திங்கள், 1 ஏப்ரல், 2013

எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரம்!

தமிழ்த்திரை உலகில் சூப்பர் ஸ்டாராகவும், பிறகு தமிழக முதல்_ அமைச்சராகவும் திகழ்ந்த எம்.ஜி.ஆர், சினிமா உலகில் அடியெடுத்து வைத்தபின் கதாநாயகன் அந்தஸ்தை பெற 11 ஆண்டுகள் போராடவேண்டியிருந்தது.

திரை உலகிலும், அரசியலிலும் சகாப்தம் படைத்த எம்.ஜி. ஆரின் முழுப்பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். பெற்றோர் பெயர் கோபாலமேனன் _ சத்யபாமா. கோபாலமேனன், மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்து வந்தார். அரூர், எர்ணாகுளம், திருச்சூர், கரூர் முதலிய இடங்களில் வேலை பார்த்தார். நீதி தவறாதவர் அவர். அநீதிக்கு துணை போக மறுத்ததால், அவரை வேறு ஊருக்கு மாற்றினார்கள். அதனால் மன வேதனை அடைந்த கோபாலமேனன், பதவியை ராஜினாமா செய்தார். மனைவியுடன் இலங்கை சென்றார்.

கோபாலமேனன் _சத்யபாமா தம்பதியினர் இலங்கையில் வசித்து வந்தபோது, 1917_ம் ஆண்டு ஜனவரி 17_ந்தேதி சுவாதி நட்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார். கண்டியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார். அந்த இடம் தமிழில் “பச்சைக்காடு” என்று அழைக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். பிறந்த வீட்டில், தற்போது பள்ளிக்கூடம் நடந்து வருகிறது.

எம்.ஜி.ஆருக்கு எம்.ஜி. சக்ரபாணி, பாலகிருஷ்ணன் என்று இரண்டு அண்ணன்கள். கமலாட்சி, சுபத்ரா என்ற 2 தமக்கைகள். 4 குழந்தைகளுக்குப்பின் கடைக்குட்டியாகப் பிறந்தவர் எம்.ஜி.ஆர். பாலகிருஷ்ணன், கமலாட்சி, சுபத்ரா ஆகிய மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். சக்ரபாணியையும், எம்.ஜி.ஆரையும் கோபாலமேனனும், சத்யபாமாவும் அன்புடன் வளர்த்து வந்தனர்.

எம்.ஜி.ஆருக்கு 2 வயதானபோது, குடும்பத்துடன் தாயகம் திரும்பினார், கோபாலமேனன். முன்பு செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவர் குடும்பம், ஒத்தப்பாலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்தது. 1920_ம் ஆண்டு, கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். அப்போது எம்.ஜி.ஆருக்கு மூன்று வயது.

இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு சத்யா அம்மையார் தலையில் விழுந்தது. அவருடைய தம்பி நாராயணனும், குடும்ப நண்பர் வேலு நாயரும் அப்போது கும்பகோணத்தில் வசித்து வந்தனர். குழந்தைகளுடன் அங்கு சென்றார், சத்யபாமா.

நாராயணன், “ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி” என்ற நாடகக் குழுவில் பின்பாட்டு பாடி வந்தார்.
கும்பகோணம் ஆணையடிப் பள்ளியில் சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தார்கள். இலங்கையில் இருந்து கொண்டு வந்திருந்த பணமும், நகைகளும் தீரும் வரை அன்றாட வாழ்க்கை சிரமம் இன்றி கழிந்தது. அதன்பின், குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க அரும்பாடு பட்டார், சத்யபாமா.

குடும்பக் கஷ்டத்தைப் போக்க சத்யபாமா அம்மையாரிடம் அவர் தம்பி நாராயணன் ஒரு யோசனை தெரிவித்தார். “சக்ரபாணியும், ராமச்சந்திரனும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள். நான் வேலை பார்க்கும் கம்பெனியில் சேர்த்துவிட்டால், விரைவில் முன்னுக்கு வந்து விடுவார்கள்” என்பதே அவருடைய யோசனை.

குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்று சத்யபாமா விரும்பிய போதிலும், குடும்ப சூழ்நிலையைக்கருதி அவர்களை நாடகத்தில் சேர்க்க சம்மதித்தார். அதைத்தொடர்ந்து, அவர்களை நாடகத்தில் சேர்த்துவிட்டார், நாராயணன். அப்போது அந்த கம்பெனியில் பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். முதலில் சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், பிறகு கதாநாயகனாக நடித்தார். இந்த சமயத்தில்தான் தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கின.

1935_ம் ஆண்டு, எஸ்.எஸ். வாசன் எழுதிய “சதிலீலாவதி” என்ற கதை, சினிமாவாக தயாரிக்கப்பட்டது. அதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ். பாலையா ஆகிய நால்வருக்கும் இதுதான் முதல் படம்.

இந்தப் படத்தில் நடித்தபோது எம்.ஜி. ஆருக்கு வயது 19. முதல் படத்தில் நடித்ததற்காக அவருக்கு கிடைத்த சம்பளம் நூறு ரூபாய். அதை அப்படியே அம்மாவிடம் கொண்டு போய் கொடுத்து, ஆசி பெற்றார். எம்.ஜி.ஆரின் இரண்டாவது படம் “இரு சகோதரர்கள்”. இதில் சக்ரபாணியும் நடித்தார். இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது.

தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைக்க சத்யபாமா அம்மையார் விரும்பினார். “நடிப்புத்துறையில் முன்னேறிய பிறகுதான் திருமணம்” என்று எம்.ஜி.ஆர். கூறினார். ஆனால் தாயார் தொடர்ந்து வற்புறுத்தவே திருமணத்துக்கு சம்மதித்தார். பாலக்காட்டைச் சேர்ந்த பார்க்கவி என்கிற தங்கமணியை எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்தார், சத்யபாமா.

துரதிருஷ்டவசமாக, பார்கவி சில ஆண்டுகளில் காலமானார். மனைவியின் மரணம் எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. துறவிபோல் வாழ்ந்தார். மகனின் நிலையைக் கண்டு வருந்திய சத்யபாமா, அவருக்கு மறுமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. எனினும், “பார்க்கவியை இழந்தது நமது துரதிருஷ்டம். என்றாலும், நீ வாழ்க்கையில் வெறுப்படைவது நல்லதல்ல. அது உன் உடல் நலனையும், எதிர்காலத்தையும் பாதிக்கும்” என்று சத்யபாமா எடுத்துக் கூறவே, மறுமணத்துக்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார்.

தாயார் பார்த்து முடித்த சதானந்தவதியை, 1942_ம் ஆண்டு ஆனி மாதம் 16_ந் தேதி எம்.ஜி.ஆர். மணந்தார். சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் 25 ரூபாய் வாடகை வீட்டில் எம்.ஜி.ஆர். குடும்பத்துடன் குடியேறினார்.

சதானந்தவதி முதல் முறையாக கருதரித்தபோது, காச நோய் பற்றிக் கொண்டது. அவருடைய வயிற்றில் உருவாகியிருந்த கரு, கர்ப்பப்பைக்கு வெளியே இருந்ததை டாக்டர்கள் கண்டு பிடித்தனர். அது அப்படியே வளர்ந்தால், தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் கருதினார்கள். எனவே, ஆபரேஷன் மூலம் கரு அகற்றப்பட்டது.

1947_ம் ஆண்டில், மாதம் 170 ரூபாய் வாடகைக்கு அடையாறில் ஒரு வீடு பார்த்து குடியேறினார், எம்.ஜி.ஆர். அங்கு வசித்தபோது, அன்னை சத்யா அம்மையார் காலமானார். அந்த துயரத்தில் இருந்து எம்.ஜி.ஆர். மீள வெகு காலம் பிடித்தது.

1949_ம் ஆண்டில், சதானந்தவதிக்கு இரண்டாவது முறையாக கருச்சிதைவு ஏற்பட்டது. அதன் பின், அவர் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையானார். 1962_ல் அவர் மறையும் வரை, நோயாளியாகவே இருந்து, மருந்து _ மாத்திரைகளுடன் வாழ்ந்தார்.

எம்.ஜி.ஆர். தன் மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். 20 ஆண்டு காலம், சதானந்தவதியுடன் குடும்பம் நடத்திய போதிலும், அவர் இல்லறத் துறவியாகவே வாழ்ந்தார். குடும்பத்தில் சோதனை நிறைந்திருந்தபோதிலும், படத்துறையில் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார்.

“வீர ஜெகதீஷ்”, “மாயா மச்சீந்திரா”, “பிரகலாதா”, “சீதா ஜனனம்” ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். 1941_ல் “ஏழிசை மன்னர்” எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, “அசோக்குமார்” படத்தின் மூலம் கிடைத்தது. எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலப் படங்களில் குறிப்பிடத்தக்க படம் “அசோக்குமார்.”

அசோக்குமாரைத் தொடர்ந்து “தமிழறியும் பெருமாள்”, “தாசிப்பெண்”, “ஹரிச்சந்திரா” (ஜெமினி), “சாலிவாகனன்”, “மீரா”, “ஸ்ரீமுருகன்” முதலிய படங்களில் நடித்தார். பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்படாத காலக்கட்டம் அது. சொந்தக் குரலில் பாடத்தெரிந்தவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க முடியும். அழகும், திறமையும் உள்ள எம்.ஜி.ஆர், கதாநாயகனாக உயர முடியாமல் போனதற்கு அதுதான் காரணம்.

1946_ல் பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது.



சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். மறைந்து 26 ஆண்டுகளுக்கு பிறகும் இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும் சிலமுக்கிய தகவல்கள்!

1.எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).

2.எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !

3.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

4.சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்!

5.நான் ஏன் பிறந்தேன்?’ – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. !

6. ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

7.நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்

8. எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !

9.எம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

10.நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !

11.சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !


12.எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வரும் கோவை சரளா !

13.தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 – ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.

15.‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !

16.அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் – சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் !

17.ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !

18.ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !

19.அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

20.எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !

எம்.ஜி.ஆர். பெற்ற விருதுகள்….

பாரத் இந்திய அரசு 1971,

பாரத் ரத்னா இந்திய அரசு 1988,

டாக்டர் பட்டம் சென்னை பல்கலைக்கழகம் 1983,

கௌரவ டாக்டர் பட்டம் அரிசோனா பல்கலைக்கழகம், அமெரிக்கா 1974,

அண்ணா விருது தமிழக அரசு 1971,

சிறந்த நடிகர் இலங்கை அரசு 1968,

ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல்பரிசு – சிங்கப்பூர்ரசிகர்கள் 1971 ரிக்ஷாக்காரன் சிறந்த நடிகர் முதல் பரிசு – இந்திய அரசு1971,

மலைக்கள்ளன் சிறந்த நடிகர் இரண்டாம் பரிசு – இந்திய அரசு 1954, காவல்காரன் சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு 1967,

குடியிருந்த கோயில் சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு 1968, அடிமைப்பெண் சிறந்த படம், முதல் பரிசு, தமிழக அரசு 1969,

எங்க வீட்டுப் பிள்ளை சிறந்த நடிகர் ஃபிலிம் ஃபேர் வருது, 1965

அடிமைப்பெண் சிறந்த படம், முதல்பரிசு,ஃபிலிம்ஃபேர்விருது. 1969

உலகம் சுற்றும் வாலிபன் சிறந்த படம், ஃபிலிம் ஃபேர் விருது 1973

கோடங்கி!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல