திங்கள், 25 மார்ச், 2013

சந்திரபாபுவும், எம்.ஜி.ஆர். உம் சில உண்மைகள்

"செத்துட்டா? மன்னிச்சிரலாமா? அப்போ ஹிட்லரையும் மன்னிச்சிரலாமா?" என விஸ்வரூபம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். இறந்தவர்கள் கடவுள்களாக வணங்கப்படும் நம் சமூக வாழ்க்கையில் அவர்களின் பெருமை பேசி, புகழ் பரப்ப மட்டுமே செய்கிறோமேயொழிய அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் செய்துபோன பிழைகளையும், அப்பிழைகள் நம்மிடையே விட்டுச்சென்ற நிரந்தர வடுக்களையும் நாம் கவனத்தில் கொள்வதில்லை.

நமக்கு நம் சமகால அரசியல்வாதிகளின் குணங்களைப் பற்றி தெரிகிறது. ஆனால் நம் முந்தைய தலைமுறை அரசியல்வாதிகள் மீதான நம்மது எண்ணம் பெரும்பாலும் 'glorify' செய்யப்பட்டதாகவே இருக்கிறது. முத்துராமலிங்கம்(தேவர்), எம்.ஜி.ஆர், ராஜாஜி, பாலகங்காதர் திலகர் என இந்தப் பட்டியலின் நீளம் மிக மிக அதிகம். இந்த தலைவர்களின் ஒரு சில முகங்கள் நல்லவைகளாக இருந்திருக்கலாம். ஆனால் இறந்துவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அந்த நல்ல முகங்களை மட்டுமே பிரதானப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. இந்தக் குறிப்பிட்ட பதிவு எம்.ஜி.ஆரின் ஒரு உண்மை முகத்தைப் பற்றி.

சந்திரபாபு எனக்கு மிகவும் பிடித்த நடிகர், பாடகர், இசையமைப்பாளர் (அவர் பாடிய நிறைய பாடல்களுக்கு Ghost music directorஆக இருந்திருக்கிறார்), நடனக் கலைஞர். 46 வயதிலேயே இறந்துவிட்ட அவரைப் பற்றி பேசும்போதெல்லாம் பெரியவர்கள், "பாவம். அவன கொன்னதே எம்.ஜி,ஆர்தான்" எனக் கூறக் கேட்டிருப்போம்.

சந்திரபாபு திரையுலகத்தில் கொடிகட்டிப் பறந்த காலம் அது. மனதில் பட்டதை ஒளிவுமறைவில்லாமல், எந்த மேற்பூச்சும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்லக் கூடிய கர்வமிகு கலைஞன் சந்திரபாபு. சிலர் அவரது இந்த குணத்தை திமிராகவும், சிலர் பைத்தியக்காரத்தனமாகவும் கூட வர்ணித்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் சந்திரபாபுவின் இயல்பே அப்படித்தான்! ஒருவேளை சோற்றுக்குக் கூட வழியில்லாத நேரத்தில், சிகரட் வாங்கித்தருகிறேன் என யாரேனும் நண்பர்கள் சொல்லும்போது, "என் ப்ராண்ட் கோல்டு ஃப்ளாக். ஒன்னு பதினைஞ்சு பைசா. முடிஞ்சா அத வாங்கிக்கொடு. இல்லேனா வேணாம்" என்பாராம்! அதனால் சந்திரபாபுவின் திமிர் இடையில் வந்ததல்ல என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

எம்.ஜி.ஆரை சின்னவர், வாத்தியார் என சினிமாத்துறை அழைத்துக் கொண்டிருக்க, 'மிஸ்டர் எம்.ஜி.ஆர்' என அழைத்த ஒரே ஆள் சந்திரபாபு. அப்போதைய சினிமா பத்திரிக்கைகளில் தான் அளித்த பேட்டிகளிலும், கட்டுரைகளிலும் அப்படியே குறிப்பிட்டிருக்கிறார். "எம்.ஜி.ஆர் அனைவரும் தன்னை மட்டுமே புகழ வேண்டும். எல்லாவற்றிலும் தான் மட்டுமே தெரிய வேண்டும் என நினைப்பவர் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் சந்திரபாபு. சிவாஜி நல்ல நடிகர் ஆனால் அவரைச் சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டத்தை அவர் விளக்க வேண்டும், ஜெமினி கணேசனின் பணம் சம்பாதிக்கும் தந்திர குணம் தனக்கு எப்படி உதவியது என்பது குறித்து கூட வெளிப்படையாக எழுதி அவர்களின் கோபத்தை சம்பாதித்திருக்கிறார். ஆனால் வெளிப்படையாக கோபத்தை காட்டாத மனிதர் எம்.ஜி.ஆர். சந்திரபாபு மீது தனக்கு உள்ளுக்குள் கணன்று கொண்டிருந்த கோபத்தை, பழியை தீர்த்துக்கொள்ள எம்.ஜி.ஆருக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் ஏற்பட்டது. கர்வம் நிறைந்த வெள்ளந்தியான சந்திரபாபுவே அதற்கும் வழி அமைத்துக் கொடுத்தார்!

விஜி எனப்படும் வி.கோவிந்தராஜூலுவும், தயாரிப்பாளர் சுப்பையாவும் படம் தயாரிப்பதைப் பற்றி சந்திரபாபுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, தன் மனதில் இருந்த மாடிவீட்டு ஏழை கதையைச் சொன்னார் சந்திரபாபு. மிகவும் புரட்சிகரமான கருத்துக்களை நகைச்சுவையாய் சொல்லும் கதையாக இருந்ததால் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் அப்போது பரபரப்பாக நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் தான் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்று கண்டிஷன் போட, சந்திரபாபுவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து எம்.ஜி,ஆரைச் சந்திக்கப்போனபோது இருவரும் ஏதேதோ பேசிவிட்டு, இறுதியில் விசயத்திற்கு வந்தார்கள். உடனே ஒப்புக்கொண்ட எம்.ஜி.ஆர் தன் சம்பளமாக ஒரு பெரிய ஆறிலக்கத் தொகையைக் கேட்டார். அதில் பாதியை வெள்ளையாகவும், மீதியை கறுப்பாகவும் கொடுக்கவேண்டும் என்ற கண்டிஷனுடன். (இதை எல்லாம் பிலிமாலயா பத்திரிக்கையில் தன் 'மாடி வீட்டு ஏழை' தொடரில் எழுதியிருக்கிறார் சந்திரபாபு) கண்டிஷன்களுக்கு ஒப்புக்கொண்ட சந்திரபாபு பூஜை தேதியை அறிவிக்கும்போது முன்பணம் 25000ரூபாயைக் கொடுக்கிறேன் என கூறிவிட்டு வந்தார்.

பின் விஜியும், சுப்பையாவும் சந்திரபாபுவையும் ஒரு பங்குதாரராக வற்புறுத்த கதை மேல் கொண்ட நம்பிக்கையில் சம்மதித்து அனைத்து பத்திரங்களிலும் கையெழுத்தும் போட்டார் சந்திரபாபு. தேதி குறிக்கப்பட்டு சந்திரபாபுவின் தோழி சாவித்ரி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கண்ணதாசன் இரண்டு பாடல்களை எழுதி 10000ரூபாய் வாங்கிக் கொண்டார். அடுத்து எம்.ஜி.ஆருக்கு முன்பணம் கொடுக்கவேண்டிய கட்டம்.

இந்த காலகட்டத்தில் சுப்பையாவிடம் நிறைய பணம் புழங்கியதால் ஒரே நேரத்தில் எட்டு படங்களை அறிவித்து யாருமே எதிர்பாரா வண்ணம் மொத்தமாக திவாலானார் சுப்பையா. வி.ஜியோ தலைமறைவே ஆகிவிட்டார்! அதிர்ச்சியடைந்த சந்திரபாபு சாவித்ரியிடம் 25000 ரூபாய் கடன் வாங்கி அதை எம்.ஜி.ஆரின் தோட்டத்தில் அவரைச் சந்தித்துக் கொடுத்தார். இந்த சம்பவத்தை சந்திரபாபு, "25000 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு, "பாபு சார். அருமையாகச் செய்துவிடுவோம். போய் வேலையைப் பாருங்கள்" எனக்கூறிவிட்டு ஒரு மரத்தடிக்குச் சென்று ரூபாய் நோட்டுக்களை இடுப்பில் செருகிக் கொண்டார். அவ்வளவுதான். அவர் வயிற்றில் என் பணம் சங்கமம் ஆகிவிட்டது" என எழுதியிருப்பதைப் படிக்கும்போது நமக்கே வயிற்றைக் கலக்குகிறது.

பின்தான் எம்.ஜி.ஆரின் பழிவாங்கும் படலம் ஆரம்பித்தது. சந்திரபாபுவோ கடனுக்கு மேல் கடன் வாங்கி படத்தை வளர்க்க, எம்.ஜி.ஆரோ நான்கு நாட்கள் மட்டும் படப்பிடிப்பிற்கு வந்துவிட்டு பின் வருவதையே நிறுத்திக்கொண்டார். சந்திரபாபு அலையாய் அலைந்து ஒரு ஸ்டூடியோவின் வாசலில் எம்.ஜி.ஆரைக் கண்டுபிடித்து அவரிடம் பேசப் போயிருக்கிறார். பாபுவைக் கவனித்துவிட்ட எம்.ஜி.ஆர் அங்கிருந்த அசோகனை அழைத்து அரைமணி நேரம் ஏதேதோ பேசி பாபுவை கவனிக்காதவர் போலவே அரை மணி நேரத்திற்கும் மேலாக கால்கடுக்க நிற்க வைத்திருக்கிறார். பின் ஒருவழியாக 'கால்ஷீட்டை எல்லாம் அண்ணன் தான் பார்த்துக்கொள்கிறார். அவரிடம் பேசிக்கொள்ளுங்கள்" எனக் கூறி சென்றுவிட்டாராம் புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

பாபு தன் சொத்துக்கள் அனைத்தின் மீதும், புதிதாக 19 கிரவுண்டில் தான் கட்டிவந்த வீட்டின் மீதும் கடன் வாங்கி 3000 அடிவரை படத்தை எடுத்தபின் படம் எம்.ஜி.ஆரின் கால்ஷீட்டின்மையால் நின்றிருக்கிறது. ஆசை ஆசையாகக் கட்டிய இந்த வீட்டைப் பற்றி மனோரமாவிடம் அடிக்கடி, "மனோரமா.. கீழேயிருந்து கார் நேரா ரெண்டாவது மாடிக்கு போய் நிக்கிற மாதிரி 19 கிரவுண்டுல ஒரு வீடு கட்டிட்டு இருக்கேன். அப்படி ஒரு வீட்டை எங்கயாவது பாத்தா சொல்லு.. குண்டு வச்சிடுவோம்.." என்று வேடிக்கையாகச் சொல்வாராம். "படப்பிடிப்பு நாள் தள்ளிப்போக தள்ளிப்போக விநியோகஸ்தர்களும், கடன் கொடுத்தவர்களும் என் கழுத்தை நெறிப்பார்கள். தயவுசெய்து எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கொடுங்கள்" என சக்கரபாணியைப் பார்த்துக் கெஞ்சிய சந்திரபாபுவிற்கு அவமரியாதையும், கெட்டவார்த்தைகளில் அர்ச்சனையும் மட்டுமே கிடைத்திருக்கிறது. கோவமடைந்த சந்திரபாபு ஒருகட்டத்தில் பொறுமையிழந்து அங்கிருந்த 'சேர்'ஐ எடுத்து சக்கரபாணியை அடிக்கப் பாய்ந்திருக்கிறார். அன்றோடு அவ்வளவுதான்!! புகழின் உச்சியில், பணத்தின் உச்சியில் இருந்த சந்திரபாபு ஒட்டுமொத்தமாய் சரிந்து விழுந்து செத்ததற்கு முத்தாய்ப்பு இந்நிகழ்வுதான்.

சந்திரபாபு குடி விரும்பி. அதுவும் மேல்நாட்டு ஸ்டைலில் குடிப்பதை மிகவும் விரும்புகிறவர். ஆனால் அவரிடம் இருந்த ஒரு நல்லபழக்கம், படப்பிடிப்பு நாளில் என்ன ஆனாலும் குடிக்க மாட்டார். அப்படிப்பட்ட சந்திரபாபு முழுநேரக் குடிகாரனாக, போதை மருந்துக்கு அடிமையாக மாறியதை இப்படிச் சொல்கிறார், "தினமும் அளவோடு குடிப்பவன் நான். என்றைக்கு 'மாடி வீட்டு ஏழை' படம் எடுக்கத் துணிந்தேனோ அன்றிலிருந்து மொடாக்குடியனாக மாறிவிட்டேன். பின் அதுவும் பத்தாமல் 'பெத்தடின்' எனும் போதைமருந்துக்கும் அடிமையாகிவிட்டேன்".

எம்.ஜி.ஆரின் ஒரு முகம் இப்படியென்றால் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த இன்னொரு குட்டிச் சம்பவம் எம்.ஜி.ஆரின் இன்னொரு கோர முகத்தையும் காட்டுவதாய் இருக்கிறது. மாடி வீட்டு ஏழை நட்டத்திற்குப் பின் சீரழியத்துவங்கிய சந்திரபாபுவின் வாழ்க்கை நாளடைவில் மொத்தமாகக் கெட்டது. போதைப் பழக்கத்தால் உடல்நிலை கெட, பட வாய்ப்புகளும் இல்லை. எப்போதாவது ஏதாவது ஒரு படம் என வாய்ப்பு வந்தது. இரண்டு வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆருடன் 'அடிமைப் பெண்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. உணவுக்கே கஷ்டப்பட்ட நிலையில் அதற்கு ஒப்புக்கொண்டார் சந்திரபாபு. ஒரு காட்சியில் சந்திரபாபுவும், ஜெயலலிதாவும் ஒரு சுவர் மேல் ஏறி தப்பிப்பதைப் போல் காட்சி. சந்திரபாபு தவறிவிழப் போக அவரை தாங்கிப் பிடித்து காப்பாற்றியிருக்கிறார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப்பிற்கு ப்ரேக் விடப்பட்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர், சந்திரபாபு, ஜெயலலிதா என மூவரும் சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திர்ருந்த எம்.ஜி.ஆருக்கு அவர் வீட்டிலிருந்து உணவு வந்துவிட்டது. சந்திரபாபுவுக்கோ வரவில்லை! "என்ன சாப்பிடலையா?" என கேட்ட எம்.ஜி.ஆர், "இன்னைக்கு என் சாப்பாட்டை சாப்பிடுங்கள்" என 'ஒருமாதிரி'யாகக் கூறிவிட்டு எழுந்துபோயிருக்கிறார். ஏன் கோவமாக இருக்கிறார் என குழம்பியிருந்த சந்திரபாபுவிடம் "நான் உங்களைப் பிடித்து தூக்கினேன் இல்லையா? அது அவருக்குப் பிடிக்கவில்லை" என ஜெயலலிதா சொல்லி தெளிவித்திருக்கிறார்!!!!!

இதில் என்ன கொடுமை என்றால் சந்திரபாபு ஜெயலலிதாவின் குடும்ப நண்பர். சிறுவயதில் இருந்தே ஜெயலலிதா சந்திரபாபுவை "அங்கிள்" என்றுதான் அன்பொழுக கூப்பிடுவாராம்! அப்படி உறவு கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்றியதற்காகத்தான் எம்.ஜி.ஆருக்கு அப்படி கோபம்!! இதைப் படித்த போது இன்று தமிழக முதல்வராக, அமைச்சரவையையே தன் காலடியில் கிடத்தியிருக்கும் ஜெயலலிதாவின் அந்த காலத்தைய வாழ்க்கையை நினைத்தபோது வேதனையும், பரிதாபமுமே ஏற்படுகிறது.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு சந்திரபாபு வாழ்ந்தது மிக சொற்பகாலம்தான். சகலகலாவல்லவனாக விளங்கிய சந்திரபாபு நாற்பத்தியாறு வயதிலேயே தன் உடல்வலுவை எல்லாம் இழந்து, ஒரு சொத்தும் இல்லாமல் பிச்சைக்காரராக செத்தார். அவரது கடைசி காலத்தில் அவரைப் பார்த்துக்கொண்ட மூன்று நண்பர்கள் தேங்காய் சீனிவாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் தயாரிப்பாளர் பாலாஜி. அவரது இறுதிச் சடங்கையும் இவர்களே செய்தனர்.

எம்.ஜி.ஆரைப் பற்றிய சந்திரபாபுவின் அனுபவங்களை அவர் எழுத்திலேயே உணர்ச்சி பொங்க படிக்கும் போது, "what you see is the tip of an iceberg" என மனிதர்களின் குணத்தைப் பற்றி சிக்மண்ட் ஃப்ராய்டு சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது! மனிதர்கள் முழுமையான புரிதலுக்கு அப்பாற்ப்பட்டவர்கள். அவர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என அவ்வளவு சுலபமாக அட்டவணைப்படுத்திவிட முடியாது! மனிதனின் குணம் ஆழமானது, புதிரானது. அதை முற்றிலும் புரிந்துகொள்ள நிச்சயமாக வேறொரு மனிதனால் முடியாது! ஏன்? சில நேரங்களில் அந்தந்த மனிதனுக்கே கூட அது முடியாத காரியம் தான்!!


(மேலும் தகவல்களுக்கு, 'சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும்'-முகில். சிக்த் சென்ஸ் பதிப்பகம்')



கண்ணீரும் புன்னகையும்



கண்ணீரும் புன்னகையும் என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க?

அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்ப அவன் 'தாய் உள்ளம்' படத்துல நடிச்சிக்கிட்டிருந்தான். அப்ப அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணணும், லவ் சீன் எப்படி பண்ணனும்னு நடிச்சுக் காட்டுனேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா! இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா! நீ போன ஜென்மத்துல வட்டிக் கடை வைச்சிருந்தப்படா, படுபாவி!

சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவன் நல்ல ஆக்டர்! பட், அவனைச் சுத்தி காக்காக் கூட்டம் ஜாஸ்தி இருக்குது. அந்த ஜால்ரா கூட்டம் போயிடுச்சின்னா அவன் தேறுவான்.

எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.

மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை.

மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.

ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள்.

பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே.'
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல