படம் இணையத்திலிருந்து பெறப்பட்டது
டெல்லி: இதுவரை இல்லாத அளவு முதல் முறையாக ராஜ்யசபாவில் இலங்கை இனப்படுகொலை குறித்த விவகாரத்தை தமிழக எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக எழுப்பி அவையையே ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். தமிழக எம்.பிக்களின் ஆவேசப் பேச்சால், தான் பேச வந்த வேறு விவகாரம் குறித்து பிறகு பேசுவதாக கூறி அமர்ந்தார் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி.
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கை ராணுவம் மற்றும் அரசின் இனவெறிப் படுகொலை தொடர்பாக இதுவரை ஒரு முறை கூட தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் பிரச்சினை எழுப்பியதில்லை, ஸ்தம்பிக்க வைத்ததில்லை. ஆனால் இன்று ராஜ்யசபா கூட்டத்தை நடத்த முடியாத அளவுக்கு வெகுண்டெழுந்து விட்டனர் தமிழக எம்.பிக்கள்.
அவர்களுக்கு ஆதரவாக பாஜக, இடதுசாரி உறுப்பினர்களும் இணைந்ததால் அவை நடவடிக்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இன்று காலை அவை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியை பேச அழைத்தார் சபைத் தலைவர் ஹமீத் அன்சாரி. அவரும் ஒரு பிரச்சினை குறித்துப் பேச எத்தனித்தார்.
ஆனார் திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த விவகாரத்தை எழுப்பி முழக்கமிட்டனர். இதைப் பார்த்த அருண் ஜேட்லி, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக எம்.பிக்கள் பிரச்சினை எழுப்பியுள்ளனர். அவர்கள் முடித்ததும் நான் பேசுகிறேன் என்று கூறி அமர்ந்து விட்டார்.
இதனால் வேறு வழியில்லாமல் தமிழக எம்.பிக்களைப் பேசுமாறு ஹமீத் அன்சாரி கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன், காங்கிரஸ் சார்பி்ல் ஞானதேசிகன், சிபிஐ சார்பில் டி.ராஜா, சிபிஎம் சார்பில் டி.கே.ரங்கராஜன், பாஜக சார்பில் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் ஆவேசமாகப் பேசினர்.
அப்போது பிரதமர் மன்மோகன் சிங் அவையில்தான் இருந்தார். அவரைப் பார்த்து அத்தனை எம்.பிக்களும் காரசாரமாக கேள்வி கேட்டனர். ஆனால் எதற்குமே அவர் பதிலளிக்கவில்லை. எங்கேயோ, யாரோ பேசுவது போல அவர் பாட்டுக்கு உட்கார்ந்திருந்தார்.
அவருக்குப் பதில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால்தான் பேசினார். ஆனால் அவராலும் தமிழகஎம்.பிக்களின் ஆவேசக் கேள்விகளைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மாலையில் பேசுகிறேன் என்றார், வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கேட்டு விட்டுச் சொல்கிறேன். ஆனால் எதற்கும் தமிழக எம்.பிக்கள் மசியவி்ல்லை.
மைத்ரேயன் பேசுகையில், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டசபையில் தீர்மானம் போட்டுள்ளோம். ஆனால் இதுவரை பிரதமர் பதிலளிக்கவில்லை. இப்போது எங்களது ஒரே கேள்வி, பிரதமர் இதில் கருத்து தெரிவிக்க வேண்டும். இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா, இல்லையா என்பது தெரிய வேண்டும் என்று பிரதமரின் முகத்துக்கு நேராகவே கேட்டார். அதற்கும் வழக்கம் போல மெளனம் காத்தார் பிரதமர்.
பாஜக உறுப்பினர் வெங்கையா நாயுடு பேசுகையில், இது மிக சீரியஸான விஷயம். அமைதி காக்க முடியாது, வாயை மூடிக் கொண்டும், காதுகளை மூடிக் கொண்டும் இருக்க முடியாது. நடந்தது மிகப் பெரிய படுகொலை என்று உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்தியா ஏதாவது செய்தாக வேண்டும் என்று நன்கு உரைப்பது போல பேசினார். அப்போதும் பேசாமல் தான் இருந்தார் பிரதமர்.
விவாதம் படு சூடாகியதால் மீண்டும் ஜேட்லியைப் பேச அழைத்தார் அன்சாரி. இதைப் பார்த்து கோபமடைந்த தமிழக எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக பிரதமர் இருக்கையை நோக்கி முன்னேறி கோபமாகப் பேசினர். இதையடுத்து அவையை ஒத்திவைத்தார் அன்சாரி.
இருந்தாலும் கடைசி வரை பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ராஜ்யசபா இன்று முழுவதும் இயங்காமல் போனது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக