இணையங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு
நடிகையுடன் செக்ஸ் விவகாரத்தால், தலைமறைவாக உள்ள நித்யானந்தா சாமியார், வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார் என்று கூறப்படுகிறது. நித்யானந்தா சாமியார் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தலைமறைவாக உள்ளார் என்ற தகவல் பரவி வருவதால், பிடதி ஆசிரமத்தில், ராம் நகர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புகாரில் சிக்கியுள்ள நித்யானந்தா மீதும், அவர் ஆசிரமம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு கூறியுள்ளது.
பெங்களூரு அருகே பிடதி என்ற ஊரில் நித்யானந்தரின் தலைமை அலுவலகம் உள்ளது.பிடதியிலுள்ள நித்யானந்தா தியான பீடத்தில் நேற்றும் பரபரப்பு காணப்பட்டது. சாமியார் பற்றி பலரும் ஆவலுடன் விசாரித்து வருகின்றனர். ஆனாலும், எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. தியானபீடத்திற்கு சென்று ராம் நகர் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தினார். அங்குள்ள சாமியாரின் சிஷ்யர்களிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தினார். இதன் பின்னர் கலெக்டர் கூறுகையில், ""நித்யானந்தா சாமியார் எங்கிருக்கிறார் என்று தெரியாவிட்டால், அவரது ஆசிரம சொத்துகள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். ஆசிரமத்தில் நேற்று முன்தினம் வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, வளாகத்திலுள்ள குடிசைபோன்ற வீடுகள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தன. இதில், பல மர்மங்கள் நீடிப்பதாக சிலர் தெரிவித்தனர். ஆசிரமத்தில் உள்ளவர்களே தீ வைத்து எரித்ததாகவும், இதன் மூலம் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. தலைமறைவாக உள்ள நித்யானந்தா சாமியார், வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார் என்றும் கூறப்படுகிறது.சொத்துகளை முடக்க நடவடிக்கை: கர்நாடக சட்டசபை கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா பேசுகையில், ""நித்யானந்தாவின் லீலைகள் வெளியாகியுள்ளன. காவி அணிந்து நடந்து கொண்டுள்ள விதம் ஆபாசமும், அசிங்கமும் ஆனது. அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு, சொத்துகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறியதாவது: நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து வனத்துறை அதிகாரிகள், 26 கிலோ சந்தனக் கட்டைகளை கைப்பற்றியுள்ளனர். ஆசிரமத்தில் மான், புலி தோல்கள் உள்ளதாக வந்த தகவல் கிடைத்ததன் பேரில், போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் நேரில் சென்று சோதனையிட்டனர். ஆனால், அத்தகைய பொருட்கள் எதுவும் அங்கு கிடைக்கவில்லை. ஆசிரம சொத்தின் உரிமையாளர் குறித்து மாவட்ட கலெக்டரிடமிருந்து தகவல்கள் சேகரித்து, கூடுதல் நடவடிக்கை மேற் கொள்வோம். அவர் தலைமறைவாக இருப்பதுடன், அவர் எங்கிருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. தமிழக போலீசாருடன் தொடர்பு கொண்டுள்ளோம். தேவையெனில், சட்டப்படி அவரது சொத்துகளை முடக்குவது உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆச்சார்யா கூறினார்.
கர்நாடகா மேலவையில் சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் பேசியதாவது: பிடதியிலுள்ள நித்யானந்தா சொத்துகளை நிர்வகிப்பது எப்படி என்பது குறித்து விரைவில் அரசு சரியான நடவடிக்கை மேற்கொள்ளும். பிடதியிலுள்ள ஆசிரமம், பொதுமக்களின் சொத்தாக இருப்பதால், அதை எப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அரசு யோசித்து வருகிறது என்றார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற பேதமின்றி, அனைவரும் நித்யானந்தா சாமியார் நடத்திய லீலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? வக்கீல்கள் கருத்து
நித்யானந்தா மீது சென்னை வக்கீல்கள் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு பதிவு (420) செய்துள்ளனர்.
இதேபோல கோவையைச் சேர்ந்த விசுவநாதன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை போலீசார் 420, 295-ஏ (மத உணர்வை புண்படுத்துதல்) ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? என்று வக்கீல்களிடம் கேட்டபோது ஆதாரம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கருத்து தெரிவித்தனர்.
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் வானதி சீனிவாசன் கூறியதாவது:-
இ.பி.கோ. 420 பிரி வின்படி ஒருநபர் மற்றொருவரிடம் பணத்தையோ, பொருளையோ வாங்கிக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றினால் மோசடி குற்றமாகும். அதேபோல் ஒருவரிடம் ஒரு காரியத்தை செய்து தருவதாக நம்பிக்கை ஏற்படுத்தி அதற்காக தகுந்த சன்மானமும் பெற்றுக்கொண்டு அதை செய்து கொடுக்காமல் இருப்பதும் மோசடி குற்றமாகும். மோசடி நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு.
சாமியார் என்னிடம் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டார் அல்லது அவரிடம் இருந்து விலை உயர்ந்த பொருளை வாங்குவதற்காக பணம் கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு பணத்தையும் திருப்பி தரவில்லை, பேசியபடி பொருளையும் தரவில்லை என்று பாதிக்கப்பட்டவர் புகார் தரவேண்டும்.
இதற்கான ஆதாரத்துடன் புகார் செய்யாவிட்டால் இந்த வழக்கு நிற்காது. மோசடி வழக்கின் கீழ் சாமியாரை கைது செய்யவும் முடியாது.
மத உணர்வை புண்படுத்தியதாக சாமியார் மீது இ.பி.கோ. 295 (எ) பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத உணர்வுகள் அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. நம்நாட்டில் கோடீசுவரர்களுக்கு இருக்கும் மரியாதையை விட காவி உடை உடுத்திய சன்யாசிக்கு மரியாதை அதிகம். அதை அவர் மீறும்போது மத உணர்வை அது லேசாக காயப்படுத்தும். இதனால் ஒட்டுமொத்த இந்து மதத்துக்கும் அவமானம் என்று மதத்தின் மீது பழிபோடுவதை ஏற்க முடியாது.
எல்லா மதத்திலும் ஒருசில குருமார்களிடம் குறைபாடு இருக்கத்தான் செய்கிறது. ஆயுள் தண்டனை பெற்ற சாமியார்கள் இருக்கிறார்கள். கிறிஸ்தவ பாதிரியார்கள் இருக்கிறார்கள். அதற்காக மதங்களை குறைசொல்ல முடியாது.
சாமியாராக இருப்பவர்கள் இல்லறத்தில் ஈடுபடகூடாது என்று எந்த சட்டமும் கூறிவில்லை. ஒரு மைனர் பெண்ணிடம் அவள் விரும்பியோ, விரும்பாமலோ உறவு கொண்டால் குற்றம்.
ஆனால் வயதுக்கு வந்தவர்கள் விரும்பி உறவு வைத்துக்கொண்டால் யாராலும் கேட்க முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை.
நித்யானந்தா விவகாரத்தில் நடிகை ரஞ்சிதாவுடனான நெருக்கம் ஒருவேளை உண்மையாக இருந்தால் கூட ரஞ்சிதா புகார் செய்யாத பட்சத்தில் சாமியார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அகில இந்திய பார் கவுன்சில் செயல் தலைவர் வக்கீல் ஆர்.தனபால்ராஜ் கூறியதாவது:-
பொதுவாக எந்த ஒரு வழக்கையும் ஊடகம் விசாரிக்க முடியாது. அனுமானத்தின் அடிப்படையில் வெளியாகும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஆதாரம் வேண்டும். இல்லை என்றால் வழக்கு நிற்காது.
நித்யானந்தா மீது போடப்பட்டுள்ள மோசடி வழக்குக்கு ஆதாரம் வேண்டும். ஒழுக்கமான சாமியார் என்று நம்பவைத்து பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் கூறினாலும் அதற்கும் ஆதாரம் வேண்டும். எப்போது பணம் கொடுத்தார்கள், எந்த இடத்தில் வைத்து சாமியார் பணம் வாங்கினார் என்பதை நிரூபிக்க வேண்டும்.
மக்களை ஏமாற்றுபவர்களை பற்றிய தகவல்களை வெளிக்கொண்டு வருவதில் தவறில்லை. அதிலும் ஒரு நேர்மை இருக்க வேண்டும். தனிப்பட்டவர்களுடைய அந்தரங்கத்தை வெளியிடுவது சட்டப்படி தவறு.
வெளியிடப்பட்ட வீடியோ உண்மையானதா? கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டதா? என்று கோர்ட்டில் கண்டிப்பாக விவாதிக்கப்படும்.
வீடியோ உண்மை என்றால் அது எப்போது எடுக்கப்பட்டது? அதனை எடுத்தது யார்? என்ற விவரங்களையும் ஆதாரத்தோடு நிரூபித்தால்தான் வழக்கு நிற்கும். இல்லையென்றால் வெளியிட்டவர்களுக்கு எதிராக வழக்கு திரும்பிவிடும்.
சாமியாருடன் குடும்பம் நடத்தியதை எப்படி வெளியிடலாம் என்று ரஞ்சிதா கேள்வி கேட்டாலே வழக்கு தோற்றுவிடும். எனவே எல்லாவற்றுக்கும் ஆதாரத்துடன் புகார் இருந்தால்தான் இந்த வழக்கில் சாமியாருக்கு தண்டனை கிடைக்கும். இல்லாவிட்டால் பரபரப்போடு நின்றுவிடும்.
இந்து மதத்தை அவமானப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை கூறினாலும் அதற்கும் ஆதாரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். சாட்சி சொல்ல சம்பந்தப்பட்டவர்கள் வரவேண்டும். அப்போதுதான் வழக்கு நிற்கும்.
இவ்வாறு தனபால்ராஜ் கூறினார்.
நித்யானந்தாவின் வக்கீல் ஸ்ரீதர் கூறியதாவது:-
நித்யானந்தா சுவாமிகள் மீது புகார் கொடுத்துள்ளவர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை. புகார்தாரர்கள் யாரையும் நித்யானந்தா ஏமாற்றி மோசடி செய்யவில்லை. அப்படி இருக்கும்போது அவர் மீது எப்படி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று தெரியவில்லை. இது தவறான முன்னுதாரணமாகும்.
சொத்துக்களை ஏமாற்றி எழுதி வாங்குதல், பணம் வாங்கிக் கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றுதல் என்பது போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டால் மட்டுமே ஒருவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய முடியும். மோசடி வழக்கை பொறுத்தவரை, ஆதாரமின்றி நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே நித்யானந்தாவை மோசடி வழக்கில் கைது செய்ய முடியாது. சென்னையில் போடப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக எந்த பகுதிக்கு சென்று, யாரிடம் போலீசார் விசாரணை நடத்தப் போகிறார்கள் என்பது குழப்பமே.
இவ்வாறு வக்கீல் ஸ்ரீதர் கூறினார்.
நித்யானந்தா மீது மத்திய குற்றப்பிரிவில் போடப்பட்டுள்ள மோசடி வழக்கு பெங்களூருக்கு மாற்றப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, நித்யானந்தாவுக்கு சென்னையில் ஆசிரமங்கள் இல்லை.
எனவே சாமியார் மீதான வழக்கை பெங்களூக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
நிர்மலமான நடிகை
நித்யானந்தாவிடம் பல சினிமா நடிகைகள் தொடர்பு வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகை ராகசுதா. இவர், தமிழில், ராமராஜன் ஜோடியாக ‘தங்கத்தின் தங்கம்’, நெப்போலியன் நடித்த ‘தமிழச்சி’, ‘தம்பி’, ‘அம்முவாகிய நான்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை மகளான இவர், யோகா வகுப்புகளுக்கு சென்று வந்தார். சென்னையில் நித்யானந்தர் நடத்திய யோகா வகுப்புக்கு சென்று வந்த அவர், நித்யானந்தாவை பார்த்த உடனேயே அவர் காலில் விழுந்து வணங்கினாராம். அதிலிருந்து, அவருடைய ஆசிமரத்தில் சேர்ந்து சன்னியாசி ஆனார். மைசூரிலுள்ள இவரது ஆசிரமத்தில், சுவாமி நிர்மலானந்தா என்ற பெயரில் சில வருடங்களாக யோகா கற்றுக்கொடுத்து வருகிறார் ராகசுதா. இவர்தான் சாமியாருக்கு பல நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பல முன்னாள் நடிகைகள் மற்றும் டிவி நடிகைகளும் அடங்குவர் என்றும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக