தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாகக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் அதைச் செய்தபாடாக இல்லை. இப்போது ஒட்டுமொத்தமாகச் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போகின்றார்களாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்கு எப்போதும் காலங்கடந்த ஞானோதயம்.
இனப் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கையில் தீர்வு காண வேண்டும் என்ற ஞானோதயமும் காலங்கடந்துதான் வந்திருக்கின்றது. தனிநாடு என்ற மாயைக்குள் சஞ்சரித்துத் தமிழ் மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தியபின் இந்த ஞானோதயம் வந்திருக்கின்றது.
தமிழ் மக்களும் முஸ்லிம்களும் ஒன்றுபட்டு உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதும் காலங்கடந்து வந்த ஞானோதயம்.
முஸ்லிம் காங்கிரஸ¤க்கு அழைப்பு விடுத்திருக்கும் சம்பந்தன் தமிழரசுக் கட்சிக்காரர். தமிழ் மக்களும் முஸ்லிம்களும் ஒரே கொடியின் கீழ் ஒரே அணியில் செயற்பட்ட வரலாறு அவருக்கு நிச்சயம் நினைவிருக்கும். ஐம்பது அல்லது நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்கும் அது நிச்சயம் நினைவிருக்கும். மசூர் மெளலானா, ஏ. எச். எம். அஷ்ரஃப் போன்ற பலர் தமிழரசுக் கட்சி மேடைகளில் மக்களைக் கவரும் பேச்சாளர்களாக விளங்கினர்.
அது தமிழரசுக் கட்சி சமஷ்டியை அரசியல் தீர்வாக முன்வைத்த காலம். தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கையில் முஸ்லிம்களுக்கும் தனியான அலகு இருந்தது. பண்டா - செல்வா ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தில் இரண்டு அலகுகள் என்ற உடன்பாடு ஏற்பட்டதற்கு முஸ்லிம்களுக்கான தனியலகுக் கொள்கையே காரணம்.
முதலாவது குடியரசு அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட அரசியலமைப்பு நிர்ணய சபையில் முஸ்லிம்களுக்கான தனியலகுக் கொள்கையைத் தமிழரசுக் கட்சி வெளிப்படுத்தியது. அன்றைய மானிப்பாய் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம் அச் சபையில் உரையாற்றிய போது, தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கொள்கையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்குத் தனியான அலகு உண்டு எனக் கூறினார்.
தமிழரசுக் கட்சி இந்த நிலைப்பாட்டிலிருந்து விலகியது. தமிழ் பேசும் மக்கள் என்ற கோஷம் தமிழ் மக்கள் எனச் சுருங்கியது. தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி வட்டுக்கோட்டை மகாநாட்டில் தனிநாட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
இதன் பின்னர் முஸ்லிம்களின் அரசியல் தனிவழி ஆனது. தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நிலவிய உறவு மெல்ல மெல்லச் சீரழியத் தொடங்கியது.
இந்த நிலை உருவாகியதற்குத் தமிழரசுக் கட்சியே காரணம்.
இவ்வளவுக்கும் காரணமாக இருந்த தமிழரசுக் கட்சித் தலைவர்கள் இப்போது தமிழ் – முஸ்லிம் உறவுக்கு அழைப்பு விடுப்பது காலங்கடந்த ஞானோதயம் தானே.
தமிழரசுக் கட்சி தடம் புரளாமல் இருந்திருந்தால் தமிழ் – முஸ்லிம் உறவு இன்று மிகவும் வலுவானதாக வளர்ந்திருக்கும். இனப் பிரச்சினைக்கான தீர்வு சுலபமாகியிருக்கும்.
சரி, இப்போதாவது சரியான நிலைப்பாட்டில் நின்று அழைக்கின்றார்களா என்பதே கேள்வி.
தீர்வு இல்லை
இனப் பிரச்சினைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தீர்வு இல்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி முஸ்லிம் காங்கிரஸ் அக்கறை செலுத்தியது கிடையாது. பதவியிலுள்ள அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக இடைக்கிடை இனப்பிரச்சினை பற்றியும் தீர்வு பற்றியும் தலைவர்கள் பேசிய போதிலும், கட்சி என்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் இனப்பிரச்சினை பற்றி விவாதித்துத் தீர்வு பற்றிய முடிவுக்கு இதுவரை வரவில்லை.
இந்த நிலையில் சம்பந்தனின் அழைப்பு வெறுமனே மக்கள் கவர்ச்சிக்கான அழைப்பா அல்லது காரிய நோக்கம் உள்ள அழைப்பா என்ற கேள்வி எழுகின்றது.
இரண்டு கட்சிகளும் கூட்டாகச் செயற்பட வேண்டும் என்ற கருத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைப்பது இது முதல் தடவையல்ல. ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸ¤ம் கூட்டாகச் செயற்படுவதற்கு முன்வந்தன. கூட்டாக ஊடகவியலாளர் மாகாநாடு நடத்தின. பொதுத் தேர்தலில் கூட்டாக வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக இரண்டு தலைவர்களும் அந்த மகாநாட்டில் அறிவித்தார்கள். ஆனால் நடந்தது தான் முழு நாட்டுக்கும் தெரியுமே.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிட்டன. முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டத்திலிருந்து வெளியே வரப்போவதில்லை. பொதுத் தேர்தலில் இது பட்டவர்த்தனமாக வெளிப்பட்ட பின்னரும் சம்பந்தன் முஸ்லிம் காங்கிரஸ¤டன் கூட்டாகச் செயற்பட முனைகின்றாரென்றால் அந்த வட்டத்தை நெருங்கிச் செல்லும் நோக்கமா?
பேச்சு வீரர்கள்
பாராளுமன்றத்தில் இணைந்து செயற்படுவதற்காக என்றே சம்பந்தர் முஸ்லிம் காங்கிரஸ¤க்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். பொதுத் தேர்தல் முடிந்தவுடன் இப்படியான ஒரு அழைப்பை விடுப்பதென்றால் அது தேர்தலில் முக்கியமானதாகக் காணப்பட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அழைப்பாகவே இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் இனப் பிரச்சினையே தேர்தலில் முக்கியமான பிரச்சினையாக விளங்கியது.
இன்றைய பாராளுமன்றத்தில் எதிரணி மிகவும் பலவீனமானது. எந்த விடயத்திலும் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொண்டுவரக் கூடிய நிலையில் ஒட்டுமொத்தமான எதிர்க் கட்சிகள் இல்லை. எனவே பாராளுமன்றத்துக்கூடாக அழுத்தம் பிரயோகித்து இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கூடிய நிலை இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் 8!சீகிரஸ¤ம் பாராளுமன்றத்தில் கூட்டாகச் செயற்படுவது இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவருவதற்காக எனக் கருதமுடியாது.
சம்பந்தர் சிறந்த பேச்சாளர். ஹக்கீமும் சிறப்பாகப் பேசக்கூடியவர். இந்தப் பேச்சு வீரர்கள் இருவரும் பாராளுமன்றத்தில் காரசாரமாகப் பேசினால் ஊடகங்களில் அது கொட்டை எழுத்தில் பிரசுரமாகும். மக்கள் ஆவலுடன் படிப்பார்கள். ஆனால் அதனால் பிரச்சினை தீராது.
ஆட்சியாளர்களுடன் நேரடியாகப் பேசுவதன் மூலம் தான் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும். இது பாராளுமன்றத்துக்கு அப்பால் இடம்பெறுகின்ற விடயம். பாராளுமன்றத்தில் வீராவேசமாகப் பேசுவதற்குக் கூட்டுச் சேர்வதை விட அரசாங்கத்துடன் நேரடியாகப் பேசிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சி செய்வதே இன்று தேவைப்படுவது.
நித்திய தலைவர்
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிக மோசமான தோல்வி கிடைத்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தோல்வி ஏற்படாமல் தவிர்க்கும் நோக்கத்துடனேயே ஜே. ஆர். ஜயவர்த்தன விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை அறிமுகப்படுத்தினார். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் இந்தத் தடவையைப் போல மோசமான தோல்வி முன்னொரு போதும் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி அடுத்தடுத்துத் தோல்விகளைச் சந்தித்து வருவதற்குக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவே காரணம் என்ற அபிப்பிராயம் கட்சிக்குள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. ரணில் தலைமைப் பதவியிலிருந்து இறங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றது. ஆனால் ரணில் தலைமைக் கதிரையிலிருந்து இறங்குவதாக இல்லை.
தலைமைப் பதவியிலிருந்து ரணிலை நீக்குவதற்கான முயற்சி கைகூடாத நிலையில் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் இணைந்தார்கள். கட்சிக்கு அவ்வாறான ஒரு பாதிப்பு ஏற்பட்ட பின்னராவது ரணில் தலைமைப் பதவியைக் கைவிட விரும்பவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை ரணில் தனக்கு ஏற்றவாறு திருத்தி வைத்திருக்கின்றார். இந்த யாப்பின் படி, அவரைத் தலைமைப் பதவியிலிருந்து வெளியேற்றுவது லேசான காரியமல்ல. அவர் தானாக விலக வேண்டுமேயொழிய அவரை வெளியேற்ற முடியாது. இதனால் தான், எத்தனை தோல்விகள் வந்தாலும் ரணில் ‘நான் தான் தலைவர்’ என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார். ரணில் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற அழுத்தம் நீண்ட காலமாக இருந்து வருகின்ற போதிலும் அவரை எவரும் எதுவும் செய்ய முடியாமலிருப்பதற்கு யாப்பில் செய்த திருத்தங்களே காரணம்.
‘உலக ஜனநாயக அரங்கு’ என்ற அமைப்பில் ரணில் ஒரு முக்கிய உறுப்பினர். ஆசியாவுக்குப் பொறுப்பானவராக உள்ளார். பிரித்தானியா உட்படப் பல நாடுகளின் வலதுசாரிக் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கியது தான் இந்த ‘உலக ஜனநாயக அரங்கு’. இந்த அரங்கின் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் தேர்தலில் தோற்றால் இராஜினாமா செய்துவிடுகின்றார்கள். இந்த விடயத்தில் ரணில் அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றுவதில்லை. எத்தனை தடவைகள் தோற்றாலும் அசையமாட்டார். ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கருமாதி செய்துவிட்டுத்தான் ஓய்வார் போலும்.
தேசியப் பட்டியல்
தேசியப் பட்டியல் நியமனம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புயலைக் கிளப்பியிருக்கின்றது. ருக்மன் சேனநாயக, கே. என். சொக்ஸி, திலக் மாறப்பன போன்ற கட்சி முக்கியஸ்தர்களுக்கு நியமனம் வழங்கவில்லை.
தன்னுடைய தலைமைக்குச் சவாலாக இருக்கக் கூடியவர்களை முளையிலேயே கிள்ளிவிடுவது ரணிலின் வழக்கம். ருக்மன் சேனநாயக கட்சியின் ஸ்தாபகர் டீ. எஸ். சேனநாயகவின் பேரன். அவர் எப்போதாவது ஒருநாள் தனது தலைமைக்குச் சவாலாக இருப்பார் என்று கருதியதால் ரணில் அவரை ஓரங்கட்டிவிட்டார் என்று கட்சிக்குள் பேசிக்கொள்கின்றார்கள். ருக்மனைத் தேர்தலில் போட்டியிட விட்டிருந்தால் அவர் வென்றிருப்பார் என்றும் ரணில் திட்டமிட்டு அவரை வெட்டியிருக்கின்றார் என்றும் சொல்கின்றார்கள்.
தேசியப் பட்டியல் பிரச்சினையால் மனோ கணேசனுக்கும் யூ. என். பிக்கும் இடையிலான உறவும் அறுந்துவிட்டது.
மனோ கணேசனின் பெயர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் இருக்கவில்லை. கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த மனோ கணேசன் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குச் செல்வதற்கு முயற்சித்தார். ரணில் அதற்கு இடமளிக்கவில்லை. இப்போது மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சியைக் கடுமையாக விமர்சிக்கின்றார்.
ருக்மன் சேனநாயக்கவையே ஓரங்கட்டிய ரணில் மனோ கணேசனுக்கு நியமனம் வழங்காததொன்றும் அதிசயமல்ல. ரணில் விக்கிரமசிங்ஹவைப் புரிந்துகொள்வதற்கு மனோ கணசேனுக்குப் பத்து வருடங்கள் எடுத்திருப்பது தான் அதிசயமானது. இவ்வளவு காலமும் ரணிலை ஒரு மகாபுருஷராக வர்ணித்தவர் மனோ கணேசன். ஐக்கிய தேசியக் கட்சி அடிப்படையில் தமிழருக்கு விரோதமானது என்பதை இப்போதாவது அவர் புரிந்துகொண்டிருப்பார்.
தேசியப் பட்டியல் புயல் தந்த தலையிடியைத் தொடர்ந்து அடுத்த தலையிடி ரணிலுக்குக் காத்திருக்கின்றது. யானைச் சின்னத்தில் போட்டியிட்ட பலர் ‘வெற்றிலை’யின் பக்கம் திரும்புகின் றார்கள்.
ஜீவகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக