நாயை வளர்த்த குடும்பத்தினர் திதி கொடுத்தது மட்டுமல்ல, தமது கிராமத்தினருக்கே சாப்பாடும் போட்டனர் என்றால் ஆச்சரியமாக இல்லையா?.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் சின்னப்பாலத்தைச் சேர்ந்தவர் மீனவர் கோட்டைமுனி (40). இவரது மகன், இரண்டு ஆண்டுக்கு முன், பிறந்து கண் திறக்காத நாய்க்குட்டி ஒன்றைத் தூக்கி வந்தார். அதற்கு 'ஜானி' என பெயரிட்டு வளர்த்தனர். ஒருமுறை, நாய்க்கு வலிப்பு நோய் வந்ததால், ராமேஸ்வரம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. .
இந்நிலையில், கடந்த 2009 மார்ச் 25ஆந் திகதி, தெருநாய்களின் தாக்குதலுக்குள்ளாகி 'ஜானி' இறந்து போனது. இறந்து ஒரு ஆண்டுக்கு பின், அதே நாளில் (நேற்று)ஆசையாக வளர்த்த நாய்க்கு குடும்பத்தினர் திதி கொடுத்தனர். .
நாய் புதைக்கப்பட்ட இடத்தில் பல்வேறு தின்பண்டங்களை வைத்துக் கும்பிட்ட கோட்டைமுனி குடும்பத்தினர், வீட்டில் நாயின் படத்திற்கு மாலையிட்டு படையல் (உணவு) போட்டு, அதன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்தனர். மேலும், நேற்று முழு கிராமத்தினருக்கும் சாப்பாடு போட்டனர்..
இது குறித்து கோட்டைமுனி கூறுகையில்,
"நான் கடலுக்குச் சென்றால் திரும்பி வரும் வரை, இரண்டு, மூன்று நாட்கள் சாப்பிடாமல் காத்திருக்கும். கடந்த வருடம் என் மகளுக்கு உடல் நலம் சரியில்லாததால், ஆட்டோவில் மகளுடன் ராமேஸ்வரம் சென்றேன். ஆட்டோவைத் தொடர்ந்து நாய் வந்ததைக் கவனிக்கவில்லை.
வழியில் திடீரென வலிப்பு வர, வீதியில் படுத்துவிட்ட ஜானியை, தெருநாய்கள் சூழ்ந்து கடித்துக் குதறியதில் அது இறந்து விட்டது. பிள்ளைகள் எல்லாம் இறந்த நாயை ஜானியைச் சுடுகாட்டில் புதைத்து விட்டு, மனிதர்களுக்குச் செய்வது போல் 16 நாள் காரியமும் செய்தோம். இன்று ஒருஆண்டு முடிந்ததால் திதி கொடுத்தோம்"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக