வெள்ளி, 2 ஏப்ரல், 2010

ஒரு முஸ்லீம் நாட்டிலும், பெண் பிரதமாராக முடியும் என்று காட்டியவர்

பேநசீரின் அப்பா புட்டோ, பன்னிரண்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதே அவருக்குத் திருமணமாகிவிட்டது. முதலில் புட்டோ தனது திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவேயில்லை. காரணம் அவருக்குப் பார்த்திருந்த பெண் அவரைவிட எட்டு வயது பெரியவர்! பந்து, மட்டை, ஸ்டம்புகள் அடங்கிய ‘கிரிக்கெட் செட்’ ஒன்றைக் கொடுப்பதாக அவர் அப்பா ஆசை காட்டியதும்தான் புட்டோ அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தாராம். அந்தத் தம்பதிக்குப் பிறந்த முதல் மகள்தான் பேநசீர்.
51 வருடங்களுக்கு முன்பு பேநசீர் பிறந்த போது, அவர் அம்மா நுஸ்ரத், தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவியாக இருந்தார். கராச்சியில் சொந்தமாக ஒரு கார் வாங்கி அதை ஓட்டவும் செய்த முதல் பெண்மணியும் அவர் அம்மாதான்.

‘‘என்ன இது?!.. பெண்கள் காரோட்டலாமா? இது பெரும் தவறு!’ என்று எங்கள் சமூகத்தைச் சேர்ந்த பலர் காரசாரமாக விமர்சித்தார்கள். ஆனால் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு தொடர்ந்து காரோட்டினார் என் அம்மா. இந்தப் புரட்சியைக் கண்டு நான் ஆச்சர்யப்பட்டதுண்டு. ஆனால் அதே சமயம், திருமணத்தைப் பொறுத்தவரை ரொம்பத் தீர்மானமான மரபு சார்ந்த கருத்துதான் அம்மாவுக்கு. என் எதிரிலேயே அப்பாவிடம் ‘எதற்கு இவளைப் படிக்க வைத்துக்கொண்டே இருக்கிறீர்கள்? அப்புறம் எவன் இவளை மணந்துகொள்ள ஆசைப்படுவான்?, என்று சொல்வார்’’_ இப்படித் தனது நூலில் குறிப்பிடுகிறார் பேநசீர்.

பேநசீர்தான் மூத்த பெண். மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள் அவருக்கு. பேநசீரைக் கான்வென்ட் பள்ளியில் சேர்த்தார் புட்டோ. நுனிநாக்கு ஆங்கிலமும் உலக அறிவும் பேநசீருக்கு சுலபமாக வந்தது.
சின்ன வயதிலிருந்தே பேநசீருக்கு சரித்திரக் கதைகளையும், வி.ஐ.பி.க்களின் சுயசரிதைகளையும் படிப்பதற்கு ரொம்பப் பிடிக்கும். சாதனை புரிபவர்கள்மீது ஒரு தனி பிரமிப்பே உண்டு!

படிப்பைப் பொறுத்தவரை மகன்களையும் மகள்களையும் சமமாகவே நடத்தினார் புட்டோ. ஆனால் துப்பாக்கிப் பயிற்சி மகன்களுக்கு மட்டும்தான். அப்போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை பேநசீர் விவரிக்கும்போது அது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

‘‘தம்பிக்கு அப்பாவே துப்பாக்கி சுடும் பயிற்சியை அளித்தார். அப்போது ஒரு சமயம் நானும் அருகில் இருந்தேன். தம்பி குறிபார்த்துச் சுட்டான். என் காலடியில் ரத்தம் பொங்க வந்து விழுந்தது ஒரு கிளி. ‘ஐயோ...’ வென்று அலறி நான் துடிதுடித்துப் போய்விட்டேன். பலவருடங்களுக்குப் பிறகு என் அப்பாவுக்கு அரசியல் எதிரிகளால் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. தீர்ப்பைக் கேட்டதும் அவர் ‘ஒரு கிளிக்காக சிறு வயதில் என் மகள் துடித்த துடிப்பு எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. இந்தச் செய்தியைக் கேட்டால் அவள் எப்படித் துடிப்பாளோ!’ என்றுதான் சொன்னாராம்!...’’
புட்டோ ஒரு பிரபல வழக்கறிஞராக விளங்கினார். நிறைய நிலங்களுக்குச் சொந்தக்காரர்.

அரசியலிலும் நன்கு வளர்ந்தார் புட்டோ. பங்களாதேஷ் உருவான சமயம் அது. பாகிஸ்தானின் வல்லமை படைத்த ஜனாதிபதியாக விளங்கினார் புட்டோ. 1967_ல் ‘பாகிஸ்தான் மக்கள் கட்சி’யைத் தொடங்கி ஆறே வருடங்களில் ஆட்சியைப் பிடித்தார்.

பேநசீருக்குப் பதினாறு வயதானதும் அவரை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி படிக்கவைத்தார் புட்டோ. அங்கேதான் பேநசீரின் பல எண்ணங்கள் விரிவடைந்தன.

அப்போது அமெரிக்காவில் பெண் விடுதலை இயக்கம் கொடிகட்டிப் பறந்தது. ‘ஏற்கனவே இங்குள்ள பெண்களுக்கு ஓரளவு சுதந்திரம் இருக்கிறது. ஆனாலும்கூட முழு சமத்துவத்துக்காகப் போரிடுகிறார்கள். ஆனால் நம் பாகிஸ்தானிலோ பெண்களின் நிலை கொஞ்சம் கூடத் திருப்திகரமானதாக இல்லையே! இதை மாற்றவேண்டாமா?’ என்பது போன்ற எண்ணங்கள் அப்போதுதான் அவரிடம் உண்டாயின்.

அப்போது வியட்நாம் போர் உச்சநிலையை அடைந்திருந்தது. தன் கூடப் படித்த அமெரிக்க மாணவர்களேகூட, அமெரிக்க அரசைக் கடுமையாக சாடியதைப் பார்த்ததும் பேநசீருக்கு ஆச்சர்யம். ‘தவறாக நடந்துகொண்டால் ஆளும்கட்சியை விமர்சிக்கலாம் போலிருக்கிறதே..’ என்ற எண்ணம் அவருக்குள் விதை ஊன்றியது.

போதாக்குறைக்கு வாட்டர்கேட் அத்துமீறலைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் நிக்ஸன் பதவி விலகும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். ‘அட! தப்பு செய்த ஜனாதிபதிகளைக்கூட மாற்றலாம் போல இருக்கிறதே...’ என்ற எண்ணமும் பேநசீருக்கு வந்தது.

அதேசமயம் இங்கே பாகிஸ்தானில் பிரதமரான கையோடு புட்டோ நவீன சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். பெரும் நிலப்பிரபுக்கள் அதிக வரிகட்டும் வகையில் சட்டத்தை இவர் மாற்றியமைக்க, இனத் தீவிரவாதிகளுக்கு இவரைப் பிடிக்காமல் போனது.

இந்த சூழ்நிலையில், தனது அப்பா பாகிஸ்தானின் அதிபரான நான்கு வருடங்களில் படிப்பை முடித்துவிட்டுத் தாய்நாட்டுக்குத் திரும்பினார் பேநசீர். ஆனால் அதற்குள் காட்சிகள் மாறத் தொடங்கியிருந்தன.

தளபதி ஜியா உல் ஹக் ஆட்சியைக் கைப்பற்றினார். புட்டோ கட்சியைச் சேர்ந்த கஸீரி என்பவர் எதிரணிக்கு மாறிவிட, அவரை துரோகி என்று வர்ணித்திருந்தார் புட்டோ. அதைத் தொடர்ந்து அந்த கஸீரி, குடும்பத்தோடு பயணம் செல்லும்போது ஒரு தாக்குதல் நடக்க, அதில் அவரது அப்பா இறந்தார். இது புட்டோவின் சதித் திட்டத்தின் ஒரு பகுதி என்று கூறிய ஜியா அவரைக் கைது செய்து சிறையிலடைத்தார். அரசு புட்டோ மீது வழக்கு தொடர்ந்தது.

அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது பாகிஸ்தான் அரசியலில் முழு மூச்சுடன் இறங்க வேண்டுமென்று தீர்மானம் செய்திருந்தார் பேநசீர். இப்போது தன் தந்தையே அநியாயமான முறையில் சிறையிலடைக்கப்பட....... தீவிரப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார் பேநசீர். ‘‘நமக்கு ராணுவ ஆட்சி வேண்டாம்.. நம் நாட்டுக்கு ஜனநாயகம் மட்டுமே ஏற்றது’’ என்று வேறு அவர் கூறத் தொடங்க, ராணுவ ஆட்சிக்கு பேநசீர் மேல் இருமடங்கு கோபமாயிற்று. விளைவு? பேநசீருக்கு அடிக்கடி சிறைவாசம். கொலை சதி வழக்கிலும் புட்டோவுக்கு எதிரான தீர்ப்பு வழங்கப்பட்டது. புட்டோ தூக்கிலிடப்பட்டார்.

புட்டோவுக்குப் பிறகு அவர் மனைவி நுஸ்ரத், கட்சியின் தலைவியாகவும் வருங்காலப் பிரதமராகவும் ஆவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் விதி வேறுவிதமாக நினைத்தது. உடல் நலமின்றிப் படுக்கையில் விழுந்தார் பேநசீரின் அம்மா. நுரையீரல் புற்றுநோய்.

தவிர, நாளடைவில் மூளையின் உயிரணுக்களைப் பாதிக்கும் அல்சைமர் வியாதி வேறு. (தலையில் அடிபட்டுக் கொண்டு தன் அம்மா விழுந்த காலகட்டத்தில், அவரை வெளிநாட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப மறுத்தது ஜியாவின் ராணுவ ஆட்சி. அப்படி அனுப்பியிருந்தால் தன் அம்மா பின்னாளில் ‘அல்சைமர்’ நோயினால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார் என்பது பேநசீரின் எண்ணம்).

ஒருவழியாக மறுபடி தேர்தல் நடைபெற்றது. அந்தக் காலகட்டத்தில் பேநசீரை வீட்டுச்சிறை வைத்து சந்தோஷப்பட்டது ராணுவம். ஆனால் புட்டோவுக்கு இருந்த புகழும், ராணுவ ஆட்சியின்மீது எழுந்த வெறுப்புமாகச் சேர்ந்து கொண்டு, பேநசீரின் கட்சி அதிரடி வெற்றி பெற... தன் விருப்பப்படியே பிரதமரானார் பேநசீர்!

1988 ஆம் ஆண்டு முதல் முறையாக அவர் பிரதமராக பொற்பேற்ற போது, நவீனத்துவமும், ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கும் ஒருவராக பேனசீர் புட்டோ பார்க்கப்பட்டார். தம்மை ஒரு மதச்சார்பற்றவராகவும், தீவிரவாதத்தை எதிர்ப்பவராகவும் தம்மை அவர் வெளிக்காட்டிக் கொண்டார். பாகிஸ்தானின் கொந்தளிப்பு மிக்க அரசியல் களத்தில் அவரது இந்தக் கொள்கைகள் அவருக்கு எதிராகச் செல்லக் கூடும் என 1979 ஆண்டிலேயே கூறப்பட்டது. இதை அவரும் ஏற்றுக் கொண்டார்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த முஸ்லீம் உலகில், இளைமையாக, நன்றாக படித்த கவர்ச்சி மிக்கவரான பேனசீர் புட்டோ இஸ்லாமிய உலகில் ஒரு புதிய காற்றாக பார்க்கப்பட்டார்.

இவ்வாறு இருந்தாலும், 1996 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாக பதவியிலிருந்து நீக்கப்பட்ட போது, அவர் மீதும் அவரது கணவர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

மிக இளம் வளதில் பிரதமரானவர் என்பதைத் தவிர, வேறொரு பெருமையும் பேநசீருக்கு உண்டு. பதவியிலிருந்தபோதே குழந்தை பெற்றுக்கொண்டே ஒரே பிரதமரும் அவர்தான்! ஆனால், அதற்காக அவர் சந்தித்த குத்தல் பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

பேநசீரின் ஆட்சியே நிலைக்குமா? நிலைக்காதா? என்று கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், இவருக்கு இரண்டாவது குழந்தை தேவையா? என்றெல்லாம் குத்தலும் கிண்டலுமாகப் பேசி மகிழ்ந்தார்கள்.

பேநசீர் தன் ஆட்சிக் காலத்தைப் பயன்படுத்தி அதிகம் சொத்துக்களைக் குவித்தார் என்று அவர் பேரில் குற்றச்சாட்டும் எழுந்தது. தவிர, பேநசீரே தனது தம்பி ஷா நாவாஸைக் கொன்றதாகவும் அவரது அரசியல் எதிரிகள் குற்றம் சுமத்தினார்கள். ‘‘கிடையவே கிடையாது! என் குடும்ப எதிரிகள் திட்டமிட்டு இப்படி என்னையும் சேர்த்து ஒழிக்கப் பார்க்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால், பிரான்ஸில் தங்கியிருந்தபோது, என் தம்பி ஷா நவாஸ் எப்போதும் விஷத்தைத் தன்னோட வைத்திருந்தான். எப்போதாவது எதிரிகள் அவனை பாகிஸ்தானுக்குக் கடத்திச்சென்று விட்டால், உடனே அதைக் குடித்துவிட வேண்டுமென்று தீர்மானித்திருந்தான்’’ என்கிறார் பேநசீர்.
அது உடனடியாகக் கொல்லும் விஷம் என்பதை அறியாமல் அதைத் தண்ணீரில் கலந்து அவர்கள் கொடுத்ததினால் அவனால் உடனடியாக சாக முடியாமல் மெல்ல மெல்லத்தான் இறந்திருக்கிறான். இறந்து கொண்டிருந்த ஒருவருக்கு உதவாமல் போனதற்காக அவன் மனைவி ரெஹனாவுக்கு பிரெஞ்சு நீதிமன்றம் தண்டனையே அளித்தது.

மற்றொரு தம்பி முர்தஸாவும் படுகொலை செய்யப்பட்டார். பேநசீரை எதிர்த்துத் தேர்தலில் நின்றவர் இவர். ‘‘இந்தக் கொலைப்பழியையும் கூட என் தலையில்தான் போடப் பார்த்தார் ஜியா. புட்டோவின் வாரிசு அவன்தான் என்று எனக்கெதிராகக் கொம்புசீவி தேர்தலிலும் அவனை நிறுத்தினார்கள் ஜியாவின் ஆட்கள். அவன் ஜெயித்தாலும் அவனை ஒரு நாள் பிரதமராகக் கூட இருக்கவிடமாட்டார்கள் என்பது பாவம் அவனுக்குப் புரியவில்லை. எங்கள் இருவரையுமே ஒழித்துக்கட்ட செய்யப்பட்ட ஏற்பாடுதான் அது. கடைசியில் எங்களுக்கான போட்டியில் நவாஸ் ஷெரிப் தான் லாபம் பார்த்தார்.’’ என்கிறார் பேநசீர் அந்த முர்தஸாவையும் பேநசீரின் கணவர்தான் கொன்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

‘அரசு காரியங்களைச் செய்து தருவதற்காக கமிஷன் அடித்தார்’ என்றும் பேநசீரின் கணவரை குற்றம் சாட்டினார்கள். அவருக்கும் பேநசிருக்கும் பிரச்னை என்றும், பிரிந்து விட்டார்கள் என்றும் கிசுகிசுத்தார்கள்.
‘‘இதெல்லாம் வீண்பேச்சு. என் கணவரும் நானும் மிக நெருக்கமாகவே எப்போதும் இருந்து வந்திருக்கிறோம். ஆண்களின் மேலாதிக்கம் மிகவும் அதிகமாக உள்ள பாகிஸ்தானில், ஒரு பெண் பிரதமரின் கணவராக ஒருவர் இருப்பது மிகச்சிரமம்!

என்னைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பே என் கணவர் பணக்காரர். சொந்தமாக போலோ குழு வைத்திருந்தார். தனியாக ஒரு டிஸ்கோதே க்ளப்புக்கும் சொந்தக்காரர். இன்சூரன்ஸ், ஹோட்டல் பிசினஸ் என்று செழித்த வாழ்க்கை அவருடையது. எனவே கமிஷன் பெற்றுத்தான் சொத்து சேர்க்கவேண்டுமென்ற அவசியம் அவருக்கு இல்லை.

எங்கள் பதினாறு வருடத் திருமணவாழ்வில் பத்து வருடங்களை சிறையில் கழித்திருக்கிறார். ‘பேநசீரை விவாகரத்து மட்டும் செய்து விடுங்கள்... உடனே விடுதலை செய்கிறோம்’ என்று பேரம் பேசப்பட்டும், எனக்கு ஆதரவாக இருந்தவர் என் கணவர்’’ என்று தன் கணவர் ஜர்தாரியைப் பற்றி நெகிழ்வாக குறிப்பிடுகிறார் பேநசீர்.

இவ்வளவு தடைக்கற்கள் இருந்தாலும் சின்னச் சின்ன ஆசைகள் யாரைவிட்டது? பேநசீருக்கு இரவில் வானத்தில் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்கும். சாக்லெட்டுகள் பிடிக்கும். தயிர்வடையிலிருந்து கார வெண்டைக்காய் வரை பிடிக்கும். ஆனால் ரத்தக்கொதிப்பு அதிகம் உண்டு என்பதால் டயட்டில் இருக்க வேண்டிய கட்டாயம்.

தவிர, ‘ஆரோக்கியமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருப்பது எப்படி?’ என்று புத்தகம் எழுதவும் ஆசை பேநசீருக்கு. ‘‘ஆனால் இதெல்லாம் கட்சியின் இமேஜை வளர்க்க உதவாது. ஒரு அரசியல் தலைவி என்கிற எனது இமேஜூம் அடிபடும் என்கிறார்கள் என் கட்சித் தலைவர்கள்’’ என்கிறார் பெருமூச்சுடன்.

இதன் பிறகு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த பேனசீர் புட்டோ, 2007 அக்டோபர் மாதம்தான், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு மூன்றாவது முறையாக பிரதமராகும் நோக்கில் நாடு திரும்பினார்.

ஆனால், அவர் நாடு திரும்பிய தருணத்திலேயே அவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் அவர் தப்பினாலும், அவரது வாகனத் தொடரணியைத் தொடர்ந்து வந்த கூட்டத்திலிருந்த 130 பேர் பலியானார்கள்.

நாடு திரும்பிய அவர் அதிபர் முஷாரஃப் அவர்களுடன் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வார் என மேற்குலகம் எதிர்பார்த்தது. ஆனால், அதிபர் முஷாரஃப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல் படுத்திய பிறகு அவர் தலைமையில் தாம் பிரதமராக பணியாற்ற மாட்டேன் எனக் கூறிவிட்டார்.

தனது தந்தை இராணுவ ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டதையடுத்து அவரிடம் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு எண்ணமே இருந்து வந்தது.

அவர் பிரதமராக இருந்த இரண்டு முறையும் அவரது ஆட்சி ஊழல்களால் பீடிக்கப்பட்டிருந்தது.

மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பாகிஸ்தானியர்கள் முன் தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபிக்க விழைந்த பேனசீர் புட்டோவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

2007 டிசம்பர் 27 இல் பாகிஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் பேனசீர் பூட்டோ அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னர் பேனசீர் புட்டோ ராவல்பிண்டியில், தனது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாகிஸ்தானின் பிரதமராக இரு தடவைகள் பதவி வகித்த பேனசீர் அவர்கள், 2008 ஜனவரி மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல