""சிவாஜியின் மிகப்பெரிய சொத்து அவருடைய ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்த கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை அவர் அதிகமாக வெளிப்படுத்தினார். "பாசமலர்' படத்தில் "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்...' பாடல் வரிகள் துவங்குவதற்கு முன் பால் தம்ளர் கையில் ஏந்தி வந்தவர், கண்ணுறங்கும் தங்கையைப் பார்த்து, வட்டக் கருவிழியின் அடியில் இலேசாக நீர் தேக்கி, பாசத்தை வெளிப்படுத்துவார்.
"பாவமன்னிப்பு' படத்தில் எம்.வி.ராதம்மாதான் தன்னைப் பெற்ற அன்னை என்று அரியாத சிவாஜி, ஒரு காட்சியில் நன்றிப் பெருக்கால் "அம்மா, அம்மா, அம்மா' என்று பாசத்தை, நன்றியை கண்களில் தேக்கி அழுது கொண்டே சிரிப்பார். புத்தரின் சாந்தத்தையும் அந்தக் கண்கள் வெளிப்படுத்தும். போதையுடன் தள்ளாடும் குடிகாரனையும் அந்தக் கண்கள் வெளிப்படுத்தும். அப்படி ஒரு ஆற்றல் மிக்க விழிகள் அவை. அழகான சிறிய உதடுகள் அவருக்கு. சிரித்தால் கன்னங்களில் எலுமிச்சம் பழம் போல கன்னச் கதுப்புகள், சிரிப்புக்கு அழகூட்டும். இடது பக்கமுள்ள சிங்கப்பல், கவர்ச்சியைக் கூட்டும்.
தமிழை அவர்போல் உச்சரித்த நடிகர்கள் இதுவரை பிறக்கவில்லை. தமிழ் மொழியில் அவரளவுக்கு அதிகப்படியான எண்ணிக்கையில் தமிழ் வார்த்தைகளைப் பேசி நடித்த நடிகர் வேறு யாருமே இருக்க முடியாது. ஒரு நடிகன் வேஷம் கட்டுவதிலேயே 50 சதவிகித மார்க் வாங்கிவிட வேண்டும் என்று சொல்வார். விதவிதமான வேடம் அணிந்து பார்ப்பதில் அவருக்கு அடங்காத வெறி உண்டு. சரித்திர நாயகர்களாக இருந்தாலும் சரி, புராண வேடங்களாக இருந்தாலும் சரி, சமூகத்தில் காணும் வித்தியாசமான மனிதரின் வேடமாக இருந்தாலும் சரி அவற்றை ஆதாரபூர்வமாகச் செய்து பார்க்க பெரிதும் முயற்சி எடுத்துக் கொள்வார் சிவாஜி.
"கட்டபொம்மன்', "கர்ணன்', "ராஜ ராஜ சோழன்', "அரிச்சந்திரன்', "ஜஹாங்கீர்' என ராஜா வேடம் போடும்போது உடைகள், கீரிடம், முகத்தின் தோற்றம், தாடி, மீசை, புருவம் இவற்றிலும், தலை முடியிலும் மாற்றங்களைத் தெளிவாகக் செய்வார். அதேபோல் ராமன், இராவணன், கிருஷ்ணன், நாரதர் என்று புராண வேடங்களை ஏற்கும்போதும் தேர்ந்த நாடகத்துறை உடையலங்கார நிபுணர்களை வைத்துக்கொண்டு காதில் அணியும் தோடு, ராமர், பரசுராமர், அர்ஜுனன் கையில் உள்ள ஆயுதங்களை எல்லாம சரி பார்ப்பார்.
"பாடி லாங்குவேஜ்' என்று சொல்கிற உடல்மொழி அவருக்கு முதல் படத்திலேயே வந்து விட்டதை "கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான், கற்பித்தானா' என்று நடிக்கும் ஒரே காட்சியை "பராசக்தி' படத்தில் பார்த்தாலே புரிந்துவிடும்.
சிவாஜி வேடத்தில் அவர் நடித்ததை நாம் பார்த்திருக்கிறோம். அந்த தலைப்பாகை, தாடையிலிருந்து நீண்ட தாடி, சிக்கென்ற ராஜ உடை, நீண்ட வாள் இவற்றுடன் நீண்ட வசனத்தை, அங்க அசைவுகளுடன் பேசி, சிங்க நடையோடு அவர் நடித்ததை இன்னொருவர் முயன்று பார்க்கட்டும். சங்கிலியால் கட்டிச் சபையில் இழுத்துவர புலி போல் ஒரு நடை நடந்து வருவார் "மனோகரா' படத்தில்! மரமேறும் சாமுண்டி கிராமணியாய் "காவல் தெய்வத்தில்' கைத்தட்டல் பெறவே ஒரு நடை நடப்பார். "போனால் போகட்டும் போடா' பாடலில் இசைக்கேற்ப, தாளத்துக்கேற்ப ஒரு நடை நடப்பார். "சட்டி சுட்டதடா, கை விட்டதடா' பாடலுக்கு ஒரு வித்தியாசமான "வாக்கிங் ஸ்டிக்' ஊன்றிய நடை. அப்பர் சுவாமிகளாக "திருவருட் செல்வரில்' முதிர்ந்த பெரியவர் நடை.
"வெற்றிவேல், வீரவேல், சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்திவேல்' என்ற "கந்தன் கருணை' பாடலில் முழங்கும் போர் முரசுக்கு இசைவாக ஒரு கம்பீர நடை. அவருடைய நினைவாற்றல், கிரஹிக்கும் சக்தி அபாரமானது. காட்சிக்கான வசனங்களை மற்றவர்களைப் படிக்கச் சொல்லி கேட்டு மனப்பாடம் செய்து கொண்டு நடிப்பதில் அவரைவிட வேறு யார் செய்ய முடியும்? நடிக்கின்ற எந்தக் காட்சியிலும் உணர்ச்சியின் உச்சத்தைத் தொடும் சிவாஜி அடிக்கிற காட்சிகளில் பாசாங்கு செய்ய மாட்டார், பட்டையைக் கழற்றி விடுவார்.
"உயர்ந்த மனிதன்' உச்சகட்ட காட்சியில் திருட்டுப் பழி சுமத்தப்பட்ட தன்னை பிரம்பால் அடிக்கும் காட்சியில் பிரம்பு நாலாய் தெரிக்கும் அளவிற்கு விளாசித் தள்ளி விட்டார். அவரைக் கட்டுப்படுத்த செüகார் ஜானகியும், பாரதியும் எவ்வளவோ முயன்று சட்டையை எல்லாம் கிழித்துக் கூச்சல் போட்டனர். இன்றும் அந்தக் காட்சியைப் பார்த்து கலங்காதவர் இருக்க முடியாது. ஜெமினியின் "விளையாட்டுப் பிள்ளை' படத்தில் ஒரு காட்சியில் பத்மினியின் கன்னத்தில் ஒரு அறை விட்டார். காது தோடு கழன்று ஓடி அடுத்த படப்பிடிப்புத் தளத்தில் விழுந்து விட்டது. ஷாட் முடிந்ததும் பத்மினி ஐந்து நிமிடம் அனுமதி பெற்று வெளியே போனார். போனவர் சிறிது நேரம் உள்ளே வரவில்லை. என்ன நடந்தது என்று பார்க்க உதவி இயக்குனர் சென்றார். நாற்காலியில் உட்கார்ந்து, முகம் சிவக்க, உதடுகள் துடிக்க, கண்களில் நீர் பெருக்கியவாறு இருந்தவரைப் பார்த்து பதறிப்போய், ""என்னம்மா'' என்று கேட்க, ""ஒன்றுமில்லை வலி தாங்க முடியவில்லை, முழுசா அழுதிட்டு வந்திடறேன், ஐந்து நிமிடம் பொறுத்துக்கங்க'' என்றாராம் பத்மினி.
உலகின் எந்த ஒரு நடிகனும் ஒரே நாளில் மூன்று வித வேடங்கள் ஏற்று நடித்ததில்லை. "டென் கமாண்ட்மெண்ட்ஸ்', "பென்ஹர்', "லாரன்ஸ் ஆஃப் அரேபியா', "ஓமர் முக்தார்', "சாந்தி' போன்ற எந்தப் படத்து ஹீரோவும் மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என்று ஒப்பந்த அடிப்படையில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அந்தப் படம் முடிந்த பின்னரே அடுத்த படம், வேடம் பற்றி சிந்திப்பார்கள். ஆனால் சிவாஜி காலையில் ரிக்ஷாக்காரன் வேடம் போட்டு நரைத்த தாடியும், பரட்டைத் தலையும் கிழிந்த கோட்டுமாய் கைரிக்ஷா இழுத்து நடிப்பார். பிற்பகல் மகாவிஷ்ணு வேடம் போட்டு, பாடல் காட்சியில் நடிப்பார். இரவு அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு பள பளப்பாக மின்னும் கோட்டும் சூட்டுமாக "சொர்க்கம்' படத்தில் நடிப்பார். ஹாலிவுட்டில் எந்த நடிகரும் இப்படி செய்திருக்க வாய்ப்பில்லை.
""அடுத்த தலைமுறைகளுக்குக் குறிப்பிட்டுச் சொல்ல எந்த வேடத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை. நாங்கள் எந்த வேடம் போட்டு நடித்தாலும், அவர் நடித்த, அந்த வேடங்களைத் தாங்கிய படங்களை முன்மாதிரியாக ஒரு முறை பார்த்துக் கொள்கிறோம். அந்த யுகக் கலைஞன் ஹாலிவுட்டில் பிறக்காதது அவரது துரதிருஷ்டம். தமிழ் நாட்டில் பிறந்தது நம் அதிர்ஷடம்'' என்று "இது ராஜபாட்டை அல்ல' என்ற தனது நூலில் சிவாஜிக்கு புகழாராம் சூட்டியுள்ள சிவகுமார். சிவாஜியோடு இணைந்து நடித்த "ராஜராஜ சோழன்' 1973-ல் வெளியானது.
தமிழில் தயாரிக்கப்பட்ட முதல் சினிமாஸ்கோப் சித்திரமான "ராஜ ராஜ சோழன்' படத்தில் நடித்த அனுபவத்தை கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார் சிவாஜி.
""நான் ஒரு சோழன். தஞ்சாவூர்க்காரன். ஆகையால் நான் ராஜ ராஜ சோழனாக நடித்தது எனக்கு மிகப்பெருமை. ஏனென்றால் என்னுடைய தாத்தா பாட்டன் ரோலை நானே நடித்தேன். அந்தப் படத்தை ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் திரு. உமாபதி எடுத்தார். அந்தப் படத்தை ஏ.பி. நாகராஜன் இயக்கினார். சரித்திர நாடகம், சரித்திரக் கதைகள் எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகம் செலவு செய்து எடுக்க வேண்டும். பிரம்மாண்டமான யுத்தக் காட்சிகளெல்லாம் காண்பிக்க வேண்டும். இப்படியெல்லாம் காண்பித்தால்தான் "ராஜ ராஜ சோழன்' நன்றாக இருக்கும்.
ஒரு சின்ன பாளையரக்காரனான கட்டபொம்மனையே பெரிய சக்ரவர்த்திபோல் காண்பித்தோம் அல்லவா? அப்படியிருக்க சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழனை எவ்வளவு சிறப்பாக காண்பிக்க வேண்டும்? அதையெல்லாம் அந்தப் படத்தில் சரியாகக் காண்பிக்கவில்லை. "ராஜ ராஜ சோழன்' படத்தை ஒரு குடும்ப நாடகம் போலதான் எடுத்திருந்தார்கள். நாடகம் போடும்போது அது சரியாக இருந்திருக்கலாம். ஆனால் திரைப்படத்திற்கு இந்த பாணி ஒத்து வருமா? இந்தப் பக்கம் மகன், அந்தப் பக்கம் அக்கா, இன்னொரு பக்கம் மனைவி, மற்றொரு பக்கம் மருமகள் என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டியதால் படம் அவ்வளவு சிறப்பாக ஓடவில்லை'' என்று "ராஜ ராஜ சோழன்' படம் குறித்து விமர்சித்துள்ளார் சிவாஜி.
இதுதான் அவரது தனி குணம். தான் நடித்து விட்டோம் என்பதற்காக தனது படங்களைப் பற்றி உயர்வாகப் பேசுகின்ற போக்கை சிவாஜி என்றுமே கடைப் பிடித்ததில்லை.
மற்றவர்கள் விமர்சிப்பதற்கு முன்னால் தனது படங்கள் பற்றி அவரே விமர்சித்து விடுவார். தனது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை பரிபூரணமாக உணர்ந்திருந்ததால்தான் தனது திரையுலகப் பயணத்தில் எந்தத் தடுமாற்றமும் இன்றி அவரால் வெற்றி நடை போட முடிந்தது.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக