கூச்ச சுபாவம் உள்ளவனாக இருந்தபோதிலும், கணபதி முன்கோபியாக இருந்தான். எதையும் வெளிப்படையாகவே பேசுவான். தனது வாதம் பிழை என்பதை அறிந்தால் உடனே மன்னிப்புக் கேட்டகத் தயங்கமாட்டான். அழகம்மாவின் அணுகுமுறை அவனுக்குப் பிடித்திருந்ததால் அவள் மீது அளவு கடந்த ஆசை வைத்திருந்தான்.
எல்லாம் கொடுத்த இறைவன் அவர்களுக்குப் பிள்ளைப் பாக்கியத்தைக் கொடுக்க மறந்து விட்டான். ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தங்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்குமே என எண்ணி ஏழை, எளிய பிள்ளைகளை அன்புடன் அரவணைத்து உதவி புரிந்து வந்தனர். இருந்தும் குழந்தை கிடைக்கவில்லை. உடல் ஆரோக்கியமாக இருந்தும் தமக்கு குழந்தை பிறக்கவில்லையே என கணபதியும், அழகம்மாவும் மனவேதனைப்பட்டனர், ஏங்கினர்.
சகோதர சகோதரிகள் கொழும்பு சென்று விசேட வைத்தியரிடம் காட்டுமாறு ஆலோசனை கூறினர். ஆயினும் இருவருமே அதற்கு மறுத்துவிட்டனர். இருவரின் ஒருவருக்காவது மலட்டுத்தன்மை இருக்குமென்பதையறிந்தால் அதைத் தாங்கும் இதயம் அவர்கள் இருவருக்குமே இல்லை.
இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய அவர்கள் விரும்பவில்லை. இறைவன் விதிப்படி நடப்பது நடக்கட்டும் எனத் தேறினர். வாழ்வோ சாவோ எதுவாக இருந்தாலும் இருவரும் இணைந்து ஒன்றாகவே ஏற்பது என்ற முடிவில் வலுவாக இருந்தார்கள். ஊரார் கணபதியையும் அழகம்மாவையும் மலடன், மலடி என மறைவாகப் பேசினர்.
அவளுக்கு அவன் குழந்தையாகவும், அவனுக்கு அவள் குழந்தையாகவும் பரஸ்பரம் அன்பைச் செலுத்தி வாழ்ந்து வந்தனர். மேலும், அழகம்மா தங்கைகளின் குழந்தைகளை தன் குழந்தைகளாகப் பேணி வளர்த்துக் கொடுத்ததோடு அவர்களுக்குத் தேவையான செலவுகளிலும் பங்கு எடுத்துக் கொண்டாள்.
‘குழந்தைகள் இல்லாத வீட்டில் கிழடுகள் குழந்தைகளாக விளையாடுவதைப் பாருங்கடி’ என்று அக்கம் பக்கம் பரிகாசம் பண்ணுவதை அழகம்மா அறியாமலில்லை. அழகம்மாவின் தங்கைகளான செல்லம்மாவும், கருணையம்மாவும் அக்காவின் வேதனையைப் போக்க தங்கள் குழந்தைகளை அப்போதைக்கப்போது அனுப்பி வைத்தனர்.
இருந்த போதிலும் இரவில் குழந்தையில்லாத் தனிமை அவர்களை வாட்டி வைத்தது. பக்கத்து வீட்டு அலமேலு, எதிர் வீட்டு இராசம்மா ஆகியோர் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மலடி என சூசகமாக குத்திக்காட்டி மகிழ்ந்து வந்தனர். இவர்களைப் போல பிறரின் துன்பத்தில் குளிர் காய்கின்ற எத்தனையோ பேர் இச்சமூகத்தில் இல்லாமல் இல்லை.
கணபதிக்கு நாற்பத்தைந்து வயதில் எதிர்பாராது ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் உயிர் பிரியும் நிலை ஏற்பட்டது. நாற்பது வயதான அழகம்மா அலறித் துடித்ததைக் கண்டு அந்த ஊரே அனுதாபப்பட்டது. தன் உயிரே பறிபோய்விட்டதாக எண்ணிக் கூவிக் குலுங்கினாள். “பிள்ளைகள் இல்லாத குறையையும் உன்மூலம் தீர்த்தேனே ராசா. என்னைத் தனியாக விட்டு விட்டு போக உங்களுக்கு எப்படி மனம் வந்தது மன்னவா? நோன் என்ன பாவம் செய்தேன்? கூடிவாழக் கணவனுமின்றி கொள்ளி வைக்கப்பிள்ளையுமின்றி இன்னுமேன் நான் வாழவேண்டும் இறைவா என்னைத் தனியே விட்டிட்டுப் போயிட்டீங்களே! என்னையும் உங்களோடு எடுத்திருங்க.... எடுத்திருங்க” என தலை மேலும், மார்பு மேலும் அடித்து அழது புலம்பியவளைச் சகோதரிகள் அனைத்து தேறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினர்.
கணபதி இறக்குமுன் இருந்தாற்போலிருந்து ஒரு நாள் “அழகம்மா, மச்சான் மாரையெல்லாம் வேணாம் என்று சொல்லிப்போட்டு என்னைக் கழியாணம் கட்டி என்னத்தைக் கண்டாய்” என்று கேட்க
“ஏன் இப்படிக் கேட்கிaங்க. நீங்கள் என்னத்தில எனக்குக் குறை வைச்சீங்க” அன்போடு பதிலிறுத்தாள்.
“உனக்கொரு குழந்தையை என்னால் கொடுக்க முடியாது போயிட்டேயம்மா” விரக்தியோடு கூறினான்.
“உங்களைப்போல ஆளுமைமிக்க ஒரு புருசனை நான் அடைந்ததே பெரும் பாக்கியங்க. குழந்தை பிறக்காததற்கு நீங்க மட்டும் காரணமில்லை. நானாக்கூட இருக்காலம் இல்லையா?.......” அவள் சமாளிக்க.
“இருந்தாலும் நான்.......” ஏதோ சொல்ல வந்தவனை இடைமறித்து
“நீங்க ஒரு உத்தம புருசருங்க. நானும், உங்க பெற்றோரும் இரண்டாம் தாரமாய் கலியாணம் கட்ட எத்தனையோ தரம் சொல்லியும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அழகம்மா ஒருத்திதான் எனக்கு மனைவி என்று சொன்னீங்களே இதைவிட ஒரு மனைவிக்கு வேறு என்னங்க வேண்டும் சொல்லுங்க” பெருமைப்பட்டாள்.
“என்னதம்மா பெரிசா நான் சொல்லிப்போட்டன். ஸ்ரீ இராமகிருஷ்ண சுவாமி சரதாமணியம்மையாரை அம்பாளாக நினைத்து வணங்கினாராமே அதற்கு முன்னாடி நான் சொன்னது ஒரு தூசி இல்லையா அழகு”
“அவரு ஒரு அவதார புருஷருங்க நாம சாதாரண ஆளுகள்தானே”
“அழகு!” சொல்லத் தயங்கினான்.
“என்னங்க, ஏதோ சொல்ல வாறாப்போல.......”
“இல்ல சும்மாதான்.......”
“ஊகும்! பொய் சொல்லாதீங்க, என்ன சொல்ல வந்தயளோ அதைச் சட்டுப் புட்டென்று உடைச்சுச் சொல்லுங்க.” அறிய ஆவல் பட்டாள்.
“இல்ல....... வந்து....... நான் உனக்கு முதல் செத்துப்.......” முடிக்க முதலே பயந்து வாயைக் கையால் பொத்தினாள். கையை விலக்கி
“இல்லம்மா ஒரு கதைக்கு.......”
“இல்லையில்ல விளையாட்டுக்கும் அப்படிச் சொல்லாதீங்க மஞ்சள் குங்குமத்தோடதான் நான் போகவேணும்”
“அதுக்கில்ல....... நீ தனிச்சுப் போவியோ என்ற பயம். நான் என்றாலும் ஆண்பிள்ளை. நீ பொட்டச்சி என்ன செய்வாய் என்ற.....”
“அந்தப் பேச்சை நிறுத்துங்க, கடவுள் அந்தமாதிரியெல்லாம் என்னைச் சோதிக்கமாட்டார்” என்று திடமாகக் கூறியவளுக்கு அவன் இழப்பு பேரிடியைக் கொடுத்தது.
ஐப்பசி மாதம் ஆரம்பம். வடகீழ்ப் பருவப் பெயர்ச்சியால் மழையும் ஆரம்பித்து விட்டது. மழை நின்றும் இன்றும் தூவானம் விடவில்லை. மறைப்புக் கட்டிய இடதுபக்க விறாந்தை மூலையில் வைக்கப்பட்டிருந்த அடுப்பும் சிறிது நனைந்திருந்தது. நேரமும் காலை ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. நினைப்பை மறந்தவளாக அழகம்மா ஈரம்பட்ட அடுப்பை உமிபோட்டு உலர்த்தினாள். ஈரமான கொள்ளிகளை அடுப்பில் மாட்டி சிறிது மண்ணெண்ணெய் விட்டு நெருப்புப் பெட்டியை எடுத்து உரசி அடுப்பைப் பற்ற வைக்கிறாள். இறைவனை மனதுள் நினைத்து வணங்கியவளாக அப்பச் சட்டியை அடுப்பில் வைக்கிறாள்.
மேல் சட்டியில் விறகை மூட்டுகிறாள். நல்லெண்ணெய்க் கிண்ணியை எடுத்து அதில் தோய்ந்து இருக்கும் சீலைத் துண்டால் சட்டியின் உள்ளகத்தில் துளாவி எடுத்துவிட்டு, கூழாக்கி வைத்திருந்த அரிசி மாப்பானையிலிருந்து அகப்பையால் அள்ளி சட்டியில் விட்டு சுற்றி துளாவி விடுகிறாள். இன்னொரு கிண்ணியில் இருந்த தேங்காய்ப்பாலில் ஒரு கரண்டியை எடுத்து அப்பத்தின் நடுவாக விட்டு வெப்பமேற்றிய மற்றச் சட்டியை மேலே தூக்கி வைக்கிறாள். இப்படியாக அழகம்மா அப்பம் சுடத் தொடங்கினாள். பள்ளிக்குப் போகும் பிள்ளைகள் வேறு வந்து விட்டார்கள் பழக்க தோசத்தால் கடகடவென வேலையில் மூழ்கினாள். சுடச்சுட அப்பங்கள் விலை போயின. வாடிக்கையாளர்கள் அனைவரும் வந்து போய்விட்டனர்.
கடைசியாக இரு அப்பங்கள் மிஞ்சின தண்ணீர்ச்சோறு மிஞ்சாததால் ‘நல்லது நமக்கு காலைச் சாப்பாட்டுக்கு உதவுமென’ அடுப்படியை ஒதுங்கப் பண்ணினாள் அழகம்மா. அப்போது யாரோ வந்து எட்டிப் பார்த்துவிட்டு தயங்குவது தெரிந்தது. எட்டிப் பார்த்த அழகம்மா “யாரது அலமேலு அக்காவா? அதிசமயமாக இருக்கே பரவாயில்லை வா அக்கா” ஐம்பது வயதிலிருந்த அலமேலுவைப் பார்த்து கூப்பிட்டாள் அழகம்மா. “என்மேல் கோபம் கீபம் இல்லையே அழகு?” சங்கடப்பட்டு தங்கிய அலமேலு முன்னாள் வந்தாள். “நான் எதுக்கக்கா கோபிக்கபோறன்.
இரண்டு மூன்று வருடங்களாகக் கதைக்காம இருந்த நீங்க இப்படித் திடீரென்று வரத்தான் அப்படிக் கேட்டன்” “உண்மைதான் அழகு எல்லாம் என்னுடைய போதாத காலம்தான், இப்பதான் உண்ட அருமை இந்த மரமண்டைக்கு விளங்குது. என்னை மன்னிச்சிடு அழகு” இரந்து கேட்டபடி அலமேலு முன்னாள் வந்தாள். “வாங்கக்கா வாங்க இப்படி இருங்க” எந்த வருத்தமும் இல்லாமல் வெள்ளை மனத்தோடு ஆதரித்தாள் அழகு. அலமேலு வந்து அழகம்மாவின் பக்கத்திருந்து;
“எவ்வளவு கதையத்தான் சொல்லி உன் மனதை நோகடிச்சிருப்பன். நீ ஒரு பொறுமைசாலி. அவ்வளவையும் கேட்டுட்டு பேசாமல்தானே இருந்த நீ” ஆதங்கப்பட்டாள்.
“பழசெல்லாம் எதுக்கு விட்டுத்தள்ளுங்கக்கா” பெருந்தன்மையோடு கூறினாள்.
“முடியல்லியே அழகு குற்றமுள்ள மனம் குறுகுறுக்குது. எவ்வளவு பெரிய மனம் உனக்கு உனக்குப்போயி.......”
“போனதெல்லாம் வருமாக்கா. எல்லாம் விதிப்படிதான் நடக்கும் (பெருமூச்சுவிட்டு) எனக்கு இப்டியொரு நிலை வருமென்று நான் எண்ணியிருந்தேனா? எல்லாம் இறைவன் செயல். அவன் விட்டபடி நடக்கும்?” தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள். “அந்தப் பக்குவம் உனக்கு மூத்த எனக்கு வரமாட்டேங்குதே அழகு, இன்றைக்கு என் நிலையைப் பார். வினைவிதைத்தவன் வினை அறுப்பான் என்பதுபோல எல்லாம் நடந்திருக்கு” கண்களில் கண்ணீர் வழிய அலமேலு கூறினாள்.
அலமேலும் இரு ஆண்களையும் ஒரு பெண்ணையும் பெற்றவன். சிறு வயதிலேயே பெண்பிள்ளை தவறிப்போக மிகச் செல்லமாக இரு ஆண்களையும் வளர்த்துக் வந்தாள். அவள் கணவர் கந்தையா நல்லவர்தான். ஆனாலும் கேட்பார் புத்தி கேட்பவர். அதனால் பிள்கைளை ஒழுங்காக வளர்க்கவில்லை. அலமேலுவும் மற்றவரைப் பற்றி வக்கணம் பேசிறதும், கோள் குண்டனி சொல்லுறதுமாக ஊராரைப்பற்றி கதை அளந்து திரிவதால் பிள்ளைகளின் கல்வியிலோ, நடத்தையிலோ அக்கறை செலுத்தவில்லை.
இதனால் மூத்தவன் விஜயனும் இளையவன் பாலனும் படிப்பில் கவனம் செலுத்தாமல் அடங்காப் பிடாரிகளாக முரட்டுச் சுபாவம் உள்ளவர்களாவே வளர்த்து விட்டனர். படிப்பையும் இடையில்விட்டு கெட்ட பிள்ளைகளோடு கூட்டிக் கெட்டுப் போயினர். புகை பிடிப்பதோடு மதுப்பழக்கத்திற்கும் ஆளாயினர். கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வது போல பிள்ளைகளைத் திருத்த அலமேலும்வும், கந்தையா, எடுத்த முயற்சிகள் விழலுக்கிறைத்த நீராயின. தினமும் வீட்டில் சண்டை. வெட்கத்தில் கந்தையா, வயல் குடிலில் இருந்துகொண்டு அடிக்கடி வந்து போனார். பெத்தமனம்பித்து பிள்ளை மனம் கல்லு என்பதைப்போல அவனுகள் செய்யும் அட்டூழியங்களைப் பொறுத்துக் கொண்டு அலமேலு அவனுகளுக்கு ஆக்கிப் போட்டாள்.
ஒரு நாள் எதிர்பாராது வயலில் வைத்து கந்தையாவுக்கு பாம்பு தீண்டி விட்டது. இரவானதால் எதுவும் செய்ய முடியாத நிலையில் விஷம் ஏறிவிட்டது. விடிய விஷயத்தைக் கேள்விப்பட்ட அலமேலு அலறியடித்துக்கொண்டு ஓடினாள். மனுசன் உயிர் விட்டிருந்தார். ஒரு மாதிரியாக குடும்பம் எல்லாம் சேர்ந்து பிரேத அடக்கம் நடைபெற்றது. பிள்ளைகள் இருவரும் தந்தையின் மறைவை முன்னிட்டு கொஞ்சநாள் அமைதியாக இருந்தனர். பிற்பாடு அலுமேலுவை அடித்து உதைத்து வயலைப் பங்குபோட்டு எழுதி எடுத்தனர். எழுதி எடுத்த கையோடு திருமணமும் முடித்துக் கொண்டனர். கொஞ்ச நாட்களில் பிள்ளைகள் வீடு வளவையும் விற்று பங்குபோட்டுக் கொண்டனர்.
சில வாரங்கள் தாயை மாறி, மாறி இருவரும் தங்கள் வீடுகளில் வைத்துப் பார்த்தனர். மனைவிமார்களின் பேச்சைக் கேட்டதாலும், அலமேலுவிடம் வேறு பசை ஏதுவும் இல்லாததாலும் பெற்ற தாய் என்றும் பாராமல் துரத்திவிட்டனர். பரிதாபத்தில் வீடு வளவை வாங்கிய பங்கயம் மாமி அலமேலுவைக் கூப்பிட்டு ஒரு குடிலும் வைத்துக் கொடுத்துள்ளாள். வயல்களில் கதிர் பொறுக்கியும், அக்கம் பக்கத்தில தொட்டாட்டு வேலைகள் செய்து கொடுத்தும் அன்றாடம் வயிற்றை கழுவிக் கொண்டிருக்கிறாள். ஒரு நெடுமூச்சோடு அலமேலு அழகம்மாவைப் பார்த்து.
“நீ சொன்னது சரிதான் அழகு. எல்லாம் விதிப்படிதான் நடக்கும். முற்பகல் செய்யின் அது பிற்பகல் விளையும் என்பது என்னைப் பொறுத்தவரை சரிதான். சும்மாவா சொன்னாங்க மனம்போல வாழ்வு என்று” மீண்டும் நெடுமூச்சுவிட்டாள். “ஏனக்காக வீணாக வேதனைப்படுகிaங்க?” “பின்ன என்ன செய்யிற அழகு? உன்னைப்பார் பெறாமக்கள் அடிக்கடி வந்து பார்த்து உதவி செய்தாலும் நீ வேண்டாம் என்று தடுத்துப்போட்டு சுயமாகப் பாடுபடுகிறாய்.
இங்க பார் நான் பெத்த பிள்ளைகள் பொண்டாட்டிமாரின் பேச்சைக் கேட்டிட்டு பத்துமாதம் சுமந்து பெத்த தாயையே மறந்து போயிட்டானுகள்” கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைக்கிறாள். “வீட்டுத்தள்ளக்கா. பிறக்கக்க கொண்டுவரயுமில்லை போகக்க கொண்ட போகப் போறதுமில்ல.
எது எது எப்படி நடக்கேணுமோ அது அது அப்படித்தான் நடக்கும்”
“நீ படிச்சவ நாலும் தெரிந்தவள். எதையும் தாங்குவாய். நானோ கிணத்துத் தவளை. இது வரை பொறாமைப்பட மட்டும் தான் தெரிந்து வைத்திருந்தன். என்ன செய்யிறது. அவன் என்னை அப்படி ஆக்கிப் போட்டான். அது சரி இரவும் கஞ்சி வடிக்கல்ல. குறுணலும் முடிஞ்சி போயிட்டு காலையிலயும் ஒன்றுமில்ல. பசி வயிற்றைக் கிள்ளுது. அதுதான் மானத்தைவிட்டு இங்கு வந்த நான். அப்பம் கிப்பம் மிச்சம் இருக்கா அழகு?” பசி தாளாமல் அலமேலு வாய்விட்டே கேட்டாள். அழகு தனக்கு வேணுமென்று எண்ணாமலும், ஒரு கணமேலும் தயங்காமலும் தான் வைத்திருந்த இரு அப்பங்களையும் எடுத்துக் கொடுத்து.
“சாப்பிடக்கா வயது போன பருவத்தில வெறும் வயிற்றோட இருக்கக்கூடாது இரவே என்னிட்ட வந்து ‘8pநிஸிl8ளி!’தி” என்று கூறியவாறு செம்பெடுத்து தண்ணீரையும் மெண்டு கொண்டு பக்கத்தில் வைத்தாள். பசிக்கொடுமையால் அழகிடம் நீ சாப்பிட்டாயா? என்று கூடக் கேட்கத் தோணாமல் சாப்பிட்டு ஒரு செம்புத் தண்ணீரையும் குடித்து ஏப்பம் விட்டாள் அலமேலும்.
“இப்பதான் உயிர் வந்த மாதிரி இருக்கு அழகு. நீ நீடூழி நல்லா இருக்கணும்” வாழ்த்தினாள்.
“ஆக இரண்டு அப்பம்தான் சாப்பட்டீங்க. இதற்குப் போயி.... ஆமா பகலுக்கு என்ன இருக்கு அலமேலு அக்கா”
“அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்” கையை உயர்த்திக் காட்டினாள். இயற்கையிலேயே இழகிய சுபாவம் உடைய அழகு அலமேலுவின் வார்த்தையைக் கேட்டு வேதனை அடைந்தாள்.
“ஏனக்கா நானும் தனியாகத்தானே இருக்கிறேன். உங்களுக்கும் துணை யாருமில்லை. பேசாம என்னோட வந்து இருந்திடுங்களேன். எனக்கு ஆக்கிறத்தில உனக்கும் தந்தால் நான் என்ன குறைஞ்சிடவா போறன். ஆளுக்காள் உதவியாக இருக்கும்” வெள்ளை மனத்தோடு கேட்டாள் அழகு. அழகின் கருணை மொழியை கேட்ட அலமேலு உணர்ச்சி வசப்பட்டு நாத்தடுமாற “அழகு!....... அழகு!.......” பேச்சு வராமல் விம்மி அழுகின்றாள்.
“ஏனக்கா குழந்தைப் பிள்ளை மாதிரி அழுகிaங்க? நான் ஏதும் பிளையாகக் கேட்டுவிட்டேனா?” அழுகையின் காரணத்தைப் புரியாமல் அழகு கேட்டாள்.
“அடி அசடே! அப்படி இல்லடி. உன் பெருந்தன்மையை நினைச்சுத்தான் கண்கலங்கிட்டு. உன்னைப்போல பலர் இருந்தா இந்த ஊரே வாழும்டீ” பாராட்டினாள்.
“என்னக்கா பெரிய வார்த்தையெல்லாம்.......”
“ஆமாம் அழகு, இப்படிக் கேட்கவே பெரிய மனசு வேணும். போயும் போயும் என்னைப்போல சின்ன மனம் படைச்சவளுக்கு உதவ வாறியே”
“கஷ்டப்படும்போது ஒருவருக்கு உதவுவது கடவுளுக்கு உதவுறமாதிரியக்கா. கஞ்சியோ கூழோ கிடைப்பதை இருவரும் சேர்ந்து சந்தோசமாகக் குடிப்பம். என்னுடனே இருந்திடுக்கா” திட்டமாகக் கூறினாள்.
“பெத்த பிள்ளைகளே உதறித் தள்ளியபோது; உன்னைத் திட்டித் திரிந்த எனக்கே உதவ முன் வாறியே உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போறன்” வெட்கப்பட்டாள் அலமேலு.
“என்னக்கா, கைமாறும் கால்மாறும்? நானும் ஒண்டிக்கட்டை. இப்போதைக்கு நீங்களும் ஒண்டிக்கட்டை ஆளுக்காள் உதவியாக இருப்பமே என்ன சரியா?”
“கரும்பு தின்னக் கூழியா வேணும்? என்னை நன்றாப் புரிந்திருக்கிற உன்னை விடச் சிறந்த புகலிடம் எனக்கு வேறு இல்லை. உன்னோடு இருப்பதைப் பாக்கியமாகக் கருதுகின்றேன்டீ” சந்தோசத்தால் அலமேலு அழகைக் கட்டிக் கொள்ள இருவரும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.
இராகி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக