வியாழன், 29 மார்ச், 2012

தனிமைப்பட்டு நிற்கும் இந்தியா

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா முன்மொழிந்து இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவு தெரிவித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் முழுமையானதாகவும் மனநிறைவு அளிப்பதாகவும் இல்லை என்பது உண்மை.


ஆனால், திட்டமிட்டு இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையில் சர்வதேச அரங்கில் 1987-ம் ஆண்டுக்குப் பிறகு இன்றுவரை இலங்கை இனப் பிரச்னை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஐ.நா. தீர்மானங்களில் இத்தீர்மானம் ஓரளவு பரவாயில்லை. இதன் மூலம் முழுமையான வெற்றி கிட்டாவிட்டாலும் முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது.
சர்வதேச சட்டங்களையும் மரபுகளையும் ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளையும் கொஞ்சமும் மதிக்காமல் அலட்சியம் செய்து தான்தோன்றித்தனமான வகையில் நடந்துகொண்ட இலங்கை அரசு இனி இவ்வாறு தொடர்ந்து செயல்படுவதை உலக சமுதாயம் அனுமதிக்காது என்பதற்கான சமிக்ஞையே இத்தீர்மானம் ஆகும்.

இத்தீர்மானத்தின் மீது ஐ.நா. அதிகாரப்பூர்வமாக அழுத்தம் தர முடியும். இதற்கு முன்புவரை இலங்கை மீது சட்டரீதியாகவும் சர்வதேச அமைப்பு ஒன்றின் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க எத்தகைய உரிமையும் இல்லாமல் இருந்தது. இப்போது அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

இத்தீர்மானம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் அல்ல. அவ்வாறு கருதுவது முழுமையானது அல்ல. மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைக் கூச்சமின்றி இழைத்த கொடுங்கோலர்களுக்கு எதிரான தீர்மானம் என்பதை இதற்கு எதிராக வாக்களித்த நாடுகள் உணர்ந்து கொள்ளவில்லை. இந்த உண்மையை உணர்ந்து செயல்பட இந்திய அரசும் தவறிவிட்டது.

தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போரில் இந்தியாவுக்கும் கணிசமான பங்கு உண்டு. ராஜபட்ச கும்பல் போர்க் குற்றங்களை இழைத்தது என்று சொன்னால் அதற்குத் துணை நின்ற குற்றம் இந்தியாவைச் சாரும்.
அமெரிக்கத் தீர்மானத்துக்கு இந்தியா கொடுத்த திருத்தம் இத்தீர்மானத்தை நீர்த்துப்போக வைத்துள்ளது. போர்க் குற்றம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் விசாரணை நடத்த முற்பட்டால் இலங்கை அரசின் சம்மதத்துடனும் முன் அனுமதியுடனும் செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் திருத்தமானது, குற்றவாளியை விசாரித்துத் தண்டிப்பதற்கு அவனின் சம்மதத்தையும் முன் அனுமதியையும் நீதிபதி பெற வேண்டும் என்பதற்கு ஒப்பாகும்.

மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு இந்தியா மீது கோபமாக இருக்கும் ராஜபட்சயைத் திருப்திப்படுத்துவதற்காக மார்ச் 24-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில் இந்த உண்மை வெளிப்பட்டிருக்கிறது. ""தீர்மானத்தில் இடம்பெற்றவைகளில் இலங்கைக்குச் சமன் நிலை ஏற்படுத்த இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றதைத் தாங்கள் அறிவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது இத்தீர்மானத்தைச் செயலற்றதாக்குவதற்காகவே இந்தியா அதை ஆதரிப்பதுபோல் புகுந்து மேற்கண்ட திருத்தத்தைக் கொண்டுவந்து இலங்கையைக் காப்பாற்றி உள்ளது'' என்பதை அப்பட்டமாக பிரதமர் தனது கடிதத்தின் மூலம் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இலங்கைக்கு நண்பனாகவும் உலகச் சமுதாயத்துக்கு நல்லவனாகவும் காட்டிக்கொள்ள முயன்று இறுதியில் அம்முயற்சியில் இந்திய அரசு அம்பலப்பட்டு நிற்கிறது.

அதுமட்டுமல்ல, இந்த வாக்கெடுப்பில் எந்தெந்த நாடுகள் ஆதரித்தன, எதிர்த்தன, நடுநிலை வகித்தன என்ற பட்டியல் அதிர்ச்சிகரமான ஓர் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறது.

நேரு, இந்திரா காந்தி காலங்களில் அணிசாரா நாடுகளின் வழிகாட்டியாகவும் தலைவராகவும் திகழ்ந்த நிலையில் இருந்து அடியோடு மாறி ஆசியாவில் இந்தியா இன்று தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளும் இந்தியாவின் ராணுவ உதவி உள்பட பல்வேறு உதவிகளைப் பெற்ற மாலத் தீவு, வங்கதேசம் போன்றவையும் இந்தியாவுடன் இல்லை. அணிசாரா நாடுகளின் அமைப்பை உருவாக்கிய நேருவுடன் இணைந்து நின்ற இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் இந்தியாவுடன் இல்லை. மேற்கண்ட நாடுகள் அனைத்தும் சீனாவுடன் கைகோத்து நின்று இத்தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.

நீண்டகாலமாக இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகத் திகழ்ந்த மலேசியாகூட நடுநிலை வகிப்பதாக அறிவித்துவிட்டது. இத்தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவருவதற்குப் பதில் இந்தியா கொண்டுவந்திருந்தால் சர்வதேச அரங்கில் இந்தியாவின் கௌரவம் உயர்ந்திருக்கும். அவ்வாறு நடந்துகொள்ள இந்தியா தவறியதன் மூலம் மேலும் மேலும் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்நாட்டில் அனைத்துக் கட்சிகளின் கடும் கண்டனத்துக்கும் ஆளாகி நிற்கிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைப்பதற்கு அந்நாட்டு அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக ஜெனீவா தீர்மானத்தை இந்திய அரசு கருதுவதற்குப் பதில் இத்தீர்மானத்தின் கிடுக்கிப் பிடியில் இருந்து இலங்கையைக் காப்பாற்றுவதையே நோக்கமாகக் கொண்டு இந்தியா செயல்பட்டிருப்பது என்றும் மாறாத அவமானத்தைத் தேடித்தந்துள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என தமிழக மக்கள் ஒன்றுபட்டுப் போராடியதன் விளைவாக இந்திய அரசுக்கு வேறுவழி இருக்கவில்லை.
தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் முன்மொழிந்து அனைத்துக் கட்சியினரும் ஆதரித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அதைப்போல தமிழகக் கட்சிகள் ஒன்றுபட்டு அறிவித்த பொதுவேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்கள் தில்லிக்கு அழுத்தம் கொடுத்தன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இணைந்து நின்று அழுத்தம் கொடுத்ததை இந்திய அரசால் மீற முடியவில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் இடைவிடாமல் ஒன்றுபட்டு நடத்திய போராட்டங்கள் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாகவும் கூட்டாகவும் நடத்திய போராட்டங்கள் ஆகியவற்றின் விளைவாக உலக நாடுகளின் கவனம் ஈழத் தமிழர் பிரச்னையில் திருப்பப்பட்டு, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இத்தீர்மானம் மிகப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டதற்கு அடிப்படையாக அமைந்தன.

போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்களையும் போர்க் குற்றங்களையும் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசுக்கு 3 ஆண்டு கால அவகாசத்தை உலகம் அளித்தது. ஆனால், இலங்கை எதுவும் செய்யாதது மட்டுமல்ல. மேலும் மேலும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளைத் தொடர்ந்தது. முள்வேலி முகாம்களில் இருந்த மக்கள் தங்கள் ஊர்களுக்கும் வீடுகளுக்கும் திரும்பிச் செல்லவும் மறு குடியமைப்புச் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை அரசு அளித்த வாக்குறுதி முற்றிலுமாக நிறைவேற்றப்படவில்லை.

தமிழர்களுக்கு ஓரளவு அதிகாரம் அளிக்கும் 13-வது சட்டத் திருத்தம் கிடப்பில் போடப்பட்டது.மனித மாண்புகளை கொஞ்சமும் மதிக்காது செயல்பட்ட அதிகாரிகள் மீது விசாரணையோ எவ்வித நடவடிக்கைகளோ இந்த மூன்றாண்டு காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

சர்வதேச மரபுகளையும் சட்டங்களையும் மதிக்காமலும் ஐ.நா.வுக்கு அடங்காத நாடாகவும் விளங்கும் சில நாடுகளைப்போல இலங்கையும் அடங்காப்பிடாரி நாடாக உருவெடுத்துள்ளது.

உலக சமுதாயத்தை வஞ்சகச் சூழ்ச்சி செய்து ஏமாற்றும் மோசடிக் கலையில் தேர்ந்து விளங்குகிறது. புத்தபிரானின் அருள்பொங்கிய நாடாக வர்ணிக்கப்பட்ட இலங்கை ரத்தவெறி கொண்ட நாடாக மாறியது.

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடனேயே உலக சமுதாயத்தின் பொறுப்பும் கடமையும் தீர்ந்துவிடவில்லை. மாறாக இதைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது வழக்குத் தொடுக்கவேண்டிய முக்கியமான கடமை உள்ளது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஒரு நிரந்தரமான நீதி அமைப்பு ஆகும்.

இனப்படுகொலை மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றை விசாரணை செய்து தண்டனை வழங்கும் அதிகாரம் அதற்கு உண்டு.

ஆனால், ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் 120 நாடுகள்தான் இந்நீதிமன்றத்தை உருவாக்கிய ரோம் உடன்படிக்கையில் ஒப்பமிட்டுள்ளன. சீனா, இந்தியா, இலங்கை உள்பட 42 ஐ.நா. உறுப்பு நாடுகள் ரோம் உடன்படிக்கையை அங்கீகரிக்கவோ ஒப்பமிடவோ ஆதரிக்கவோ இல்லை. எனவே, இந்தச் சூழ்நிலையில் இந்நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு எதிராக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஏற்கெனவே செர்பிய இனம் அல்லாதவர்களை இனப்படுகொலை செய்த குற்றத்துக்காக செர்பிய நாட்டின் தலைவராக இருந்த மிலோசேவிக் இந்நீதிமன்றத்தால் விசாரணை செய்யப்பட்டார். ஆனால், அவருக்குத் தண்டனை வழங்குவதற்கு முன்னாலேயே சிறையில் உயிரிழந்தார்.
மிக அண்மையில் சூடான் குடியரசுத் தலைவர் ஓமர் அல்-பசீர் என்பவரை இந்நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஐ.நா. ஒப்படைத்துள்ளது. இவர் மீது இனப்படுகொலை மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால், ரோம் உடன்படிக்கையில் ஒப்பமிடாத இலங்கைக்கு எதிராக இந்த நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்க முடியாது. ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி அதன்மூலம் ராஜபட்ச கும்பலை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியும்.

ஆனால், பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர்களான சீனாவும், ரஷியாவும் இதை அனுமதிக்காது. தங்களது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ரத்து செய்துவிடும்.

ஐ.நா. பேரவையில் இலங்கைக்கு எதிரான கண்டனத் தீர்மானம், பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கை போன்றவற்றைக் கொண்டுவந்து பெரும்பாலான நாடுகளின் ஆதரவு பெற்று நிறைவேற்ற வேண்டும். அப்போது அதற்கெதிராக எந்த வல்லரசும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது.

தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கை தீர்மானத்தை கடந்தகாலத்தில் இந்தியா முன்மொழிந்து மிகப்பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் ஐ.நா. பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதைப்போல இப்போதும் நாம் செய்ய முடியும்.

தமிழர்கள் பிரச்னை என்பதைவிட மனித குலப் பிரச்னை என்ற கோணத்தில் உலக நாடுகள் இந்தப் பிரச்னையை அணுகுவதற்கு இடைவிடாது முயற்சி செய்வதன் மூலமே வெற்றி பெற முடியும். அழிவின் விளிம்பில் நின்று கதறும் அந்த மக்களை மனதில் நிறுத்தி உறுதியுடன் தொடர்ந்து நமது கடமையாற்றுவோம்.

பழ. நெடுமாறன்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல