வீரகேசரி
மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களை வாக்குகள் மூலம் தெரிவு செய்வது வாக்காளரது உரிமை! பொய் வாக்குறுதிகளை வாரிவழங்கும் போலி அரசியல் தலைவர்களை இனங்கண்டு ஒதுக்குவது எமது கடமை!
தேர்தல் ஒன்று வந்தால்தான் அரசியல்வாதிகளுக்கு மக்களைப்பற்றிய நினைவு வரும். மக்களை என்றால் மக்களையல்ல- அவர்களின் 'வாக்குகளைப்பற்றி' நினைவுக்குவரும். மற்றபடி மக்கள் வெறும் 'மாக்கற்கள்' தான்.
இறுதியாக (2010) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது மக்களை சந்தித்து, அன்பாக, ஆதரவாகபேசி, சீமெந்து, கூரைத்தகடுகள் மற்றும் சாராயம், சோற்றுப் பொதி என்பவற்றைக் கொடுத்து அவர்களின் வாக்குகளை அபகரித்துச் சென்றதோடு சரி!
மக்களை மறந்து போயிருந்தார்கள் இந்த அரசியல்வாதிகள்.
மக்களுக்கு வழங்கியிருந்த வாக்குறுதிகள், சத்தியங்கள், பசப்பு வார்த்தைகள் எல்லாம் காற்றோடு பறந்து போயிருந்தன.
மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களது படங்கள் சுவரொட்டிகளாக வீதிச் சுவர்களில் அலங்கரிக்கத் தொடங்கி விட்டன.
மக்கள் எல்லாவற்றையும் மறந்து போயிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டும் மீண்டும் வாக்குக் கேட்க வந்திருக்கின்றனர். மக்கள் இது போன்ற ஏமாற்றுக்காரர்களை ஒரு போதும் மறக்கமாட்டார்கள்.
ஒரு கட்சியில் இருந்து வாக்கு கேட்டு, தேர்தலில் வெற்றி பெற்ற பின் வசதியான கட்சிக்கு தாவுவது, அற்ப சலுகைகளுக்காக கட்சி மாறுவது, ஊழல் முறைகேடு செய்து தன்னை வளர்த்த கட்சியிலிருந்து வெளியேறுவது போன்ற செயல்களை செய்பவர்களை வாக்காளர்கள் நன்கு அறிவார்கள்.
கட்சியின் பெயரால் வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு ‘‘கட்சி மாறிகள்’’ செய்யும் நம்பிக்கைத்துரோகமே கட்சி மாறுவது. ஆயிரம் நியாயங்களை அவர்கள் கூறினாலும் அவர்கள் மக்களுக்கு துரோகம் செய்தவர்களாக கருதப்படுவார்கள்.
இவ்வளவு நாளும் மூடிக்கிடந்த பொது கட்டடங்கள், நலன்புரி நிலையங்கள், வாசிகசாலைகள் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க இப்போதுதான் அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்கிறது. அவசரம் அவசரமாக தீந்தை பூசி, புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தைப்போன்று ஜோடனை செய்து திறந்து வைக்கத் தொடங்கியுள்ளனர்.
எப்போதோ பெய்த மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு என்பவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி இப்போதுதான் இந்தத் தலைவர்களுக்கு நினைவில் வந்திருக்கிறது. கூரைத்தகடுகள், சீமெந்து மற்றும் பல பொருட்களை விநியோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
பொருட்களை விநியோகிக்கும் போது பிடிக்கப்பட்ட படங்களை தவறாமல் பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்து விடுகின்றார்கள். சுவரொட்டிகள், பதாகைகளில் இதுபோன்ற படங்களையே வெளியிடுகின்றனர்.
படித்த இளைஞர்- – யுவதிகளுக்கு வேலை பெற்றுக்கொடுப்பதாக உறுதி மொழி வழங்குவதுடன் அவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு வருகின்றனர்.
இவ்வளவு நாட்களாக இந்த வேலையற்ற இளைஞர்- – யுவதிகளைப் பற்றி சிந்திக்காத இந்தத் தலைவர்கள், அல்லது வேலை ஒன்றை பெறுவதற்கு சிபாரிசு செய்யுமாறு கேட்டால் எரிந்து விழும் தலைவர்கள் இப்போது அன்பாகப் பேசி விண்ணப்பங்களை வாங்கிக்கொள்வது எதற்காக?
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போது தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்ததொரு சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்காதவர்கள் வாக்குக்கேட்க வருகிறார்கள்.
சிந்தித்துப்பார்த்தால் நாடகமாகவே தோன்றுகின்றதல்லவா?
வாக்காளர்கள் ஏமாந்து விடக்கூடாது!
இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தத்தமது சுயநலத்துக்காக ஒவ்வொரு பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றன. இது மக்களது நன்மைக்காகவா அல்லது தங்களது பதவி, சொகுசு வாழ்க்கை சொத்துக்களுக்காகவா?
மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஒரு பொது சின்னத் தில் போட்டியிடுவது பற்றி சிந்தித் திருக்கலாமே!
சுயநலவாதிகளையும், கட்சிமாறிக ளையும் சந்தர்ப்பவாதிகளையும், மக்கள் அடையாளம் கண்டு இந்த மாகாண சபைத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும். மக்கள் தெளிவுடன் இருக்கிறார்கள் என்பதை இந்த அரசி யல்வாதிகளுக்கு உணர்த்த வேண்டும்.
மலைக்கழுகு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக