தகவல் தொடர்பு சாதனங்கள் என்பதன் கருத்து தகவலை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்ய உதவுகின்ற கருவிகள் எனக் குறிப்பிடலாம். ஆரம்ப காலங்களில் இருந்தது போல ஒருவருடனான பேச்சு, சம்பாஷணை, கூட்டங்கூடல் போன்ற வழிமுறைகளினாலான தொடர்பாடல்கள். இன்று அருகிவிட்டன.
அத்தொடர்பாடலைக் கருவிகளின் வழியாக நாம் மேற்கொள்கின்ற போது அவை தொடர்பு சாதனங்களாகி விடுகின்றன. அத்தோடு இத்தொடர்புச் சாதனங்களின் வழியாகப் பெறப்படும் தகவல் பரிமாற்றமானது எத்தகைய தடங்களும் இன்றி ஒருவரைச் சென்றடைகின்ற போதுதான் அவை சமூகத்தில் பயனளிக்கின்றன.
அல்லது முழுமை பெறுகின்றன. இத்தகவல் தொடர்பு சாதனங்களில் தொலைபேசி, இணையம் ஆகியன முக்கியத்துவம் பெறுகின்றன. இன்றைய மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக தகவல் பரிமாற்றம் திகழ்கின்றது.
இத்தொடர்பாடல் சாதாரண கண்ஜாடை முதல் இணையத்தில் தொடர்பு கொள்வது வரை எந்த வகையிலும் அமையலாம். அதேபோல் பரிமாறிக் கொள்ளப்படுகின்ற தகவல் இப்படித்தான் அமைய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
தகவல் எவ்வகையிலும் ஒழுங்காகச் சென்றடைந்தால் அது தகவல் பரிமாற்றமாக கொள்ளப்படும். இத்தகவல் பரிமாற்றம் இல்லையேல் மனிதன் பூரணத்துவமான ஒரு மனிதனாக வாழ முடியாது.
மனிதன் ஒரு சமூகப் பிராணி எனும் நிலையில் இருந்து கொண்டு சமூகத்தின் செல்வாக்கிற்கு உட்படாமல் அவனால் வாழ முடியாது. மொழிப் பழக்கவழக்கங்கள் ஒழுக்க முறைகள் கருவிகளின் பயன்பாடு ஆகிய அனைத்தையும் அவன் சமூகத்தில் இருந்தே பெற்றுக் கொள்கின்றான்.
இதனால் இன்றைய தொழில் நுட்ப யுகத்தினைக் கொண்ட சூழலில் தொடர்பு சாதனங்கள் ஒருவனது நடத்தையில் பலவாறாக செல்வாக்குச் செலுத்தும் தன்மையினை நாம் எளிதாக நோக்க முடியும். கையடக்கத் தொலைபேசி எமது சமூகமெங்கும் நிறைந்திருக்கின்றது.
அவைகளுக்குத் தடைகள் இல்லை. இன்று பெருகி வரும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நினைத்தவுடன் அதே கணக்கில் அழைப்புக்களை மேற்கொள்ளவும், குறுந்தகவல்களை ஷிணிஷி அனுப்பவும் பெறவும் முடிகின்றது.
மேலும் விம்பங்களாகவும், ஒளி, ஒலி முறைகளிலும் தகவல்களை வெளிக்கொணர்ந்து தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. இவை இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் சிந்தனையின் மையப் புள்ளியாக விளங்குகின்றன. அவர்களின் அன்றாட வாழ்வியலின் பண்பாடு, விழுமியங்கள், நெறிமுறைகள், கலாசார அம்சங்கள், உணவு பழக்க வழக்கங்கள், உறவு முறைகள் என அனைத்து அம்சங்களிலும் பாரிய தாக்கத்தைச் செலுத்துவதாக அமைகின்றது.
இன்று பாடசாலை மாணவர்கள் தாமாகவே விரும்பியோ விரும்பாமலோ இக்கையடக்கத் தொலைபேசியின் ஆட்சிக்குள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு நேரத்தையும் கடமைகளையும் மறந்து செயற்படுகின்ற அளவுக்கு சமூகத்தில் இதன் ஆக்கிரமிப்பு அதிகரித்து விட்டது.
இவ்வாறு அவர்களின் வாழ்வியலில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதாக இன்று விமர்சிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர்களின் நேரம் வீண் விரயம் செய்யப்படுவதுடன் கற்றலின் பெறுமதி, தேவை, இலக்கின் முக்கியத்துவம் குறைக்கப்படுகின்றது.
இவர்களிடையே சமூக அக்கறை பற்றிய சிந்தனைகள் இல்லாது போவதுடன் தமது பொறுப்புக்கள், கடமைகள், எதிர்கால திட்டங்கள் பற்றிச் சிந்திக்கும் தன்மை முதலானவை கையடக்கத் தொலைபேசி பாவனையால் குறைந்துள்ளன.
அறிமுகமானவர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் உரையாடுவது போதாதென்று முகம் தெரியாதவர்களுடன் கூட தொடர்பு வைத்திருப்பதால் தவறான பாதையை தேர்ந்தெடுக்கவும் கலாசார, பண்பாட்டுச் சீர்கேடுகள் ஏற்படவும், உறவுகளுக்கு இடையில் புறக்கணிப்புக்கள், உளப்பாதிப்புக்கள் என்பனவும் ஏற்பட ஏதுவாகிறது.
மேலும் வன்முறை மனப்பாங்குகளும் வளர்கின்றன. குற்றச் செயல்களும் இதனால் அதிகரிக்கின்றன. அதாவது கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பது கெளரவமாகக் கருதப்படுவதால் அதனைத் திருடுவதற்கும் இவர்கள் பின்நிற்பதில்லை. மேலும் கையடக்கத் தொலைபேசியின் கணக்கை மீள்நிரப்ப (RELOAD OR RECHARGES) வீட்டில் பணம் கொடுக்காத சந்தர்ப்பத்தில் வீட்டிலேயே திருடுகின்ற தன்மையும் இவர்களிடம் அதிகரிப்பதனால் பல சிறிய குற்றங்களை இலகுவாக செய்ய கற்றுக் கொள்கின்றனர்.
எனவே மேற்குறிப்பிட்ட வகையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கையடக்கத் தொலைபேசி அவர்களது வாழ்வியல் அம்சங்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதனை நன்றாக அறிய முடிகின்றது. இன்றைய நிலையில் கையடக்கத் தொலைபேசியின் பாவனை உலகளாவிய ரீதியில் பரந்துபட்ட விடயமாகக் காணப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து, பாதுகாப்பு கருதி அவர்களுக்கு பெற்றோர்களால் அளிக்கப்படும் கையடக்கத் தொலைபேசியே அவர்கள் சமூக பிரச்சினைகளை எதிர்நோக்க வழி வகுக்கின்றது.
ஏனைய VIDEO CLIPS, MP3 SONGS, VIDEO GAMES மிதிணிரிஷி என பல தரப்பட்ட விடயங்களால் கவரப்பட்ட மாணவர்கள் மணிக்கணக்காகத் தங்கள் பொழுதை அவற்றில் கழிக்கின்றனர். தேவைக்கெனப் பாவிக்கும் நிலை போய் எந்த நேரமும் கையில் அதை வைத்துக் கொண்டு நேரத்தையும் மன ஆரோக்கியத்தையும் பெருமள வில் பாதிப்படையச் செய்கின்றனர்.
மேலும் அண்மைக் காலத்தில் குறித்த சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகளில் குரலை மாற்றிப் (VIDEO CHANGER ) பேசும் வசதி காணப்படுவதால் பல புறழ்வு நடத்தைகள் உருவாகின்றன. இவற்றைத் தவிர்க்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் வழிகாட்ட
வேண்டும். கண்டிப்பதன் மூலம் எந்தவொரு செயலையும் நாம் தடுத்துவிட முடியாது. நல்ல புத்தகங்களை வாசிக்கவும், பெற்றோர், உறவினர்களுடன் நட்புறவாக வளர்வதற்கும் இந்த வழிகாட்டல்கள் அவசியமாகின்றன.
இன்று உலகம் முழுவதிலுமே கையடக்கத் தொலைபேசிகள் பாடசாலை மாணவ சமூகத்தை தம் கைப்பிடிக்குள் வைத்துள்ளன. எனவே, அதற்கு அடிமையாகி விடாது திட்டமிட்டுச் செயற்படுவதன் மூலம் கல்வியிலும், ஆளுமை விருத்தியிலும் நல்ல முன்னேற்றத்தை எட்ட முடியும். பாடசாலை நேரங்களில் மாணவர்கள் இதனைப் பாவிப்பது இனங் காணப்பட்டு, தடுக்கப்பட வேண்டும். இலங்கையில் அநேக பாடசாலைகளில் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பாட நேரங்களில் ஆசிரியர்களும் கையடக்கத் தொலைபேசியை பாவிப்பதைத் தவிர்ப்பதன் மூலமாக மாணவர்களுக்கு முன்னோடியாகத் திகழலாம். மேலும் பாடசாலையை விட்டுத் திரும்பியவுடன், அரட்டை அடிக்கக் கையடக்கத் தொலைபேசியை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுகின்றனர்.
இவர்கள் இதனையெல்லாம் தவிர்த்துக் கொள்ளல் நன்று. அவர்கள் வீட்டுக்கு வந்ததும் மீண்டும் பாடங்களை படிக்கலாம் அல்லது ஓவியம், நடனம், விளையாட்டுக்களில் கவனத்தை செலுத்துவதன் மூலம் அவர்களின் ஆளுமையை விருத்தியடையச் செய்யலாம்.
இது சமூகத்தில் பகுதியளவில், வேலையை இலகுவாக்குதல் தொடர்பாடலை இலகுவாக்குதல் போன்ற சாதன விடயங்களுக்காகப் பயன்படுத்தினாலும் இது பாடசாலை மாணவர்கள் மத்தியில் சமூகச் சீர்கேட்டினை ஏற்படுத்தத் தூண்டுகின்றது.
எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி சமூக நலனை மேம்படுத்தாமல் மாறாக பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமென்பதில் ஐயமில்லை. தகவல் தொடர்புகளுக்குப் பயன்படுத்த வேண்டியதை தொலைபேசி இன்று பல்வேறு குற்றச் செயல்களுக்கும், ஒழுக்கச் சீர்கேடுகளுக்கும் துணை போகின்றது.
இதன் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்த நிலையில் நாகரீகம் என்ற போர்வையில் கலாசாரத்தினை சீரழிக்கும் தன்மையை கொண்டு காணப்படுகின்றது. இவ்வாறாக பாடசாலை மாணவர்களின் அன்றாட வாழ்வியலில் மிகுந்த பாதிப்பினை புறழ்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இது சமூகத்தில் பல சமூகப் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது என்பதையும் இதன் மூலமாக அறியக் கூடியதாக உள்ளது. கடந்த காலங்களில் இதன் தேவை குறைவாகவே காணப்பட்ட போதிலும் இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட நிலையில் அதனது விளைவுகள் ஆழமானதாகவே அமைகின்றன.
இதனைக் கவனத்தில் கொண்டு பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி, எதிர்கால நலன் என்பவற்றிக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட வேண்டும் என்பதுடன் இக்கையடக்கத் தொலைபேசி மூலமாக தேவையற்ற பாவனையை குறைப்பதனையும் அந்நிலையை மாற்றுவதற்காக அதாவது அதற்கு அடிமையாகும் தன்மையை மாற்றும் வழிவகைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி தம் பிள்ளைகளை நேரான பாதைக்கு இட்டுச் செல்வது அவசியமானதாகும்.
பாடசாலை மாணவர்களின் ஆளுமை விருத்தியில் அதிக அக்கறையும் மாணவ சமூகத்திற்கு செழிப்பான கல்வி வளம், எதிர்காலம் ஆகியன சிறப்பான முறையில் அமைவதற்கும் இக்கையடக்கத் தொலைபேசி அவர்கள் தாக்கத்தில் இருந்து விடுபட சகலரும் சிந்திப்பதும் கடமை உணர்வுடன் செயற்பட வேண்டியதும் அவசியமாகும்.
நன்றி: ‘தமிழில் கல்வி’ இணையத்தளம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக