சனி, 13 மார்ச், 2010

காந்திமதியின் மரணங்கள்

தார் ரோடிலிருந்து ஒரு கல்லடி தூரத்திலிருந்த லயத்தின் தொங்கள் காம்ப்ராவிலிருந்து கிழவியொருத்தியின் ஒப்பாரி. கூடவே ஒரு சிறுமியின் கேவல்கள்.

காந்திமதி செத்துப் போனாள். அரபு நாடொன்றில், பணிப் பெண்ணாக வேலைக்குப் போன வீட்டில் ‘சப் ஏஜன்ட்’ ராமன் செய்தி சொல்லிப் போனான். பிணம் விமானத்தில் வந்துகொண்டிருப்பதாகவும் இன்றிரவே கொண்டு வந்து தருவதாகவும்,

எரியும் கொள்ளியை நெஞ்சில் செறுகியதாய் திண்ணையில் குந்திவிட்டான் நடராஜா மனைவியின் மரணச் செய்தியைக் கேட்டு! ‘தான் மாதக் கடைசியில் வரவிருப்பதாகவும், எல்லோருக்கும் உடுப்பு மற்றும் பொருள்களும் வாங்கி வைத்திருப்பதாகவும் எழுதியிருந்த கடிதம் போன வாரம் வந்திருந்தது காந்திமதியிடமிருந்து.

மரண உதவி கமிட்டியின் தலைவர் ‘நைட் ஸ்கூல் இங்கிலீஸ் மாஸ்டர்? மாரிமுத்துவுக்கு சந்திக்கடையில் சாமான் வாங்கப் போன நேரத்தில் தகவல் கிடைத்தது.

சாமான்களை பையில் நிரப்பிக் கொண்டு ‘எரித் மெட்டிக்கில்’ எழுதிக் கொள்ளும்படி கூறியவர் விரைவில் வந்து சேர்ந்தார்.

கமிட்டி அங்கத்தவர்களின் சதுர மேசை மகா நாட்டைக் கூட்டி உடனடியாக செய்யவேண்டிய வேலைகளைப் பட்டியல் போட்டு, மரண உதவி கமிட்டி அங்கத்தவர்கள் ஆறு பேருக்கும் தலைக்கு அரை போத்தல் என்பதை இரகசியமாக அறிவித்ததை கமிட்டி சிலாகித்தது. போத்தல் கணக்கு மற்றய பொருட்களின் விலையில் சுமத்தப்படும்.

கேதம் சொல்வது, தப்படிப்பது எல்லாம் இளைய பரம்பரைக்குத் தெரியாத சமாச்சாரம். புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி நோட்டீஸ் தான் ஃபெசன்.

‘பிறப்பு, இறப்பு,’ ‘மண்ணில், விண்ணில்’, பிறந்த திகதி மாதம் ஆண்டுகளோடு மேல் குறிப்பிட்டதில் எதனை தெரிவு செய்வது என்பதில் சர்ச்சை.

‘அன்னை மடியில்’, ‘இறைவன் திருவடியில்’ தலைவரின் தெரிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏகமனதாக.

திண்ணையையும் கோடியையும் உள்ளடக்கி ‘ட’ வடிவில் தற்காலிக தகரக் கொட்டகை போட்டாயிற்று.

லயத்தை ஓட்டினால் போலிருக்கும் கொலணி காணியில்- ஒரு காலத்தில் இதே தோட்டத்துக்குச் சொந்தமாகவிருந்து அரசினால் சிங்களவர்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்ட காணியில் முதலாவது வீடு ‘சீடிபி’ ட்ரைவர் சில்வாவினுடையது. தற்காலிய மின்சார இணைப்புக்கு அனுமதி கேட்கப்போனபோது ட்ரைவர் சில்வா வேலைக்குப் போய்யிருந்தார். ட்ரைவர் சில்வாவின் மனைவி மல்காந்தி குளித்து ஈரம் சொட்ட சொட்ட, முழங்கால்கள் தெரியும். ஈரடவலுடன் வந்து நிற்க அவளுடலில் விழி பதித்து விபரம் சொன்னார் மாரிமுத்து. பொய்யாக நாணம் காட்டி, புன்முறுவல் செய்து, சரியெங்குமாப் போல தலையசைத்து காம்ப்ராவினுள் செல்கிறாள் நளினமாக, உடலோடு ஒட்டிய டவலில் பிருஷ்டத்தின் பின்னழகு காட்டியவளாய்.

மல்காந்தியின் காய்கறி தோட்டத்தில் ஆளுயரம் வளர்ந்திருக்கும் மரவள்ளிச் செடிகளின் மறைவில் மாரிமுத்துவும் கமிட்டிப் பொருளாளரும், சாரத்தில் போத்தலை மறைத்த வண்ணம், கிளாசில் நிரப்பி வாயை நனைத்துக்கொண்டு, எதனையோ மெல்லுவதை தூரத்திலிருந்தே கவனித்துக்கொண்டிருந்த சில்வாவின் மகன் சிறுவன் ரஞ்சித் அவர்கள் அருகே செல்கிறான்.

“என்னா திங்கிaங்க”

“ஒங்க அம்மா.... இந்தா நீயும் ஒரு துண்டக் கடி...”

“அய்ய.... தூ...”

பூரணை நிலவு கீழ் வானில் உதிக்க, மின்சாரம் ஒளிரும் கேத வீட்டுக்கு முதல் ஆளாக வருகின்றான் கசிப்பு ஜீவா, பாண் பார்சலுடன், மோட்டார் பைசிக்களில், தோட்டத்தில் மட்டுமல்ல. அக்கம் பக்கத்து ஊர்களிலும் எங்கேயாவது மரணம் எனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயும் இவன் காதினிலே.

கசிப்பு- காய்ச்சிய சாராயம் விற்றே இலட்சாதிபதியானவன் ஜீவா. இன்றைய தேவையை சமாளிக்க மேலதிகமாக சரக்கு கொண்டுவர ஆள் அனுப்பியாயிற்று.

அக்கம் பக்கத்திலிருந்து சிங்கள ஆண்கள் பெண்கள் சீனி, தேயிலை பிஸ்கட் பெட்டியென ஏதோ ஒன்றை கையில் பிடித்துக்கொண்டுவர குறைவில்லாமல் தோட்டத்து சனங்களும் கூட, சோகங்களாய், உற்சாகமாய், கதம்பமாய் கலகலப்பு. சகாக்கள் சகிதம் கடதாசிப்பூ மலர் வளையம் ஒன்றும் கொண்டு வந்த சிரிசேன பாஸ்.

“கோ அப்பே தலைவர்காரயா?”

அணிந்திருந்த கறுப்புக் கோட்டில் வலது புற பொக்கட்டில் தலை நீட்டிக்கொண்டிருக்கும் போத்தலில் கைவைத்தவராய் உள்ளே ஏதோ ஜோலியைக் கவனித்துக்கொண்டிருந்த மாரிமுத்து அவசரமாக வந்து.

“ஆயுபோவன் பாசுன்ன. எண்ட எண்ட” கையெடுக்கின்றார்.

தகரக் கொட்டகையில் கெரம், டாம் விளையாட்டு என்பவற்றோடு எழுபுடி சீட்டாட்டம், காம்ப்ராவின் உள்ளே விரித்துப் போட்ட பாயில் பூரவா சூதாட்டப் காசுக்கு கோடிப்புறத்துக் பின்னே வாழை மர நிழலில் கசிப்பு.

“கூழோ, கஞ்சோ இருக்கிறத புள்ளக்குட்டிகளோடு ஒன்னா இருந்து குடிச்சிட்டு இருக்காம, கண்காணாத சீமைக்குப் போயி இப்புடி அவச்சாவுல போயிட்டாளே பாவி....”

“கொழும்பு மதம்....”

“யாம் அப்புடி சொல்லீங்க. அவ மட்டும் தானா போயிருக்கா. ஆயிரக்கணக்கா பொம்பளக போகலியா?”

“வெட்கம் கெட்ட பொழப்பு போ!”

“புருசன் புள்ளக் குட்டிகளுக்கு சம்பாரிச்சு குடுக்கத்தானே போனா...”

பெண்டுகளின் பட்டிமன்றம்.

பிஸ்கட் ட்ரேயைப் பிடிப்பதும் பிளேண்டி ஊற்றிக் கொடுப்பதிலும் மும்முரமாக இளம் பெண்கள்.

சிங்கள கலாசார கலப்பு, உள்வாங்கல்கள்.

எல்லோரினதும் கவனத்தையும் கவர்வதாய், தாராளமாக ஒளியைப் பாய்ச்சிய வண்ணம் உறுமிக்கொண்டு வந்து நின்ற மோட்டார் சைக்கிலிருந்து அவசர அவசரமாக இறங்கி வருகின்றான் சப் ஏஜன்ட் ராமன்.

“பிணம் இன்றைக்கு வராதாம். ஏதோ சிக்கலாம். பிணம் இங்கே வர இன்னும் ஒரு கெழம போகுமாம். மற்றைய விபரங்கள அறிஞ்சி நாளைக்கு நாளான்டைக்கு வாக்குல வந்து சொல்றேன்...” ஹெல்மெட்டை வலது கையால் அணைத்தபடி சொன்ன ராமன் வந்த சூட்டோட திரும்பிப் போகிறான்.

திகைப்பு எல்லோருக்கும் கலவரம் முகங்களில்,

“செத்தும் கூட நிம்மதியா போய்ச் சேர முடியல...”

“பாவம் செஞ்ச ஆத்மா”

“எல்லாம் விதிப்படி தான் நடக்கும் தலையெழுத்து...”

“கர்மய அனுவ தமய் ஒக்கம சித்த வென்ன. பம்பா கொட்டப்பு ஹெட்டி..."

“வெடே அப்லிக்”

அவரவர் பாணியில் விளக்கங்கள்.

ஒவ்வொருவராக திரும்பிப் போக, பூர்வா சூதாடிகள் மட்டும் ஒன்று ஒன்றரை மணித்தியாலம் கழித்தே தயங்கி தயங்கி திரும்பி போனார்கள். கடைசியாளராக கசிப்புக் காரன்.

தார் ரோடுக்கு இடது புறமாக இறப்பர் மலையை ஊடறுத்து ஸ்டோருக்குச் செல்லும் செம்மண் றோடுக்கு மேற்புற மேட்டில் லயம். லயத்துக்கு முன்னே பதினைந்தடிக்கு கறுங் கற்களினாலான விசாலமான முற்றம். தொங்கள் காம்பராவினுக்கருகே கருங்கல் படிகள். வெள்ளைக்காரன் கொம்பெனி காலத்தில் கட்டியது.

எந்த வெய்யிலானாலும் இதமாய் நிழல் தருவதும், காயும் எல்லா நிலவுகளிலும் தரையில் விதவிதமாய் ஓவியம் வரைவதுமாய் கிளை பரப்பி நிற்கும் ஈரப்பலாமரம் கருங்கற்கள் படிகளை ஒட்டி.

படம் முடிந்த தியேட்டராய் வீடு. தாய்க்கிழவியும் மகளும் தூங்கிப் போய்விட்டார்கள் உள்ளே.

நடராஜா மட்டும் தகரக்கொட்டகையில் கன்னத்தில் கைவைத்தபடி, உச்ச வானில் காயும் நிலவில் நிழலாடும் இறப்பர் மரங்களை வெறித்தவனாய். எங்கேயாவது குரைக்கும் நாய்கள் ஜோலியை முடித்துவிட்டு தூங்கப் போய் விட்டன. ஊரே அடங்கிப் போக சந்தடியற்ற வெறுமை.

ஈரப்பலா மரத்தூரில் காந்திமதியோடு கூடிப் பிரியாமலே ராவெல்லாம் கொஞ்சிக் குலாவியிங்கே இருந்ததெல்லாம் காணலா. இவனொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்தில் விழுவதா?

“அத்தான்!”

காந்திமதி நிற்கின்றாள். வெள்ளைக் கலையுடுத்தி மென்காற்றில் கேசம் அலைபாய, இமைகள் பட படக்க கண்களை துடைத்தபடி பார்க்கின்றான். இது நிஜமா!

இது நிஜம் காந்திமதியே தான்

கைகள் கால்கள் இரண்டுக்கும் வெள்ள உரைகள். எம்பாம் செய்யப்பட்ட உடல், மண்டையோட்டை பிளந்து பார்த்திருக்கிறார்கள் போலும். மரணத்துக்கான காரணத்தை அறிய தையல்கள் தெரிகின்றன. கால்கள் பாவாத அந்தரத்தில்..

“நீ அங்க செத்துப் போயிட்டதாக...” அருகில் சென்ற அவனிடமிருந்து மெல்ல விலகிக் கொள்கிறாள்.

“இதென்னா வெள்ளக் கொடி? செத்தவீடு மாதிரி தகர கொட்டகை. அம்மா மக ரெண்டு பேரும் எங்க. யாருக்கும் என்ன மாவது நடத்திச்சா”

“அம்மா மக ரெண்டு பேருக்கும் ஒன்னும் நடக்கல. இங்க யாருக்கும் ஒரு பிரச்சினையும் இல்ல. நீ தான் அங்க வெளிநாட்டுல செத்ததா.....”

“நான் வெளிநாட்டுல சாகல்ல. வெளிநாட்டுல சாகல்ல. நான்.. நான் செத்தது.. நான் செத்தது..”

கையிலும் மடியிலும் கொஞ்சம் இறுக்கமாக விருந்த ஒரு மாலையில் சப் ஏஜன்ட் ராமன் வந்தான். முன்பே சொல்லி வைத்ததற்கிணங்க பாஸ்போர்ட் எடுக்க கொழும்புக்கு கூட்டிச் செல்வதற்காய்.

மெளனமாக மனைவியைப் பார்க்கின்றான் நடராசா.

“செலவ நான் பாத்துக்கிறேன். நமக்குள்ள பொறகு என்னா செய்துக்க முடியாது. இன்னம் அஞ்சி பொம்பள புள்ளக வருகுதுக. தொண பிரச்சன இல்ல. அக்கா மட்டும் வந்தா போதும் எதுக்கு வீண் செலவு. விடிய நாலு மணிக்கு பஸ்சேறி அம்மன் கோயில் கிட்ட வந்துருங்க...”

கொலணியிலும் தோட்டத்திலும் பல பெண்களை அனுப்பியவன். நம்பலாம்.

“மறந்திராதீங்க விடிய நாலு மணிக்கு” விண்ணப்பப்படிவம், புகைப்படங்களை கையோடு எடுத்துக்கொள்கிறான்.

மூன்று சிங்களப் பெண்கள், ஒரு முஸ்லிம் பெண் கூடவே அவளது தந்தை, மற்றுமொரு தமிழ்ப் பெண். எல்லோரும் பாஸ் போர்ட் கந்தோரில் முதல்வரிசையில் காந்திமதியின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கும், அடையாள அட்டைக்கும் பெயரெழுத்தல் சின்ன வித்தியாசம். சத்திய கடிதம் ஒன்று தயார் செய்ய வேண்டும். வீட்டுக்குப் போய் மீண்டும் வருவது வீண் செலவும் காலதாமதமும். இரவு தெரிந்த ஓரிடத்தில் நின்று காரியத்தை முடித்துக்கொண்டு போய் விடலாம். நம்பினாள். மற்றவர்கள் மாலையே பஸ்சேறிவிட்டார்கள்.

லொட்ஜில் சாப்பாட்டோடு கிளாசில் ஊற்றிக்கொடுத்த கொக்கோ கோலா இனிப்பும் கசப்புமாய்... தூக்கமா விழிப்பா இனம் புரியாத உணர்வு.

அடப்பாவி! தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட வார்த்தை. எதுவும் செய்ய முடியாது. கணக்கும் உடல். காந்திமதிக்கு நிகழ்ந்த முதலாவது மரணம். தொடர்ச்சியாக மெடிக்கல் எடுக்க விஸா எடுக்க என்று போன இரவுகள் லொட்ஜில்.

அரபு நாடொன்றில் மாளிகை போன்றதொரு வீடு. வீட்டு எஜமானுக்கு மூன்று மனைவிகள், நான்கு பணிப்பெண்களில் இருவர் பிலிப்பீன்ஸ்காரிகள். இருவர் சிங்களப் பெண்கள். ஐந்தாவதாக இவள். வேலை ஒன்றும் அதிகம் கஸ்டமில்லை.

ஒருவர் அறியாமல் ஒருவராய் ரகசியமாய் நீலப்படம் பார்க்கும் எழுபது வயது தந்தையும் மகனும்.......

இரண்டு மாதங்களில் தொல்லைத் தாங்காமல் வீட்டை விட்டு தலைவிரிகோலமாக வீதியில் ஓடியவளை தூதுவராலயத்தில் கொண்டு போய் விடுகிறேன் என காரில் ஏற்றிக் கெண்ட பாகிஸ்தான் காரனின் அறையில் இரண்டு இரவுகள்....

அவன் வேலை பிடித்துக் கொடுத்த வீட்டில் இந்த தொல்லைகள் எதுவுமில்லை பதினெட்டு மணித்தியாலய வேலைப் பளுவைத்தவிர.

நடராஜா அவளருகில் செல்ல,

“வேணாம் வேண்டாம் என்னிய தொடாதீங்க. நான் செத்துப் போயிட்டேன்.......”

குரலோடு அவளது உருவமும் தேய்ந்து காற்றில் கரைகின்றது.

சென்ற தீபாவளிக்கு விருந்துக்கு கூப்பிட்ட மாரிமுத்து குடிபோதையில் கதைகதையா உளறியது உண்மையா! மேற்கு வானில் சரியும் நிலவு. சாமக் கோழி கூவுகின்றது.

லயதுக்கு முன்னாள் மண் ரோடில் வந்து நிற்கின்றது வேன் ஒன்று. முன் கதவைத் திறந்து கொடு இறங்குகிறாள் காந்திமதி. பாரமான சூட்கேசை இறக்கி வைக்கின்றான் ட்ரைவர்.

ஹேன்ட் பேக்கைத் திறந்து காசை கொடுத்தவள் அவளோடு கை குழுக்கி,

“பாய்! சேரியோ! “

“பாய் பாய்!”

சீறிக் கொண்டு புறப்பட்ட

வண்டியின் ஹோனை அழுத்துகிறான் ட்ரைவர்.

சூட்கேசை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வரும் காந்திமதியை நன்றாகப் பார்க்கின்றான். தரையில் பாதம் பதித்து நடந்து தான் வருகின்றாள். பாரமான சூட்கேசை தரையில் வைத்தவனின் மார்பு உயர்ந்து தாழ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது.

நிஜமாகவே காந்திமதிதான்!

ஒரு சுற்று பருத்திருக்கின்றாள். செம்மை படர்ந்து உப்பிய கன்னங்கள். மைதீட்டிய புருவங்கள். விழிகள். சற்று தூக்கலாகவே சாயம் பூசிய உதடுகள்.

காதுகள் கழுத்துகள் எங்கும் தங்கமாய் வெள்ளியாய் மின்னும் ஆபரணங்கள். உடலை விட்டு பிரிக்க முடியாத வகையில் பேர்ஃபியூம் வாசணை.

“அத்தான் இதென்னா செத்தவீடு மாதிரி சோடண. யாருக்கும் என்னமும்....”

சுற்றும் முற்றும் பார்க்கின்றாள்.

“காந்திமதி நீ செத்துப் போனதா..........”

“ ஆ....! அதுதான் நானும் கேள்விப்பட்டேன். என்னிய அனுப்பிய அதே ஏஜன்சி காரன் அவளையும் அனுப்பியிருக்கான். கண்டி பகுதியைச் சேர்ந்த ஒரு தோட்டத்து பொம்பள. அவதான் செத்திருக்கா. அவ பேரும் காந்திமதிதான். நான் தான் செத்துட்டேன்னு தவறுதலா டெலிபோன் பண்ணீட்டான் அங்க உள்ள ஏஜன்சி காரன் கொழும்புக்கு. பொறகு விசாரிச்சு சரியான விலாசத்துக்கு தெரியப்படுத்திட்டாங்களாம்....”

ஒரே மூச்சில் சொல்லி முடித்தவள் அவனருகில் வருகிறாள்.

“நான் உங்களோட வாழ குடுத்து வச்சிருக்கேன்...”

அவனது கைகளைப் பற்ற முனைகிறாள்.

அவளிடமிருந்து விலகி அப்பால் சென்ற நடராஜா சொல்கிறான் தீர்க்கமான குரலில்

“காந்திமதி நீ செத்துட்ட!”

மலரன்பன்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல