MEL-GREIG-AND-MICHAEL-CHRISTIAN-AUSTRAILIAN-DJS-570
இங்கிலாந்து இளவரசி கேற் மிடில்றோன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கே கடமையிலிருந்த ஒரு தொலைபேசி அழைப்பாளராக இருந்த தாதி ஒரு ஊடகத்தின் திட்டமிட்ட தவறுதலால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜசிந்தா சல்டங்கா என்கிற இந்த 46 வயதுப் பெண்ணின் வாழ்க்கையும் சாதாரணமாகவே ஓடிக்கொண்டிருந்தது. இரவு வேளைகளில் வருகிற தொலைபேசி அழைப்புக்களை கிரமமாகக் கையாள்வதே இவரது பணி. இப்படியான இவருக்கு அரச குடும்பத்தின் புதிய வாரிசான கேற் மிடில்றோன் வைத்தியசாலையில் கர்ப்பகால பிணிகள் தொடர்பாக அனுமதிக்கப்பட்ட போது பணியிலிருந்ததே விபரீதமான விளைவைக் கொண்டுவந்துள்ளது.
ஊடகங்கள் தகவல்களைப் பெறுவதற்காக பலவேளைகளிலும் குறுக்குவழிகளைப் பாவிப்பதுண்டு. அப்படித் தான் இளவரசர் வில்லியத்தின் அப்பாவான சார்ள்ஸ் மற்றும் இங்கிலாந்து மகாராணி போன்று குரல்களை மாற்றிய அவுஸ்திரேலியாவிலுள்ள இரண்டு வானொலித் தொகுப்பாளார்கள் கேற் மிடில்றோனின் தேகாரோக்கியம் பற்றிக் கேட்டிருக்கிறார்கள்.
சாதாரண நபர்களின் உடல்உள நலங்களே வெளியே தெரிவிக்கப்படாத போது இராணியின் குடும்பத்தவர் என்றால் அதிலொரு நாகரீகம் காக்கப்படுவது வழமையே. எனினும் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்ட இவர்கள் இராணியின் குடும்பத்தின் உயர் அங்கத்தவர்களான இராணியும், இளவரசர் சார்ள்சுமே என நம்பிய மேற்படி பெண்மணி உண்மைகளைத் தெரிவித்துள்ளார்.
இதனை மேற்படி வானொலி நிகழ்ச்சியில் மேற்படி இரண்டு நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் வெளியிட அதுவே அவர்களிற்கு உலகப் புகழானது. ஆனால் மறுபக்கமாக அந்த தொலைபேசி அழைப்பை எடுத்து அதனை இளவரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு தொடுத்த அந்த தாதி தான் ஏமாற்றப்பட்டதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான ஜசிந்தாவை ஏதோ ஒரு குற்றவுணர்வு வருத்தி, தனது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கூடச் சிந்திக்காமல், அவரை தற்கொலை செய்யத் தூண்டியுள்ளது.
தார்மீக ஊடகப் பண்பைக் கையாளும் கனடா மிரரும் அதன் சகோதர நிறுவனங்களும் ஜசிந்தாவின் மரணத்திற்கு ஒருகணம் தலைசாய்த்து ஆழ்ந்த துக்கத்துடன் தமது கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
ஊடக ஆரோக்கியம், ஊடக சுதந்திரம் என்பவற்றிற்கு எதிராக ஊடகங்களே செயற்பட்டு வரும் இவ்வேளையில் ஒரு பெண்ணின் மரணத்தில் தங்களது பிரகாசமான வாழ்க்கையையும் இழந்துள்ளார்கள் அந்தப் பெண்ணை தங்களின் குரலை மாற்றி ஏமாற்றிய அந்த இரண்டு ஊடகவியாளார்களும்.
இருவருமே அந்த ஊடகத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இது மஞ்சள் பத்திரிகைத் தரத்திற்கு இறங்கி செய்திகளை வெளியிடும் மற்றும் உண்மைக்குப் புறம்பாக நடக்கும் ஊடகங்களிற்கு ஒரு பாடமாகும். கருத்துக்களை எதிர்க்கருத்துக்களால் வெல்லுங்கள். யாரையுமே களங்கப்படுத்தாதீர்கள் என்பதே இந்த மரணமும் இரண்டு ஊடகவியலாளர்களின் பதவிபறிப்பும் சுட்டி நிற்கும் உண்மையாகும்.
கனடாமிரர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக