வானொலியில் குரலைக் கேட்டு வயது பதினாறு என்றல்லவா எண்ணினேன் என்றாராம் சிவாஜி. வயசுக்கும் வொய்ஸூக்கும் சம்பந்தமில்லாதவர் தான் ராஜேஸ்வரி
குயில் என்றால் கூவும் (பாடும்) பறவை என்று மட்டும் அர்த்தமல்ல. சொல், கோகிலம், மேகம் என்றும் குயிலுதல் என்றால் சொல்லுதல், ஒலிக்குதல், அமைத்தல், பதித்தல், செறித்தல், இழைத்தல், நெய்தல் என்றும் அர்த்தங்களாகும்.
குயிலோசையைக் குரலினிமைக்கும் உவமை கூறுவார்கள் கவிஞர்கள். அந்த இனிமை, சொல் எனும் மொழி வளத்திலுண்டு; ஓசை நயத்திலுண்டு. ஆகவேதான் குரலினிமை குயிலாகிறது.
கவிக்குயில் என்றால் சரோஜினி, கானக்குயில் என்றால் சுப்பு லட்சுமி, இசைக்குயில் என்றால் வட நாட்டின் லதா மங்கேஷ்கார், தென்னாட்டில் சுசிலா, சின்னக்குயில் என்றால் சித்ரா. இந்த வரிசையில் தமிழ் எனும் சொல் கொண்டு ஒலி வானில் வலம் வந்த ஒரேயொரு வானொலிக் குயில்தான் திருமதி ராஜேஸ்வரி சண்கம்.
இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி மூலமாகவும் கொழும்பு சர்வதேச வானொலி ஒலிபரப்பின் பொதிகைத் தென்றல் நிகழ்ச்சி மூலமாகவும் இலங்கை, இந்திய நேயர்களை மட்டுமின்றி இவ்வுலகின் பல பாகங்களிலுள்ள தமிழ் நேயர்களையும் தனது இனிய குரல் வளத்தால் கவர்ந்தவர்தான் ராஜேஸ்வரி சண்கம் என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.
நாடகத்துறை மூலமாகக் கலைத் துறைக்கு அறிகமானவர் ராஜேஸ்வரி. 1952ஆம் ஆண்டு கொழும்பு பம்பலப்பிட்டி சென். பீட்டர்ஸ் கல்லூரியிலும் விவேகானந்தா மகா வித்தியாலயத்திலும் நடைபெற்ற அகில இலங்கை மாவட்டப் பாட சாலைகள் நாடகப்போட்டியில் கையிற் காற்சிலம்புடன் கனல் தெறிக்கும் கன்னல் தமிழ் வசனம் பேசிக் கண்ணகியாகவே காட்சியளித்தோர் கன்னியொருத்தி. அந்தக் கன்னிதான் ராஜேஸ்வரி.
அறிஞர் பெருமக்கள் பலர் முன்னிலையில் அவரது நடிப்பாற்றல் அன்று அரங்கேற்றம் கண்ட பொ ழுது அதை ரசித்தவர்களுள் இலங்கைப் பத்திரிகையுலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் ஒருவராக இருந்தார். பாராட்டினார்.
அவர் ஆசியராக இருந்த பிரபல வார இதழொன்றில், ஒரு வாசகி பேருவளையிலிருந்து கேட்டிருந்த “வானொலி அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்த பெண் குரல் யாருடையது? ஆண் குரல் யாருடையது? ' என்ற கேள்விக்கு: “பெண் குரல் ராஜேஸ்வரியுடையது! ஆண் குரல் அப்துல் ஹமீதுடையது! இப்படிச் சொல்வதால் மற்றவர்களைப் பிடிக்காதென்பதல்ல. அவர்களிலும் பலரை எனக்குப் பிடிக்கும்' என்று பதிலளித்திருந்தார்!
கொழும்பு, கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலய மாணவியாக ராஜேஸ்வரி இருந்த காலகட் டத்தில், பள்ளிப்படிப்பிலும் நாடக நடிப்பிலும் கெட்டிக்காயாக இருந்த காரணத்தால் தான் படிப்பிலும் நடிப்பிலும் முதல் பரிசுகள் பலவற்றைப் பெற்றுப் பாராட்டுதல்களுக்குள்ளானார்.
பாடசாலைகளுக்கிடையே நடை பெற்ற நாடகப்போட்டிகளில் இவர் நாட்டிய, நடிப்புத் திறமைகள் நடுவர்களைக் கவர்ந்த காரணத்தால் தான் கண்ணகிக்கு முதலிடம் கிடைத்தது.
கண்ணகியாக நடித்த ராஜேஸ்வரியின் நடிப்பைப் பாராட்டிய நடுவர்களில் ஒருவரான கலாஜோதி சானா, வானொலி நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பையும் இவருக்கு வழங்கினார்.
வானொலியில் ராஜேஸ்வரி நடித்த முதல் நாடகம் காலஞ் சென்ற பிரபல மலையக எழுத்தாளர் என். எஸ்.எம்.ராமையா எழுதிய “விடிவெள்ளி' நாடகமாகும்.
வானொலியில் தொடர் நாடகமாக ஒலிபரப்பான சில்லையூர் செல்வராசனின் “சிலம்பின் ஒலி' நாடகத்தில் பாண்டிமாதேவியாகவும் ராஜேஸ்வரி நடித்தார். கண்ணகியாக மட்டுமல்ல, பாண்டிமா தேவியாகவும் தன்னால் நடிக்க முடியுமென்பதை நிரூபித்துக் காட்டி சில்லையூர் செல்வராசாவின் பாராட்டையும் பெற்றார்.
1952இல் இருந்து 69 வரையும் வானொலியில் நாடகம், மாதர் நிகழ்ச்சி, உரைச்சித்திரங்களில் நடித்துவந்தார். இவர் முத்திரை பதித்த நாடகங்களில் சி.சண்முகம் எழுதிய “நெஞ்சில் நிறைந்தவள்' நகைச்சுவை நாடகம், பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரியில் 52 வாரங்கள் ஒலிபரப்பாகின.
இந்நாடகத்தில் அசட்டு லட்சுமியாக நடித்த ராஜேஸ்வரி சண்முகத்தை அந்தநாள் ஞாபக ரசிகர்கள் நிச்சயமாக மறந்திருக்க மாட்டார்கள். தமிழ்த் தேசிய சேவையில் மாதர், சிறுவர் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார்.
இலங்கையின் பிரபல டைரக்டர் லெனின் மொராயஸ் இயக்கிய “நெஞ்சுக்குத் தெரியும்' தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகனின் தாயாகவும் ராஜேஸ்வரி நடித்திருந்தார். இப்படத்தில் ருக்மணிதேவியும் ஹெலன் குமாரியும் கூட நடித்தார்கள்.
தனது பதின்மூன்றாவது வயதிலேயே பகுதிநேர அறிவிப்பாளராகி, பிறகு படிப்படியாக நிரந்தர அறிவிப்பாளர், சிரேஷ்ட அறிவிப்பாளர், உயர் அறிவிப்பாளராக உயர்ந்து இன்றும் இத்துறையை விட்டு விலகடியாதவராக இருந்தார்.
1958இல் பிரபல வானொலி நாடகாசியர் சி.சண்முகத்தைத் திருமணம் செய்துகொண்டார். மலரும் நினைவுகளில் இவரது கல்யாணத்தைப் பற்றிக் கேட்டபோது, அந்தக் காலகட்டத்துக்கே இவரது சிந்தனைகள் சிறகடித்துச் சென்றன.
“கலை இணைத்ததால் காதல் கொண்டோம். காதல் கொண்ட தால் கல்யாணம் செய்தோம்" என் றார்.
இப்படிக் கவிதை வடிவில் அவர் தன் காதலைப் பற்றியும் கல்யாணத்தைப் பற்றியும் கூறிய போது, “மதுரை வீரன்' திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்.ஜி.ஆர். பேசிய ; “கண்டோம் கட்டுண்டோம் காதலித்தோம், காலம் வந்தது தூக்கிச் சென்றேன்' என்ற வசனமே ஞாபகத்துக்கு வந்தது.
ராஜேஸ்வரியின் கணவர் காலஞ் சென்ற சண்முகத்தைப் பற்றிக் கூறுவதானால் இவரும் ஒரு வானொலிக் கலைஞரே. 1955ஆம்ஆண்டு இலங்கை வானொலியில் தட்டெழுத்தாளராகப் பணியாற்றிய போது தான் நாடகத்துறையில் இவருக்கும் நாட்டம் ஏற்பட்டது. அந்த ஆர்வத்தை இவருக்கு ஊட்டியவர்தான் கலாஜோதி சானா. வளர்த்தவர் பொன் மணி குலசிங்கம்.
1956ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் சேர்ந்து சிறுகைத் தொழில் திணைக்களத்தில் 22 வரு டங்களும், சுற்றுலா கிராமிய தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சில் 13 வருடங்களும் பணியாற்றி ஓய்வுபெற்றார். அரசாங்கத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்பொழுதே இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். இவர் எழுதிய 15 நிமிட, 30 நிமிட தொடர் நாடகங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது இவருக்கே தெயாதாம். தொடர் நாடகங்களில் “துணி விடுதூது' 52 வாரங்களும், லண் டன் கந்தையா 52 வாரங்களும், சிறுவர் மலரில் அப்பாவும் மகனும் 100 வாரங்களுக்கு மேலும் ஒலிபரப்பாகி இவருக்குப் புகழ் தேடித் தந்தன.
இவரது முதலாவது மேடை நாடகம் ““மனிதருள் மாணிக்கம்'' 1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் மேடையேறியது.
நாடகக் கலையின் மீது இவருக்குப் பித்துப் பிடிப்பதற்குக் காரணமாக இருந்தவரும் இவருடைய நாடகங்கள் எல்லாவற்றிலுமே முக்கிய கதாபாத்திரம் ஏற்றுநடித்தவரும் இவருடைய துணைவி ராஜேஸ்வரியே ஆவார்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன் ராஜேஸ்வயின் கணவர் சண்முகம் மறைந்தபோது இவர் இவர் அடைந்த துயருக்கு அளவே இல்லை. இலங்கை, இந்திய வானொலி நேயர்களிடமிருந்து வந்த ஆயிரக்கணக்கான கடிதங்களே இவரை அமைதிப்படுத்தின.
இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பின் பொங்கும் பூம்புனல், கொழும்பு சர்வ தேச ஒலிபரப்பின் பொதிகைத் தென்றல் நிகழ்ச்சிகள் ஆரம்பித்த நாள் முதல், ஈரடிக் கவிதை கொண்டு திரைப்படப் பாடல்களைத் தொகுத்து வழங்கிவந்தது ராஜேஸ்வரியின் தனிப் பாணியாகும்.
இந்தப் பாணியினால் ஈர்க்கப்பட்ட இளைய, பழைய தலைமுறை நேயர்கள் இலங்கையில் மட்டுமின்றி, இந்தியாவிலும் ஏராளமாக உள்ளனர் என்பதற்கு அவருக்கு வந்துகுவிந்த பாராட்டுக் கடிதங்களே சான்றாகும். இவற்றுள் கவிஞர் வைரத்து, கவிஞர் பழனிபாரதி எழுதிய கடிதங்களும் அடங்கும்.
சிவாஜி கணேசன் இலங்கை வந்திருந்த சமயம் விழாவொன்றில் வைத்து சிவாஜிக்கு ராஜேஸ்வரி சண்கம் அறிகம் செய்துவைக்கப்பட்டபோது, “வானொலியில் குரலைக்கேட்டு 16 வயதுடைய வராக இருப்பார் என்றல்லவா எண்ணியிருந்தேன்'' என்று ஆச்சரியப்பட்டாராம் சிவாஜி. அப்பொ ழுது ராஜேஸ்வக்குரி 60 வயதென்பது குறிப்பிடத்தக்கது.
வயசுக்கும் வொய்ஸுக்கும் சம்பந்தமே இல்லை என்று “வானொலிக் குயில்'' பட்டமளிப்பு விழா வின்போது அகில இந்திய வானொலியின் தூத்துக்குடி நிலைய இயக்குனர் இளசை சுந்தரம் கூறியதும் இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.
முன்னாள் அமைச்சர் செ. ராசதுரை வழங்கிய மொழிவளர்ச் செல்வி, ஸ்ரீ சாஸ்டா பீடாதிபதி ஸ்ரீ ஐயப்பதாசன் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் வழங்கிய வாகீச கலாமணி, முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், அரசு சார்பில் வழங்கிய “தொடர்பியல் வித்தகர்', சம்மாந்துறை கலைத்துறை சார்ந்த மக்களால் கொடுக்கப்பட்ட வான் மகள் போன்ற பல பட்டங்களை எல்லாம் இவர் பெற்றபோதிலும், எட்டையபுரம் தென் பொதிகைத் தமிழ்ச் சங்கம் 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி விழாவெடுத்து வழங்கிய “வானொலிக் குயில்' என்ற பட்டம் தான் இவருக்கு வெகு பொருத்தமாக அமைந்தது. இந்தப் பொருத்தம் பற்றி, ராஜேஸ்வரி சண்முகம் மணிவிழாக் கண்டபோது கவிஞர் வைரத்து எழுதிய வாழ்த்தின் வாசகங்கள் வருமாறு: ““வானொலிக் குயில் என்று உலகத் தமிழர்களால் கொண்டாடப்படும் திருமதி ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் மணிவிழாக் காண்பதறிந்து நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் நிற்கிறேன்.
ஒரு மழைத்துளி நதியில் விழுகிறது என்பது சந்தர்ப்பம். ஆனால் அந்தத் துளி பிறகு நதியாகவே மாறிவிடுகிறது. அதைப் போலத் தான் வானொலி அறிவிப்பாளர் எனும் பணி, திருமதி ராஜேஸ்வரி சண்கம் அவர்களுக்குக் கிட்டிய சந்தர்ப்பம்.
ஆனால், அவரோ தமிழ் அறிவிப்பில் தொடங்கித் தமிழாகவே கரைந்து போயிருக்கிறார் என்பதே அவரது சாதனை. பழந் தமிழுக்கும் புதுத் தமிழுக்கும் பாலம் கட்டும் ஓர் அரிய பணியைப் பொதி கைத் தென்றல் மூலமாக அவர் ஆற்றி வருகிறார்.
உலகத் தமிழ் வானொலிகளின் மிகச் சிறந்த நிகழ்ச்சிகளுள் ஒன்றாகப் “பொதிகைத் தென்றல்' திகழ்கிறது என்று என்னால் போற்றிச் சொல்லடியும்.
தமிழைக் குழைத்துக் குழைந்து உச்சரிக்கும் அவரது இலாவகம் சொற்களுக்குள் கரைந்துபோகும் அவரது ரசனை, செவியோடு வந்து மனதோடு பேசுவதான சுபாவம் இவையெல்லாம் ராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் தனிச் சிறப்புக்கள்.
அந்த மணிக்குயிலுக்கு மணிவிழா என்னும் போது எத்தனையோ தமிழ் இதயங்கள் வாயார வாழ்த்தும் என்பது திண்ணம்.
அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களையும் இணைத்துக்கொள்வதில் நான் மகிழ்ச் சியடைகின்றேன்.
வசந்தத்தில்தான் குயில் கூவுமாம். இந்தக் குயிலுக்கு வருடமெல்லாம் வசந்தமாகவே திகழ வாழ்த்துகிறேன்'' என்று எழுதியிருந்தார் கவிஞர். மேல் நாட்டிலுள்ள பல தமிழ் அமைப்புக்களும் இவரை வரவழைத்துக் கௌரவித்தன!
கனீரென்ற குரலில் கன்னித் தமிழில் கூவும் இந்த வானொலிக் குயிலுக்கு ஒரு பாடகியாக வரமுடியாமற் போனதுதான் கவலையாம். பாட முடியாவிட்டாலும் ஈர டிக் கவிதை விளக்கம் மூலம் பிறரது பாடல்களை ஒலிபரப்பி வந்த இவர் விளையாட்டாக எழுதிய பாடலொன்று வானொலியின் முற்றத்து மல்லிகை நிகழ்ச்சியில் வெற்றிநடை போட்டதாம். அப்பாடல்தான் பயாஸ் ரெட்ணம் இசையமைப்பில் முருகேசு பாடிய ஊரெங்கும் காதல் கீதம் நான் இசைப்பேன் என்ற பாடலாகும்.
விளம்பரத்துறையிலும் இவரது குரல், சாதனை படைத்து வந்தது அனைவரும் அறிந்ததே. இவரது பேட்டிகள் இலங்கைப் பத்திரிகைகளில் மட்டுமின்றி தமிழ்நாட்டு தினமலர், தினகரன், ராணி, மங்கை, தேவியிலும் வெளிவந்திருக்கின்றன.
தினமணி 60 ஆம் ஆண்டு மலரில் லண்டன் பி.பி.ஸி. சங்கர், தமிழக தென்கச்சி சுவாமிநாதன், இலங்கை ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரின் செய்தி வாசிப்புப் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு சங்கர் பாலா சுவாமிநாதன் வாழை, ராஜேஸ்வரி மா என்று முக்கனிகளின் சுவைகளைக் கொண்டு பதிலளிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கலைத்துறைப் பயணத்தில் தனக்குத் துணை நின்றவர்கள, மறக்கமுடியாதவர்களைப் பற்றி இவர் கூறும்போது...............
ஊக்கமும் உற்சாகமும் தந்து கலைத் துறையில் பிரவேசிக்க மூல காரணமாக இருந்த என்னுடைய சித்தப்பா எஸ்.ஆர்.நடராஜா, தமிழ்ப் பேசும் உள்ளங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திய என் குருநாதர் சானா, என் வாழ்க்கைக்கும் கலைத் துறைக்கும் உந்துசக்தியாக இருந்த என் கணவர், தமிழ்ப்பற்றை என்னுள் விளைவித்த என் ஆசியர்கள், குறிப்பாக பண்டிதர் ஆறுகம் மற்றும் முன்னாள் தமிழ்ச்சேவை அதிகாரி டாக்டர் கே.எஸ். நடராஜா, சி.வி. ராஜ சுந்தரம், விவியன் நம சிவாயம், பொன் மணி குலசிங்கம், ஞானம் இரத்தினம், வி.
சுந்தரலிங்கம், எஸ்.பி. மயில்வாகனம், வி.பி. தியாகராஜா, வி.ஏ.கபூர், புண்ணிய மூர்த்தி, முன்னாள் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர்களான என். சிவராஜா, வி.ஏ.
திருஞான சுந்தரம், சற்சொரூபவதி நாதன் ஆகியோரின் மேலான அறிவுரைகளும் பா ராட்டுக்களும்தான் என் வளர்ச்சிக்கும் பணிகளுக்கும் உதவின.
அதே சமயம் பத்திரிகைத் துறையினரும் அவ்வப்போது தமது உயர்வான விமர்சனங்களால் என்னை ஊக்குவித்தார்கள் என்றார். நீங்கள் யாருக்கு முதல் மரியாதை செலத்துவீர்கள்? என்றுகேட்டபோது, நிச்சயமாக நேயர்களுக்குத்தான், ஏனென்றால் என்றோ ஒருநாள் அவர்கள் எனக்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டியிருக்கும். ஆகவே அந்த மரியாதையை நான் பெற வேண்டுமானால் அவர்களுக்கு முதல் மரியதை செலுத்துவது தானே முறை என்று அன்று கூறியவர், இன்று இறுதி மயாதைக் குரியவராகி அமரராகி விட்டார்.
அந்த நாள் ஞாபகத்தில் அன்னாரை அவரது இல்லத்தில் நான் சந்தித்தபோது அவர் சிந்திய கருத்துக்களின் ஆதாரமே இவ் அஞ்சலிக் கட்டுரை !
சிரேஷ்ட பத்திகையாளர் ஷண்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக