அது குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தைவரம் அளிப்பது.
‘அரசமரத்தைச் சுற்றி, அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரையும் சுற்றி பிரயோஜனமில்லாமல் போனவர்கள், சாமியாரை சுற்றி வந்தால், சட்டென்று குமட்டிக்கொண்டு வரும்’ என்ற செய்தி பலராலும், பரவலாக அதிசயமாக பேசப்பட்டு வந்தது.
இப்படி ஒரு ‘அதிசயம்’ தன்னிடம் இருப்பதாக பேசிக் கொள்வதை கேள்விப் பட்டு சாமியாரும் அதிசயப்பட்டுப் போவார்.இப்படியாக ராஜயோகத்தில் பல நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கையில்.
ஒரு நாள் அந்த Infertility Research சாமியரை, அதான் மலட்டுத்தன்மையைப் போக்கும் மகப்பேறு ‘சாமியாரைப் பார்க்க ஒரு பெண் வந்தார்.
அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் இந்த D.G.O சாமியார் திடுக்கிட்டுப் போனார். சாமியாரைப் பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் திடுக்கிட்டுப் போனார்.
இப்படி இருவரும்,‘திடுக் திடுக்’ படக் காரணம் என்ன? இருவரின் கடந்தகால வாழ்க்கையிலும், சட்டென்று உதறிக் கொள்ள முடியாத உறவொன்று இருந்தது.
என்ன உறவு?
கணவன் – மனைவி உறவு. நமது குழந்தை வர சாமியாருக்கு குடும்பமே ஒன்று சேர்ந்து மிகவும் குதூகலத்தோடு ஒரு திருமணத்தை நடத்தி வைத்திருந்தது.
ஆனால் நம் சாமியார், ஒரு உண்மையை மறைத்ததே. அந்தத் திருமணத்தை செய்து கொண்டிருந்தார்.
திருமணத்திற்குப் பிறகு பல பொய்களை கூறியும், நாடகம் நடத்தியும் கூட அந்த உண்மையை அவரால் மனைவியிடம் மறைக்க முடியவில்லை.
ஆம், அவர் தாம்பத்திய உறவில் ஈடுபட சுத்தமாக ஆர்வமற்றுக் கிடந்தார்.
இரவில் பெண் அவருக்கு ஒரு பேயைப் போல் தெரிந்தாள் போலும்.ஒரு நள்ளிரவில், கும்மிருட்டில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு எடுத்தார் ஓட்டம். பிறகு அவர் புகழ்பெற்ற பிள்ளைவர சாமியாரானார்.
‘எங்கோ கண்காணாத இடத்துக்கு போன தன் கணவனை கண்டுபிடித்து தர வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளவே சாமியாரை நோக்கி வந்திருந்தார் அந்தப் பெண்.
இன்னொரு சாமியார், இவர் அகில இந்திய புகழ் பெற்றவர். இந்தியாவின் பெரிய அரசியல் தலைவர்களிலிருந்து, மிகப் பெரிய பணக்காரர்கள்வரை இவரின் சீடர்கள்.
‘இவர் பேசவே வேண்டாம். பார்த்தாலே போதும். நமது பிரச்சனைகள் அகலும்.
நாம் ஒரு பரவச நிலைக்கு செல்வோம்’ என்கிறார்கள் அவரின் பக்தர்கள். பலரின் பிரச்சினைகளைத் தீர்க்கும் இந்தப் ‘பரவச சாமியாருக்கு’ ஒரு பிரச்சினை வந்தது. பார்வைக் கோளாறு.
தன் எதிரில் நிற்பது யார் என்பது தெரியாமலேயே பார்த்துக்(?)கொண்டிருப்பார் சாமியார்.
இப்படி கண்பார்வை மங்கிப்போய் கிடந்த சாமியாரைப் பார்த்து, பரவசமடைய புகழ் பெற்ற கண்மருத்துவர் ஒருவர், காஞ்சிபுரம் வந்து ‘ஸ்வாமி’ களின் காலடியில் விழுந்தார்.
வந்திருப்பது கண் டாக்டர் என்பதை கேட்டுத் தெரிந்துக் கொண்டார் ‘பரவசம்.’
தன் குறைகளைச் சொல்லி, ஆறுதலும், ஆசியும் வாங்க வந்த டாக்டரிடம், தன் குறையைச் சொல்லி வருத்தப்பட்டார் பரவச சாமியார்.
டாக்டரும் பணிவோடும், பக்தியோடும் ஒரு நல்ல மங்களகரமான நாளில் – கண்அறுவை சிகிச்சை செய்து, பரவச சாமியாருக்கு ‘அறிவுரை’ வழங்கினார்.
“‘தலைக்கு குளிக்காதீர்கள். குளித்தால் கண்ணுக்கு ஆபத்து‘’ என்றார்.
‘இவன் என்ன எனக்கு அறிவுரை வழங்குவது? அது என் வேலையாயிற்றே ’ என்ற எண்ணம் பரவசத்திற்கு வந்துவிட்டது போலும். தீபாவளி அன்று தலைக்கு ‘கங்கா ஸ்நானம்’ செய்ய, அந்தக் கண் குருடானது.
பின் நாட்களில், ‘அறிஞர்களும்- அரசியல் தலைவர்களும்’ அந்தக் கண்ணைப் பார்த்துதான் சொன்னார்கள், “அருள் வழிகிறது. ஒளி தெரிகிறது. பிரகாசிக்கிறது” என்று.ஆனால், பரவசம் நினைத்துக் கொண்டு இருப்பார். ‘அடப்பாவிகளா உங்களுக்கு என் கண்ணுல அருள் வழியுது, ஒளி தெரியுது ஆனா எனக்கு கண்ணே தெரியிலடா’.
இந்த இரண்டு சாமியார்களின் சம்பவங்களிலும் வெளிப்படுகிற செய்தி, வழுக்கைத் தலையில் முடி வளர மருத்துவம் செய்வதாக சொல்லுகிற டாக்டரே, வழுக்கை மண்டையாக இருப்பதுபோல் - எந்த விஷயத்திற்காக அவர்கள் மற்றவர்களுக்கு அருளாசி வழங்கினார்களோ, அந்த விசயத்திலேயே அவர்கள் பாதிக்கப்பட்டுக் கிடந்தார்கள்.
பிரச்சினைகளால் சுற்றி வளைக்கப்பட்டு, ‘எதைத்தின்றால் பித்தம் தெளியும்?’ என்று அல்லாடுகிற மக்களை, பொய்சொல்லி, ஏமாற்றி அவர்களை கேலிக்குரியவர்களாக்கி, அவமானப்படுத்துகிறார்கள் சாமியார்களும், அவர்களை முன் நிறுத்தி லாபம் சம்பாதிக்கும் நபர்களும்.
ஒரு துறவி, சாமியார் என்பவர் தனிப்பட்ட முறையில் ஆன்மீக தேடல்களில் ஈடுபட்டு காடு, மலை என்று பைத்தியம்போல் அலைந்து கொண்டிருந்தால் அதைப்பற்றி நமக்கு கவலையுமில்லை. கேள்வியுமில்லை.
எல்லா மனிதர்களைப்போலவே, அரிப்பெடுத்தால் சொரிந்துக் கொண்டு, உண்டு உறங்கி, கழித்து வாழ்கிற மனிதனை மற்ற மனிதர்களை விட அதீத சக்தி படைத்தவன் என்று சொல்லுகிற அநாகரீகத்தை எப்படி சகித்துக் கொள்வது ?
மக்களின் மூளையில் வலை விரிக்கிற அந்த மோசடியை எப்படி பொறுத்துக்கொள்வது ?
“எல்லா சாமியார்களும் அப்படி இல்லை. சில போலிச் சாமியார்களால், சாமியார்களுக்கே கெட்டப்பெயர்” என்று விளக்குகிறார்கள் சிலர்.
மாட்றவரைக்கும் சாமியார்.
மாட்டிக்கிட்டா போலிச்சாமியாரா?
1994 -க்கு முன் பிரேமானந்தாவும் சாமியார்தான்.
பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காக சாமியாரிடம் சென்று, பின் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள். சாமியாரிடம் ஆசி வாங்கச் சென்று, குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு தற்கொலைச் செய்து கொண்ட குடும்பங்கள் ஏராளம். பாலியல் வன்முறைக்கும், கொலைகளுக்கும் ஆளான பெண்களும், சிறுவர்களும் அதைவிட ஏராளம்.
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களுக்கு சில சாமியார்கள், நடுத்தர வர்க்கத்திற்கென்று சில சாமியார்கள், வசதி படைத்தவர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு பிரபலமானவர்களுக்கென்று சில சாமியார்கள்.
இப்படி வர்க்க வேறுபாடுகளோடும், இந்த ஜாதிக்கு இந்த சாமியார் என்றும் வகை வகையாக பிரித்திருக்கிறார்கள், பற்றற்ற சாமியார்கள்.
‘எல்லாம் சரிதான். ஏதோ கொஞ்சம் மனநிம்மதிக்கு சாமியாரைப் பார்த்தா, அது கூட தப்பா?
சக மனிதர்களின் மீது நம்பிக்கையின்மை, பொறாமை, ஆத்திரம் அவர்களின் பிரச்சினைகளில், துயரங்களில் பங்கெடுக்காத அதைப்பற்றி கொஞ்சமும் அக்கரையற்றத் தன்மை, எந்த நேரமும் தன்னைப்பற்றியான ஞாபங்களிலேயே மூழ்கி கிடப்பது, பொருளாதார பின்னணியோடு நிறைய எதிர்கால திட்டங்களை (ஆசைகளை) வளர்த்துக் கொள்வது, இவைகளே சாமியார்களையும் நோக்கி பயணப்படுவதற்குக் காரணம்.
துயரங்களில் துவண்டு போகிற மனிதனுக்கு ஆதரவாக கரம் நீட்டுங்கள். அதுவே தியானம். அது உங்களின் துயரங்களின் போது திரும்ப நீளும்.
‘இவனோடு பழகுவதால் லாபம்’ ‘இவனோடு பழகி என்ன லாபம்? என்று நட்பை கூட்டி கழித்து, கணக்குப் பார்க்காதீர்கள்.
எந்த வேலையும் இன்றி சோம்பேறியாக கொழுத்துக் கிடக்கிற சாமியார்களின் கால்களில் விழாதீர்கள். அவர்களின் வாழ்க்கையில் இருந்து பாடம் கற்காதீர்கள்.
உங்களைச் சுற்றி இருக்கிற மனிதர்களின் வாழ்க்கையை உற்று நோக்குங்கள்.தனது வாழ்க்கையில் ஓய்வென்பதே இல்லாமல் 70-வயதுக்கும் மேலும் கொளுத்தும் வெயிலில் கை வண்டி இழுத்து உழைக்கிற அந்த முதியவரின் வாழ்க்கைச்சொல்லும் ஆயிரம் அர்த்தம்.தனது தள்ளாத வயதிலும், கூடை நிறைய பொருள்களை வைத்து, அதை தலையில் சுமந்து, மாடி மாடியாக ஏறி வீதி வீதியாக சென்று ஒரு பத்து ரூபாய்க்காக படாதப்பாடுபடும் அந்த மூதாட்டியின் துயரங்களை புரிந்துக் கொள்ளுங்கள், வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்.
‘தினகரன் வசந்தம்’ இதழில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக