காலத்தில் நம்பிக்கையின்மை (விரக்தி) தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கைக் குறைவு, வாழ்க்கையில் சந்தோஷமின்மை (வெறுப்பு, - ஒன்றுக்கும் விருப்பமில்லை, உதவியற்றநிலை (கையறு நிலை), தான் பிரயோசனமற்றவர் என்ற நினைப்பு ஒன்றுக்கும் உதவாமல் போன நிலை, மற்றவர்களுக்குச் சுமையாக இருத்தல், தனக்குத்தானே தீங்கு செய்யும் மனநிலை, முன்பு செய்தவற்றைக் கூட செய்யமுடியாத ஆர்வமின்மை, இறப்பு பற்றிய, தற்கொலை பற்றிய எண்ணங்கள் (இருந்தென்னபிரயோசனம்) நித்திரை குழப்பம், நித்திரையின்மை, பசியின்மை உடல் மெலிவு பாலுறவில் நாட்டமின்மை இலகுவில் களைப்படைதல், பலவீனமாக இருத்தல் (இயலாமை) கருத்தூன்றல், ஞாபகசக்தி, என்பவற்றில் குறைபாடு (மறதிக்குணம்) தலையிடி, நெஞ்சு நோ, கைகால் உளைவு, உடம்பு அடிச்சுப் போட்டமாதிரி, தலையில் பாரம் ஏறினது போல, உடம்பு முழுவதும் எரிதல் போல உணருதல் மனச்சோர்வு நோயுடையவர்கள் பலவிதமான உடல்முறைப்பாடுகளைக் கூறுவர். இந்த முறைப்பாடுகள் அநேகமான சந்தர்ப்பங்களில், அவர்களது மனநோய் காரணமாகவே ஏற்படுகின்றன என்பதை மறந்துவிடவேண்டாம்.
உடல் உபாதைகளுடன் பொதுவைத்தியரை நாடினால் அவர் “மனச்சோர்வு நோயை” கண்டறிந்து சிகிச்சை அளிப்பதைவிட நோயாளி சொல்லும் உடல் சம்மந்தப்பட்ட முறைப்பாடுகளிற்கே முன்னுரிமை கொடுத்து சிகிச்சையளிப்பார்.
சம்பவம்:-
33 வயதுடைய பிரணவன் ஓர் கட்டிட ஒப்பந்தகாரர் ஆறு மாத காலமாக, அவருடைய “கட்டிட ஒப்பந்த” தொழிலில் கடும் போட்டியும், பிரச்சனையும் ஏற்படத் தொடங்கிற்று. அத்துடன் “லீசிங்கில்” உழவு இயந்திரம் ஒன்றும் வாங்கியுள்ளார். மாதாந்த கட்டுப்பணத்தையும் அவரால் கட்ட முடியவில்லை. ஆரம்பத்தில் இவற்றைச் சமாளித்து வந்த அவர், பிறகு படிப்படியாகச் சோர்ந்து போகத்தோடங்கினார். அவருக்கு நித்திரை வரவில்லை, பசியெடுக்கவில்லை, வாழ்க்கையில் இருந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் போனது. யோசித்துக்கொண்டும், கவலைப்பட்டுக்கொண்டும் இருந்தார். சில வேளைகளில் அவரை அறியாமலேயே அழுகை அழுகையாக வந்தது. இனி என்ன செய்யப் போறன்? என்று திரும்பத் திரும்ப யோசித்தார். சில வேளைகளில் வாய்க்குள் முணுமுணுப்பார். எதிர்காலம் நம்பிக்கையற்றதாயும், இருள்மயமானதாயும் இருந்தது. மனதில் ஒரு பயம் ஏற்பட்டபடியே இருந்தது நாளடைவில் அவருக்கு தலைவிறைப்பு, கண் எரிவு, கை கால் குத்துளைவு எனப் பல அறிகுறிகள் தோன்றின. தன்னுடைய கோலத்திலும், உடைகளிலும் கவனம் குறைந்தது. நாங்கள் அவரை முதலில் பார்த்தபோது, அவர் கலைந்ததலையுடனும், சுருக்கம் நிறைந்த நெற்றியுடனும், சவரம்செய்யாத முகத்துடனும், அழுக்கான ஆடைகளுடனும் இருந்தார். கதைக்க விருப்பமில்லாமல்இ எதற்கோ பயந்தபடி, யோசித்தபடி இருந்தார். அவரது வருத்தத்தின் கடுமை காரணமாக அவர் விடுதியில் அனுமதிக்கப்பட்டார். மிகக்குறைவான அளவில் மருந்துகள் கொடுக்கப்பட்டன, ஆதரவான உளவனத்துணையும், சாந்தவழிமுறைப் பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு கிழமைக்குள்ளாகவே அவரது மனநிலையில் மாற்றம் ஏற்படத்தொடங்கிற்று. அவர் பழைய நிலைமைக்கு வாறார் என்று “மனைவி சந்தோஷப்பட்டார்.”
மனச் சோர்வுடைய ஒருவரை எவ்வாறு அடையாளம் காணலாம்:-
அவரிடம் மனச்சோர்வுக்குரிய குணங்குறிகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டுபிடிக்கவும். அவை எவ்வளவு காலமாக இருக்கின்றன? அவை அவருடைய நாளாந்த வாழ்க்கையில (வீட்டில், வேலையில், படிப்பில்) பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா? ஒரு வருமானத்தை தேட முடியாமல் செய்கின்றனவா? என்பதனை நோயாளியிடமும் அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரித்துக்கொள்ளவும். எந்த நிகழ்வுகளின் தாக்கத்தினால் அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டிருக்கலாம் என்பதனை நோயாளியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் விசாரித்து அறியவும் .மனச்சோர்வு நோயுடைய சிலர் தாங்கள் கவலையாய் இருப்பதையோ நம்பிக்கையற்று இருப்பதையோ மறுக்கக்கூடும்.
அவர்கள் என்ன நடந்த போதும், தங்கள் மனம் நன்றாகவே இருப்பதாகவே கூறிக் கொள்வார்கள். அவர்கள் பெரும்பாலும் உடல்சார்ந்த முறைப்பாடுகளையே கூறுவார்கள். மனச்சோர்வுடைய வேறு சிலர் நோயின் கடுமையினால் எதுவும் கதைக்காமல், ஒன்றிரண்டு முறைப்பாடுகளைக் கூறுவதுடன் நின்றுவிடுவர். இவர்கள் உண்மையிலேயே தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் அளவிற்கு ஆபத்துமிக்கவர்கள். நோயாளியுடனான முதற் சந்திற்பின் போதே, அவர்தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருக்கிறாரா? என்பதை கண்டறியவும்.
தற்கொலை எண்ணத்தைக் கண்டறிய பின்வரும் வினாக்களைக் கேட்கலாம்:-
இனி வாழுறதிலை பிரயோசனமில்லை என்று நினைக்கிறீர்களா? இப்படி இருக்கிறதை விடச் சாகலாம் எண்டு விரும்புறீங்களா?” ஏதாவது செய்து செத்துப்போனால் நல்லது எண் யோசிக்கிறீங்களா?” அப்பிடி ஏதாவது திட்டங்கள் இருக்கா?” முந்தி அப்பிடி ஏதேனும் செய்து பார்த்தனீங்களா?”முன்பு செய்து கொண்ட தற்கொலை முயற்சியைப் பற்றிக்கேட்டறியவும். (இது, இனி வருங்காலத்தில் அவர் தற்கொலை செய்யக்கூடிய சாத்தியக்கூறுகளை எதிர்வு கூறுவதுடன், அவர் எவ்வாறான முயற்சிகளில் ஈடுபடக்கூடும் என்கின்ற ஒரு கணிப்பையும் உங்களுக்கு தரும்). கடும் மனச் சோர்வுடையோர் உண்மையான தூண்டுதல்கள் இல்லாமலேயே பார்த்தல், கேட்டல், மணத்தல் போன்ற புலனுணர்வுகளை அனுபவிக்கலாம். இவற்றை மாயப்புலணுணர்வுகள் (Hallucinations) என அழைப்போம்.
இதனை உறுதி செய்வதற்காகப் பின்வருமாறு கேட்கலாம்.சில வேளைகளில் ஒருவரும் இல்லாது இருக்கேக்கைகே, ஆரோ உங்களோடை கதைக்கிற மாதிரி (குரல்கள்) கேக்கிறதா? இப்படியான குரல்களைக் கேட்கும் ஒருவரிடம், அந்தக்குரல்கள் அவரைத் தற்கொலை செய்யும்படி கூறுகின்றனவா எனக்கேட்கவும். அப்படி இருந்தால், உங்களைத் தற்கொலைசெய்யச் சொல்லுற அந்தக் குரல்களின் கட்டளைகளை உங்களால் எதிர்க்க முடிகிறதா? என்று கேட்கவும். மனச்சோர்வுடைய சிலர் இறப்புடன் தொடர்புடைய எண்ணங்களால் குழப்பமடைந்து இருப்பார்கள். உதாரணமாக, அவர்கள் இறந்தவர்களை கனவில் காணலாம். பிரேதவாடை வீசுவது போல உணரலாம் அல்லது தங்களது உடம்பு படிப்படியாக அழிந்து போவது போல உணரலாம். எங்கள் குடும்பத்தினது எல்லா விதமான துரதிஷ்ரங்களுக்கும் நாங்களே பொறுப்பு, எங்கள் பிள்ளைகளுக்கு ஏதோ நடக்கப்போகிறது,
நாங்கள் பெரிய பிழை விட்டு விட்டோம். போன்ற தவறான, ஆனால் உறுதியுடன் பேணப்படுகின்ற போலி நம்பிக்கைகளை சில மனச் சோர்வு நோயுடையவர்களில் அவதானிக்கலாம். இவ் வகைபட்ட தவறான நம்பிக்கைகளை அவர் கொண்டிருக்கிறாரா என்பதைப்பற்றி, அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் கேட்கவும். சில வேளைகளில் இவ்வாறான போலி நம்பிக்கைகள் அவரது உடல் சம்மந்தமானதாகவும் இருக்கலாம். உதாரணமாகத் தனக்குப் புற்று நோய் வந்துவிட்டது என்று எந்தவித ஆதாரமும் இன்றி அவர் நம்பலாம். தற்கொலை எண்ணத்தைப்பற்றி கேட்பது தற்கொலையை தூண்டிவிடும் என்ற எண்ணம் தப்பானது. தற்கொலை எண்ணத்தை அறியாமல் விடுவதே தப்பானது. உளநலத்துறை, மருத்துவத்துறையில் பணியாற்றுகின்ற யாவரும் மறக்காமல் எங்களது பயனாளிகள்ஃ நோயாளிகளில் தற்கொலை எண்ணம் இல்லை என்பதை ஊறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
.
எவ்வாறு உதவலாம்:-
நீங்கள் சந்திக்கின்ற அந்த நபர் தற்கொலை செய்யக்கூடியவரா? என்று ஆராய்ந்து பார்க்கவும். கீழ்வரும் விடயங்களில் ஏதாவது ஒன்று அல்லது பல அவரில் இருக்கின்றதா? எனக் கண்டறியவும். அப்படி ஏதாவது இருக்கம் பட்சத்தில் அவர் தற்கொலை செய்யக்கூடிய அபாயம் அதிகளவு இருக்கின்றது எனக்கொள்ளலாம். ஒருவர் ஏற்கனவே தற்கொலை முயற்சி ஒன்றில் ஈடுபடடிருந்தால், அம்முயற்சி எவ்வளவு பாரதூரமானதாக இருந்தது. என்று கணிப்பிடவும், மேற்கூறிய விடயங்களின் தொகுப்பைபாவித்து, அவர் இன்னமும் தற்கொலை புரியக்கூடிய ஆபத்தில் இருக்கிறாரா என்று மதிப்பிடவும்.
தற்கொலை செய்யக்கூடிய அபாய அறிகுறிகள்:-
மிக அதிகளவான விரக்தியோடிருத்தல், தங்களுடைய இறப்புப் பற்றி நேரடியாகவோ, மறைமுகமாவோ கதைத்தல் அல்லது எழுதுதல். தற்கொலை நோக்கத்திற்காக நஞ்சு, மருந்துக்குளிசைகள், அலரி விதைகள் போன்றவற்றை வைத்திருத்தல் அல்லது அவை இலகுவில் கிடைக்கக்கூடிய வழிவகைகளைப் பற்றிச் சிந்தித்தல். முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருத்தல். அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் யாராவது தற்கொலை செய்து இறந்திருத்தல். நாட்பட்ட அல்லது இறுதிக் கால நோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டிருத்தல். அவரைத் தடுக்கவோ, பாதுகாக்கவோ ஒருவரும் இல்லாத ஒரு தனிமையான சூழ்நிலையிலிருத்தல்.
மது. போதைவஸ்து போன்றவற்றைப் பாவித்தல் உண்மையாக ஒன்றும் இல்லாத போதே கேட்டல், பார்த்தல், மணத்தல் போன்றன இருப்பதாகக் கூறல் (மாயப்புலனுணர்வுகள்) தங்கள் குடும்ப உறுப்பினர்களையோ, தங்களையோ கொல்லக்கூடிய விரிவான திட்டத்தை வைத்திருத்தல். தற்கொலை செய்யக்கூடியவர்கள் என்று நீங்கள் யாரையாவது கருதினால், அவர் இனி அவ்வாறு செய்யமாட்டார் என்ற ஒரு நம்பிக்கை உங்களுக்கு வரும் வரைக்கும் அவரது வீட்டிலோ அல்லது பொதுவான ஓர் இடத்திலோ வைத்து அவரை அவதானித்தல் அவசியம். அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் போன்றோரின் துணையோடு அவரை அவதானிக்கவும். அவருக்கு பெரும்பாலும் வைத்திய சிகிச்சை தேவைப்படும். நீங்கள் அவருக்கு உளவளத்துணை அளிக்கத்தொடங்கலாம் .இப்படியானவர்களை, இயன்றளவு விரைவாக அவர்கள் முன்னர் பார்த்து வந்த தொழில் துறைகளுக்கோ அல்லது படிப்பவராயின் பாடசாலைக்கோ போய், தங்கள் தங்கள் கருமங்களில் ஈடுபடச் செய்வது நல்லது. அவர்கள் மனச்சோர்வு நோயின் தாக்கத்தினால்தான் இப்படி இருக்கிறார்கள் என்றும், அந்நோயிலிருந்து மீண்டதும் அவர்கள் பழைய நிலமைக்கு திரும்பி விடுவார்கள் என்றும் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நம்பிக்கையுட்டவும்.
சித்திரவதை, கற்பழிப்புப் போன்றவற்றிற்கு ஆளானவர்கள் இலகுவில் மனச் சோர்வடைந்து, தற்கொலை செய்து கொள்ளலாம். அது போல புற்று நோய், எயிட்ஸ், அங்கவீனம், சிறுநீரக நோய் போன்ற மாற்ற முடியாத நோய்கள் ஏற்பட்ட ஒருவரும் இலகுவில் நம்பிக்கையிழந்து தற்கொலை செய்யும் நிலமைக்கு வந்துவிடலாம். இப்படியான நிலமைகளில், அவரை ஓர் அனுபவமிக்க உளவளத் துணையாளருடன் தொடர்புபடுத்தவும். அத்துடன் அவருக்குத் தேவையான குடும்ப, சமூதாய ஆதரவையும் திரட்டிக்கொடுக்கலாம். உளநல மருத்துவரின் உதவி தேவைப்பட்டால் காலதாமதமின்றி உளநல மருத்துவரிடம் கொண்டு செல்லவும்.
மனச்சோர்வு நோய்க்கான மருத்துவமற்ற சிகிச்சைகள்:-
ஒரு பன்முக ஆளுமை அணியின் ஒருங்கிணைந்த சிகிச்சா முறைகள் பயனுடையவை. இனங் காணப்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உளவளத்துணை, பிரச்சனையை தீர்ப்பதற்கான உதவிகள், சார்ந்த வழிமுறைகள், தளர்வுப் பயிற்சிகள், நெருக்கீட்டு முகாமைத்துவம், கோபக் கட்டுப்பாடு, வாழ்க்கை ஆற்றல்கள், நாளாந்த செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல் என்பன தேவைப்படும். இவற்றை உளவள ஆலோசகர்கள், யோகா சிகிச்சையாளர்கள், தளர்வு பயிற்சியாளர்கள், உளசமூக சேவையாளாளர், தாதியார்கள், மருத்துவர்கள் போன்ற யாவரும் செய்யலாம்.
உளச்சோர்வு கோளாறிற்கான மருத்துவ சிகிச்சைகள்:-
பொதுவாக மிதமான, தீவிர உளச்சோர்வு நோயாளிக்கு மாத்திரைகள், மின்வலிப்பு சிகிச்சைகள் பொறுத்தமானவை. ஆரம்ப அறிகுறிகள் கட்டுப்பாட்டிற்கு வந்தவுடன் மருத்துவ, மருத்துவமற்ற அணுகுமுறைகள் இரண்டையும் ஒருங்கினைத்து பாதிக்கப்பட்டவரை மீள்நிலைக்கு கொண்டுவருவதற்கு பயன்படுத்துவது மிகப்பொறுத்தமானது. அரசாங்க வைத்தியசாலையில் உள்ள உளநலப்பிரிவுகளில் இம்மருத்துவ, மருத்துவமற்ற சேவைகள் இலவசமாக கிடைக்கின்றன. சந்தேசங்களை நீண்ட நாட்களிற்கு பின் போட்டு பிழையான அனுகுமுறைகள், பராம்பரிய சிசிச்சைகளில் அதிக நாட்களை வீணடிப்பது, பாதிக்கப்பட்டவறை மீள்நிலைக்கு கொண்டுவருவதற்கு மாறாக தற்கொலைக்கே இட்டுச்செல்லும். எனவே உளநலத்துறையினருடன் உடன் தொடர்பு கொள்வதே மிகப்பயனுடைய இடையீடாகும். ‘சமூகநாணம்’ அது நாங்கள் போர்த்துக் கொள்ளும் உடை, களைந்து விட்டு ஆகவேண்டியதைச் செய்யுங்கள்.
பாவனையில் உள்ள மருந்துகள்:-
பின்வரும் மருந்துகள் உளச்சேர்வு நோய்களிற்கான சிகிச்சைகளிற்கு பொதுவாக பாவனையில் உள்ளன. மருந்துகளை தேர்வு செய்வது உளநல வைத்தியரினதும், நோயாளியினது நோய்நிலையிலும், விருப்பத்தின் பேரிலும் இடம்பெறும். Amitriptyline, Doxepine, Imipramine-இவை ஆரம்பகால உளச்சேர்வு கோளாரிற்கான மருந்துகளாகும் இன்றும் சில மருத்துவர்கள் இதனை நம்பிக்கையுடன் பாவிக்கின்றனர்.
Citalopram, Escitaiopram, Fluoxetine, Paroxetine, Sertraline Venlafaxine, Reboxetine, Mirtazapine என்பன மிக அண்மைக்களமாக பாவிக்கப்படுகின்ற மருந்துகளாகும். இவை மிக விலைகூடிய மருந்துகளாகும்.
மின்வலிப்பு சிகிச்சை தேவையை பொறுத்து உளநலமருத்துவர்களல் கொடுக்கப்படும் பெரும்பாலும் தீவிர மனச்சோர்வுடன் தற்கொலை முயற்சி, தற்கொலை எண்ணங்கள், உயிரியல் செயற்பாட்டு பாதிப்புக்கள், மகப்பேற்றிற்கு பின்னான உளச்சோர்வு என்பவற்றிற்கு மின்வலிப்பு சிகிச்சை மிகப்பயனுடையது.
டாக்டர் . பா.யூடிரமேஸ் ஜெயக்குமார்.
சிரேஷ்ட உளநல மருத்துவர்,
உளநலச்சேவைகள், மட்டக்களப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக