ஞாயிறு, 25 மார்ச், 2012

இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது - தினமணி ஆசிரியர் தலையங்கம்

உள்நாட்டு அரசியலின் நெருக்கடியால்தான் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ், வாக்கெடுப்பின்போது மறைமுகமாக இந்தியாவைக் குறிப்பிட்டாலும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்முறையாக இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான தினமணி தனது ஆசிரியத் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.

அத்தலையங்கத்தின் முழுவிபரமாவது,



ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியிருப்பது உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி. அதைவிட, இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தந்த இந்தியாவின் நிலைப்பாடு இந்தியத் தமிழர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் முடிவு.

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுற்றிருக்கும் சூழலில் பாதிக்கப்பட்டு, நிராதரவாக நிற்கும் இலங்கையின் பூர்வகுடியினரான ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இந்திய அரசு வெளிப்படையாகச் செயல்பட்டிருப்பது இதுவே முதல் முறை. கடந்த காலங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமும், துரதிருஷ்டவசமாக, தமிழக அரசியலுக்கான நாடகமாக அமைந்ததே தவிர, உளப்பூர்வமான நடவடிக்கைகளாக அமையவில்லை என்கிற தோற்றத்தை ஏற்படுத்தியது.

உள்நாட்டு அரசியலின் நெருக்கடியால்தான் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ், வாக்கெடுப்பின்போது மறைமுகமாக இந்தியாவைக் குறிப்பிட்டாலும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்முறையாக இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் முடிந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அறிவித்த எந்தப் பணிகளையும் கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜபட்ச அரசு செய்யவில்லை. இதற்காக இந்திய அரசு பல முறை அரசு அதிகாரிகளை அனுப்பியும் அதை அவர்கள் சட்டை செய்யவில்லை. இலங்கை உறுதி கூறியபடி, இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13-வது சட்டத்திருத்தம் நடக்கவே இல்லை.

இத்தனை காலம், இலங்கையிடம் அண்டை நாட்டுடனான நல்லுறவு கெட்டுவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் பணிவாக இருந்து வந்ததுதான் இந்திய அரசு செய்த மிகப்பெரிய தவறு. தற்போதுதான், கடுமையாகவும் நடந்துகொள்ள முடியும் என்பதை முதன்முறையாக நாம் இலங்கைக்குப் புரிய வைத்திருக்கிறோம். இந்த நிலைப்பாட்டை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருந்தால், இந்தியா நேரடியாகக் களத்தில் இறங்கி, இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்கியிருக்காவிட்டாலும், இலங்கை அரசின் செயல்பாடுகளை நாம் கண்காணித்திருக்க முடியும். வெறுமனே இலங்கை அரசிடம் பணமும் பொருளும் கொடுத்துவிட்டு, அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பிக் கெட்ட துரதிருஷ்டவசமான நிலைமை ஏற்பட்டிருக்காது.

நம்மைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும் - ரஷியா, சீனா, வங்கதேசம், மாலத்தீவு, சவூதி அரேபியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக நின்றபோது, இலங்கையை வெளிப்படையாக இந்தியா எதிர்த்து நின்று, அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் திருப்திக்காக இதைச் செய்தது என்று இந்த முடிவை அவசரப்பட்டு மலினப்படுத்துவது நியாயமில்லை. நாளையும் ராஜீய உறவுகள் அறுந்துபோகக்கூடாது என்ற உணர்வுடன் இந்திய அரசு செயல்பட்டுள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தீவிரமாக இயங்கும் அரசியல் அமைப்புகள் சில, இந்தியா மேற்கொண்டுள்ள ராஜதந்திர முடிவை இரட்டை வேடம் என்று விமர்சனம் செய்துள்ளன. தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு முன்பே, தனியொரு நாட்டின் மீது இத்தகைய தீர்மானம் கொண்டுவருவது சரியல்ல என்று சுற்றறிக்கை அனுப்பிய இந்தியா மீது தமிழக அரசியல் கட்சிகளுக்கு வருத்தம் இருந்தது. தீர்மானத்தின் சில பத்திகளில் இந்தியா திருத்தம் செய்தபோது இந்தக் கோபம் மேலும் அதிகமானது. அதாவது, போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்குப் பின்னர், ஐ.நா. சொல்லும் நடவடிக்கைகளை இலங்கை ஏற்று நடத்த வேண்டும் என்ற வார்த்தைகளை, "இலங்கை அரசின் ஒப்புதலுடன்' என்று இந்தியா மாற்றியிருப்பதைத்தான் இவ்வாறு இரட்டை வேடம் என்று குறை காண்கிறார்கள். இது உணர்ச்சியின் மீது எழுப்பப்படும் வாதங்களே தவிர, ஓர் அரசாங்கம் என்று பார்க்கும்போது இத்தகைய அணுகுமுறை தவறல்ல. அதற்குப் பெயர் ராஜதந்திரம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டார்கள் என்றால், அப்போது இந்திய அரசுதான் பேசியாக வேண்டும். மற்ற நாடுகள் வரப்போவதில்லை. அக்கறை கொள்ளப்போவதில்லை. ஒரேயடியாக இலங்கையை எதிர்ப்பது இத்தகைய ராஜீய நடவடிக்கைகளுக்குக் குந்தகமாக அமைந்துவிடும்.

"செய்வதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டீர்கள், உங்கள் மீது நான் கோபமாக இருக்கிறேன்' என்று சொல்லும்போது, பேச்சுக்கும் நட்புக்கும் இடம் இருக்கிறது. "நீ என் விரோதி' என்று சொல்லும்போது நட்பு முற்றிலுமாக முறிந்துபோகும்.

எல்லைப் பிரச்னையால் சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் வங்கதேசத்துடனும் ஏற்கெனவே பிரச்னைகள் இருக்கும் நிலையில், இலங்கையுடன் பிரச்னை ஏற்பட்டு போர் மூளும் சூழலை இந்தியா ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரிவினை சக்திகளும், தீவிரவாத சக்திகளும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முள்ளில் விழுந்த சேலையைக் கிழியாமல் எடுக்கும் லாவகம் இந்தப் பிரச்னையில் தேவைப்படுகிறது.

கோபம் கொள்ளவும் வேண்டும். காரியம் சாதிக்கவும் வேண்டும். முதல்முறையாக கோபத்தைக் காட்டியுள்ள இந்திய அரசு, காரியத்தையும் சாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தலாமே தவிர, இரட்டை வேடம் போடுகிறது இந்திய அரசு என்று குற்றம் கூறுபவர்கள் பிரச்னையை வளர்க்க விரும்புகிறவர்கள். சொல்லித் தெரிவதில்லை நாடாளும் வித்தைகள் என்பதைப் புரிந்துகொள்ளாதவர்கள்! _
-----------------------------------------------------
அமெரிக்கப் பொறிக்குள் இலங்கை ?

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எதிர் பார்த்த ஒன்றே. ஆனால் இந்த வெற்றியை நிர்ணயிக்கும் வாக்குகள் எத்தனை? என்பது குறித்துத்தான் கேள்வியாக இருந்தது.

இலங்கைத் தரப்பு ஆரம்பத்திலிருந்து “இந்தப் போல் வெற்றியடைவோம்'' என்று கூறி வந்தது. வாக்களிக்கத் தகுதி பெற்ற 47 நாடுகளில் 22 நாடுகளுக்கு மேல் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலையில் இருப்பதாக இலங்கைத் தரப்பு நம்பிக்கை வெளியிட்டிருந்து. ஆனால் இந்தியாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பில் இலங்கைக்கு நம்பிக்கை குறைவடையத் தொடங்கியது.

தற்பொழுது பெறுபேறுகள் வெளிவந்துவிட்டன. அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் நடு நிலைமை வகித்துள்ளன. பிரேரணை 9 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது என்பதே செய்தி.

ஆனால், இலங்கை ஒரு வாக்கினாலேயே பிரேரணை வெற்றி பெற்றதாக கூறுகின்றது. அதாவது ஆதரவாக 24 நாடுகளும் வாக்களித்துள்ள அதேவேளையில் நடு நிலைமை வகித்த நாடுகளும் தமக்கு சார்பாகவே இருந்தன என்று கூறி தமக்கு மொத்தமாக 23 வாக்குகள் கிடைத்துள்ளன என இலங்கை கூறி வருகின்றது.

எது எப்படியோ மேலதிகமாகக் கிடைத்த ஒரு வாக்கிலோ அல்ல ஒன்பது வாக்கிலோ பிரேரணை நிறைவேற்றப்பட்டு விட்டது. இங்கு எண்ணிக்கையை விட பிரேரணை நிறைவேற்றப்பட்டமை தான் முக்கியமானது.

அமெரிக்கப் பிரேரணையின் வெற்றியுடன் இலங்கை, அமெரிக்கா உட்பட சர்வதேச சமுகத்துடனான புதிய மோதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ளது.

யார் யாருக்கோ பொறிவைத்து தமிழர்களுக்கு எதிரான அரசியலை மிக இலாவகமாக கையாண்ட இலங்கை தற்போது அமெரிக்கா வைத்துள்ள சிறிய பொறியில் சிக்கியுள்ளது.

இந்தப் பொறியில் சிக்காதிருக்க பல்வேறு வியூகங்களை அமைத்து யெற்பட்டபோதும் அமெரிக்க இராஜதந்திரத்திற்கு முன் இலங்கை தோற்றுப்போய் நிற்கின்றது. தற்போது அமெரிக்கப் பொறியில் இருந்து எவ்வாறு வெளி யேறுவது என்ற சிந்தனையில் இலங்கை மூழ்கிப்போய்க் கிடக்கின்றது.

உள்நாட்டில் தனது நிலைப்பாட்டிற்கு ஏற்ற வகையிலான நிலைமையையும் உருவாக்கிக் கொண்டுள்ளது.

அந்த வகையில் ஜெனீவா பிரேரணைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும், ஆக்ரோஷமான கோசங்களும் தற்போதைக்கு நிறுத்தப்படமாட்டாது என்பதே உண்மையாகும்.

உண்மையில் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கு இலங்கை வைத்த பொறிதான் நாடாளுமன்றத் தெரிவுக்குழு. தமிழர் தரப்பின் அனுரணையுடன் இதனை இலங்கை அரங்கேற்ற முனைந்தபோதும் தமிழ் சிவில் சமூகத்தின் பிரசவத்தால் இது சாத்தியப்படாது போய்விட்டது.

ஆனால் தற்போது கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைறைப்படுத்துவது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் ஆணையை அரசாங்கம் கோரவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

இது உண்மையானால் சிங்கள மக்களின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பது தெரிந்த விடயமே.

ஜெனீவா பிரேரணைக்கு எதிராக கோஷம்போட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்த தமிழ் முஸ்லிம் மக்களுக்கு என்ன பதில் தரப்போகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தின் இந்த அணுகு முறையை அமெரிக்கா உட்பட அதன் பின்னால் உள்ள சர்வதேச சமுகம் எவ்வாறு கையாளப் போகின்றன? என்பதைத் தீர்மானிக்கும் கால கட்டமாக இனிவரும் காலங்கள் அமையப் போகின்றன. இலங்கையைப் பொறுத்து அமெரிக்காவும் தமிழ் நாடுமே தமக்கு சாதகமான சூழ்நிலையை சுக்கு நூறாக்கின என்ற ஆதங்கத்தில் உள்ளது.

அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன் கடந்த வருடம் ஜூலை 20 ஆம் திகதி சென்னை சென்றிருந்தவேளையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவைச் சந்தித்தார்.

அமெரிக்காவின் வர்த்தகம், முதலீடு தொடர்பானதாகவே ஹிலாரியின் சென்னை விஜயம் அமைந்திருந்ததாக கூறப்பட்டபோதும் அதற்குமப்பால் அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டு வந்த பிரேரணை தொடர்பாகவும் அவ்வேளையில் பேசப்பட்டதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

அதாவது இந்திய மத்திய அரசுக்கான நெருக்குதலை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா அப்பொழுதே திட்டமிட்டிருந்தது என்பதை ஹிலாரி கிளின்டனின் தமிழக விஜயம் தற்பொழுது உணர்த்தியுள்ளது. அந்த வகையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் என்பது அமெரிக்காவால் எப்பொழுதோ திட்டமிடப்பட்டு விட்டது. இதற்கான காய்களும் ஏற்கனவே நகர்த்தப்பட்டிருந்தன என்பதை தற்போதைய நிகழ்வுகள் உணர்த்தி நிற்கின்றன.

ஜெனீவா பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்தமைக்கு தமிழக நிகழ்ச்சிகள் முக்கிய காரணியாக அமைந்துள்ளன. தி.மு.க. வைப் பொறுத்து மத்திய அரசுக்கான நெருக்குதல் என்பது ஒரு கண்துடைப்பே. தி.மு.க. இந்திய மத்திய அரசில் இருந்து விலகப் போவதில்லை. ஜெனீவா விவாகாரத்திற்காக அத்தகையதோர் முடிவை தி.மு.க. உண்மையிலேயே எடுத்திருக்குமாக இருந்தால் அது தற்கொலைக்கு ஒப்பானதாகும். மத்திய அரசு தி.மு.க.வின் முடிவால் வீழ்ந்திருக்குமாக இருப்பின் தற்பொழுது தி.மு.க. இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற உ றுப்பினர்கள் மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தாக வேண்டும். இருப்பதை இழந்துவிட்டு இன்னுமொரு தேர்தலுக்கு முகம் கொடுக்கும் நிலையில் தி.மு.க. இல்லை. மாறாக இருந்ததையும் இழந்து நாடாளுமன்ற ஆசனங்களை அ.தி.மு.க. வுக்கு தாரை வார்த்து கொடுப்பதா கவே அமையும். இந்த ஒரு நிலையை உருவாக்கிக் கொள்ள தி.மு.க.
விரும்பாது. இருந்தும் ஒட்டுமொத்த தமிழகம் மத்திய அரசுக்கு கொடுத்த அழுத்தத்தில் தி.மு.க. தானும் பங்கு கொண்டு விட்டது.

நிலைமை இவ்வாறிருக்க ஒரு சில எமது தமிழ் அரசியல்வாதிகள் தமது நெருக்குதல் காரணமாகவே ஜெனீவா விவகாரத்தில் இந்தியாவின் மனமாற்றம் ஏற்பட்டதாக உரிமை கொண்டாடினால் என்ன? என்ற நப்பாசையிலான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்குமப்பால் அரசியல் அரியாசனக் கனவில் சஞ்சரிக்கும் ஒருவர் இந்திய தூதரகதின் முன்னாள் இராஜதந்தியுடனான தொடர்பை வைத்து இந்தியாவின் மனதை மாற்றியதாக சொந்தம் கொண்டாடுவதாகவும் செய்திகள் கசிகின்றன.

இவைகளனைத்தும் ஆண்டவனுக்கே வெளிச்சம்.

ஜெனீவா விவகாரத்தை தமக்கேற்ற அரசியலாக மாற்றி குளிர்காய முற்படும் கூட்டம் ஒருபுறம். மறுபும் அமெரிக்கப் பிரேரணையுடன் இலங்கையியில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்ற அங்கலாய்ப்பில் இன்னுமொரு பெரிய அரசியல் கட்சி வியூகம் வகுத்துக் கொண்டிருகிறது. ஆனால் அரசு தரப்பு தனக்கு நாடாளுமன்றத்திலுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மைக் கூடாக நாடாளுமன்றத்தின் காலத்தை மேலும் இரண்டொரு வருடங்கள் கூட்டிக் கொள்வதற்கான நிலைப்பாட்டுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து தமது எதிர்பார்ப்பில் மண்விழுந்ததாக மனத் தாங்கலில் உள்ளது. மொத்தத்தில் தமிழ்க் கட்சிகளாகட்டும் சிங்களக் கட்சிகளாகட்டும் அரசியலை தமக்குச் சாதகமாக்கி குளிர் காய்வதிலேயே குறியாக இருக்கின்றனர்.

நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

வி.தேவராஜ்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல