பண்டாரநாயகா தினமும் காலை வேளைகளில் தன்னை பார்க்க வீட்டிற்கு வருபவர்களை சந்திப்பது வழக்கம். இதன்படி 25_9_1959 அன்று காலை 10 மணி அளவில் வீட்டிற்கு வெளியே பெரும் கூட்டம் கூடி இருந்தது. அவர்களை சந்தித்து விட்டு பண்டாரநாயகா வீட்டிற்குள் போனார்.
வாசலில் புத்த சாமியார் வேடத்தில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பார்த்ததும் பண்டாரநாயகா கை கூப்பி வணங்கினார். ஆனால் அந்த மனிதனோ தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து பண்டாரநாயகாவை நோக்கி சுட்டான்.
சற்றும் எதிர்பாராத பண்டார நாயகா அதிர்ச்சி அடைந்து, வீட்டிற்குள் ஓடினார். மர்ம மனிதனும் அவரைப் பின் தொடர்ந்து ஓடியபடியே சுட்டான். மொத்தம் 6 தடவை சுட்டான்.
பண்டாரநாயகாவை காப்பாற்ற சென்ற ஒருவர் மீதும் குண்டு பாய்ந்தது. அவரும் காயம் அடைந்தார். ரத்தம் பீறிட பண்டாரநாயகா கீழே விழுந்தார். உடனடியாக அவரை பெரிய (அரசாங்க) ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில், பண்டாரநாயகா உடலில் 4 குண்டுகள் பாய்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு குண்டு இடது மணிக்கட்டில் பாய்ந்து இருந்தது. இரண்டாவது குண்டு வலது விலாவில் பாய்ந்து கல்லீரலில் ஊடுருவி இடது பக்கம் விலா வழியாக வெளியே சென்று விட்டது. 3_வது குண்டு முதுகிலும், 4_வது குண்டு அடி வயிற்றிலும் பாய்ந்து இருந்தன.
இவற்றில் 3 குண்டுகள் உடலைத் துளைத்து விட்டு வெளியே சென்று விட்டன. வயிற்றில் தங்கிவிட்ட ஒரு குண்டை, 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அகற்றினார்கள். பண்டாரநாயகா சுடப்பட்ட செய்தி, காட்டுத்தீபோல இலங்கை முழுவதும் பரவியது. மக்கள் இடையே பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டன. இலங்கையில் "நெருக்கடி நிலை" பிரகடனப்படுத்தப்பட்டது. கலவரம் ஏற்படாமல் இருக்க ராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டன.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதும் பண்டாரநாயகா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-
"சாமியார் வேடம் அணிந்த ஒரு முட்டாள் என்னை சுட்டுவிட்டான். அவனை பழிவாங்கக் கூடாது. மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். ஆத்திரப் படக்கூடாது. நான் பிழைத்து எழுந்து சேவை செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த நெருக்கடி நிலையை தைரியத்துடன் சமாளிக்கும்படி எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு பண்டாரநாயகா கூறியிருந்தார்.
பண்டாரநாயகாவை சுட்ட மர்ம மனிதனை பொதுமக்கள் பிடித்துக்கொண்டனர். அடித்து உதைத்ததில் அவன் மயக்கம் போட்டு விழுந்தான். போலீசார் அவனை கைது செய்தனர். பண்டாரநாயகாவின் காவல்காரர் திருப்பிச் சுட்டதில் அவனுடைய தொடையில் குண்டு பாய்ந்தது. அவனும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அவனுடைய கூட்டாளி ஒருவனும் சிக்கினான்.
பண்டாரநாயகாவை சுட்டவன் பெயர் `சோமாரதரோ' என்று தெரியவந்தது. அவன் புத்த மத சாமியார். நாட்டு வைத்தியனாகவும் இருந்தவன். ஆபரேஷனுக்கு பிறகும் பண்டாரநாயகாவின் உடல்நிலை மோசமாகவே இருந்து வந்தது. ஒரு தடவை தண்ணீர் வேண்டும் என கேட்டார். 2_வது தடவை எழுந்து "சுட்டவன் எப்படி இருக்கிறான்" என்று விசாரித்தார்.
மறுநாள் (26_ந்தேதி) காலை 7 மணி அளவில் உடல் நிலை மேலும் மோசமானது. பண்டாரநாயகாவுக்கு மூச்சு திணறியது. ரத்த ஓட்டம் தடைபட்டது. 8 மணிக்கு உயிர் பிரிந்தது. அருகில் மனைவி மற்றும் 3 குழந்தைகளும் இருந்தார்கள்.
பண்டாரநாயகா இறந்த செய்தி உடனே ரேடியோ மூலம் இலங்கை மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டு இலங்கை முழுவதும் துக்கத்தில் மூழ்கியது. கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. இந்த செய்தி டெல்லிக்கு எட்டியதும் அரசியல் வட்டாரத்தில் பெருங்கவலை ஏற்பட்டது. இந்திய அரசாங்கக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. சென்னை கோட்டையிலும் கொடி அரை கம்பத்தில் பறந்தது.
பண்டாரநாயகாவின் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து பிரதமர் நேரு, ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், சுதந்திரக்கட்சி தலைவர் ராஜாஜி மற்றும் பல நாட்டு தலைவர்களும் அனுதாபச் செய்தி அனுப்பினார்கள். மரணம் அடைந்தபோது பண்டாரநாயகாவுக்கு 60 வயது. 1899_ம் ஆண்டு ஜனவரி 8_ந்தேதி பிறந்தார். இங்கிலாந்து நாட்டுக்குப் போய் படித்தார். வக்கீல் வேலை பார்த்தார்.
1927_ல் அரசியலில் குதித்தார். 1931_ல் இருந்து இலங்கை சட்டசபையில் உறுப்பினராக இருந்தார். 1936_ல் முதல் மந்திரியாக இருந்து வந்தார். 1951_ல் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியை தொடங்கினார். 1956_ல் பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
பண்டாரநாயகா திருமணம் ஆனவர். பண்டாரநாயகாவின் மனைவி ஸ்ரீமாவோ. இவர்களுக்கு சுனேத்ரா, சந்திரிகா என்ற 2 மகள்களும், அனுரா என்ற மகனும் இருந்தார்கள். பண்டாரநாயகா இறந்ததும் இலங்கை மந்திரிசபையின் அவசரக் கூட்டம் நடந்தது. "தனநாயகா" என்பவர் புதிய பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டார். உடனே அவர் பதவி ஏற்றுக் கொண்டார்.
பண்டாரநாயகாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக 4 நாட்கள் வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான சிங்கள மக்களும், இலங்கை வாழ் தமிழ் மக்களும் அவரது உடலை பார்த்து கண்ணீர் சிந்தினார்கள்.
பின்னர் பண்டாரநாயகா உடல் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வைத்து இறுதி ஊர்வலம் நடந்தது. பீரங்கி குண்டுகள் 19 தடவை முழங்க ஊர்வலம் புறப்பட்டது. 30 மைல் தூரத்தில் இருக்கும் பண்டாரநாயகாவின் சொந்த ஊரான `உரகோலா'வுக்கு ஊர்வலம் போய் சேர்ந்தது. அங்குள்ள பண்டாரநாயகாவின் வீட்டில் உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அக்டோபர் 1_ந்தேதி மாலை பண்டாரநாயகாவின் தந்தை அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்கு அடுத்தாற்போல் பண்டாரநாயகாவின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இலங்கை கவர்னர் ஜெனரல் குணதிலகா, புதிய பிரதமர் தனநாயகா, மந்திரிகள், பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள்.
உடல் அடக்க நிகழ்ச்சியில் 3 ஆயிரம் புத்த சாமியார்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு பலத்த போலீஸ் காவல் கொடுக்கப்பட்டது.
Maalaimalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக