அதில் உங்களது குழந்தைக்கு இப்போதைய வயதிற்கு நேரே தற்போதைய நிறையைக் குறித்துப் பார்த்தால் அவனது வளர்ச்சி போதுமானதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள முடியும். இதை அட்டவணையில் குறித்துப் பார்ப்பதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் உங்களது குடும்ப வைத்தியரது அல்லது உங்களது பகுதி சுகாதார சேவையாளரது உதவியைப் பெறுங்கள்.
உடற்தேவைக்கு ஏற்ப உண்பார்கள்
இரண்டு வயதில் பிள்ளைகள் உணவைப் பற்றி அக்கறை எடுப்பதில்லை. விளையாடி விளையாடித்தான் சாப்பிடுவார்கள். உணவு அவர்களுக்கு விளையாட்டுப் பொருள் போலத்தான் தெரியும். விரைவாகவும் உண்ணமாட்டார்கள். நீண்ட நேரம் எடுக்கக்கூடும். உணவில் ஆர்வம் காட்டாமலும் இருக்கக் கூடும். ஆனால் தமது உடற் தொழிற்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் வேண்டியதை நிச்சயம் உண்பார்கள்.
நிர்ப்பந்திக்க வேண்டாம்
சில பிள்ளைகளுக்கு இயற்கையிலேயே கூடிய பசி இருப்பதுண்டு. அதேபோல சில பிள்ளைகளுக்கு இயற்கையிலேயே பசி குறைவாக இருக்கலாம். ஆனால் முக்கியமான விடயம் என்னவெனில் சாப்பிடும்படி குழந்தையை நிர்ப்பந்திப்பதும், அதீதமாக முயற்சிப்பதும் தான் ஒரு குழந்தை சாப்பிடாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.
நீங்கள் எந்தளவிற்கு அதிகம் முயற்சிக்கின்aர்களோ, அவன் அதற்கும் மேல் வேண்டாம் என அடம்பிடிக்கலாம். உணவு ஊட்டுவதற்காக நீங்கள் எடுக்கும் அக்கறையும், ஆர்வமும் அவனுக்கு விளையாட்டுப்போல தோன்றி அவனுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும். முழு வீடுமே தனக்குப் பின்னால் திரண்டு நின்று தனக்கு உணவூட்ட முயல்வது அவனுக்கு மிகுந்த ஆனந்தத்தையும், திருப்தியையும் கொடுக்கும். அத்தகைய கவனிப்பைப் பெறுவதற்காகவே அவன் உணவை மறுப்பான்.
டொனிக்குகள் உதவுமா?
உங்களைப் போலவே பல தாய்மார்கள் தாங்கள் உணவூட்டுவதற்காக எல்லாவிதமான முயற்சியையும் எடுத்துப் பார்த்தும் சரிவரவில்லை என்பார்கள். ஆசை காட்டுவது, கதை சொல்வது, சாப்பிட்டால் அவனுக்கு விருப்பமான தின்பண்டங்களைக் கொடுப்பது, கண்டிப்பது, தண்டிப்பது என எல்லா முயற்சிகளை எடுத்தாலும் அவன் சாப்பிடாமல் இருக்கக்கூடும். அதேபோல விற்றமின்களும் டொனிக்குகளும்கூட குழந்தையைச் சாப்பிட வைக்காது.
உங்கள் முயற்சி
நீங்கள் எடுக்கும் ஒரே ஒரு நடவடிக்கை அவனைச் சாப்பிட வைக்கக்கூடும். எந்தவித முயற்சியும் எடுக்காமல் பேசாமல் விடுவதுதான் அது. உணவை அவனுக்குக் கொடுத்துவிட்டு பசியெடுத்தால் உண், இல்லாவிட்டால் விடு என்ற பாவனையில் விட்டுப்பாருங்கள். சாப்பிட்டுவிட்டானா இல்லையா என அவனது உணவக கோப்பையைப் பார்க்கும் துருவல் பார்வைகூட கூடாது. உணவை உண்ணாததற்காக அவனை ஏசவோ, தண்டிக்கவோ வேண்டாம். உண்டு முடித்ததற்காகப் பாராட்டவும் வேண்டாம். அவன் தானே வழிக்கு வருவான்.
உணவின் அளவும் கவர்ச்சியும்
ஒரேயடியாக கோப்பையில் நிறைய உணவைப் போட்டு விடாதீர்கள். அளவாகப் போடுங்கள். தேவையென்றால் குழந்தை கேட்கட்டும். முதல் நாளே குழந்தை சரியாகச் சாப்பிடுவான் என எண்ணாதீர்கள். மனதைத் திடப்படுத்திக்கொண்டு இந்த முறையைக் கடைப்பிடியுங்கள். சில தினங்களுக்குள் தானாகவே சாப்பிட ஆரம்பிப்பான்.
குழந்தையின் கண்களுக்கு கவர்ச்சியாக உணவுகளைக் கொடுங்கள். பல்வேறு நிறங்களில் அழகாக ஒழுங்குபடுத்திக் கொடுங்கள். அத்துடன் அவன் விரும்பி உண்பவற்றைக் கொடுங்கள். ஆனால் அதற்காக அவனை ருசிகளுக்கு அடிமையாக விட்டு விடாதீர்கள். நீங்கள் கொடுப்பதை அவன் வேண்டாமென்று சொன்னால் எந்தவித மறுப்பும் கூறாமல் உணவுக் கோப்பையினை எடுத்துவிடுங்கள். பசித்தால் மீண்டும் கொடுங்கள்.
நொறுக்குத் தீனி
அவனது சாப்பாட்டு முறைகள் பற்றியும், அவன் அதிகம் சாப்பிடாதது பற்றியும் அவன் காதுபட மற்றவர்களுடன் விவாதிக்காதீர்கள். முக்கியமான விடயம் என்னவெனில் சாப்பாடுகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் சிற்றுண்டிகளையும், நொறுக்குத் தீனிகளையும் கொடுக்காதீர்கள். போதிய உணவை எடுக்கட்டும் என்ற ஆர்வத்தில் ஒரு நாளைக்கு 15 முதல் 20 தடவைகள் கூட சில தாய்மார் தமது குழந்தைகளுக்கு கொடுக்க முயல்வதுண்டு.
நீங்களும் இத்தகைய தவறான முறைகளுக்குப்போக வேண்டாம். அத்துடன் பிள்ளையை எந்த நேரமும் தூக்கி வைத்துச் செல்லம் கொடுக்காதீர்கள். நான்றாக ஓடி விளையாட விடுங்கள். பசி எடுக்கும்.
உணவை உண்ணும்படி ஊக்கப்படுத்தாமையாலும், தெண்டிக்காமல் விடுவதாலும் எந்தப் பிள்ளையும் பட்டினிக்கு ஆளாவதில்லை என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக