விடுதலையான முன்னாள் போராளிகளில் சிலர்
இலங்கையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், இயல்பு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு எவ்வித வாழ்வாதார, தொழில் வசதிகளுமின்றி சிரமப்படுவதாகக் கூறுகின்றனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு நிலையங்களை ஏற்படுத்தி அவற்றில் தொழில் பயிற்சி உட்பட பல்வேறு புனர்வாழ்வுப் பயிற்சிகளை வழங்கி வருவதாக அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவ்வாறு பயிற்சி பெற்ற இளைஞர் யுவதிகள் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது வாழ்வாதாரத்திற்கான உதவிகளுக்கென பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் கூறுகின்றது.
ஆயினும் தொழில் பயிற்சி பெற்றிருக்கின்ற போதிலும், தமது வாழ்வாதரத்திற்கான தொழில்வாய்ப்புக்களைப் பெற முடியாத நிலையிலேயே தாங்கள் இருப்பதாகப் புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து விடுதலை பெற்று சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளவர்கள் கூறுகின்றார்கள்.
புனர்வாழ்வு நிலையங்கள் என்ற தடுப்பில் இருந்து விடுதலை பெற்று வந்தவர்கள், முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தவர்கள் என்ற காரணங்களினால் சமூகத்தில் தங்களுக்கு இயல்பான வரவேற்பு கிடைப்பதில்லை என்றும் சந்தேகத்துடன் கூடிய ஓர் அணுகுமுறையையே சமூகம் வெளிப்படுத்துகின்றது என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
பல நாட்களாகப் பிரிந்திருந்து இப்போது குடும்பங்களுடன் இணைந்ததன் பின்னர் தமக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்தவற்கும் தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கும் குடும்பங்களுக்கு உதவுவதற்கும் தேவையான தொழில் வாய்ப்பைப் பெற முடியாதிருப்பது பெரும் வேதனையளிப்பதாகவே இருக்கின்றது என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.
BBC Tamiloosai

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக