ஞாயிறு, 28 அக்டோபர், 2012

புலம்பெயர் தமிழர்கள் வடகிழக்கு தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல

கொழும்பு அரசியல் மட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய பேச்சு அதிகமாக அடிபட ஆரம்பித்திருக்கிறது. கடந்த காலத்தில் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் மீது கடுமையான கோபங்களை வெளிப்படுத்தி வந்த சிறிலங்கா அரசாங்கம் இப்போது இவர்கள் தொடர்பாக புதிய தந்திரோபாயத்தை கையாள ஆரம்பித்திருக்கிறது.

ஒன்று மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர்களை தன்பக்கம் இழுத்து அதன் ஊடாக வடக்கு கிழக்கில் தனது ஆதரவு தளத்தை உருவாக்குவது.
இரண்டாவது வடக்கு கிழக்கில் உள்ள பெருந்தொகையான இளைஞர்களை ஒஸ்ரேலியா போன்ற நாடுகளை நோக்கி புலம்பெயர வைப்பதன் மூலம் குடிப்பரம்பலை கணிசமான அளவு குறைப்பதுடன் மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் தனக்கான ஆதரவு தளம் ஒன்றை பலப்படுத்திக் கொள்வது.
 
மேற்குலக நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களை தன்பக்கம் இழுத்து கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் போர் நடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் எவ்வாறு நெருக்கடியை கொடுத்தார்களோ அதுபோல போர் முடிந்த பின் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர்.
 
இதை லண்டன் போன்ற இடங்களில் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச நேரடியாகவே கண்டிருக்கிறார். எனவேதான் மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களை தன்பக்கம் இழுப்பதன் மூலம் அழுத்தங்களை குறைத்து கொள்ள முடியும் என அரசு நம்புகிறது.

இதில் புலம்பெயர் தமிழர்கள் என்றால் யார்? அவர்களின் மனோ நிலை என்ன? அவர்கள் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கு தகுதி கொண்டவர்களா? என்பதை பார்த்து விட்டு இந்த இரு விடயங்களையும் பற்றி பார்ப்பது நான் சொல்ல வரும் விடயத்திற்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.
 
புலம்பெயர் தமிழர்கள் என்றால் யார்?
 
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு நீண்டவரலாறு இருக்கிறது. மேற்குலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களில் இருபிரிவினர் உண்டு.
 
முதலாவது வகையினர் தொழில்சார் நிபுணர்களாக லண்டன், ஒஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சென்றவர்கள். இவர்களை புலம்பெயர் தமிழர்கள் என்ற வகைக்குள் அடக்குவது குறைவு.
இரண்டாவது வகையினர் 1980களின் பின்னர் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தொழில்சார் தகமைகள் அற்ற நிலையில் அகதி தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு சென்றவர்கள். இவர்களே இன்று பெரும்பாலும் புலம்பெயர் தமிழர் சமூகம் என்ற வகைக்குள் அடங்குகின்றனர்.
தொழில்சார் நிபுணர்களாக லண்டன் ஒஸ்ரேலியா கனடா அமெரிக்கா என்ற ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு சென்றவர்கள் இலங்கையில் நடந்த ஈழவிடுதலைப்போராட்டத்தில் அக்கறையோ ஆர்வமோ கொண்டவர்களாக இருக்கவில்லை.

தொழில்சார் நிபுணர்களாக அந்தந்த துறைகளில் தொழில்புரிந்து கொண்டு உயர்வாழ்க்கை வசதியுடன் இருந்த இவர்கள் 1980களில் அல்லது 1990களில் இந்த நாடுகளுக்கு தொழில் தகமை எதுவும் இன்றி அகதிகளாக வந்தவர்களை அகதிகள் என கூறி அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் ஒதுங்கியே இருந்தனர்.
ஆனால் சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு வந்தவர்களில் 99வீதமானவர்கள் அகதிகளாகவே வந்தனர்.  அகதிகளாக வந்தவர்களே பெரும்பாலும் ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவாக உதவி புரிய ஆரம்பித்தனர்.
 
1980களின் பின்னர் வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் தொடர்பாக இன்றைய தலைமுறையினருக்கு தெரியாத கதை ஒன்றும் உள்ளது. 1980களின் பின்னர் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசாங்கம் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதற்கான வழிகளை இலகுவாக திறந்து விட்டது. இதன் மூலம் பெருந்தொகையான தமிழர்கள் ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.
 
மேற்குலக நாடுகளுக்கு செல்வதற்கான வழிகளை இலகுவாக்கி திறந்து விடுவதன் மூலம் ஆயுதப்போராட்டத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறையும், ஆயுதப்போராட்ட ஆட்பலம் குறையும் இதன் மூலம் ஆயுதப்போராட்டத்தை இலகுவாக முறியடிக்கலாம் என ஜே.ஆர்.ஜெயவர்த்தனா எண்ணியிருக்கலாம். ஆனால் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நினைத்தது ஒன்று நடந்தது வேறொன்று. வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் ஆயுதப்போராட்டம் பலவீனமடைந்து விடும் என எண்ணியதற்கு மாறாக ஆயுதப்போட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கான பொருளாதாரபலம் புலம்பெயர்ந்த தமிழர்களால் அதிகரித்தது.
1990களின் பின்னர் விடுதலைப்புலிகள் பலமும் வளர்ச்சியும் பெற்றார்கள். இதற்கு முக்கிய காரணியாக இருந்தது பொருளாதார பலம்தான். அந்த பொருளாதார பலத்தை கொடுத்தவர்கள் மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள்தான்.

மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களில் 90வீதமானவர்கள் போரை முன்னெடுத்து சென்ற விடுதலைப்புலிகளை ஆதரித்தார்கள். ஆயுதப்போராட்டத்தை ஆதரித்தார்கள். ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்தது. அதனால் பெருந்தொகையான பணத்தையும் அள்ளிக்கொடுத்தார்கள்.
 
தொழில்நிமித்தம் மேற்குலக நாடுகளுக்கு வந்தவர்களை தவிர ஏனையவர்கள் இலங்கையில் தொடர்ந்து யுத்தம் ஒன்று நடக்க வேண்டும் என விரும்பியிருந்தார்கள். அதுதான் அவர்களின் இருப்பை தக்கவைத்து கொள்ள கூடியதாக இருந்தது. போர் முடிந்து அங்கு அமைதியான சூழல் உருவாகிவிட்டால் தங்களை நாட்டுக்கு திரும்பி அனுப்பிவிடுவார்களோ என்ற பயம் ஆரம்பகால கட்டங்களில் பெரும்பாலான தமிழர்களிடம் காணப்பட்டது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஏற்பட்ட போர் நிறுத்தம், பிரேமதாஸ காலத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தம், சந்திரிக்கா காலத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தம், அதன் பின்னர் 2002ல் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்தம், இந்த அனைத்து போர் நிறுத்த காலத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் கவலையடைந்தவர்களாகவே இருந்தனர். இலங்கையில் போர் நிறுத்தம் அமைதி என்பது அவர்களுக்கு வெறுப்பூட்டும் விடயமாகவே இருந்தது.
2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய நாட்டிற்கு வந்த போது பலர் என்னிடம் கேட்ட கேள்வி, ஏன் தலைவர் சண்டையை தொடங்காமல் பொறுமை காக்கிறார். இந்த கேள்வியை பெரும்பாலானவர்கள் கேட்டனர்.

மீண்டும் சண்டையை தொடங்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியவர்கள் வடகிழக்கில் வாழும் மக்களே தவிர வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அல்ல என நான் சிலரிடம் கூறி அவர்களின் வெறுப்பை சம்பாதித்த சம்பவங்களும் உண்டு.
 
மாவிலாற்றில் சண்டை ஆரம்பித்த போது மேற்குலகில் வாழும் தமிழர்கள் பலர் துள்ளிக்குதித்தனர். அந்த சண்டை கிளிநொச்சி வரை வந்த போது பிரான்ஸில் இருந்து ஒலிப்பரப்பாகும் தமிழ்ஒலி வானொலி என்னிடம் செவ்வியை எடுத்திருந்தது. அதில் விடுதலைப்புலிகளால் கிளிநொச்சியை மட்டுமல்ல வன்னியின் எந்த பிரதேசத்தையும் இனி தக்க வைத்து கொள்ளமுடியாது. மக்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் தாங்கள் பாதுகாப்பு என மக்கள் கருதுகிறார்களோ அந்த இடங்களுக்கு செல்ல விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தேன்.
 
கிளிநொச்சியிலிருந்து ஐ.நா. உட்பட அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேறிய போது அவர்களுடன் பொதுமக்களையும் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் அனுமதிக்க வேண்டும். அதற்கு வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அந்த வானொலி செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தேன்.
 
இதை தெரிவித்ததால் ஐரோப்பிய நாடுகளில் இருந்த தமிழர்கள் பலர் எனக்கு துரோகி பட்டத்தையும் வழங்கினர். அந்த வானொலியில் பதிலளித்த நேயர் ஒருவர் மிக ஆவேசமாக சொன்னார். கிளிநொச்சியை இயக்கம் கைவிடும் என்ற பேச்சுக்கே இடமில்லை. உள்ளே விட்டு அடிப்பதற்காகத்தான் தலைவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என கூறி கூடவே என்னை திட்டி தீர்த்துவிட்டு துரோகி பட்டம் ஒன்றையும் தந்துவிட்டு சென்றார்.
 
அக்கால கட்டத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு சந்தித்த ஒருவரிடம் பொதுமக்களின் இழப்பு பற்றியும், பொதுமக்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகளும், இராணுவமும் அனுமதிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கூறிய போது அவர் சொன்னார் இன்னும் ஒரு 50ஆயிரம் பொதுமக்கள் செத்தால்தான் சர்வதேசம் எங்களை திரும்பி பார்க்கும். சனத்தை வெளியேறவிட்டால் போராட்டம் முடிஞ்சிடுமே என சொன்னார். அங்கிருக்கும் அப்பாவி சனங்களின் உயிர்களை விட ஆயுதப்போராட்டத்திற்குத்தான் இந்த இறுதி கட்டத்திலும் கூட மேற்குலக நாடுகளில் இருந்த தமிழர்கள் முன்னுரிமை கொடுத்தனர்.
 
மேற்குலக நாடுகளில் இருந்த தமிழர்களின் மனநிலைகளை புரிந்து கொண்டு ஆயுதம் வாங்குவதற்கென பெருந்தொகையான பணங்களை பெற்ற சம்வங்களும் உண்டு. பலர் வங்கிகளில் லட்சக்கணக்கான சுவிஸ் பிறங்குகளை, ஈரோக்களை கடனாக பெற்றுக்கொடுத்தனர். மே 17, 18ஆம் திகதிகளில் கூட ஆயுதம் வாங்குவதற்கென சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிதி சேகரிக்கப்பட்டது. அந்த நிதிகள் யாருக்கு ஆயுதம் வாங்குவதற்கு எங்கு சென்றது என்ற விபரம் யாருக்கும் தெரியாது. இந்த கேள்விகளை கேட்பவர்கள் துரோகியாக்கப்பட்டு விடுவார்கள்.
 
தலைவர் உள்ளேவிட்டு அடிப்பார் என்ற நம்பிக்கையோடுதான் முள்ளிவாய்க்காலில் போர் முடியும் இறுதிநேரம் வரை வெளிநாடுகளில் இருந்த பெரும்பாலான தமிழர்கள் எண்ணியிருந்தார்கள். இப்போது கூட இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு சமாதான வழியில் நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என எண்ணுவதை விட தலைவர் மீண்டும் வருவார், ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும் மீண்டும் ஒரு போர் அங்கு நடக்க வேண்டும் என்பதைதான் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழர்கள் பலர் விரும்புகின்றனர்.
 
தலைவர் வந்து மீண்டும் போரை ஆரம்பித்தால் பணத்தை கொடுக்க தயாராக இருக்கிறேன் என கூறுபவர்களும் இருக்கிறார்கள். இதேவேளை ஐரோப்பிய நாடு ஒன்றில் விடுதலைப்புலிகளின் நிதிக்கு பொறுப்பாக இருந்த ஒருவரிடம் கணக்கு விபரத்தை கேட்ட போது அவர் சொன்ன பதில் தலைவர் வந்து கணக்கை கேட்டால் அவரிடம் விபரத்தை கொடுப்பேனே தவிர வேறு ஒருவரிடமும் கொடுக்க மாட்டேன் என்றாராம். அந்த நிதிப்பொறுப்பாளரிடம் போரின் இறுதிக்காலத்தில் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி இருப்பதாக கூறப்படுகிறது. தலைவர் இனி வரமாட்டார், எனவே கணக்கு விபரத்தை காட்டு என கேட்கும் துணிவு யாருக்கும் இல்லை. ஏனென்றால் தலைவர் இனி வரமாட்டார் என சொன்னால் கணக்கு விபரத்தை கேட்கும் தகுதியை இழந்து துரோகி ஆக்கப்பட்டு விடுவார்.
 
இந்த போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், அவயங்களை இழந்த போராளிகளும் அன்றாட உணவுக்கும் வாழ்விடங்களுக்கும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் போது மீண்டும் ஒரு போர் ஆரம்பமானால் மட்டும் அதற்கு அள்ளிக்கொடுப்பேன் என்ற நிலையில் தான் வெளிநாடுகளில் உள்ள பலர் உள்ளனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவுவது பற்றியோ, சரணடைந்து இப்போது பொதுவாழ்வில் இணைந்துள்ள முன்னாள் போராளிகளுக்கு உதவுவதும் அக்கறை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் மிகக்குறைவாகவே காணப்படுகிறது.
 
ஒரு சிலர் உதவி செய்கிறார்களே தவிர போருக்கு அள்ளிக்கொடுத்தது போல போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு முன்வரும் நிலை மிகக்குறைவாகவே காணப்படுகிறது.
 
புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் என்றால் யார் அவர்களின் மனநிலை என்ன என்பது பற்றி இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
 
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவ ப்படுத்தும் தகுதி உண்டா என்றால் அதற்கு ஒரு வார்த்தையில் இல்லை என்று பதில் சொல்லிவிட முடியும். ஏனெனில் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அல்லது தமிழர் அமைப்புக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இப்போது வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வியல் நலன்களை விட மீண்டும் போர் ஏற்பட வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள். இது வடக்கு கிழக்கில் வாழும் மக்களின் மனநிலைக்கு முற்றிலும் முரணானதாகும். எனவே வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களை பிரதிநிதித்துவ படுத்த முடியாது.
 
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் இருவகையினர் உண்டு. சிறிலங்கா படைகள் தமிழ் மக்களை வகைதொகையின்றி கொலை செய்து வந்த காலத்திலும் சிறிலங்கா அரசின் செயற்பாட்டை நியாயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் ஒரு பகுதியினர். இவர்கள் மிக சொற்பமானவர்கள்தான். இவர்கள் மக்கள் செல்வாக்கில்லாதவர்கள். இலங்கையில் அரசுடன் ஒட்டியிருக்கும் தமிழர் தரப்பு போல செல்வாக்கற்றவர்கள்.
 
மற்றவர்கள் விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தவர்கள் அவர்களிலும் இன்று இரு பிரிவுகளாக பிரிந்துள்ளனர். ஒரு பகுதியினர் மீண்டும் தலைவர் வருவார் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என்பவர்கள். மற்றவர்கள் ஆயுதப்போராட்டம் இனி சாத்தியமில்லை என கூறுபவர்கள். இந்த இரண்டாம் வகையில் உள்ள ஒருபகுதியினரே கே.பி. ஊடாக மகிந்த ராசபக்சவை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
 
புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் என மகிந்த ராசபக்சவை சந்திக்கப் போவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் செல்வாக்கற்றவர்கள். இவர்களுக்கு வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மத்தியிலும் செல்வாக்கு கிடையாது. புலம்பெயர்ந்த தமிழர் சமூகத்தையோ அல்லது வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களையோ பிரதிநிதித்துவம் செய்யும் தகுதி அற்றவர்களையே மகிந்த ராசபக்ச சந்திக்க உள்ளார்.
 
இதற்கான ஏற்பாட்டை செய்யும் கே.பி கூட வடக்கு கிழக்கு மக்கள் மத்தியிலோ அல்லது புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலோ செல்வாக்கோ பிரபல்யமோ அடையாதவர்தான். கே.பி. ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தவர் அல்ல. அது போல போர் நடந்த காலத்தில் வன்னியில் வாழ்ந்தவரும் அல்ல. எனவே விடுதலைப்புலிகளின் நிதியை வைத்திருந்த ஒருவர் என்ற தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் இல்லாத கே.பியை வைத்து மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களையும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களையும் தன்கைக்குள் போட்டுவிடலாம் என மகிந்த ராசபக்ச தரப்பு எண்ணுமாக இருந்தால் அதைப் போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.
முக்கியமாக மேற்குலக நாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் மகிந்த ராசபக்ச தரப்புடன் சமரசத்திற்கு செல்லமாட்டார்கள். தங்களது இனத்திற்கு இத்தனை கொடுமைகளை இழைத்த ஒருவருடன் எந்த மானமுள்ள தமிழனாலும் சமரசத்திற்கு செல்ல முடியாதுதான்.
 
கே.பி. தலைமையிலான செல்வாக்கற்ற ஒரு தரப்பை அழைத்து பேசுவதன் மூலம் தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என்ற சர்வதேச அழுத்தத்தை தணிக்க முடியும் என மகிந்த தரப்பு எண்ணுகிறது.
 
சர்வதேசமோ அல்லது வடக்கு கிழக்கில் உள்ள மக்களோ எந்த காலகட்டத்திலும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக கே.பி போன்றவர்களின் தலைமையிலான புலம்பெயர் தமிழர்களை ஏற்றுக்கொண்டதில்லை.
 
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் அரசியல் தலைமையை மட்டுமே சர்வதேசம் இன்று ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு கட்டத்திலும் அமெரிக்காவோ அல்லது ஐரோப்பிய நாடுகளோ மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களை ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக அங்கீகரித்து அவர்களுடன் பேசியது கிடையாது. ஐரோப்பிய கனடா போன்ற நாடுகளில் உள்ள சில அரசியல் கட்சிகள் தனிப்பட்ட ரீதியில் தமிழர் அமைப்புடன் பேசினாலும் அரசு என்ற ரீதியில் உத்தியோகபூர்வமாக ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளாக பேசுவது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தான்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும் இந்த சர்வதேச அங்கீகாரத்தை பலவீனப்படுத்த அல்லது முறியடிப்பதற்காகவே மகிந்த தரப்பு இப்போது புலம்பெயர் தமிழர்களுடன் பேசுவதற்கு புறப்பட்டிருக்கிறது.

அடுத்த வாரம் வடகிழக்கிலிருந்து ஒஸ்ரேலிய நோக்கிய கடல்பயணங்களும் அதன் பின்னணிகளும் பற்றி பார்ப்போம் .

இரா.துரைரத்தினம்
 
( தொடரும்)

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல