தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அழித்து ஒழிக்கின்றமையில் ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் கிங் மேக்கராக செயல்பட்டு உள்ளார் என்று இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையினரை மேற்கோள் காட்டி பரபரப்புச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்தான் படுகொலை செய்தனர் என்பதில் ரோவுக்கு சில சந்தேகங்கள் இருந்து வந்து உள்ளன. எனவே இப்படுகொலையை புலிகள்தான் செய்தனர் என்பதை நூறு சதவீதமும் உறுதிப்படுத்திக் கொள்ள இப்புலனாய்வாளர்கள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.
இப்படுகொலையை மேற்கொண்டவர்கள் புலிகள்தான் என்பதை புலித் தலைமை அதன் வாயால் வெளிப்படையாக ஒப்புக் கொள்கின்ற பட்சத்தில் மாத்திரமே சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்கிற நிலைமை.
இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நெருக்கமானவர்கள் என்று நம்பப்படுகின்ற பிரமுகர்கள் சிலரை வசப்படுத்துகின்ற முயற்சியில் ரோ ஈடுபட்டது.
இந்திய தூதரகங்கள் ஒவ்வொன்றிலும் ரோ அமைப்பைச் சேர்ந்த ஒருவரேனும் நிச்சயம் ஏதேனும் ஒரு பதவியில் இருப்பார். இவ்வகையில் கொழும்பில் உள்ள தூதரகத்திலும் ரோவை சேர்ந்தவர்கள் இருந்தனர். இவர்களிடம் இவ்வேலைத் திட்டம் ஒப்படைக்கப்பட்டது. ஊடகவியலாளர் வித்தியாதரனுடன் இவர்களில் ஒருவர் மிகவும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் போன்ற முக்கியஸ்தர்களுடன் வித்தியாதரனுக்கு மிகவும் நெருக்கமான தொடர்பு காணப்பட்டு வந்திருக்கின்ற போதிலும் பிரபாகரனுக்கு வித்தியாதரன் மீது எப்போதுமே ஒரு சந்தேகக் கண்தான். இது வித்தியாதரனுக்கும் மிக நன்றாகவே தெரியும். ஆகவேதான் புலிகள் இயக்கத்துடன் ஒட்டிச் செயல்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தார். ஆனால் புலி வாலை பிடித்துக் கொண்டு இருப்பது எப்போதுமே ஆபத்தான காரியம், வாலில் இருந்து கைகளை எடுத்து விட்டால் புலி கடித்துத் தின்று விடும் என்பது இவருக்கு மிக நன்றாகவே தெரிந்து இருந்து. இதனால் புலிகள் இயக்கத்தை வேரறுத்தே ஆக வேண்டும் என்று வித்தியாதரன் மனதுக்குள் கறுவிக் கொண்டு இருந்தார்.
புலனாய்வுக் கண்களால் வித்தியாதரனின் மனதை கண்டு கொண்டார் ரோ அதிகாரி. ராஜிவ் காந்தியை புலிகள்தான் கொன்றனர் என்பதை புலித் தலைவரின் வாயாலேயே ஒப்புக் கொள்ள வைப்பார் என்று ரோ அதிகாரிக்கு நட்பின் உச்சத்தில் வாக்குறுதி வழங்கினார் வித்தியாதரன்.
யுத்த நிறுத்த ஒப்பந்த காலம். அடிக்கடி வன்னிக்கு சென்று வந்தார் வித்தி. அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் அடிக்கடிச் சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தினார். இப்பேச்சுக்களின் விபரங்களை உடனடியாகவே ரோ அதிகாரிக்கும் தெரியப்படுத்தி வந்திருக்கின்றார்.
தலைவர் பிரபாகரன் சர்வதேச மட்டத்தில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்த வேண்டும், இதன் மூலம் தலைவரின் பெயர் சர்வதேச மட்டத்தில் பேசப்படும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்றேல்லாம் அன்ரன் பாலசிங்கத்துக்கு சந்திப்பின்போதெல்லாம் ஓதி வந்திருக்கின்றார் வித்தியாதரன்.
வித்தியின் குள்ள நரிப் புத்தியை அன்ரன் அடையாளம் கண்டு இருக்கவில்லை. சர்வதேச ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்த வேண்டிய அவசியத்தை பிரபாகரனுக்கு விளங்கப்படுத்தி இருக்கின்றார் அன்ரன். ஆயினும் இது வித்தியாதரன் எடுத்துக் கொடுத்த ஐடியா என்பதால் பிரபாகரனுக்கு முதலில் சந்தேகமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் போன்றோர் வித்தியாதரன் குறித்துக் கொடுத்த நற்சான்றிதழை கருத்தில் கொண்டும், வித்தியாதரன் குறித்து பொட்டம்மானின் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை எதுவும் தந்திராத நிலையிலும் சர்வதேச ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த இணங்கினார் பிரபா.
கிளிநொச்சி விழாக் கோலம் பூண்டது. பி.பி.சி, சி.என்.என் உட்பட உலகப் பிரசித்தி வாய்ந்த ஊடக அமைப்புக்களும், உள்நாட்டு ஊடகங்களும் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கிளிநொச்சியில் குழுமின. தமிழ்ச்செல்வன், அன்ரன் பாலசிங்கம் சமேதராக ஊடகவியலாளர்கள் முன்னிலையில் வந்து தோன்றினார் பிரபா.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அன்ரன் பாலசிங்கத்தின் உதவி, ஒத்தாசையுடன் பிரபா பதில்கள் சொல்லலாயினர்.
இந்தியாவில் இருந்து வந்திருந்த ஊடகவியலாளர்களில் ஒருவர் ராஜிவ் காந்தி படுகொலை குறித்து பிரபாகரனிடம் வினவினார்.
ராஜிவ் காந்தி படுகொலை ஒரு துன்பியல் சம்பவம் என்றார் பிரபா.
புலிகள்தான் இக்கொலையை செய்தனர் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.
இந்த ஒப்புதல்தான் புலிகள் ஒரேயடியாக அழிகின்றமைக்கு காரணம் ஆகி விட்டது.
புலிகள்தான் ராஜிவ் படுகொலையை செய்தனர் என்பதை ரோ அமைப்பு நூறு சதவீதமும் உறுதிப்படுத்திக் கொண்டது. இது குறித்த புலனாய்வு அறிக்கை மத்திய அரசுக்கும், சோனிய காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
ராஜிவ் காந்தியை கொன்ற புலிகளை வேரோடு அழித்தே தீர வேண்டும் என சோனியா, ராகுல் ஆகியோர் சபதம் எடுத்துக் கொண்டனர். ரோ எப்போதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டது. இதே நேரம் சர்வதேச சமூகமும் புலிகளை பயங்கரவாதிகள் என்று ஒரேயடியாக முத்திரை குத்திக் கொள்வதற்கும் ராஜிவ் காந்தி படுகொலை குறித்த பிரபாகரனின் ஒப்புதல்தான் வீரியமான காரணம் ஆகி விட்ட்டது.
ராஜிவ் காந்தியை படுகொலை செய்தமையை சுயம் ஒப்புக் கொண்டமை மூலம் நுணலும் தன் வாயால் கெடும் என்கிற பழமொழிக்கு உதாரணம் ஆகி விட்டார் பிரபா. இந்த ஒப்புதல் ஒரு மாபெரும் தவறு என காலம் கடந்துதான் உணர்ந்து கொண்டார். இதன் பின்னணியில்தான் அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோருடன் தலைவர் பிரபாகரனுக்கு இறுதிக் காலங்களில் முறுகல் ஏற்பட்டு விட்டது என கருத வேண்டி உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்தத்துக்கு இந்தியா நேரடியாகவே பேருதவிகள் வழங்கியது. படை உதவிகூட வழங்கப்பட்டது என சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அத்துடன் புலிகள் இயக்கத்தை காப்பாற்றுகின்றமையில் சர்வதேச சமூகம் விசுவாசத்துடன் செயல்பட தவறி விட்டது. புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவர் பிரபாகரனையும் வித்தியாதரன் கிங் மேக்கராக செயல்பட்டு அழித்து ஒழித்த கதை இதுதான்.
தாய்நாடு இணையம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக