பிரபாகரன் குடும்பத்தில் கொல்லப்பட்டது பிரபாகரனும் அவருடைய மூத்த மகனும் மட்டும்தான் என்றும் பிரபாகரன் மனைவியோ, இளைய மகனோ, மகளோ ஆகியோரின் நிலைபற்றி எங்களுக்கே இதுவரை எந்தத் தகவலும் தெரியாது என்றும் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறினார்.
விடுதலைக்குப் பின் சர்வதேச அளவில் சரத் பொன்சேகா அளித்த முதல் பிரத்யேகப் பேட்டி:
பிரபாகரனின் முடிவு என்னவானது?
ஒரே உண்மைதான். பிரபாகரன் இப்போது உயிரோடு இல்லை. போரில் அவர் இறந்துவிட்டார்.
போரில் சண்டையின்போதுதான் பிரபாகரன் இறந்தாரா?
அவர் சரணடையவில்லை என்றும் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படவில்லை என்றும் உங்களால் உறுதி அளிக்க முடியுமா?
கண்டிப்பாக. அந்த இரவு எனக்கு எப்போதுமே மறக்க முடியாதது. ஒரு சின்ன பகுதிக்குள் பிரபாகரனைச் சுற்றி வளைத்தோம். மூன்று அணிகளைக்கொண்டு மூன்று வளையங்களை புலிகள் அமைத்திருந்தார்கள். அதிகபட்சம் அவர்கள் 400 பேர் இருந்திருக்கலாம். முதல் அணியில் 100 பேர். நடேசன், பூலித்தேவன் தலைமையிலானது. அழித்தோம். அடுத்த அணியில் 200 பேர். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் தலைமையிலானது. அழித்தோம். கடைசிக் கட்டத் தாக்குதல் நள்ளிரவில் நடந்தது. 100 பேர்கொண்ட அணி அது. பிரபாகரன் தலைமையிலானது. அழித்தோம். சண்டையில் குண்டடிபட்டுத்தான் பிரபாகரன் இறந்தார்.
உங்கள் கூற்றுப்படி, நீங்கள் கொன்றது உண்மையான பிரபாகரனைத்தான் என்றால், ஊடகங்களைக் கூட்டிக் காட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?
உங்கள் கேள்வியில் ஒரு திருத்தம். நாங்கள் பிரபாகரனைக் கொல்லவில்லை. அவர் போரில் இறந்தார் என்பதே சரி. யுத்த களத்துக்குச் செல்லும்போது அங்கு என்ன நடக்கும் என்பதை யாராலும் அனுமானிக்க முடியாது.
பத்திரிகையாளர்களை உடன் அழைத்துக்கொண்டு போருக்குப் போக முடியாது. அங்குள்ள சூழலே வேறு. பிரபாகரன் சடலம் கிடைத்தவுடன் அவருடைய மரணத்தை அறிவிப்பதற்கு முன் நாங்கள் அதைத் துளியும் சந்தேகம் இன்றி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி இருந்தது. பிரபாகரனைத் தெரிந்தவர்களை அழைத்துவந்தோம். பிறகு, மரபணுப் பரிசோதனை மேற்கொண்டோம். முற்றுமுதலாக இறந்தது பிரபாகரன் என்று தெரிந்துகொண்ட பின்னரே அறிவித்தோம். உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்... நம்புங்கள். ஊடகங்களில் நீங்கள் பார்த்த சடலம் பிரபாகரனுடையதுதான்.
எந்தத் தருணத்திலாவது பிரபாகரனுடன் பேசி இருக்கிறீர்களா?
ஒருபோதும் இல்லை!
எண்ணற்ற குழந்தைகள் போரில் கொல்லப்பட்டார்கள். உதாரணமாக, பிரபாகரனின் இளைய மகன். அவர் மீது இருந்த காயங்கள் மிகக் குறைந்த தூரத்தில் இருந்து அவர் கொல்லப்பட்டதை உறுதி செய்கின்றன. அதாவது, பிடித்துவைத்துக் கொன்று இருக்கிறீர்கள். உங்கள் போர் அறம் இதுதானா?
நீங்கள் தொடர்ந்து யூகத்தின் அடிப்படையிலான விஷயங்களை முன்வைத்தே கேள்விகளைக் கேட்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடுவதுபோல பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டுவிட்டதாக நான் நம்பவில்லை. கடைசி நாள் தாக்குதல் நடந்த இடங்களில் சில பெண்கள், நான்கைந்து சிறுவர்களின் சடலங்களைக் கைப்பற்றினோம். அதில் பெரும்பாலானவர்கள் சயனைடு உட்கொண்டு இறந்தவர்கள். பிரபாகரனுக்கு நெருக்கமானவர்கள்- கருணா அம்மான் போன்றவர்களை அழைத்துவந்து காட்டினோம். பிரபாகரன் மனைவியோ, இளைய மகனோ, மகளோ அதில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எங்களைப் பொறுத்த அளவில் பிரபாகரன் குடும்பத்தில் கொல்லப்பட்டது பிரபாகரனும் அவருடைய மூத்த மகனும் மட்டும்தான். மற்ற மூவரின் நிலைபற்றி எங்களுக்கே இதுவரை எந்தத் தகவலும் தெரியாது.
இவ்வாறு சரத் பொன்சேகா கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக