சடலமுள்ள கோணிப்பையை பார்வையிடும் ஊர்வாசிகள்
2010ம் ஆண்டு ஜூன் மாதம் இருபத்தேழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை முந்தலம, தொடுவாவ, கடல் பகுதியில் சாக்குப் பையிலடைக்கப்பட்ட இந்திய பிரஜையொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவ்விளைஞர் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டுள்ளார். இச்சம்பவம் சம்பந்தமாக இரகசிய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும், கொழும்பு கிருலப்பனை போஜனசாலையொன்றின் உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகனமொன்றில் வந்த இவ்விருவரும் தொடுவாவ கடற் பகுதியில் சடலமொன்றை எறிந்துவிட்டு தப்பிச்செல்வதை முந்தலம, பின்னபாடுவ, வாசியொருவர் கண்டு பொலிஸ் அவசரப் பிரிவு 119க்குத் தெரிவித்ததையடுத்து இச்செய்தி முந்தலம பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டது.
சிலாபம் புத்தளம் பகுதிகளில் வீதித்தடையேற்படுத்தப்பட்டு சந்தேகத்துக்குரிய வாகனம் நிறுத்தப்பட்டு சோதனையிட்டதில் மேற்கூறப்பட்ட இரு சந்தேகநபர்களும் கைதாகினர். வாகனத்திலுள்ளிருந்த ஒருவர் தான் இரகசிய பொலிஸ் பிரிவின் அதிகாரியெனக் கூறி தன் கடமைக்குரிய அடையாள அட்டையை காண்பித்து அங்கிருந்து தப்பிக்க முனைந்து தோல்விகண்டார். இவர்களது வாகனம் சோதனையிடப்பட்ட போது தன்னியக்க துப்பாக்கியும் இரண்டு பாதணிகள், இறப்பர் குழாயொன்று, கயிறும் கண்டெடுக்கப்பட்டன இவைபற்றி உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் எறிந்த சடலம் நூற்றைம்பது மீட்டருக்கப்பால் கரையொதுங்கியது. விசாரணைகள் ஆரம்பமாகின.
கைது செய்யப்பட்டிருப்பவர்களிலொருவர் இரகசிய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியென்பது ஆச்சரியத்திலாழ்த்தியது. இவர் எதற்காக முந்தலமவுக்கு வந்தார். இவருக்கும் போஜனசாலையுரிமையாளருக்குமுள்ள தொடர்பென்ன இறந்தவர் யாரென்பதை அறியவேண்டியிருந்தது. சடலம் நிர்வாணமாகவும், கழுத்தில் பல காயங்களும் காணப்பட்டன. இளைஞர் வேறிடத்தில் கொலை செய்யப்பட்டு தொடுவாவ கடல் பகுதியில் போடப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்தது. விசாரணைகளுக்கு பொறுப்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ‘நந்தன முனசிங்க’ செயல்பட்டார். இவர் இதற்கு முன் இரகசிய பொலிஸ் பிரிவின் பிரதிப்பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றியவர்.
விசாரணையின் போது இறந்த இளைஞர் ‘தென்னரசு செல்வராசா இருபத்துநான்கு வயதுடையவர். இந்திய பிரஜையாவார். கைது செய்யப்பட்டுள்ள போஜனசாலை உரிமையாளரிடம் இவர் சமயல்காரராக வேலை செய்தவர். இவர் கடந்த ஜூன் மாதம்
பயன்படுத்தப்பட்ட வாகனம்
போஜனசாலை உரிமையாளரின் வீடு.
பதினொராம் திகதி சென்னையிலிருந்து இங்கு வந்துள்ளார். கிருலப்பனையிலுள்ள போஜனசாலையை நடத்துவதற்கு உரிமையாளருக்கு சிறந்த சமையல்காரரொருவர். தேவைப்பட்டதால் நண்பரொருவரின் ஒத்தாசையுடன் தமிழ் நாட்டின் சிறந்த சமையல்காரருள் ஒருவராக விளங்கும் செல்வராசாவை இங்கு வரச் செய்தார். இவர் இந்திய உணவுவகைகளை தயாரித்து வந்தார்.
ஒருநாளைக்கு எட்டு மணித்தியால வேலைக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாவுக்கு அண்மித்த தொகையை வழங்குவதாகவும் உரிமையாளர் சம்மதம் தெரிவித்துள்ளாராம். மேலும் இருவருடன் சமையல் வேலையை ஆரம்பித்த செல்வராசாவுக்கு இரண்டு வாரங்களில் சளிப்பேற்படுவதற்கு காரணம் அதிகளவு வேலையாகும். எட்டு மணித்தியால வேலை பன்னிரெண்டு மணித்தியாலமாகி பின்னர் பதிநான்கு மணித்தியாலமாகியதாம். அதிகளவு மணித்தியாலங்கள் வேலை செய்வதால் செல்வராசா உரிமையாளரிடம் சம்பளத்தை அதிகரிக்குமாறு கேட்க அதற்கு அவர் மறுத்துள்ளார். உனக்கு நான் சொன்ன சம்பளத்தை தருவேன், மேலதிகம் தரமுடியாது இங்கு வேலை செய்ய முடியாவிட்டால் நீ போகலாமென கூறியுள்ளார். அவ்வாறெனில் தான் மீண்டும் இந்தியா செல்ல ஏற்பாடு செய்து தருமாறு செல்வராசா உரிமையாளரிடம் கூற இருவரிடையே வாக்குவாதமேற்பட்டுள்ளது.
அடிக்கடி பொஜனசாலைக்கு வந்துசெல்லும் இரகசிய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உரிமையாளரின் நண்பராவார். போஜனசாலையை நடத்துவதுடன் இவர் இன்னுமொரு வியாபாரத்தையும் செய்துவந்தார். ஜரோப்பிய நாடுகளுக்கு தொழிலுக்காக இங்குள்ள இளைஞர், யுவதிகளை அங்னுப்பும் முகவர் நிலையமொன்றையும் நடத்திவந்தார். வெளிநாடு செல்வத்திற்குப் பொலிஸ் அறிக்கை அவசியமாகும் அதிலும் தமிழினத்தவர்கள் இங்கிருந்து செல்வதாயின் பயங்கரவாத்ததிலீடுபட்டதில்லையென்று வேறு குற்றங்கள் புரிந்தவரல்லவென்றும் இரகசிய பொலிஸ் பிரிவினால் அந்நபர் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவைகளுக்காக போஜனசாலை உரிமையாளர் பொறுப்பதிகாரியை பயன்படுத்தியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன் செல்வராசாவுடனான பிரச்சினையையும் உரிமையாளர், பொறுப்பதிகாரியிடம் கூறியிருப்பதாகத் தெரியவருகிறது. இங்கிருந்தால் நிலைமை மோசமாகலாம் என அனுமானித்த செல்வராசா மன்னாரிலுள்ள தன் நண்பனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கேற்பட்டுள்ள பிரச்சினையைக் கூறி நான் இந்தியா செல்ல உதவுமாறும் முடிந்தால் மறுநாள் மன்னாருக்கு வருவதாகவும் கூறியுள்ளார். மன்னார் நண்பர் இந்தியா செல்லும் போது செல்வராசாவை சென்னையில் சந்திப்பதுண்டாம்.
இந்நிலையில் திடீரென சமையல்காரர் தென்னரசு செல்வராசா காணாமல் போனது உரிமையாளருக்கு பிரச்சினையானது. இதர தொழிலாளர்களிடம் விசாரித்த போது செல்வராசா மன்னார் செல்வதாகக் கூறியதாகத் தெரிவித்தும் இதனை உரிமையாளர் தன் நண்பரான பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இரகசிய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி கடந்த ஜூன் மாதம் பத்தொன்பதாம் திகதி சனிக்கிழமை வவுனியா இரகசிய பொலிஸ் பிரிவுக்கு பின்வருமாறு தகவல் தெரிவித்தார். கொழும்பு புறக்கோட்டையிலிருந்து மன்னார் செல்லும் ஒரு பேருந்தில் செல்வராசா என்ற ஒரு நபரிருப்பதாகவும் அவரை கைது செய்யும் படியும் பணித்தார்.
குற்றவாளியொருவரை கைது செய்யும் தோரணையில் இவர் அங்கு பிரஸ்தாபித்துள்ளார். இவரது பணிப்பையடுத்து இருவர் மாற்றுடையில் மதவாச்சி சோதனைச் சாவடியில் பேருந்து சோதனையிடப்பட்டது. செல்வராசா அதிலிருக்கவில்லை. இவைபற்றி கொழும்புக்கு தெரிவிக்கப்பட்டது. மீண்டும் கிடைக்கப்பெற்ற உத்தரவையடுத்து எல்லா பேருந்துகளும் சோதனையிடப்பட்ட போது செல்வராசா சிக்கிக்கொண்டார். இவரை கொழும்புக்கு கொண்டு வரும்படி பணிக்கப்படவே வவுனியா இரகசியப் பொலிஸ் அதிகாரியொருவர் செல்வராசாவை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து கொழும்பு இரகசிய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து செல்வராசாவைப் பற்றிய தகவல்களை ஒருவராலும் அறியமுடியவில்லை. மேற்கூறப்பட்ட பொறுப்பதிகாரி செல்வராசாவை எடுத்துச் சென்றதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இருபத்தாராம் திகதி சனிக்கிழமையிலிருந்து பிரதான சமையல்காரர் செல்வராசா காணாமல் போயுள்ளதாக போஜனசாலை உரிமையாளரின் மனைவி கொழும்பு, வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கொழும்புக்குக் கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்ட செல்வராசாவின் நிர்வாண சடலம் முந்தலம் கடற்பகுதியில் காணப்பட்டது. இதையடுத்தேயாகும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள போஜனசாலை உரிமையாளர் விசாரணையின் போது வெவ்வேறு காரணங்களை கூறினார்.
மன்னாரிலுள்ள நண்பரிடம் சென்றுள்ளதாகவும் கூறினார் இவர் கூறும் காரணங்களை விசாரணை குழுவினர் நம்பவில்லை. இருகுழுவினர் போஜனசாலை உரிமையாளரின் போஜனசாலையையும் இவர் தங்கியிருந்த கொழும்பு வெள்ளவத்தை ஸ்டபர்ட் வீதி, இல்லமும் சோதனையிடப்பட்டது. துள்ளியமாக இவ்வீட்டை சோதனையிட்ட போது கழுவிவிடப்பட்டிருந்த இரத்தக்கறைகள் பல இடங்களிலிருப்பது கண்டு பிடிக்கப்பட்டன. இவை சேகரிக்கப்பட்டன. இளைஞனான இந்தியப்பிரஜையை இவ்வீட்டில் வைத்து தாக்கி அல்லது கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு சடலத்தை கோணிப்பையிலிட்டு முந்தலுக்கு எடுத்துச் சென்றுள்ளதாக விசாரணை குழுவினர் சந்தேகம் தெரிவித்தனர்.
பாஜனசாலை உரிமையாளரின் மனைவி, போஜனசாலையின் நான்கு ஊழிர்களிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றனர். இதையடுத்து போஜனசாலை உரிமையாளரின் மனைவி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கல்கிசை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததையடுத்து விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக மாஜிஸ்திரேட் ருவிர வெலிவத்த உத்தரவிட்டார்.
விளக்கமறியலிலிருக்கும் பெண்ணுக்கு இக்கொலையில் ஏதாவது ஒரு காரணம் தெரியுமென அனுமானிக்க முடிவதாக விசாரணை குழுவினர் சந்தேகம் தெரிவித்தனர். இந்நிலையில் முந்தலம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரகசிய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும், போஜனசாலை உரிமையாளரும் புத்தளம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்ததையடுத்து இவர்களிலிருவரும் நாற்பத்தெட்டு மணி நேர விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என புத்தளம் மாஜிஸ்திரேட் சேசிரி ஹேரத் உத்தரவிட்டார்.
மரண விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி சிலாப சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டதுடன் சடலத்தை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் மூலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
இவைபற்றி பொலிஸார் இந்திய உயர் ஸ்தானிகராலயத்துக்குத் தெரிவித்தனர். சிலாப சட்டவைத்திய அதிகாரி தீப்தி விஜேவர்தன கடந்த ஜூன் மாதம் இருபத்தொன்பதாம் திகதி செவ்வாய்க்கிழமை பூதவுடல் சம்பந்தமான மேலதிக விசாரணைகளை நடத்தினார். மரணத்துக்கான சரியான காரணத்தை அறியும் முகமாக திறந்த முடிவாக தீர்ப்பு வழங்கினார் மாஜிஸ்திரேட்..
சடலத்தின் சுவாசப் பகுதிகளில் ஒரு பகுதியில் கடல் மண்ணிருந்ததும் தலைப் பகுதியிலும் தோல்பட்டையிலும் காயங்கள் காணப்பட்டதும் வைத்திய அதிகாரியின் அவதானத்தையீர்த்தது. இறந்த இளைஞரின் பூதவுடலை ஏற்க இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்புத் தெரிவித்தது. பூதவுடலை வைப்பதற்கான உரிய வசதிகள் ஸ்தானிகராலயத்திலில்லாதது இதற்கு காரணமென ஸ்தானிகராலயம் நீதிமன்றத்திடம் தெரிவித்தது.
இதன்படி இறந்த இந்திய இளைஞரின் பூதவுடலை உறவினர்கள் வரும்வரை பொலிஸ் சவச்சாலையில் வைக்குமாறு நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.
இந்திய சமையல் காரரான இளைஞர் தென்னரசு செல்வராசாவின் மரணம் சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இரகசிய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும், போஜனசாலை உரிமையாளரும் கடந்த ஜூன் மாதம் முப்பதாம் திகதி புதன்கிழமை புத்தளம் மாவட்ட நீதிபதியும் மாஜிஸ்திரேட்டுமான சேசிரி ஹேரத் முன்னிலையில் கைப்பற்றப்பட்ட பொருளுடன் பொலிஸார் ஆஜர் செய்தனர்.
வாகனத்திலிருந்த துப்பாக்கி, சன்னல்கள், ஆகியவற்றை இரசாயன பரிசோதனைக்கு அனுப்புமாறும், வாகனத்தில் காணப்பட்ட இரத்தக்கறை, உடலிலிருந்து பெறப்பட்ட இரத்தக்கறைகளையும் மேலதிக பரிசோதனைக்காக ராகமை வைத்திய பிரிவின் பேராசிரியர் அபேவிக்கிரமவுக்கு அனுப்பவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினான்காம் திகதி சனிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
தற்போது விளக்கமறியலிலிருக்கும் அதிகாரி, ரகசிய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியாக 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி பொறுப்பேற்றார். அச்சமயம் இவரை விட சிரேஷ்ட இரு உயர் அதிகாரிகள் இரகசிய பொலிஸ் பரிசோதகர் ‘சேரசிங்க’ மற்றவர் ‘அம்பாவில்’ இவர்களிருவருக்கும் கிடைக்காத இப்பதவி சந்தேக நபருக்குக் கிடைத்தது. இவருக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணைகள் நடைபெறுவதாக இவை சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் இரகசிய பொலிஸ் பிரிவுவாயிலாக அறியமுடிகிறது.
இந்திய பிரஜையான இளைஞரின் கொலையின் பின்னணியில் பணப் பிரச்சினையிருக்கிறதாவென விசாரணைகள் நடத்தப்பட்ட போதும் இச்சம்பவம் மர்மமாகவுள்ளதாம். சந்தேகநபர்களின்கடந்த கால நடவடிக்கைகள் விசேட விசாரணைகளுக்குள்ளாகியுள்ளது. சந்தேக நபரான இரகசிய பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர் ‘ஜயந்த குலதிலக’ தெரிவித்தார்.
எம். எப். ஜெய்னுலாப்தீன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக